
தமிழீழ விடுதலைக்கு உரம் சேர்த்த குடும்பம் வெளித்தெரியாத ஒரு வீர வரலாறு சொல்லும் சகோதரன்…..
எங்கள் குடும்பம் ஏன் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டது என்கிற கேள்விகள் பலபேர் என்னிடம் கேட்டிருந்தார்கள். அதற்கான என்னால் இயன்றளவுக்கான பதிலை இங்கு தருகிறேன் .
(இன்று எனது 2 வது அண்ணன் அழகரத்தினம் ரவீந்திரன் (மேஜர் தாகூர் / சங்கர்) அவர்களின் 60வது அகவை தினம் (23.04.1965-15.08.1995) இன்றைய தினம் இவற்றை தருவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன். )
முதலாவதாக எமது குடும்பத்திலிருந்து ஆயுதப்போராட்டத்துக்கு அடியெடுத்து வைத்தவரும், முதலாவதாக போராட்டத்துக்காக இன்னுயிரை 15.08.1995 அன்றைய தினத்தில் தனது 30 வயதில் அவரே தியாகம் செய்திருந்தார்.
எனது அண்ணன்மார்களில் நான் மிகவும் நேசித்த அண்ணனான ரவீந்திரன் (ரவி) மேஜர் தாகூர் /சங்கர் அவர்களின் 60வது பிறந்த தினம் இன்றாகும் . அவர் 23.04.1965 ம் ஆண்டு பிறந்திருந்தார். ஆனால் அவர் 1964ம் ஆண்டு பிறந்தவர்களோடு கல்வி பயின்றிருந்தார்.
அவர்ஆரம்பக் கல்வியை தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்திலும் பின்னர் ஹாட்லிக் கல்லூரியில் உயர்தர கணிதபிரிவு 1983 இல் கல்வி பயின்றுவந்திருந்தார்.
அவர் சிறு வயதில் double promotion பெற்று தன்னைவிட 1 வயது மூத்தவர்களோடு கல்வி கற்றிருந்தார். அவர் அதிகமான ஆளுமைகள் பலவற்றை கொண்டிருந்தார். போராட்டத்திலும் அதனை உறுதிசெய்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எங்களது குடும்பத்திலே அதிக ஆளுமையும், அறிவும், நற்பண்புகள் மிக்கவரும் , ஆங்கில புலமையும் , தொழில்நுட்ப அறிவும் , மேன்மையான பல குணவியல்வுகளையும் கொண்டிருந்தார் என்றால் மிகையில்லை. உறவினர்கள், நண்பர்கள் , அயலவர்கள் அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்டிருந்தார்.
தலைவர் அவர்களாலும் பல தளபதிகளாலும் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த போராளியாகவும், பொறுப்பாளனாகவும் இருந்திருந்தார்.
அவரைப்பற்றி பழைய போராளிகளுக்கே அதிகம் தெரிந்திருந்தது காரணம் அவர் பொதுவெளிகளில் அதிகம் தெரிந்தவரில்லை. அதோடு அவரை 1990 க்கு முற்பட்ட போராளிகளுக்கே அவரைத் தெரிந்திருக்கும் சந்தர்ப்பங்கள் உண்டு. அதிலும் 1990 க்கு முன் திருகோணமலையில் பணியாற்றிய போராளிகள் ஓரளவுக்கு அவரைத் தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு.
இப்பொழுது உயிரோடு இருக்கும் இந்தியாவில் பயிற்சி பெற்ற பழைய போராளிகளுக்கு அவரை நன்கு தெரிய வாய்ப்புகளுண்டு. பொதுவாக எல்லோருக்கும் 3வது அண்ணனாகிய மணிவண்ணன் அவர்களைத்தான் தெரியும் அவரின் வீரமரணம் 04.04.2009 இல் இறுதியுத்த காலப்பகுதியில் நிகழ்ந்ததினால் ஆகும்.
