×

வலிகள் சுமந்து வழி தேடிய இடப்பெயர்வு

வலிகள் சுமந்து வழி தேடிய இடப்பெயர்வு

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தை முறிவடைந்ததையடுத்து, இராணுவத்தினர் குடிகொண்டிருந்த பலாலி, காங்கேசன்துறை போன்ற படைத்தளங்களிலிருந்து முழு யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றும் நோக்கில் படைத்தரப்பினர் போரினைத் தொடங்கியிருந்தார்கள். எங்கும் வான்வழித் தாக்குதல்களும் ஷெல் வீச்சுக்களும் துப்பாக்கிச் சூடுகளும் சரமாரியாக நடத்தப்பட்டன.

உலக வரலாற்றில் எந்த ஒரு இனமும் சந்தித்திராத பாரிய இடப்பெயர்வை யாழ் மக்கள் சந்தித்தார்கள். 1995-ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி இந்த மாபெரும் இடப்பெயர்வு நடந்தது. இதற்கு காரணமாக இருந்தது தான் அன்றைய இலங்கை அதிபர் சந்திரிகாவின் ‘சூரியக் கதிர்’ ராணுவ நடவடிக்கை. இந்த சூரியக்கதிர் நடவடிக்கை 1995 அக்டோபர் 17 ல் தொடங்கப்பட்டது.

1995 ஒக்டோபர் 30 அன்று விடிந்த போது சாதாரணமாகத்தான் விடிந்தது. யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் புலிகளின் பலம் பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாத நிலை அன்றைய இரவு நெருங்குகிறது. இன்றைக்கும் புத்தூர்ப் பகுதிகளில் சண்டை நடந்தது என பேசிக்கொள்கிறார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலம்.
இரவு 8 மணி யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருப்பதனால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வடமராட்சி வன்னிப் பகுதிகளுக்கு மக்களை இடம்பெயருமாறு ஒலிபெருக்கிகளில் புலிகள் அறிவித்தார்கள்.

யாழ்ப்பாண குடாநாட்டில் அப்போதிருந்த அண்ணளவான மக்கள் தொகை 5 இலட்சம். குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 இலட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்பதனை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.
ஆனால் மக்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருக்க வில்லை. மூட்டை முடிச்சுக்களை கட்டி எல்லோரும் வீதிகளில் இறங்க இறுகிப்போனது வீதி.

ஆனால் எந்த விதமான முன் தீர்மானமும் இன்றி நெருக்கடியான நிலையிலேயே புலிகளும் இந்த முடிவினை எடுத்திருந்தார்கள் என்பதற்கு மக்களோடு மக்களாக இடம் பெயர்ந்த புலிகளின் படையணிகளும், காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போராளிகளும் சான்று.

அந்த இரவு மிகப்பெரும் மனித அவலத்தை சுமந்தது. இனி வீடு வருவோமோ என்று உடைந்து போனவர்கள், எங்கே போவது என்ற திசை தெரியாதவர்கள், வயதான அம்மா அப்பா இவர்களை வீட்டிலே விட்டு வந்தவர்கள், நிறைமாத கர்ப்பிணிகள், முதியவர்களைச் சுமந்தவர்கள் என வீதியில் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு ஒரு மணி நேரம் ஆயிற்று.
தண்ணீர் கேட்டு அழுத குழந்தைகளுக்கு பெய்த மழையை குடையில் ஏந்தி பருக்கியவர்கள், லொறிகளில் றேடியேற்றருக்கென வாளிகளில் தொங்கும் தண்ணீரை எடுத்து குடித்தவர்கள், வீதியில் இறந்த முதியவர்களை அந்த சதுப்பு நிலத்தில் குழி தோண்டி புதைத்தவர்கள் – உலகம் என்ற ஒன்று பார்த்து ‘உச்’ மட்டும் கொட்டியது.

அடுத்த காலையே வானுக்கு வந்து விட்ட விமானங்கள் நிலமையை இன்னும் பதற்றப்படுத்தியது. அந்த வீதிக்கு அண்மையாக எங்கு குண்டு வீசினாலும் ஆயிரக்கணக்கில் மக்கள் மடிவோம் எனும் நிலையிலிருந்தார்கள். 24 மணிநேரங்களிற்கும் மேலாக நடக்க வேண்டியிருந்தது. நடந்தும் தங்க இடமெதுவும் இன்றி ஆலயங்கள், தேவாலயங்கள், பேருந்து நிலையங்கள் என கண்ணில் பட்ட இடங்களில் மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தூக்கிப்போட்டனர்.
காலங்காலமாய் வாழ்ந்த மண்ணை விட்டு ஒரே நாளில் தூக்கியெறியப்படின் அந்த வலி எப்படியிருக்கும்..?
சூரியக்கதிர் நடவடிக்கை மூலம் புலிகளிடமிருந்த யாழ் நகரையும் குடா நாட்டின் ஒட்டுமொத்த பகுதிகளையும் படையினர் கைப்பற்றிக் கொண்டார்கள். யாழ்ப்பாணத்தை முழுமையாக கைப்பற்றியதையடுத்து டிசம்பர் மாதம் சூரியக்கதிர் நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

1995 சூரியக்கதிர் நடவடிக்கை என்ற அந்தக் கொடிய யுத்தத்துடன் யாழ்ப்பாணம் தீவிர யுத்த காயங்களுக்கு உள்ளானது. இன்றுவரை ஆறாத காயங்களும் சிதைவுகளும் ஏற்பட்டுக்கொண்டேதானிருக்கின்றன. தமிழர்கள் இன்னும் விடுதலைக்காய் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments