×

கியூபா மருத்துவத்துறை போன்று தமிழீழத்திலும் மருத்துவ அணி இயங்கியது !

நீங்கள் ஒரு மருத்துவராக எங்கள் போராட்டம் மௌனித்த இறுதிக் கணம் வரை இயங்கிய ஒரு போராளி உங்கள் பணி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நான் இறுதி நாள்வரை ஒரு மருத்துவப் போராளியாக இயங்கி எம் மக்கள் மீது சிங்கள வல்லாதிக்கம் ஏவி விட்ட இனவழிப்பு நடவடிக்கையில் இருந்து பல உயிர்களை காத்த திருப்த்தி ஒன்று மட்டுமே என்னுள் வாழ்கின்றது. நான் ஒரு மருத்துவராக இக்கடமையை சரியாக செய்திருந்தேன். தியாக தீபம் திலீபன் மருத்துவமனையின் நிர்வாக அலகுக்குள் ஒரு மருத்துவராக மக்கள் பணியாற்றி இருந்தேன்.

– திலீபன் மருத்துவமனையின் நோக்கம்?

தியாக தீபம் மருத்துவமனை தமிழீழ தேசியத்தலைவரது எண்ணக் கருவில் உருவாகிய தமிழீழ விடுதலைப்புலிகளை அடையாளப் படுத்தக் கூடிய ஒரு மக்களுக்கான மருத்துவப் பணிப்பிரிவு. இது அடிப்படை மருத்துவ தேவைகள் எங்கெல்லாம் தேவைப் படுகிறதோ அங்கெல்லாம் அம் மருத்துவ தேவையை நிறைவேற்றுதல். இது கிராமங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட வேண்டும் என்பதும் அங்கே தேவையான அடிப்படை மருத்துவத் தேவைகளை நிறைவேற்று வேண்டும் என்ற அடிப்படை நோக்கங்களைக் கொண்டது என்றே கூறமுடியும்.

இதை ஆரம்பிப்பதற்கான புள்ளி எங்கே இருந்து போடப்பட்டது?

.இதற்கான புள்ளி இதுதான் என்று என்னால் வரையறுக்க முடியாமல் இருந்தாலும், தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்த கிராமிய மட்ட சுகாதார செயற்பாடுகள் இருந்தன. என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.
மக்களுக்கான மருத்துவத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக “ சுதந்திரப்பறவைகள் “ அமைப்பு பணியாற்றியதும், அம் மக்களுக்கு மருத்துவ விழிப்புணர்வுகளையும் அடிப்படை மருத்துவ உதவிகளையும் அவர்கள் நிறைவேற்றியிருப்பதும் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகள்.

இது மட்டும் அல்லாது, எமது விடுதலை இயக்கத்தின் மூத்த மருத்துவராக இருந்த திருமதி ஏழுமதி கரிகாலன் அவர்களினால் ஆரம்ப காலங்களிலே எழுதி வெளியிடப்பட்ட “போர்க்கால முதலுதவி” என்ற மக்களுக்கான நூல் போன்றவற்றோடு பல விடயங்களையும் குறிப்பிடலாம்

அதே நேரம் போராளிகளுக்கான மருத்துவப்பிரிவின் தேவைகள் உணரப்பட்டு அதன் அடிப்படைப் பயிற்சிகள் தொடங்கப்பட்ட போதே மக்களுக்கான மருத்துவத் தேவைகளும் உணரப்பட்டே இருந்தது. தமிழீழ மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்ட போது அங்கே மருத்துவ மாணவர்களாக பயின்ற போராளிகளுக்கு தெளிவாகத் தலைவர் தெளிவாக உரைத்துத் தான் வளர்த்தார். அவரின் எண்ணங்களுக்கு ஏற்பவே இறுதியாக முள்ளிவாய்க்காலில் எம் விடுதலைப் போராட்டம் மௌனித்த நாள்வரை அவர்களால் மக்கள் பணியாற்ற முடிந்தது.

இது மட்டுமல்ல மருத்துவப் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட காலத்தின் குறுகிய காலத்திலே, தேவா அன்டி என்று அழைக்கப்படுகின்ற பெண் மருத்துவப் போராளி தனது அணியோடு கிராமங்களை நோக்கி நடமாடும் மருத்துவ சேவையினை வழங்கி வந்தார்.

எதற்காக தியாக தீபம் திலீபனின் நினைவாக இதை உருவாக்கினீர்கள்?

இது தலைவரின் திடமான முடிவாக இருந்தது. இதற்கு திலீபன் அவர்களின் தலமையில் உருவாகிய சுதந்திரப்பறவைகள் அமைப்பு முதலில் இப் பணிகளை செய்தது காரணமாக இருக்கலாம்; அல்லது அவர் ஒரு மருத்துவபீட மாணவனாக இருந்து போராளியாகியது காரணமாக இருக்கலாம்; அல்லது வீரச்சாவின் பின் கூட மருத்துவபீட மாணவர்களுக்காக தனது உடலத்தை கற்கைக்காக பயன்படுத்துங்கள் என்று கூறிய வார்த்தையாக இருக்கலாம்.

தியாக தீபம் திலீபன் மருத்துவமனை எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில், தியாக தீபம் திலீபன் மருத்துவமனைக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பான காலங்களில் மக்கள் பணிகளை மருத்துவப்பிரிவுப் போராளிகள் செய்திருந்தாலும் அது தமிழீழச் சுகாதாரசேவைகள் பகுதிப் போராளி மருத்துவர்களே செய்திருந்தார்கள். அதன் பின் திலீபன் மருத்துவமனை ஒரு கட்டமைப்பாக இக் காலத்தில் தான் உருவாக்கப்பட்டது. முதலில் நடமாடும் மருத்துவ சேவையை ஆரம்பித்தோம். அதனூடாக மக்களுக்கான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் தொற்றுநோய்த் தடுப்புக்கள், பாம்புக்கடி அல்லது விசக்கடி தொடர்பான விடயங்களை கையாண்டோம். அதன் செயற்பாடுகளை , அரசியல் துறையில் ஊரகமேம்பாட்டுப் பிரிவினரால் தெரிவு செய்யப்பட்டிருந்த கிராமங்களை நோக்கி முதலில் ஆரம்பித்தோம். அங்கே மக்களை நேரடியாக சந்தித்து, மக்களோடு நெருங்கி இருந்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றினோம். நான் நினைக்கின்றேன் எமது கட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்பு முதல் சேவையை பூதன்வயல் கிராமத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பின்பு படிப்படியாக ஒவ்வொரு கிராமங்களை நோக்கி சென்றோம்.

2002 ஆம் ஆண்டு மருத்துவமனை வளாகமாக கட்டிடங்களோடு நிமிர்ந்து நின்றது எமது கட்டமைப்பு. கற்சிலைமடு எனும் கிராமத்தில் முதலாவது மருத்துவமனையைத் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்கள் திறந்து வைத்தார். அதன் பெயர்ப்பலகையை மருத்துவக்கலாநிதி சூரியகுமாரன் திறந்து வைத்தார். அந்த வளாகத்தின் முதல் மருத்துவராக பெண் மருத்துவப் போராளி வசந்திமாலா பொறுப்பெடுக்கிறார்.

ஏன் கிராமப் புறங்களை நோக்கித் திலீபன் மருத்துவமனை செயற்பாடுகள் அமைந்தன?

அதன் நோக்கமே கிராமங்களில் வாழும் மக்களுக்கான அடிப்படை மருத்துவ வசதிகளை நிறுவுதல். ஏனெனில் அங்கே தான் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றும் வசதிகள் காணப்படவில்லை. நகர்ப் புறங்களில் தகுந்தளவுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கும். அதனால் நாங்கள் எங்கே தேவை இருக்கன்றதோ அங்கே பயணிக்கத் தொடங்கினோம்.