தலைமையை அழிக்க இந்திய புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்த சூழ்ச்சியைக் கூட இந்திய தேசத்து வேலூர் சிறையிலிருந்தவாறே முறையடித்திருந்தார் என்பதை இங்கு பதிவிடுவதில் பெருமைகொள்கிறேன்.
இந்திய கியூ மற்றும் RAW புலனாய்வாளர்களினால் “சங்கர்” என்ற பெயரில் அறியப்பட்ட தாகூர் என்பவரே இவர் ஆவார். பெரும்பாலும் அப்போதைய தமிழக அரசியல்வாதிகளுக்கும் அவரை நன்கு தெரியும். பலர் தங்களது ( அரசியல்வாதிகள் , சட்டவாளர்கள்,ஆதரவாளர்கள் ) உரைகளில் இவரின் பெயரை உச்சரிக்க கேட்டிருக்கிறேன்.
இந்திய புலனாய்வாளர்களின் சதிவலைக்குள் சிக்குப்படாமல் இறுதிவரை தனது இலட்சியத்தைப் பேணிபாதுகாத்து தனது தலைமைக்கு நேரவிருந்த பெரும் ஆபத்தையையும் முறியடித்து 15.08.1995 இல் இரகசியம் காத்தல் என்கின்ற மரப்புக்கிணங்க தமிழக போலீசாரால் கைதுசெய்ய எத்தனிக்கையில் “சயனைட்” அருந்தி வீரமரணத்தை தழுவியிருந்தார்.
எனது அப்பா தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். அவர் தமிழரசுக் கட்சியின் பிரதான கூட்டங்கள் ஒன்றையும் தவறவிடாமல் கலந்துகொள்பவர்களில் இவரும் ஒருவர் எனலாம். போராட்டத்துக்கான ஆரம்ப விதை அப்பாவிலிருந்தே தோன்றியது என்பதுக்கு இதுவும் ஒரு உதாரணமாகும்.
எங்களது நெருங்கிய உறவினர்கள் பெரும்பாலும் அரசாங்க உத்தியோகத்தராகவே அதுவும் பெரும்பாலானவர்கள் தென்பகுதியில் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். குறிப்பாக பலர் சொந்த வீடுகளை கொழும்பில் வாங்கி நிரந்தரமாக வசித்து வந்திருந்தார்கள்.
எனது அப்பாவும் சிறிது காலம் கொழும்பு பிரதான இலங்கை வாங்கி (Bank of Ceylon- City Office ) தலைமை அலுவலகத்திலும் பணியாற்றியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எங்களது குடும்பம் ஓரளவுக்கு பொருளாதாரத்தில் தன்னிறைவாகவே வாழ்ந்துகொண்டிருந்தது.

அப்பொழுதெல்லாம் அப்பாவின் சம்பளம் கொழும்பில் வாழ்வதுக்கும் குடும்பத் தேவைகள் அனைத்தையும் ( வாடகை மற்றும் இதர செலவுகள் உள்ளடங்காக ) பூர்த்திசெய்து 1/3 பங்குக்கு மேல் சேமிக்கக்கூடியதாக இருந்தது. ஆனால் இப்பொழுது கேள்விக்குறிதான் ?
மேலும் எங்களது குடும்பமும் கொழும்பிலே வீடு வாங்கி அங்கே நிரந்தரமாக குடியேறவே இருந்தார்கள் .ஆனால் அம்மப்பாவின் விருப்பின் பேரில் எங்கள் குடும்பம் மீண்டும் அம்மாவும் , அண்ணன்மார்கள் இருவரும் ஊர் திரும்பியிருந்தார்கள் . அப்பொழுது நானும் எனது 3வது அண்ணனும் பிறந்திருக்கவில்லை. எனது மூத்தண்ணாவுக்கும் (21.08.1963) 2வது அண்ணாவுக்கும்(23.04.1965) 1 1/2 வயது வேறுபாடுதான் . இருவரும் ஒருவரோடு ஒருவர் மிகவும் பாசமாகவே வளர்ந்து வந்தார்கள்.
எனது அப்பாவுக்கு இலங்கை வங்கியில் முதலாவது நியமனம் மாத்தறையில் கிடைத்திருந்து அங்கு சிங்கள பெரும்பான்மையினருடன் பணியாற்றிக்கொண்டுவந்திருந்தார். அவருக்கு பல சிறந்த சிங்கள நண்பர்கள் இருந்திருந்தார்கள் . அவரை அவர்கள் அன்பாக “சுது மாத்தையா” என்றுதான் அழைப்பார்கள் அதற்கு அவருடைய மாநிறமும் அன்பான குண இயல்புமே காரணம் எனலாம்.
யுத்தகாலங்களுக்கு முன்னர் அவருடைய சிங்கள நண்பர்கள் குடும்பங்களாக எங்களது பருத்தித்துறை வீட்டுக்கு வந்து தங்கி பருத்தித்துறை “லூர்த்து மாதா” தேவாலய வருடாந்த திருவிழாக்களில் பங்குகொள்வது வழக்கமானதொன்றாக இருந்தது.
1977 ம் ஆண்டு (12-20 August 1977) தமிழ்மக்களுக்கெதிராக சிங்கள பெளத்த பேரினவாத சக்திகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவன்முறையின்போது அப்பா மயிரிழையில் உயிர்பிழைத்து சிங்கள நண்பர்களால் தங்களது வீட்டில் பாதுகாப்பாக தங்கவைத்து , பின்னர் சிங்கள நண்பர்களின் உதவியோடு அவர்களின் காரிலே வவுனியா வரை பாதுகாப்போடு வந்துசேர்ந்திருந்தார்.
அக்காலத்தில் தென்பகுதிகளில் பல தமிழர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .
அன்றைய காலப்பகுதியில் அப்பாவின் நிலை தெரியாது எங்கள் குடும்பத்தினர் பெரும் அவதியுற்றிருந்தனர் மேலும் எந்தவொரு தகவல் பரிமாற்றம் ஒன்றுமே இருந்ததில்லை. பின்னர் அப்பா வீடு வந்துசேர்ந்தவுடன்தான் எங்கள் குடும்பம் மட்டற்ற மகிழ்ச்சியடைந்திருந்தார்கள்.
அப்பா 1989 இல் இலங்கை வங்கியிலிருந்து ஓய்வுபெற்றிருந்தார். அதன் பின் ஊரிலுள்ள மாணவர்களுக்கு இலவச ஆங்கிலக் கல்வியைப் போதித்துவந்தார். பின்னர் 1993 இல் தமிழீழ வைப்பகம் உருவாக்கல் வேலைத்திட்டதுக்காக புலிகள் அமைப்பின் நிதிப் பிரிவுடன் இணைந்து பணியாற்றிவந்தார்.
1993 இல் தமிழீழ வைப்பகத்துக்கான செயல்திட்டங்கள் ஆரம்பமாகி 1994 இல் கண்னாதிட்டி , யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. எனது அப்பா 1993 இலிருந்து 1998 மே 08 இல் அவர் இறக்கும்வரை முழுமூச்சாக வங்கியைக் கட்டியெழுப்ப தனது பட்டறிவைக்கொண்டு அரும்பாடுபட்டிருந்தார்.
அவரது உடலின் நோய் தாக்கத்தை அறிந்த மூத்தண்ணாவும் 3வது அண்ணாவும் ஓய்வெடுக்கும்படி கேட்டும் நீங்களெல்லாம் போராடும்பொழுது என்னால் இயன்றதை நானும் நாட்டுக்காக செய்யவேண்டும் என்று விடாப்பிடியாக மறுத்து தொடர்ந்தும் இறக்கும்வரை பணியாற்றியிருந்தார்.
