
மின்னாமல் ஒரு ஆனந்தப் பேரிடி எம்மண்ணில் இறங்கியது.
நிலம் கிழித்தோர் நீரூற்று குபுகுபுவென்று கொப்பளித்துப் பூமியை நனைத்துப் போகிறது. எந்த ஆரவரமுமற்று அக்கினிக் குஞ்சுக்கு அடைவைத்து விட்டோம். நாளை பொரிக்கும். பொல்லாப் பிழையைப் பொசுக்கும். பெரியமலையைப் புரட்டுவதற்காக… அடிவாரத்தில் அலவாங்கு குத்திவிட்டோம்.
நாளை மலை சரிந்து போக சமநிலையிங்கு தர்மமாகும்.
உள்ளே கொதிக்கும் உலைக்களங்கள் இனி ஆறி அடங்கும்.
சுடுமூச்சாகிச் சுவரிடிக்கும் பெருமூச்சுகளின் சோகமினித் தொலைந்து போகும்.
மலரில் மதுவருந்தி மயங்குவதற்காக வண்டுகளுக்குப் பூக்கள் வரதட்சணை கொடுப்பதில்லை, காளை மாட்டுக்கு கலியாணச்சீர் கொடுக்கும் பழக்கமேதும் பசுமாட்டுக்கில்லை, ஆண்நாய் பெண்நாயிடம் ஆறுலட்சம் கேட்பதில்லை. மானிடனுக்கு மட்டும் ஏனிந்த இழிநிலை. அதுவும் தமிழனென்றால் பிள்ளையை விற்பதில் அவனே பெரியபுள்ளி.
மதங்களேதும் மணச்கொடையை ஆதரிக்கவில்லை. தெய்வங்களெவரும் சீதனம் வாங்கியதாகத் தெரியவில்லை, பார்வதிக்குப் பாதியுடல் கொடுத்து பரமசிவன் அர்த்த நாரீஸ்வரரானார். சரஸ்வதியை நாக்கிலே தூக்கிவைத்து பிரம்மா பெரிய கடவுளானார்.
உள்ளே சென்று உற்றுப்பார்த்தால் ஆண்டவன் சந்நிதானங்கள் அனைத்திலும் ஆணும், பெண்ணும் அரையரைவாசியே. பெண்ணைச் சக்தியென்றார் பாரதியார், பெரும் சக்தியென்றார் விவேகானந்தர், தாய்மையின் வடிவமென்றார் பரமஹம்சர் இவையொன்றும் காதல் வாழ்வுக்குக் கைகொடுக்க மாட்டாது!
பெண்ணே பெரியவள், மாதா; சக்தி, மனைவி; பெரும்பொருள் என்றாலும். மகள்; பிரமிப்பின் பேரொளி. காதற்குளிப்பில் உடலாறும் போதுதான் மனிதன் ‘ஞானி’ ஆகின்றான். அந்தக் குளியலுக்கு எவனும் காசுவாங்கினால் அவன் “பாவி” ஆகின்றான்.
பத்துலட்சம் காசும், பன்னிரண்டு பரப்புக் காணியும் நாற்பது பவுணில் நகையும் வாங்கி ஏலத்தில் தன்னைக் கூவிவிற்றவன் எந்தமுகத்தோடு முதலிரவுக்கு கதவுமூடுவான்?
காசுக்கு தன்னை விற்றவன் வீட்டில் மகிழ்ச்சியாகக் கட்டிலும் ஆடாது. மனநிறைவோடு தொட்டிலும் ஆடாது. மீசை முளைத்ததொன்றை வாங்கும் வழியற்று இரவில் நட்சத்திரங்களை எரித்தபடி எடுத்ததெற்கெல்லாம் எரிந்து விழுந்தபடி நரையெறிந்து நடைதளர்ந்து, கோடை மரமாகி இலையுதிர்ந்து போகும் முதிர்கன்னியரின் வாசல் கடந்து கலியாண ஊர்வலம் போகும் போது யன்னல் கம்பிகளில் முகம் உரசி தீ மூட்டியபடி அவர்கள்விடும் அக்கினி மூச்சின் அர்த்தம்
எத்தனை பேரைத் தைத்தது?
மணக்கொடைத் தடைச்சட்டம்” இது புரையோடிப்போன புண்ணுக்கு தலைவன் செய்த சத்திர சிகிச்சை. அதர்மத்தின் அடிமுடியை நீறாக்க பிரபாகரன் இட்ட பெருநெருப்பு. போகப்பொருளாகவும், காமப்பொருளாகவும் பெண்ணை எதிர்கொள்ளும் புன்மைதீருமட்டும் பேச்சளவில் மட்டுமே பெண்விடுதலை. ஆணாதிக்கத்தின் வேர்கள் ஐந்து கண்டங்களையும், ஏழு கடல்களையும் கடந்து எங்கும் நிறைந்துள்ளது.
அது ஆவரங்காலிலும் உண்டு அமெரிக்காவிலும் உண்டு விகிதாசாரத்தில் கொஞ்சம் வேறுபாடு அவ்வளவே.
பெண்ணாகப்பட்டவள் பானைகழுவி, படுக்கை தட்டிப்போடும் கண்திறந்து மூடும் யந்திரமல்ல பேசாப் பொருளாகி ஏவலியற்றும் றிமோட்கொன்றோல் பொம்மையுமல்ல
ஆணைப்போல் அவளுக்கும் சரியாசனம் வேண்டும். அரியாசனமும் வேண்டும். கண்ணகியை உதறிவிட்ட கோவலன் இன்னொருத்தியுடன் போனான். மாசாத்துவான் “மகனுக்கு மடிவற்றிப் போனதும் காற்சிலம்பு கேட்டு அவள் காலடிக்குத் திரும்பினான். பொருளுக்கும், போகத்துக்குமா பெண்ஜென்மம்? நிலவுடமைக் காலத்தில் பெண்ணுக்கு நீதிகிட்ட வில்லை பொருளுடமைச் சமூகத்திலும் அவள் பெருமையடையவில்லை, இன்று வரையும்தான் அவளின் இடர்தீரவில்லை.
** சீனத்து மாநாட்டுத் தீர்மானம்” என்ன செய்யும்? ஒருபாட்டம் அழுதுவிட்டு ஓய்ந்து போகும். இன்று கண்திறந்தது எங்கள்மண். போராட்டம் பெண்ணுக்குப் புதுவாழ்வு தந்தது. குச்சொழுங்கையெங்கும் பெண்ணின்குரல் குதூகலிக்கின்றது. பேரிகையொலிக்கப் பெண்மை நிமிர்ந்து சூரியனைத் தொட்டு நிற்கிறது. அவளின் விழிநீர்துடைக்க ஆயிரம் கரங்கள். ஊரதிர நிமிர்ந்த வாழ்வு. பாரதி சொன்ன **திமிர்ந்த ஞானச் செருக்கு”, “வாடகைக் கனவுகள்” அற்ற வல்லமைவடிவாய் பாடுகின்றாள் விடுதலைப்பண். எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்குள்ளும் இடரழித்து விட்ட இறுமாப்பு. ஆகாயம் வந்து அடிபணியும் அதிசயம். ”மணக்கொடைத் தடைச்சட்டம் ” புதியபாய்ச்சல் விற்பனைப்பொருளாய் வீட்டில் முடங்கிய அற்புதங்களே எழுவீர்! சாலப் பொருந்தும் சட்டம் வந்தாச்சு ஏலவிற்பனை இனியிங்கில்லை.
– புதுவை இரத்தினதுரை.
வி.பு இதழ், புரட்டாதி 1995.