எம் தாயகப் பிரதேசத்தை பொறுத்தவரை அதிலும் வன்னியைப் பொறுத்தவரை சனத்தொகைச் செறிவு குறைவாகவே இருந்தது. அதனால், சகல கிராமங்களிலும் அடிப்படை மருத்துவ நிலையங்களை அமைப்பதில் அரசாங்கம் முனைவு காட்டவில்லை. ஏனெனில், அரச மருத்துவ திணைக்களம் சனத்தொகையை மையப்படுத்தியே மருத்துவமனைகளை உருவாக்கும். அதனால் எம் பிரதேசத்தில் அரச அடிப்படை மருத்துவமனைகள் அதாவது மத்திய மருந்தகங்கள் என்ற கிராமிய அளவிலான மருத்துவமனைகள் குறைவாகவே இருந்தது. அதனால் அவ்வாறான. மருத்துவமனைகள் இல்லாத போது மக்களால் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டி இருந்தது. நீண்ட தூரப் பயணத்தில் மருத்துவச் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் எங்கெல்லாம் தேவைகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் நாங்கள் போக வேண்டி இருந்தது.

இங்கே பணியாற்றியவர்கள் பற்றி?

உண்மையில் அவர்கள் அனைவரும் போராளிகளே. அவர்கள் அனைவரும் தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவர்களே. அவர்கள் அனைவரும் தேசியத்தலைவரின் எண்ணங்களை இறுதிவரை உறுதியாக நிறைவேற்றியவர்கள். எந்த நேரம் என்றாலும் எந்த இடம் என்றாலும் மக்களுக்காகப் பணியாற்றும் தன்மை கொண்டிருந்தவர்கள். அரசியல் தெளிவும் மக்கள் மீதான நேசமும் அவர்களை உயர்ந்த சிந்தனையோடு பணியாற்றியவர்கள்

பெரும்பாலும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஒன்று அல்லது இரண்டு மருத்துவர்களே கடமையாற்றுவார்கள். அதனால் அவர்கள் 24 மணிநேரமும் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய தேவை எழுந்தது. போராளிகளான அம் மருத்துவர்கள் சலிக்காமல் தொடர்ந்தும் பணியாற்றினார்கள். அதே நேரம் அக் கிராமத்து மக்கள் தாமாகவே முன்வந்து மருத்துவர்களுக்கு உதவத் தொடங்கினர். தொண்டர்களாக பல இளையவர்கள் பணியாற்ற முன்வந்தனர். அதனால் அவர்களுக்கும் அடிப்படை முதலுதவி பற்றிய பயிற்சிகளை வழங்கி தயார்ப்படுத்தினோம். அதன் பின்பாக பெண் போராளி மருத்துவர்கள் கடமையில் இருந்தால், அப் பெண் தொண்டர்களும் இரவு பகல் என்ற வித்தியாசம் இன்றி அம் மருத்துவமனை வளாகத்திற்குள்ளே தங்கி இருந்து பணிகளை செய்தனர்.

உதாரணத்துக்கு அவர்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை ஓரிரண்டு உதாரணங்களூடாக நான் குறிப்பிட முடியும்.

நைனாமடு மருத்துவமனையின் மருத்துவர், எப்போதும் தனது தங்ககத்தில் இருந்து மருத்துவமனைக்கு அதிகாலையில் பேருந்தில் தான் போவார். ஏனெனில் அங்கே தங்குவதற்கான வசதிகள் இல்லாமல் இருந்ததால் நள்ளிரவு நேரம் சென்று வேறு இடத்தில் தங்கிவிட்டு அதிகாலையில் மருத்துவமனைக்கு திரும்புவது வழக்கம். அவ்வாறே அன்றும் மருத்துவரான தில்லைநம்பி பேருந்தில் போய் கொண்டிருக்கிறார். அப்போது அந்த பேருந்தில் மருத்துவமனைக்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்த ஒரு கர்ப்பிணித் தாய்க்கு அவசர நிலை. உடனடியாக அங்கே குழந்தை பிறந்து விடும் அபாயம். அங்கிருந்தவர்கள் பதட்டப்படுகிறார்கள். தாயும் சேயும் குறித்த நேரத்துக்குள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாது போய்விட்டால் உயிர் தப்புவார்களா என்ற சந்தேகத்தில் எல்லோரும் பதட்டமடைந்த போது, தான் ஒரு மருத்துவன் என அறிமுகப்படுத்திக் கொண்டு அங்கிருந்தவர்களை பேருந்தில் இருந்து வெளியேற்றிவிட்டு சில பெண்களின் உதவியோடு பிரசவம் பார்க்கின்றார். அம்மாவையும், பிள்ளையையும் எந்த பிரச்சனையும் இன்றி உயிர் காக்கிறார். அன்று உண்மையில் தில்லைநம்பி அந்த இடத்தில் இல்லாது இருந்திருந்தால் அந்த தாயும் சேயும் ஆபத்தான நிலையில் இருந்திருப்பர் அல்லது இறந்திருப்பர்.

அதை போலவே இன்னொரு மருத்துவமனையில் ஒரு மருத்துவப் போராளி கடமையில் இருந்த போது, அங்கே அவசர சிகிச்சைக்காக சிறு பிள்ளை ஒன்று கொண்டுவரப்படுகிறாள். அந்த பிள்ளைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்தது. மூச்சுக்குழாயைச் சளி அடைத்திருந்தது. மூச்செடுப்பதில் பலத்த சிரமம் ஏற்பட்டிருந்தது. அப்போது அந்த மருத்துவமனையில் மூச்சுத் திணறலைச் சீர்ப்படுத்தும் கருவிகள் எதுவும் இல்லை. அதனால், சாதாரண குழாய் ஒன்றை மூக்கு வழியாக உள்ளே செலுத்தி அப்பிள்ளையின் சளியை தனது வாய்க்குள் உறிஞ்சி எடுத்து வெளியில் துப்புகிறார். பெற்ற தாய் கூட செய்ய அருவருக்கும் இச் செயற்பாட்டை அன்று எம் போராளி செய்து அப்பிள்ளையின் உயிரைக் காக்கிறார். அதனூடாக அப் பிள்ளைக்கு மூச்சுத் திணறலை சீர்ப்படுத்துகிறார்.

இவ்வாறு பல ஆயிரம் சம்பவங்கள் எம் மருத்துவர்களின் வரலாற்று படிவங்கள்.
இதைப் போலவே மாங்குள மருத்துவமனை மருத்துவரஇன் சம்பவம் . ஒரு தடவை பிரசவத்துக்காக வந்து கொண்டிருந்த தாய் ஒராள் தொடர்ந்து உந்துருளியில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. எமது தாயகப் பிரதேசங்களில் வாகன வசதிகள் என்றால் அப்போதெல்லாம் உந்துருளிகள் தான். அதனால் அதில் பயணம் செய்த அந்த தாயால் தொடர்ந்து பயணிக்க முடியாது வீதியில் படுத்துவிட, அவரது கணவன் மருத்துவரிடம் ஓடி வருகிறார். அவசரமாகத் தன் மனைவியின் நிலையை தெரிவிக்கிறார். மருத்துவரோ அவசர நிலை உணர்ந்து உடனடியாக அப்பகுதிக்குச் செல்கிறார். மாங்குளத்தின் தேசித் தோட்டம் தாண்டி கொய்யாத் தோட்டத்துக்கு அருகில் அந்த தாய் நிலத்தில் படுத்திருந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாத காலம் கடந்திருந்தது. உடனடியாக பிரவசம் பார்க்க வேண்டிய சூழல் அதனால் அவ்வீதியின் அருகில் இருந்த ஒரு மர நிழலில் வைத்து பிரசவம் பார்த்து அக் குழந்தையையும் தாயையும் தியாக தீபம் திலீபன் மருத்துவமனை மருத்துவர் காப்பாற்றுகிறார்.

இன்னொரு உதாரணத்தை இங்கே குறிப்பிடலாம்.

தென் தமிழீழத்தின், பாட்டாளிபுரம் என்ற இடத்தில் ஒரு சம்பவம் நடந்தது. அப்போது இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு நாங்கள் எம் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குள் நகர்ந்து விட்ட சமாதான உடன்படிக்கை முறிவுக்காலம். அதனால் எப்போதும் விடுதலைப் புலிகளை இராணுவம் தாக்கலாம் அல்லது கைது செய்யலாம் என்ற நிலை. அதனால் எம்மை எப்போதும் விழிப்புடன் இருக்கும்படி பொறுப்பாளர்கள் அறிவுறுத்தியபடி இருப்பர். நாங்களும் கவனமாகவே இருந்தோம். அப்படி இருக்கும் போது ஒருநாள் ஒரு சம்பவம் நடந்தது.

ஒரு சிறுபிள்ளை இரும்பு நட்டு ஒன்றை விழுங்கி விட்டது. அப்பிள்ளையின் தாய் கையால் அதை எடுக்க முற்பட்டு போது அது இன்னும் உள்ளே சென்றுவிட்டது. உடனடியாக திலீபன் மருத்துவமனைக்கே அவர்கள் கொண்டு வருகிறார்கள். அப்போது, எமது மருத்துவமனையில் அப் பிள்ளைக்கு சிகிச்சை தரக்கூடய உபகரணங்கள் இல்லை. அதனால் உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக அரசமருத்துவமனைக்கு அனுப்பியாக வேண்டும். இல்லையெனில் பிள்ளைக்கு உயிராபத்து ஏற்படலாம். ஆனால் அரச மருத்துவமனையோ இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அதனால் உடனடியாக பிள்ளையை நோயாளர்காவு வண்டியில் அனுப்ப வேண்டும். ஆனால் எமது நோயாளர் காவு வண்டிக்கான சாரதி அப்போது அங்கே இருக்கவில்லை. அவர் விடுமைறையில் சென்றிருந்தார். அங்கே இருந்தவர்களுக்கு வாகனம் ஓடத் தெரியாது.

அதனால் பெரிய பிரச்சனை எழுந்தது. அங்கிருந்த மருத்துவப் போராளி அங்கு சென்று குறுகிய காலம் என்பதால், பாதை கூடத் தெரியாது. அதனால் அங்கிருந்தவர்களை அழைத்துக் கொண்டு வாகனத்தை ஓட்டுகிறான் அந்த மருத்துவப் போராளி. நீங்கள் பாதையை மட்டும் காட்டுங்கள் நானே வாகனம் ஓடுகிறேன் என சொல்கிறான். ஆனால் அவர்கள் கொஞ்சம் தயங்குகிறார்கள். அந்த நேரத்தில் ஒரு போராளியை அழைத்துக் கொண்டு இராணுவப் பகுதிக்குள் போவதற்கு அவர்கள் யோசித்திருக்கலாம். ஆனால் நிலமையின் தீவிரத்தை வலியுறுத்தி வற்புறுத்தியதால் அவனோடு புறப்படுகிறார்கள். .

அவனோ தனது பொறுப்பாளரிடம் அனுமதி பெறவில்லை. போவது இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதி. எப்போதும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை. ஆனாலும் அதைப்பற்றி எதையும் அவன் நினைக்கவில்லை. தான் கைதாகலாம் அல்லது சாகடிக்கப்படலாம். ஆனாலும் அவன் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவனின் நினைவில் அப்பிள்ளையே இருந்தது. மூச்செடுக்க முடியாது தவிக்கும் அப்பிள்ளைக்கு மேலதிக சிகிச்சை வழங்கவில்லை என்றால் நிச்சயம் சாவடைந்துவிடும் என்று தெரிந்ததும் தன் உயிரைப்பற்றிச் சிந்திக்க தோன்றவில்லை. இந்த இளையவர்களுக்காக போராடத் துணிந்த அவனால் தன்னுயிர் பற்றி சிந்திக்க முடியவில்லை.

வாகனத்தை செலுத்தி கொண்டு செல்கின்றான் போகும் போது எந்தத் தடையும் இருக்கவில்லை. இராணுவம் சாதாரண சோதனையோடு செல்வதற்கு அனுமதிக்கிறது. ஆனால் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு திரும்பும் போது, தடைமுகாமில் இருந்த இராணுவம் மறித்து பிரச்சனை பண்ணத் தொடங்கியது. அப்போது தான் அவனுக்கு அவனின் நிலை புரிந்தது. ஆனால் மனம் தளராமல் ஏதேதோ காரணங்களை சொல்லி , பொய்களை உரைத்து அவர்களை ஏமாற்றி விட்டு மீண்டும் தன்னோடு வந்தவர்களோடு மருத்துவமனைக்குத் திரும்பி வந்தான்.

அப்போதெல்லாம், தேசியத் தலைவர் எம் கட்டமைப்பை உருவாக்கியதும், அப்பணியில் நாம் ஈடுபடுவதும் மனநிறைவாக இருந்தது. எம் போராளிகள் எதைப் பற்றியும் சிந்திக்காமலே பணியாற்றினார்கள். களமருத்துவப் போராளிகள் களத்தில் நின்று பணியாற்றும் அதே வேளை நாங்கள் மக்களோடு மக்களாக அவர்களுக்காக விழித்திருந்து பணியாற்றினோம்.

எங்கெல்லாம் தியாகதீபம் திலீபன் மருத்துவமனைகள் இயங்கின?

பெரும்பாலும் வன்னிப் பெருநிலப்பரப்புக்குள் பல மருத்துவமனைகள் உருவாகி இருந்தன. குறிப்பாக முதலாவது மருத்துவமனையாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கற்சிலைமடுக் கிராமத்தில் முதல் மருத்துவமனை தனது சேவையை ஆரம்பித்தது. அதற்கு எம் மருத்துவப் போராளி திருமதி. வசந்திமாலா மருத்துவராக நியமிக்கப்படுகிறார். அதன் செயற்பாட்டு ஆரம்பத்தோடு இயங்கத் தொடங்கிய மருத்துவமனைகள் சிறப்பாக இயங்கின. அதை தொடர்ந்து,
கிளிநொச்சி மாவட்டம் – பூநகரி,
வவுனியா மாவட்டம் – நைனாமடு மற்றும் புளியங்குளம்,
முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் மற்றும் மாங்குளம்,
மன்னார் மாவட்டம் கறுக்காய்குளம் மற்றும் முத்தரிப்பு
போன்ற இடங்களில் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் முத்தரிப்புத்துறை பகுதியில், எம் மருத்துவமனை இயங்கிய போதும் முத்தரிப்புத்துறையின் அமைவிடம் காரணமாக முழுமையான செயற்பாடுகளை திலீபன் மருத்துவமனை கட்டமைப்பால் செய்ய முடியாது இருந்தது. அதாவது முத்தரிப்புத்துறை சிங்களப் படைகளின் கட்டுப்பாடோ அல்லது எமது கட்டுப்பாட்டுக்குள்ளோ இல்லாத ஒரு சூனியப்பிரதேசமாகும். அதனால் அங்கே முழுமையான திலீபன் மருத்துவமனை நிர்வாகக் கட்டுப்பாடென்றில்லாமல், மருத்துவப் போராளி ஒருவர் அங்கிருந்த விடுதலைப்புலிகளின் வேறு பிரிவுகளோடு இணைந்து மக்கள் பணியாற்றினார்.

திலீபன் மருத்துவமனைகள் வன்னியில் மட்டுமா இயங்கின ?

இல்லை. ஆரம்பத்தில் வன்னிக்குள் எமது சேவைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிகளான யாழ் மாவட்டத்திலும், தென்தமிழீத்திலும் எமது மருத்துவமனையின் அவசியம் உணரப்பட்டது. அதனால், யாழ்ப்பாணத்தின் தீவகக் கோட்டத்தில் உள்ள நெடுந்தீவுப் பிரதேசத்தில் ஒரு மருத்துவமனையை ஆரம்பித்தோம். அதோடு புங்குடுதீவுப் பகுதியிலும் ஆரம்பித்தோம். அப்போது யாழ்மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. இளம்பருதி தொடக்கம் தீவகக் கோட்டப் பொறுப்பாளராக இருந்த திரு. கண்ணன் வரைக்கும் இம் மருத்துவமனைகளை உருவாக்குவதற்கும் பூரணமான செயற் பாட்டுக்கும் உந்துசக்தியாக இருந்தனர்.

அதைப் போலவே தென் தமிழீழ மக்களுக்கான மருத்துவத் தேவைகள் மிக முக்கியமானவையாக உணரப்பட்டு அங்கும் மருத்துவமனையை உருவாக்கி இருந்தோம்.
திருகோணமலை மாவட்டத்தின் பாட்டாளிபுரம், மட்டக்களப்பு மாவட்டத்தின் கதிரவெளி மற்றும் கொக்கட்டிச்சோலை,
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபைக்கு உட்பட்ட கஞ்சிகுடிச்சாறு என்ற கிராமத்தில் மருத்துவ மனைகள் இயங்கத் தொடங்கின.

தியாகதீபம் திலீபன் மருத்துவமனைக்குரிய மருத்துவர்களின் உருவாக்கம் என்பது எப்பிடி இருந்தது?

உண்மையில் திலீபன் மருத்துவமனை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட போது அதற்கென்று தெரிவுசெய்யப்பட்ட மருத்துவப் போராளிகள் அனைவருக்கும் ஒரு விடயம் தெளிவூட்டப் பட்டிருந்தது.

திலீபன் மருத்துவமனை மருத்துவர்கள் ஏனைய மருத்துவர்களைப் போலல்லாது, மக்களுக்குள் நின்று வேலை செய்ய வேண்டியவர்களாக இருப்பதால், அவர்கள் அதற்கேற்ற மருத்துவப் போராளிகளாகவே உருவாக வேண்டும் என்பது முக்கியமாகின்றது. மக்களுடன் மக்களுக்காக நின்று பணியாற்றுபவர்கள் என்பதால், அவர்கள் எப்போதும் மருத்துவம் மட்டும் அல்லாது வாழ்வியலுக்குத் தேவையான அனைத்து விடயங்களிலும் அறிவாற்றல் மிக்கவர்களாக இருக்க வேண்டிய அவசியம் உணர்த்தப்பட்டது.

கியூபாவில் போர் நடந்த போது அமெரிக்காவின் பொருளாதாரத்தடையின் கொடூரத்திலும் தாக்குதல்களினாலும் மருத்துவ வசதிகளற்றும் பல ஆயிரம் மக்கள் இறந்த கொடுமைக்கு மத்தியில் சர்வதேசத்தை நோக்கி உதவிக்கரம் நீட்டிய பிடல் கஸ்ரோவுக்கு சர்வதேச நாடுகள் உதவ மறுத்த நிலையில், பிடல் கஸ்ரோ தனது உன்னத நோக்கத்தை நிறைவேற்ற திட்டமிட்டார். காலணிகள் அற்ற மருத்துவர்களை உருவாக்கினார். அவர்களினூடாக மக்களுக்கான அடிப்படை மருத்துவ வசதிகளை செய்யத் தொடங்கினார்.

இவர்கள் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான மருத்துவ தேவைகளை நிறைவேற்றுவதற்காக பயிற்சி கொடுக்கப்பட்டு தயார்ப்படுத்தப்பட்ட மருத்துவர்கள், வெற்றுக் கால்களுடன் கிராமம் கிராமமாக நடந்து சென்று மக்களோடு மக்களாக அவர்களது தேவைகளை நிறைவேற்றுவார்கள்.

அவ்வாறான மருத்துவர்களாக நாம் உருவாக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ( அதற்காக வெற்றுக் கால்களோடு பயணித்தவர்கள் என்று நினைக்க வேண்டாம் ) மக்களோடு மக்களாக பணியாற்ற வேண்டி இருப்பதால் நாங்கள் பல விடயங்களில் தயாராக வேண்டிய தேவை எழுந்தது. அவர்களோடு நட்பாகவும் அவர்களின் காப்பாளராகவும், அவர்களுக்கு வழிகாட்டிகளாகவும், அவர்களின் தோழனாகவும், நல்ல உறவாகவும் நாங்களே இருக்க வேண்டும் எனக் கற்பிக்கப்பட்டது. அதை பின்பற்ற வேண்டிய அவசியம் கட்டாயமாகியது.

அதனால் நாம் அதற்கு ஏற்றபடி தான் உருவாக்கப்பட்டோம். இது தொடர்பாக எமது தேசியத் தலைவர் தெளிவான பார்வையைக் கொண்டிருந்தார். அதனால் டொக்டர் அன்டி என்று அனைவரும் அழைக்கும், திருமதி. எழுமதி கரிகாலன் மற்றும் மருத்துவக் கலாநிதி சூரியகுமார் ஆகியோரிடம் எம் கற்கைக்கான பொறுப்பு வந்து சேர்கிறது. இதற்கான கல்வித்திட்டத்தை திட்டமிட்டு அதற்கான விரிவுரையாளர்களை நியமித்துப் பயிற்சிகளை அவ்விரு மருத்துவக் கலாநிதிகளும் அரம்பித்தனர்.

கற்றலுக்காக உள்வாங்கப்பட்ட அனைவரும் மருத்துவராக பணியாற்றினீர்களா?

அம் மருத்துவக் கற்கையை முழுமையாக கற்றுத் தேறி பரீட்சைகளில் சித்தியடைந்த போராளிகள் மட்டுமே மருத்துவர்களாக வெளியேறினோம். நடாத்தப்பட்ட பரீட்சையில் பலர் தோற்றிருந்தனர். சிலர் பயிற்சியில் தேறாமல் கற்றலை விட்டு வெளியேறியும் இருந்தனர். ஆனாலும் அந்த மருத்துவப்படிப்பை கற்று முடித்து மருத்துவர்களாக அனேகமானவர்கள் வெளியேறினோம். அப்படி இருந்தும் உடனடியாக நாம் பணிக்காக அனுப்பப்படவில்லை. எமக்கு மருத்துவப் பயிற்சி மட்டும் போதாது வேறு சில பயிற்சிகளும் தேவை என்ற எண்ணப்பாடு அங்கே உறுதியாக இருந்தது.

எவ்வகையான பயிற்சிகள்?

விசக்கடி மருத்துவம், மகப்பேற்று மருத்துவம், அடிப்படை சத்திரசிகிச்சைகள் இது தவிர அரசியல் பயிற்சிகள்.

அரசியல் பயிற்சியா? ஒரு மருத்துவருக்கு எதற்கு அரசியல்?

நான் ஏற்கனவே கூறியதைப் போல ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் எமது மருத்துவருக்கு தனியே மருத்துவ அறிவு மட்டும் போதாது என் விடயத்தில் எமது வளவாளர்கள் உறுதியாக இருந்தார்கள். எனக்குத் தெரிய உலகளவில் நோக்கினால் தமிழீழ அரசு மட்டுமே மருத்துவர்கள் கட்டாயமாக அரசியல் தெளிவுள்ளவர்களாக மக்களுக்குள் பணியாற்ற வேண்டும் என்ற விடயத்தில் நம்பிக்கையாக இருந்தது. ஏனெனில், நாம் மக்களோடு இணைந்திருந்து பணியாற்ற வேண்டியவர்களாக இருந்ததால், மக்களைப் புரிந்து கொள்ளவும் அவர்களுடன் இணைந்து நிற்பதற்குத் தேவையான பல விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டியவர்களாக இருந்தோம்.

மருத்துவ அறிவை மட்டும் வைத்து மக்களிடம் சென்றால் அவர்கள் எம்மை வேற்றாளர்களாக பார்க்கும் சந்தர்ப்பம் இருப்பதை நாமும் உணரந்தே இருந்தோம். அதனால் மக்களோடு நெருங்கி இருப்பதற்கு சகல ஆளுமைகளும் உள்ளவர்களாக நாம் உருவாக வேண்டி இருந்தது. உதாரணமாக, சிறு பிள்ளைகள் கல்வியில் சந்தேகம் கேட்டாலோ, பெரியவர்களுக்கு குடும்பங்களில் சிறு சிறு பிணக்குகள் வந்தாலோ அவற்றுக்கான தீர்வுகளை நாமே வழங்கும் போது அவர்களுக்கு எம்மில் நம்பிக்கையும், நெருக்கமும் உண்டாகும் என்பதில் எந்தச் சிக்கல்களும் இருக்கவில்லை. அதனால் முழுமையாக நாம் தயாராக வேண்டி இருந்தது. ஏனெனில் மக்கள் சமூகம் என்பது பல விடயங்களை கொண்டது. அங்கே பல பழக்கவழக்கங்கள், எதிர்பார்ப்புக்கள், நடைமுறைகள் இருக்கும் அவற்றைப் பற்றிய அறிவு இல்லாது நாம் அவர்களோடு இணைந்து பணியாற்றுவது என்பது சாதாரணமானதல்ல.