அப்பொழுது எங்கள் குடும்பம் புதுக்குடியிருப்பில் வசித்துவந்துகொண்டிருந்தது. அவர் புதுக்குடியிருப்பு கிளையில் வங்கியின் கிளை முகாமையாளராக பணியாற்றிக்கொண்டிருந்தார். ஸ்கந்தபுரம் கிளையின் முகாமையாளருக்கு சுகையீனம் ஏற்பட்டதால்
பதில் கடமைக்கு ஒருவர் புதுக்குடியிருப்பிலிருந்து போகவேண்டியதாகிவிட்டிருந்தது. அங்கு போவதுக்கு ஒருவருக்கும் இஷ்டமில்லாமல் பின்னடிக்க இவர் அங்கு பணிக்கு போகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது.
அங்கு பணியின் நிமித்தம் போனவர் தனது பணியை நிறைவுசெய்துவிட்டு உயிரற்றவராக ( மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டிருந்தார் ) திரும்பி வந்திருந்தார்.
நாட்டுக்காக தன்னாலான பணியை செய்த திருப்தியுடன் மே8 1998 இல் தனது 64வது வயதில் நாட்டுப்பற்றாளராக மரித்திருந்தார்.
அவர் எப்பொழுதும் அண்ணன்மார்களுக்கு சொல்வது சிங்கள மக்கள் நல்லவர்கள் அவர்களுக்கு பாதகமில்லாமல் உங்கள் போராட்டத்தைச் செய்யுங்கள் என்பார் . உண்மையும் அதுதான் சிங்கள மக்களோ , முஸ்லீம் இனத்தவர்களோ , தமிழ் மக்களோ அனைவருமே அன்பானவர்கள் அவர்களின் அரசியல் தலைமைகள்தான் இனவாதத்தை விதைத்து இலங்கை எப்பொழுதும் ஒரு எரிபற்று நிலையில் தங்களுடைய அரசியல் பிழைப்புகளுக்காக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
1977 ல் (12-20 August 1977) நடந்த கலவரத்தின்போது அனுராதபுரத்தில் எனது அம்மப்பாவின் ( சோமசேகரம் சிவராமலிங்கம் ) மொத்த வியாபார வர்த்தக சாம்ராச்சியம் எரியூட்டப்பட்டும் சூறையாக்கப்பட்டும் எல்லோரும் அகதியாக வந்திருந்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அப்பொழுது அதுவும் எங்கள் குடும்பத்தினருக்கு பெரும் அடியாகவே நிகழ்ந்துவிட்டிருந்தது.
பின்னர் அப்பா அனுராதபுரத்தில் பணியாற்றியிருந்தார். அவ்வேளையில் அங்கும் பல சிங்கள ஊழியர்கள் , வடிக்கையாளர்களோடு சிநேகபூர்வமாக பழகியிருந்தார். அவரின் வாடிக்கையாளர்களில் ஒருவராக ஸ்ரீலங்கா இராணுவ உயரதிகாரியான முனசிங்கா என்பவரும் உள்ளடக்கம். அந்த அதிகாரி “வடமராச்சி லிபரேஷன் ஒப்பரேஷன்” காலப்பகுதியில் பருத்தித்துறை மந்திகையிலமைத்த இராணுவமுகாமில் பணியாற்றியிருந்தார். அவ்வேளையில் எனது அப்பாவும் பருத்தித்துறை இலங்கை வங்கியின் முகாமையாளராரில் ஒருவராக மந்திகையில் அமைந்ததிருந்த கிளையில் பணியாற்றிவரும்பொழுது முனசிங்கா அவர்கள் அப்பாவை சந்திக்கும்பொழுதெல்லாம் எங்கள் வீட்டுக்கு வரவிருப்பம் தெரிவிப்பார் ஆனால் அது அப்பாவுக்கு பெரும் மனசங்கடத்தை ஏற்படுத்தும் காரணம் அவ்வேளையில் எங்கள் 3 அண்ணன்மார்களும் விடுதலைப் போராட்டத்தில் இணைந்துவிட்டிருந்தார்கள். ஏதாவது சாக்குபோக்கு சொல்லி நழுவிக்கொண்டிருந்தார்.
அனுராதபுரத்தில் வேலையின் பின் கெப்பிட்டிகொல்லாவா என்னும் தனி சிங்கள இடத்தில் தனித் தமிழனாக இலங்கை வங்கி முகாமையாளராக சிறப்புற பணியாற்றி சக ஊழியர்கள்கள் , வாடிக்கையாளர்கள் அனைவரிடத்திலும் நன்மதிப்பைப்பெற்றிருந்த ஒரே ஒரு தமிழனாக பணியாற்றியிருந்தார்.
அப்பா எல்லோரிடத்திலும் அன்பாகவும், மென்மையாகவும், பண்பாகவும் நேர்மையாகவும் பழகும் பண்பு கொண்டவர் என்பது அவரை தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும் . அப்பாவைத் தெரிந்தவர்கள் பழகியவர்கள் எல்லோரும் சொல்வது ” அவர் மிதித்தால் புல்லுக் கூட சாகாது என்பார்கள்” அவ்வாறே எனது 3 அண்ணன்மார்களும் அப்படியேதான் வாழ்ந்தார்கள்.
அவ்வாறானவர்கள் ஏன் பெரும் புயலானார்கள் ? என்ற கேள்வி உறவினர்கள் நண்பர்கள் கேட்பதுண்டு
காலம் எனது 3 அண்ணன்மார்களையும் போராட்டத்துக்குள் இழுத்துவிட்டிருந்தது. இது ஒரு தற்செயல் நிகழ்வாக நிகழ்ந்துவிட்டது அல்ல. இது தொடர் பாதிப்புகளின் விளைவாக ஏற்பட்ட அவசிய நிகழ்வாகவே நிகழ்ந்துவிட்டிருந்தது.
1983 ன் இனக்கலவரத்தின் பின் எங்கள் குடுப்பத்திலிருந்து மட்டுமல்லாமல் எங்கள் நெருங்கிய குடும்பங்களிலிருந்தும் பலர் போராட்டத்தில் இணைந்துவிட்டிருந்தார்கள். அன்று பெரும்பாலானவர்கள் TELO இயக்கத்தில் இணைந்திருந்தார்கள். பின்னர் TELO அமைப்புக்குள் ஏற்பட்டிருந்த உள்முரண்பாடு (பொபி -தாஸ் முரண்பாடு ) காரணமாக பலர் போராட்டத்திலிருந்து விலகிவிட்டிருந்தார்கள். அவர்கள் எல்லோரும் அவ்வமைப்பின் வடமராச்சி பொறுப்பாளர் தாஸ் தலைமையில் இருந்திருந்தார்கள்.
ஆரம்பத்தில் எனது பெற்றோரும் சராசரி பெற்றோர் போல் தங்களது 4 ஆண் பிள்ளைகளும் படித்து சிறந்து விளங்கவேண்டும் என்பதேதான் அவர்களின் கனவாகவும் இருந்தன.
அவர்களின் கனவு சந்தோஷம் எல்லாமுமே 1983 ம் ஆண்டு ஆடி
23 இல் சிங்கள காடையினரினால் அப்பாவி தமிழ்மக்கள் மீது தென்பகுதியில் கட்டவிழ்க்கப்பட்டிருந்த கலவரத்தின் பின்பு ஆடிபோய்விட்டிருந்தது எனலாம்.