அதற்காக தூயவன் அரசறிவியல் கல்லூரியில் எமக்கு புதிய பயிற்சிகள் ஆரம்பித்தது. அங்கே பொறுப்பாளராக இருந்த திரு. உமைநேசன், அதிபராக இருந்த திரு. அரசண்ணா, நிர்வாகப் பொறுப்பாளராக இருந்த திரு. பாரிமகன் ஆகியோர் இவற்றுக்கான கல்வித்திட்டத்தை உருவாக்கி நடாத்தினார்கள். அங்கே தூயவன் அரசறிவியல் கல்லூரியின் அதிபர் ஆசிரியர்கள் உட்பட வெளியில் இருந்து துறைசார் வல்லுனர்கள் விரிவுரையாளர்களாக வந்தார்கள். நீதி நிர்வாகப் பொறுப்பாளர் திரு. பரா, மற்றும் தமிழீழ காவல்துறை அதிகாரிகள் மற்றும் பலரும் எமக்கு விரிவுரைகளை நடாத்தினர். அதில் உளவியல், மக்கள் தொடர்புகளைப் பேணுதல், சாதிய பிரச்சனைகள், தமிழீழச் சட்டங்கள், காவல்துறை நடைமுறைகள், அரசியல் தெளிவு , மக்களின் பிரச்சனைகள் அவற்றுக்கான. தீர்வுகள் எனப் பல விடயங்கள் கற்பிக்கப்பட்டன.

முக்கியமாக எனக்கு தூயவன் அரசறிவியல் கல்லூரியின் அதிபர் அரசண்ணா எடுத்திருந்த தமிழீழத்தின் சாதியம் பற்றிய வகுப்பு எனக்கு எம் தாயகத்தில் இருந்த சாதிய விழுமியங்கள் பற்றிய முழுமையான பார்வையையும் உயர்ந்த தாழ்ந்த என்ற பாகுபாட்டை உடைத்து ஒரு சமத்துவ சமூகத்தை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதையும் தெளிவாக கற்றுத் தந்தது. அதுவரை சாதியம் என்பதை பற்றிச் சிந்திக்கவோ அல்லது அதை பற்றி அறிவதற்கோ எனக்கு சந்தர்ப்பம் கிடைத்ததில்லை. ஆனால் மக்களிடையே பணியாற்றப் போகின்றவன் என்ற நிலையில் நான், பின் சந்தித்த பல பிரச்சனைகளை இலகுவாக தீர்த்து வைக்கக்கூடியவனாக அவ்வகுப்பு எனக்கு வழிகாட்டியது.

அதோடு ரெயினோல்ட் அடிகளார், அரசியல் ஆய்வாளர் திரு. மாஸ்டர், மற்றும் கிளி பாதர் ஆகியோர் வகுப்பெடுத்தார்கள். இதில் கிளி பாதர் என்று அன்பாக அழைக்கப்படும், கருணாரட்ணம் அடிகளார், அனைத்து மதங்களையும் சார்ந்த மதபோதகர்களின் மூடநம்பிக்கைகளும் அவற்றில் எவை நம்பக்கூடியவை, எவை நம்பிக்கையற்றவை அவற்றை எவ்வாறு உடைப்பது என்பது பற்றியும் வகுப்பெடுத்தார். அது தொடர்பாக மிக தெளிவாக எமக்கு பல விடயங்களை எமக்குள் விதைக்கிறது. மதத்தைத் தாண்டி மக்களுக்கு இந்த மருத்துவத்தால் என்ன செய்ய முடியும் என்பதை எடுத்துக்காட்டி எம்மை புடம் போட்டது. இங்கும் பரீட்சைகள் நடாத்தப்பட்டு நாங்கள் அதன் பின்பு தான் நாம் முழுமையான திலீபன் மருத்துவமனையின் மருத்துவர்களாக வெளியேறினோம்.

இப்படியான வகுப்புக்களோடு நாம் எம்மை தயார்ப்படுத்திக் கொண்டு இறுதியாக ஒரு கையெழுத்தேட்டை “சுற்றோட்டம்” என்ற பெயரில் ஒன்றை வெளியிடுகிறோம். அந்தப் புத்தக வெளியீட்டோடு எமது மக்களுக்கான பணி ஆரம்பிக்கிறது. என்னைப் பொறுத்தவரை எனது வாழ்வில் பல விடயங்களை கற்கவும் என்னை நானே புடம் போட்டுக் கொள்ளவும் இப்பயிற்சிகள் பெரிதும் உதவின.

திலீபன் மருத்துவமனை தனி அலகாக செயற்பட்டதா?

ஓம். மருத்துவப் பிரிவுக்குள் களமருத்துவம், சுகாதாரசேவை, களஞ்சியப்பகுதி, கொள்வனவுப்பகுதி என பல அலகுகள் தனியே இயங்கியதைப் போலவே திலீபன் மருத்துவமனையும் தனியலகாக இயங்கியது. இதற்கு முதல் பொறுப்பாளராக, திருமதி. எழுமதி கரிகாலன் இருந்தார். பின் பல பொறுப்பாளர்கள் மாறி வந்தாலும் இறுதிக் காலங்களிலும் திருமதி எழுமதி கரிகாலனே அப் பொறுப்பை ஏற்றிருந்தார். திலீபன் மருத்துவமனைக்காக தனி இலட்சணை இருந்தது. அதன் பணியாளர்களுக்கென்று தனிச் சீருடை இருந்தது. இவற்றையெல்லாம் தாண்டி தனித்துவமான செயற்பாட்டு நிர்வாகக் கட்டமைப்பு இருந்தது. ஆனாலும் செயற்பாடுகளின் போது எந்தப் பிரிவும் பிரிந்து நின்றதில்லை. இணைந்தே செயற்பாடுகளை செய்தோம்.

திலீபன் மருத்துவமனை தொடங்கிய போது தடைகள்.

உண்மையில் எங்களது மருத்துவக் கற்கைகளை முடித்து வெளியேறிய போது எமக்கு பல கேள்விகள் எழுந்தன. மருத்துவப் பொருட்களின் தட்டுப்பாடு என்பது அதில் மிக பிரதானமானதாக இருந்தது. ஏனெனில் அக் காலம் வன்னிப் பிரதேசம் எங்கும் பொருளாதார/ மருத்துவத் தடை இருந்த காலம். அதனால் மருத்துவப் பொருட்கள் கிடைப்பது என்பது பெரிய விடயம், எமது மருத்துவப் பிரிவின் கொள்வனவு மற்றும் களஞ்சியப்படுத்தல் பிரிவு மருந்துகளே எம் மருத்துவப்பிரிவின் தேவைகளை நிறைவேற்றி வந்தது. இந்த நிலையில், மக்களுக்காக நாம் வெளிப்படையாக செயற்படத் தொடங்கும் போது குறைவற்ற மருத்துவ வளங்கள் எமக்கு கிடைக்குமா என்பதே பிரதான பிரச்சனை. அதனால் இம் மருத்துவ தேவையை யார் நிறைவேற்றுவது என்பது தான் பிரச்சனையாக இருந்தது. ஆனாலும் எமக்கான மருத்துவப்பிரிவின் மருத்துவக் களஞ்சியத்தின் ஊடாக, பெறுவதாக முடிவெடுக்கப்பட்டு எமக்கான தேவைகளை வரையறுத்து மருந்துகளுக்கான பாதீடு அனுப்பப்பட்டு அவர்களால் அனுமதிக்கப்பட்டு எமக்கான மருந்துகள் வழங்கப்பட்டன. அதாவது போராளிகளுக்கு மருத்துவப்பிரிவினால் வழங்கப்படும் மருந்துகள் மக்களுக்காக திலீபன் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டு இத் தடை தீர்கிறது.

அடுத்தது மேலதிக சிகிச்சைக்காக நோயாளர்களை அனுப்புவதற்கு பிரதானமாக நோயாளர் காவு வண்டி தேவை ஏற்படுகிறது. ஏனெனில் திலீபன் மருத்துவமனைக்கு வரும் நோயாளர்களை அவர்களின் வாகனங்களிலேயே மேலதிக சிகிச்சைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறுவது ஏற்புடையதல்ல. அதனால் மருத்துவ வளங்களைக் கொண்ட வாகனங்கள் தேவை இருந்தது.

எங்கிருந்து அத் தேவைகளை நிறைவேற்றினீர்கள்?