எனது மூத்தண்ணா அழகரத்தினம் அரவிந்தன் (மேஜர் யாழ்வேந்தன் / சங்கர் ) அவர்கள் தரப்படுத்தல் மூலம் அவருடைய பல்கலைக்கழக அனுமதி மறுக்கப்பட்டு அதன்பின் கொழும்பில் எமது பெரியம்மா வீட்டில் தங்கியிருந்து I C M A கற்கைநெறியை தொடர்ந்துகொண்டிருக்கையில் கலவரத்தில் சிக்குண்டு மயிரிழையில் உயிர்தப்பி அகதியாக கப்பலில் எமது உறவினர்களோடு ஊர் திரும்பியிருந்தார்.
அதன்பின் மூத்தண்ணாவின் I C M A படிப்பு பாதியில் இடைநிறுத்தப்பட்டது அதன் பின் அவருக்கு கொழும்புக்குச் சென்று படிக்க அவருக்கும் பெற்றோருக்கும் விருப்பம் இல்லாமலேபோய்விட்டது. பின்னர் சட்டக்கல்வியை கைதடியில் அமைந்திருந்த சட்டக்கலூரியில் தொடர விரும்பி அவ்வாறே சட்டக்கல்வியை தொடர்ந்துகொண்டிருக்கையிலே வல்லைவெளியில் உலங்குவானுர்தியிலிருந்து அடிக்கடி நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக ஒருமுறை அவற்றிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார் அதன்பின் பெற்றோரின் நிர்ப்பந்தத்தினால் அக் கல்வியும் பாதியில் நிறுத்தப்பட்டிருந்தது.
இவ்வாறு இருக்க மூத்தண்ணாவுக்கும்(அரவிந்தன்) 2வது அண்ணாவுக்கும்(ரவீந்திரன்) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களான ரஞ்சன் லாலா , கந்தன் (ரவி) 1983 ன் இறுதிக் காலப்பகுதியில் தொடர்பு ஏற்பட்டு இருவரும் ஒன்றாகவே ஆரம்பத்தில் புலிகள் அமைப்பில் இணைய விரும்பியிருந்தார்கள்.
ஆனால் முதலில் 2வது அண்ணாவாகிய ரவீந்திரன் அவர்கள் 1983 இல் புலிகள் அமைப்பில் இணைந்து 1984 இல் ஆயுதப் பயிற்சிக்காக கடல்வழியாக தமிழகம் சென்று அங்கு இந்தியா -05 பயிற்சி முகாமில் லெப் கேணல் பொன்னம்மான் தலைமையில் ஆயுதப் பயிற்சி பெற்று அதன்பின் சர்வதேச தொலைத்தொடர்பு கற்கைநெறியையும் அங்கு பூர்த்திசெய்து 1985 இல் மீண்டும் தாயகம் திரும்பி திருகோணமலைக்கு திருகோணமலை மாவட்டதுக்குரிய தொலைதொடர்பாளனாக தலைமையினால் நியமிக்கப்பட்டு லெப் கேணல் புலேந்தி அம்மானோடு தனது பணியினை ஆரம்பித்திருந்தார்.
அவர் திருகோணமலையில் 1985 இலிருந்து 1990 வரை திருகோணமலையின் பன்குளம் காட்டுப்பகுதில் தனது பணியினை திறம்பட ஆற்றியிருந்தார்.
அவரின் பணிகள் ……
1.தொலைத் தொடர்பாளன்
2.தொலைத்தொடர்பு பயிற்சி ஆசிரியன்
3.இராணுவ பயிற்சி மற்றும் இராணுவக் கல்வி ஆசிரியன்
4.இராணுவ வேவு நடவடிக்கை மற்றும் தாக்குதல்
இவரை அங்கு “தாகூர் மாஸ்டர்” என்றே போராளிகள் மதிப்போடும் அன்போடும் அழைத்திருந்தார்கள்.
2வது அண்ணா பயிற்சிக்காக 1984ம் ஆண்டு இந்தியா செல்ல மூத்தண்ணாவை அதே வருடமே மேற்படிப்புக்காக London மாநகரத்துக்கு பெற்றோர்கள் அனுப்பிவைத்தார்கள். அவர் அங்கு சென்று விடுதலைப் புலிகளின் London கிளையினரோடு தன்னை இணைத்துக்கொண்டு 1987 இல் “லிபரேஷன் ஒப்பரேஷன்” (Liberation Operation )என்னும் வடமராச்சி பிரதேசத்தின் மீது ஸ்ரீலங்கா இராணுவத்தின் வலிந்த ஆக்கிரமிப்பு படை நடவடிக்கையின் காலப்பகுதியில் இந்தியாவுக்கு அங்கிருந்தே பயிற்சி எடுப்பதுக்காக சென்றிருந்தார், ஆனால் அங்கு அவரின் பயிற்சி எடுக்கும் நோக்கம் இலங்கை – இந்தியா ஒப்பந்தத்தினால் நிறைவேறாமல் போய்விட்டிருந்தது.
இந்தியாவில் M O (Military Office ) பிரிவில் சிறிதளவு காலம் பணியாற்றி அதன் பின் 1987 இல் இந்திய விமானப்படை விமானம் மூலம் சக போராளிகளோடு பலாலி விமானநிலையத்தில் வந்திறங்கி விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவில் பணியாற்றியிருந்தார்.
இவ்வாறிருக்க 1986 இல் 3வது அண்ணனாகிய அழகரத்தினம் துஷ்யந்தன் ( பிரிகேடியர் மணிவண்ணன் ) அவர்கள் விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்து 1987ன் தொடக்க காலப்பகுதியில் தனது பயிற்சியை சாவா-02 பயிற்சிமுகாமில் செல்வராஜா மாஸ்டரிடம் தனது பயிற்சியைப் பெற்று உறுப்பினராக இணைந்துகொண்டார்.
தனது பயிற்சியை நிறைவுசெய்த 3 வது அண்ணனாகிய மணிவண்ணன் அவர்கள் 1987ம் ஆண்டு தலைவரை கைதுசெய்யும் நோக்கோடு கொக்குவில் பகுதியில் தரையிறங்கிய இந்திய இராணுவத்துக்கெதிராக 14போராளிகள் கொண்ட அணிக்கு தலைமை தாங்கி போரிட்டு இந்திய இராணுவத்தின் யுத்தத்தாங்கியிலிருந்து ஏவப்பட்ட எறிகணைச் சிதறலால் தனது கன்னிச் சண்டையின்போது காயமுற்று தனது போராளி நண்பர்கள் சிலரையும் இழந்துவிட்டிருந்தார்.
நான் மூத்தண்ணாவிடம் நீங்கள் ஏன் London இலிருந்து இங்கு வரவேண்டிய தேவைதான் என்ன ? என்று எனக்குள் நீண்டகாலம் அவரிடமிருந்து கேட்கவேண்டியிருந்ததை கேட்டிருந்தேன் .
அவர் London க்கு போனதிலிருந்து கிரகமாக தபால் மற்றும் வாழ்த்து மட்டைகள் அனுப்பியவண்ணமிருப்பார். 1986-1987 காலப்பகுதியில் போர் உக்கிரமடைய தபால் போக்குவரத்துகள் பாதிப்படைந்து உரிய காலப்பகுதிகளில் அவை வந்து சேர்வதுமில்லை அதேவேளை அங்கு போவதுமில்லை . இவ்வாறு இருக்க அண்ணாவின் கடிதம் முற்றாக வருவது தடைப்பட்டிருந்தது . அப்பொழுது எங்களுக்கு தொலைத்தொடர்பு வசதிகள் எவையும் இருக்காத காலம் .