அது பல வழிகளில் கிடைத்தது. உதாரணமாக புங்குடுதீவில் நான் பணியாற்றிய போது, கனடாவில் இருந்து தாயகம் வந்திருந்த புங்குடுதீவு பழையமாணவர் சங்கத்தை சார்ந்த உறவான அருட்பிரபா என்பவர் என்னைச் சந்திக்கிறார். சந்தித்து அன்றைய தேவைகள் திலீபன் மருத்துவமனையின் பணிகள் போன்றவற்றை கலந்துரையாடிவிட்டு கனடா சென்றிருந்தார். அங்கிருந்து மீண்டும் என்னோடு தொடர்பு கொண்டு தான் தமது நிர்வாகக் கட்டமைப்போடு பேசியதாகவும், அவர்கள் புங்குடுதீவுக்கான நோயாளர் காவு வண்டியை வாங்கித் தர அனுமதித்ததாகவும் கூறுகின்றார். அப்போது நான் ஒரு மருத்துவராக இருந்த காரணத்தால் அப் பணத்தை நேரடியாக கையாள முடியாது. அதனால் உடனடியாக திலீபன் மருத்துவமனைப் பொறுப்பாளர் மற்றும் அரசியல்துறைத் துணைப் பொறுப்பாளர், சோ.தங்கன் ஆகியோருக்கு இவ்விடயத்தை தெரியப்படுத்தி அவர்களுடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்துகிறேன். அப்போது கனடாவில் இருந்து, 30லட்சத்துக்கு மேலான பணம் ( சரியாக தொகை நினைவில்லை ) அனுப்பப்பட்டு உடனடியாக நோயாளர் காவு வண்டி கொள்வனவு செய்யப்படுகிறது. அவ்வண்டி யாரால் எமக்கு வழங்கப்பட்டது என்ற விபரங்கள் அடங்கிய எழுத்துகள் பொறிக்கப்பட்டு புங்குடுதீவில் நோயாளர்களுக்கான சேவைக்காக பயன்படுத்தப்பட்டது.

திலீபன் மருத்துவமனைகள் நடமாடும் மருத்துவ சேவைகளை மட்டுமா செய்தன?

அவ்வாறு இல்லை திலீபன் மருத்துவமனை தனித்து நடமாடும் மருத்துவ சிகிச்சைகளை மட்டும் நடாத்தவில்லை. மருத்துவமனைகளாகவும் இயங்கின. கிட்டத்தட்ட 12 இடங்களில் மருத்துவமனைகளாகவும், தேவைப்படும் இடங்களுக்கான நடமாடும் மருத்துவ சேவைகளும் இடம்பெற்றன.

எத்தகைய பணிகள்?

மருத்துவ சிகிச்சை.- நோய் வர முதல் தடுத்தல், தொற்றுநோய் அல்லாத நோய்களுக்கான சிகிச்சை வழங்குதல், விழிப்புணர்வு செயற்பாடுகள். மாணவர்களுக்கான கல்வி கற்பதற்கான செயற்பாடுகள், அடிப்படை மருத்துவ முதலுதவி தொடர்பான பயிற்சிகள், பற்சுகாதாரம், உடலியல் சுகாதாரம் போன்றவற்றை நாங்கள் மக்களிடையே செயற்படுத்தினோம்.

எமது மருத்துவர்கள் அனைவராலும் அனைத்துப் பிரதேசங்களிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், நான் இந்த பயிற்சித்திட்டத்தை புங்குடுதீவில் பணியாற்றிய போது செய்யத் தொடங்கி இருந்தேன். அப்போது அத் திட்டத்தில் என்னிடம் புங்குடுதீவில் கிட்டத்தட்ட 120 மாணவர்கள் பயிற்சி பெற்றார்கள். அப் பயிற்சிகள் நிறைவுற்ற போது அவர்களுக்காக ஒரு பரீட்சையை செய்து சான்றிதழ் வழங்க வேண்டி இருந்ததால், அப் பரீட்சையை நடாத்திச் சான்றிதழ் வழங்குகிறேன். அச் சான்றிதழில் தமிழீழ அரசியல்துறைத் துணைப் பொறுப்பாளர், தமிழீழ சுகாதாரசேவைகளின் பொறுப்பாளர், யாழ்மாவட்ட சுகாதாரசேவைப் பணிப்பாளர் ( இலங்கை அரச யாழ்மாவட்டப் பணிப்பாளர்) ஆகியோர் கைபொப்பமிட்டு பெறுமதியான சான்றிதழாக அதை தியாக தீபம் திலீபன் நினைவு நாளில் வழங்கினேன். பின்பான நாட்களில், திலீபன் மருத்துவமனை முதலுதவித் தொண்டர்கள் என்ற அடையாளத்தோடு அவர்கள் பணியாற்றியதும் நிறைவாக இருந்தது. பின்பு நான் மட்டக்களப்பில் பணியாற்றிய காலத்தில், அங்கே இருந்த அரசசார்பற்ற நிறுவனமான உலகில் வைத்தியர் நிறுவகம், எம்மோடு இணைந்து ஒரு கற்கைநெறியைச் செய்து முதலுதவியாளர்களை உருவாக்கினோம். அங்கும் நாம் பெறுமதியான சான்றிதழ்களை வழங்கினோம். அதில், அரச சார்பற்ற நிறைவனப் பொறுப்பதிகாரி, மாவட்ட அரசி சுகாதாரசேவைப் பணிப்பாளர், மற்றும் திலீபன் மருத்துவமனைப் பணிப்பாளர் ஆகியோரின் கையொப்பத்துடன் வழங்கி அவர்களை நல்ல முதலுதவியாளர்களாக உருவாக்கினோம்.

இதைப் போலவே கிழக்கு மாகானத்திலும் முதலுதவியாளர்களின் அணி ஒன்றை நாங்கள் உருவாக்கினோம் அத் திட்டத்தில் கிட்டத்தட்ட 75 பேரை கற்பித்து முதலுதவியாளர்களாக உருவாக்கினோம். இதற்காக அப்போது மருத்துவ பணிகளை செய்து வந்த “உலக மருத்துவர்கள் (MDM) என்ற சர்வதேச அமைப்பு மிக முக்கிய பணியை செய்திருந்தது. அத்திட்டத்துக்கான முழு பொறுப்பையும் எடுத்தது மட்டுமல்லாமல் சான்றிதழில் வலது பக்கம் மாவட்ட அரச வைத்திய பணிப்பாளர் நடுவில் உலக மருத்துவ அமைப்பு சார்ந்த அதிகாரி இடது பக்கம் கிழக்கு மாகான தியாக தீபம் திலீபன் மருத்துவமனை பணிப்பாளர் என்று மூன்று பெறுமதியான கையொப்பங்களைத் தாங்கிய சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.

தியாகதீபம் திலீபன் நினைவு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்கள் பற்றி.

அர்ப்பணித்து பணியாற்றினார்கள். வளங்கள் பற்றாக்குறை இருந்தாலும், நிறைவாக மக்களுக்கான பணிகளை செய்தார்கள். இரவு பகல் என்றில்லாது ஓய்வு இல்லாது ஒவ்வொரு பணிகளிலும் பங்கெடுத்தார்கள்.

அனர்த்தமுகாமைத்துவ செயற்பாடுகள் எவ்வாறு இருந்தன?

இதற்குச் சான்று “சுனாமி “. இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது அவன்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க எப்போதும் நாங்கள் தயாராகவே இருந்தோம். எம் அணியை பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் களமருத்துவப் போராளிகளாக இருந்தவர்களே. அதனால் சுனாமி ஏற்பட்ட போது கூட அதன் தாக்கம் எமக்கு புதிதாகத் தோன்றவில்லை.

சுனாமி தாக்கிய போது நான் முல்லைத்தீவுக் கடற்கரையில் இருந்து மிக அருகிலே நின்றிருந்தேன். மக்கள் ஓடி வருவதைப் பார்த்து விசாரித்த போது, கடல் ஊருக்குள் புகுந்து விட்டதாகவும் நிறையப் பேரை அடித்துச் சென்று விட்டதாகவும் மக்கள் கூறினார்கள். நான் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்த போது முல்லைத்தீவுக் கடற்கரை உருக்குலைந்து காணப்பட்டது. உடனடியாகவே களச்செயற்பாட்டில் நான் இறங்கினேன். காயப்பட்டவர்களை அப்புறப்படுத்தி முதலுதவிகளைச் செய்தேன் இறந்து போயிருந்தவர்களை ஓரிடத்தில் கொண்டு வந்து கிடத்திய போது மீண்டும் பேரலை வருவதை கண்ணுற்று பின்னால் நகர்ந்து வந்தோம். இரண்டாவது சுனாமியும் தாக்கிய பின் அந்த இடத்தில் எதையும் பார்க்க முடியாத அளவுக்கு மீண்டும் உருக்குலைந்து கிடந்தது முல்லை மண்.