அவராவது தப்பி அங்கு சந்தோசமாக இருப்பார் என்று எண்ணி மேலும் தபால் போக்குவரத்தும் சீரற்று இருப்பதால் எங்களுடைய தபால் அவருக்கும் அவருடைய தபால் எங்களுக்கும் கிடைக்கவில்லை என்றே நினைத்து ஓரளவுக்கு தங்களைத் தாங்களே தேற்றிக்கொண்டிருந்தார்கள் . இவ்வாறிருக்க இவர் இந்தியா சென்றதோ மீண்டும் யாழ்ப்பாணம் வந்ததோ எங்கள் ஒருவருக்கும் தெரியாது.
1987 காலப்பகுதியில் யாழ் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலிகள் அமைப்பினால் நடைபெற்ற ஒரு அரசியல் கருத்தரங்கில் இவரும் பங்கெடுத்திருந்தார் அவ்வேளை எனது பெரியம்மாவின் மகள் (ஒன்றுவிட்ட அக்கா) அவரும் மாணவர்களாக சென்றிருந்தவேளை அண்ணாவை கண்டு வீட்டை வந்து அரவிந்தன் அண்ணாவைக் கண்டதாக சொல்ல எங்களுக்கோ நம்பிக்கையில்லை London இல் இருப்பவர் எவ்வாறு இங்கு வருவார்? என்பதுதான் ஆச்சரியம்
எங்களால் அவர் இங்கு உள்ளார் என்பதை உறுதிப்படுத்தவும் அப்பொழுது முடியவில்லை. சில காலத்துக்குப் பின் வீட்டுவாசலில் ஒரு Nissan Sunny கார் வந்து நிற்கிறது எங்களுக்கோ யாராக இருக்கும் என்ற ஆச்சரியம் அக் காரிலிருந்து அண்ணா இறங்கி வர ஒருவகையில் ஆச்சரியம் இன்னொருபுறம் மகிழ்ச்சி அவரோடு நியூட்டன் அண்ணாவும் (முன்னர் மட்டக்களப்பு மாவட்டத் தளபதியும் பின்னாளில் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்தவரும்) வந்திருந்தார்.
1997 இல் வன்னியில் அவரைச் சந்திக்கும்பொழுதுதான் என்னால் அந்தக் கேள்வியை கேட்கமுடிந்தது. அப்பொழுதுதான் அவர் தனது நியாயத்தைக் கூறியிருந்தார். எங்களுக்கு என்ன நடந்ததென்று ஒன்றுமே (உயிரோடு இருக்கிறமோ அல்லது இல்லையோ) தனக்கு அங்கு இருக்கும்பொழுது தெரிந்திருக்கவில்லை . செய்திகள் எல்லாம் வடமராச்சிப் பகுதிகளில் தொடர்ந்து விமானத் தாக்குதல்கள் , ஷெல் தாக்குதல்கள் , மக்களின் இறப்புகள் , மக்களின் இடம்பெயர்வுகள் ஆகவேதான் தானும் எப்படியாவது அங்கு வந்து போராட்டத்தில் பங்கெடுக்கவேண்டும் என்கின்ற முடிவோடுதான் தான் இந்தியா சென்று இங்கு வந்ததென்று கூறியிருந்தார்.
இவ்வாறு காலம் எங்கள் குடும்பத்தை 1983 இலிருந்து 2009 வரை நேரடியாக போராட்டத்துக்குளே இழுத்துவிட்டிருந்தது. 1977 இலிருந்து இனவாதிகளினால் பாதிப்புகளைத் தொடர்ந்து அனுபவித்ததன் பாதிப்பே எங்கள் குடும்பம் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குள் தங்களை இணைந்துகொண்டது என்பதுதான் வரலாறு.
(ஒரு குடும்ப விருட்சம்)
முழுமையான.. கீழே அழுத்தவும்….PFD FILE
![]()
தமிழீழ விடுதலைக்கு உரம் சேர்த்த குடும்பம் வெளித்தெரியாத ஒரு வீர வரலாறு சொல்லும் சகோதரன்…..