அந்த இடத்தில் இருந்து முற்றுமுழுதாக திலீபன் மருத்துவமனை மருத்துவர்கள் மக்களோடு மக்களாக பணியாற்றத் தொடங்கினோம். அனர்த்தம் நடந்த உடன் மக்களின் இழப்புக்களிலும் சரி, காயப்பட்டவர்களைகளை காப்பாற்றுவதிலும் சரி மருத்துவப்பிரிவும் தமிழீழ சுகாதாரப்பிரிவும் நாமும் அரச மருத்துவர்களோடு இணைந்து பணியாற்றினோம். இது தவிர சுனாமித் தாக்கம் நடந்து பல மாதங்கள் ஆகியும் பாதிக்கப்பட்ட மக்களை ஆற்றுகைப்படுத்தும் செயற்பாடுகளில் நாம் ஈடுபட்டோம்.

இந்த இடத்தில் மறக்க முடியாத சம்பவம் ஒன்று மருதங்கேணிப் பகுதியில் நடந்தது.
7 குழந்தைகளைப் பெற்ற தாய் தனது 7 குழந்தைகளையும் பேரலைக்கு விலையாக கொடுத்து தனித்து நின்ற வேளையில் அந்த தாய் முற்றுமுழுதாக மனநோயாளியாக மாறக்கூடிய அபாயம் இருந்த போது அந்தத் தாயோடு நான் பேசினேன். அந்தத்தாய்க்கு இன்னும் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் வயதும் உடல்நிலையும் இருந்ததால் நான் அதை குறிப்பிட்டு கவலைப்பட வேண்டாம் என்று கூறினேன். ஆனால் அந்தத்தாயோ “ 7 பிள்ளைகளைப் பெற்ற பின்பு கருத்தடை சத்திரசிகிச்சை செய்து விட்டதை கூறி வருந்தினார். பெற்றவர்களும் இல்லை இனிப் பெறவும் முடியாது என்று வருந்தினார். அந்த நிலையில் அந்தத் தாயை மனநிலை ஆற்றுகைப்படுத்தி சாதாரண தாயாக மாற்றுவதற்காக நான் உட்பட்ட பலர் முயன்று வெற்றி பெற்றோம்.

இவ்வாறு எம் திலீபன் மருத்துவமனையை சார்ந்தவர்களும் தமிழீழ சுகாதார மற்றும் மருத்துவப்பரிவு சார்ந்தவர்களும் பணியாற்றினோம்.

தொற்று நோய்த் தாக்கங்கள் ஏற்பட்ட போது அவற்றை தடுக்கும் செயற்பாடுகள் பற்றி?

தொற்றுநோய் தாக்கம் ஒன்று ஏற்பட்டால் அவற்றை இரண்டு வழிகளில் கையாள வேண்டும்
1. தொற்றுநோயாளர்களை கண்டுபிடித்து அவர்களுக்கான சிகிச்சையை வழங்குதல்
2. தொற்றுநோய் ஏனையவர்களுக்குப் பரவாமல் இருக்கக் கூடியதான தொற்றுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செய்தல்.

இவ்விரண்டிலும் எம் மருத்துவப்பிரிவு சிறப்பாக இயங்கியது. இதற்கு பல சான்றுகள் உள்ளன.

நான் நினைக்கிறேன் 1995- 1999 காலப்பகுதி வரை வன்னியில் மிக பாரிய நோயாக கொள்ளக் கூடியது மலேரியா. இந்த மலேரியாவை இல்லாமல் செய்ததில் எம் மருத்துவப்பிரிவு பெரும் வெற்றியை கண்டது. மருத்துவ கலாநிதி சுஜந்தன் தலைமையில் மருத்துவக்கலாநிதி விக்கினேஷ்வரன் மருத்துவக்கலாநிதி சூரியகுமாரன் ஆகியோர் கொண்ட அணியில் இருந்த பல போராளி மருத்துவர்கள் மலேரியாவே இல்லாத வன்னியை உருவாக்கினார்கள். அதாவது “Malaria 0” என்ற நிலையை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் உருவாக்கினார்கள் எமது மருத்துவ அணி.

இதைப் போலவே கொலரா தொற்றுநோய்த் தாக்கம். இந்தக் கொலரா தொற்று ஏற்பட்ட போது அதன் விளைவுகள் உடனடியாக உணரப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. விடத்தல் தீவு எனும் இடத்தில் முதல் நோயாளி கண்டு பிடிக்கப்பட்டு போது அங்கே விரைந்து சென்ற மருத்துவர் சூரியகுமாரன் தலைமையில் போராளி மருத்துவர்களான தணிகை, பிரியவதனா போன்றவர்கள் அங்கே கடமையில் இருந்த அரச மருத்துவரையும் இணைத்து ஒரு பெரும் வெற்றியைக் கொடுத்தார்கள்.

நான் ஏற்கனவே கூறியதைப் போல தொற்றுநோய்த் தாக்கத்தை கண்டறிந்த உடனேயே விடத்தல் தீவுக் கிராமம் முற்றுமுழுதாக மூடப்பட்டு மருத்துவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. யாரும் அங்கிருந்து வெளியேறவோ அல்லது உள்நுழையவோ அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் கொலராவை விடத்தல் தீவுக்குள் கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல் அந்த நோய் எங்கிருந்து வந்தது என்பதையும் ஆய்வு செய்து சிங்கள தேசமான புத்தளத்தில் இருந்து இந்நோய்க்காவி வந்திருந்தார் என்பதையும் கண்டறிகின்றனர். எம் மக்களின் உயிரைக் காத்தது மட்டுமன்றி இலங்கை அரசுக்கும் இத்தகவலை அனுப்பி இலங்கை மக்களைக் காக்கவும் வழி செய்தனர் எம் மருத்துவர்கள்.

இதைப் போலவே போராளிகளுக்குள்ளும் இந்தக் கொடிய நோய்த் தாக்கம் பரவியது. அதையும் எம் மருத்துவப்பிரிவு சரியான முறையில் கையாண்டு வெற்றி பெற்றது. தென்தமிழீழத்தின் திருகோணமலைக் காட்டுக்குள் நின்ற ஒரு அணி முழுவதுமாக கொலராவால் பாதிக்கப்பட்ட போது அவர்களின் மருத்துவனாக பணியாற்றிய மருதன் என்ற போராளிக்கும் கொலரா தொற்று ஏற்படுகிறது. இந்த நிலையில் முற்றுமுழுதாக மருத்துவ உதவியை இழந்து நின்றது 100-120 போராளிகளைக் கொண்ட அந்த அணி.

அதனால் வடதமிழீழத்தில் இருந்து தேவையான அளவு திரவநிவாரணிகள் மருத்துவப் பொருட்களோடு ஒரு மருத்துவ அணி அங்கே சென்றது. அங்கிருந்து காப்பாற்றப்படக்கூடியவர்கள் தவிர ஏனைய மேலதிக சிகிச்சைக்குத் தேவையான போராளிகளை உடனடியாக வடதமிழீழம் நோக்கி கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்ட போது கடற்புலிகள் அதை இலகுவாக செய்து முடித்தார்கள். ஆனாலும் இலங்கை கடற்படை இடையில் வைத்து சண்டையைத் தொடங்கிய போது ஏற்கனவே கொலராவால் பாதிக்கப்பட்ட போராளிகளோடு கடற்புலிப் போராளிகள் சிலரும் வீரச்சாவடைகின்றனர். ஏனையவர்கள் கிழக்கு முல்லைத்தீவுப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டை சிகிச்சை வழங்கப்படுகின்றனர். காப்பாற்றப்படுகின்றனர். இது சாதாரண நடவடிக்கை தான் ஆனால் அதன் பின்பாக எமது மருத்துவப்பிரிவு தொற்றுநோய்த் தடுப்பை எவ்வாறு கையாண்டது என்பது தான் முக்கியமானது.

இந்த நடவடிக்கையில் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்கள் அங்கிருந்து கொண்டுவரப்பட்டதில் இருந்து விதைகுழியில் விதைக்கும் வரை யார் எல்லாம் சம்மந்தப்பட்டிருந்தார்களோ அத்தனை பேருக்கும் உடனடியாக தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டன.

கிழக்கு முல்லைத்தீவுக் கடற்கரையில் கடற்தொழில் செய்வதற்கும் அங்கே உள்நுழைவதற்கும் தடைகள் அமுல் படுத்தப்பட்டன.

இவ்வாறு சின்ன சின்ன விடயங்களைக் கூட நாம் கவனம் எடுத்து செயற்பட்டதால் மட்டுமே வன்னி மண் தொற்றுநோய்த் தாக்கங்கள் அற்ற மண்ணாக இருக்கக் காரணமாகியது.

இன்று கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளைப் பார்க்கும் போது விடுதலைப்புலிகளின் இச் செயற்பாடுகளை பின்பற்றுவதாக தோன்றுகிறதே இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இருக்கலாம், ஆனால் நாம் மக்களை பாதுகாக்க வேண்டும் என்று பயணித்தோம். இப்போது இலங்கை அரசோ இந்த சந்தர்ப்பத்தை அரசியல் ஆக்கப் பார்க்கிறது. இதை எம் மக்கள் நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய அரசு தான் செய்த இனவழிப்பு நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக தமிழர் தரப்பிடம் இருந்து நற்பெயரைப் பெற்றுவிட வேண்டும் என்று முயல்கிறது. இதை எம் மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனை தருகிறது.

எம்மினத்தையே அழித்தவனை, தம்மைக் காக்க வந்த கடவுளைப் போல கொண்டாடுகின்றனர் பலர். ஆனால் அவன் இப்போதும் தமிழர் மீது இனவழிப்பையே மறைமுகமாக ஏவிக் கொண்டிருக்கின்றான்.

ஒரு விடயத்தை வைத்து நான் இந்த முடிவுக்கு வருகிறேன்.

இலங்கை ஒரு தீவு. இங்கே வான்வெளிப் பயண வாசல் மட்டுமே வெளியுலகிற்கான தொடர்பு. இந்த வான்வழிப் பயணத்தை சர்வதேச மட்டத்தில் பாரியளவில் செய்யும் இடம் கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம். இந்த வானூர்தித் தளத்தில் இருந்து தமிழீழப் பகுதி எத்தனை நூறு கிலோமீட்டர்கள் தாண்டி இருக்கின்றது? சர்வதேசத்தில் இருந்து நோய்காவிகளாக வருபவர்களை தடுத்து வைத்திருப்பதற்கு தென்னிலங்கையில் ஒரு சிறுதுண்டு காடு கூடவா கிடைக்கவில்லை? பலநூறு கிலோமீட்டர்கள் தாண்டி தமிழீழத்தின் தமிழ்மக்கள் வாழும் இடங்கள் தானா இதற்கு தகுந்த இடங்கள்?

இது எவ்வாறான நினைப்பு என்றால், தொற்றுப் பரவினால் கூட சிங்கள மக்களுக்கு பரவாது தமிழர்களுக்குப் பரவித் தொலையட்டும் என்ற நினைப்பு மட்டுமே.

ஊரடங்கு சட்டம் பற்றி?
இது உண்மையில் தொற்றுநோய்த் தாக்கத்தை குறைக்கும் செயல் தான் நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த அரசு உண்மையாக மக்கள் மீது நலன் கொண்டிருந்த அரசு என்றால் இப்படியான இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி இருக்காது. சீனாவில் இந்த COVID 19 பிரச்சனை தலைவிரித்தாடிய போதே சர்வதேச போக்குவரத்தை நிறுத்தி இருந்தால் இப்போது இந்த அவசரநிலை வந்திருக்காது. இப்போதும் கூட அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு போட்டு மக்களை சங்கடத்துக்குள்ளாக்கி இருக்கத் தேவையில்லை.

இப்போதும் கூட பிரச்சனை உள்ள மாவட்டங்களைத் தனிமைப்படுத்தி ஏனையவற்றை இயங்குநிலைக்கு கொண்டு வரலாம் உதாரணமாக யாழ்ப்பாணத்தை எடுத்தால் ஒரிரண்டு தரைப்பாதைகளே இருக்கின்றன அவற்றை மூடி யாழ்ப்பாணத்தில் ஊரடங்கை அமுல்படுத்தலாம் இதனால் யாழில் இருந்து ஏனைய மாவட்டங்களுக்கு தொற்றுப்பரம்பல் நடப்பதை தடுக்கலாம். ஒவ்வொரு மாவட்டத்தின் எல்லைகளையும் இறுக்கமான காவல்துறை / இராணுவ எல்லைகளாக்கி மக்களை பாதுகாக்கலாம். இதைவிட்டு பாதிப்பற்ற மாவட்டங்களிலும் இந்த ஊரடங்குச் சட்டம் என்பதை அமுல்படுத்தும் போது மக்கள் மிக மோசமாக பாதிக்கப்படுகின்றனர். கூலி வேலைக்குப் போகின்ற மக்கள், விவசாயிகள் என்று எவ்வளவு கஸ்டங்களை அனுபவிக்கிறார்கள்.

விடத்தல் தீவில் கொலரா பரவிய போது நாம் வன்னி முழுக்க ஊரடங்கை அமுல்படுத்தவில்லை. விடத்தல் தீவை மட்டுமே சுற்றி வளைத்து முடக்கினோம். ஆனாலும் வன்னிமண் காப்பாற்றப்பட்டே இருந்தது.

இறுதிச் சண்டை என்று எம் மீது இனவழிப்பு நடவடிக்கையை ஏவி விட்ட சிங்களப் படையின் 2009 மே 18 ஆம் நாள் பற்றி…

இதை சொல்லுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. எங்கள் கனவுகள் எல்லாம் சிதைந்து போன நாள். நாங்கள் எம்மை எதற்காக தியாகித்தோமோ அந்த இலட்சியம் மௌனித்துப் போன நாள். விடுதலைக்காக விதையாகிவிட்ட மாவீரர்களின் குருதியில் சிவந்த எம் மண் சிங்கள வல்லாதிக்கத்தின் காலடியில் அடிபணிந்துவிட்ட நாள். நினைக்க முடியாத வேதனையைத் தந்து நிற்கும் நாள்.

இந்தச் சண்டை 2008 ஆம் ஆண்டி ஆரம்ப காலத்தில் வன்னிக் களமுனைகளில் ஆரம்பித்த போது நான் நெட்டாங்கண்டல் மருத்துவமனையில் பணியாற்றி வந்தேன். களமுனைகள் எங்களின் ஊருக்குள் நகர்ந்து கொண்டிருந்த போது அங்கிருந்து பல இடங்கள் இடம்பெயர்ந்து இறுதியாக முள்ளிவாய்க்காலில் வந்து சேர்ந்தோம். எம் இலட்சியம் கொஞ்சம் கொஞ்சமாக மௌனிப்பதை கண்முன்னே கண்டு செய்வதறியாது திகைத்தாலும் திலீபன் மருத்துவமனை மருத்துவனாக என் பணியை இறுதி நாள் வரை செய்தேன். என்னிடம் இருந்த ஒரு அவசர ஊர்தியியை சிறு சத்திரசிகிச்சை செய்யக் கூடிய நிலையில் உருமாற்றி வைத்து, வட்டுவாகல் பகுதியில் ஒரு மரத்துக்குக் கீழ் நிறுத்தி வைத்திருந்து 17 ஆம் நாள் மே 2009 ஆம் ஆண்டின் மாலைப்பொழுதில் காயமடைந்த மூன்று பேருக்கு சத்திரகிச்சை செய்தேன். அது தான் நான் செய்த இறுதிச் சிகிச்சை. இதன் போது மருத்துவக்கலாநிதி எழுமதி கரிகாலனும் என்னருகில் நின்று தன் பணியை செய்தது இன்றும் நினைவில் எழுகிறது.

எமது தமிழீழ தேசியத்தலைவர் எம்மை உருவாக்கிய போது எதை எதிர்பார்த்து உருவாக்கினாரோ அதை இறுதிக் கணம்வரை நான் செய்த வலியோடு தான் இன்றும் வாழ்கிறேன். நாங்கள் மௌனித்துவிட்டோம் எங்கள் கனவுகள் மௌனித்துவிட்டன. ஆனாலும் நினைவுகளும் கடமைகளும் இன்றும் நிலையாகவே இருக்கின்றன..

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments