×

பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவின் மனைவி பற்றி தெரியுமா? வல்வெட்டித்துறை 

பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவின் மனைவி பற்றி தெரியுமா? வல்வெட்டித்துறை 

ஈழத்தின் முக்கிய துறைமுகப் பட்டணங்களில் ஒன்றான வல்வெட்டித்துறை தனியானதொரு பண்பாட்டின் உறைவிடம் வல்லவர்களின் துறை வல்வெட்டித்துறை என்பது சாலவும் பொருந்தும்.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவதில் வல்லவர்கள் மட்டுமல்ல, வரலாற்றில் பல தசாப்தங்களுக்கு முன்னரே கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தில் தலை சிறந்தோரையும் கொண்டது தான் வல்வைபூமி.

எவருக்குமே கிடைத்தற்கரிய கலியுகக் கடவுளான எமது ஒப்பற்ற பெருந் தலைவன் தமிழீழத் தேசியத் தலைவர் பிறந்த ஊராகவும் இது திகழ்வதால் தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகின்றது.

இத்தகைய வரலாற்றுப் பெருமை மிக்க இந்த ஊரிலே தான் திரு. திருமதி யோகராசா இணையருக்கு ஒரு அக்கா, இரண்டு அண்ணாக்களுடன் கடைசிச் செல்வப் புதல்வியாக சந்திரகுமாரி எனும் நாமத்துடன் 01.11.1969 இல் எங்கள் வரதா அக்கா வந்துதித்தார்.

அவர் எமது தேசியத் தலைவருக்கு நெருங்கிய உறவினர் என்ற பெருமையையும் பெரும் பேற்றையும் தமதாக்கிக் கொண்டுள்ளார். அதன் காரணத்தினால் சந்திரகுமாரி அக்காவுக்கு சிறு வயது முதல் இயல்பாகவே மிகுந்த நெஞ்சுரமும் தலைமைத்துவப் பாங்கும் இரத்தத்தில் ஊறியே காணப்பட்டது.

அவரது குடும்பமானது மாமிச உணவு உண்ணாத பரம்பரைச் சைவக் குடும்பம் ஆகும். அவரது தந்தையார் அரசாங்க எழுதுவினைஞராகக் கொழும்பு மாநகரத்திலே பணியாற்றி வந்தார். இதனால் சந்திரகுமாரி அக்காவும் தனது சிறு வயதுக் கல்வியை கொழும்பிலே கற்றார்.

பின்பு 1977ஆம் ஆண்டு தமிழருக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட மிகப் பாரதூரமான இனக் கலவரத்தின் காரணத்தினால் அவரது குடும்பம் கொழும்பை விட்டு இடம்பெயர்ந்து மீண்டும் வல்வெட்டித்துறையில் வசித்து வந்தனர்.

சந்திரகுமாரி அக்காவும் தனது மிகுதிப் பாடசாலைக் கற்கை நெறியினை வல்வெட்டித்துறையிலுள்ள மிகவும் பிரபல்யம் பெற்ற கல்லூரியான சாரண இயக்கத்தில் அகில இலங்கை வரை சென்று சாதனை படைத்த யாழ். வல்வை சிதம்பராக் கல்லூரியில் தொடர்ந்தார்.

எம் தலைவன் பிறந்த மண்ணிலே பிறந்த காரணத்தினால் “கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் ”என்ற முது மொழிக்கேற்ப வீரமும் தீரமும் கொண்டு வழர்ந்தார்.

12.05.1985இல் க.பொ.த சாதாரணதரம் படிக்கும் போது நடைபெற்ற வல்வை நூலகப் படுகொலை, தரப்படுத்தலின் விளைவாக1988இல் க.பொ.த உயர்தரத்தில் ஏற்பட்ட பிரச்சனை, 02.08.1989இல் நடைபெற்ற வல்வைப் படுகொலை போன்ற நிகழ்வுகளினால் ஏற்பட்ட தாக்கங்கள் அவரை எமது போராட்டத்தின் பால் ஈர்த்தது.

இதன்பால் 1990இல் இரண்டாம் கட்ட ஈழ யுத்தம் ஆரம்பித்த காலப்பகுதியில் சந்திரகுமாரி அக்காவும்”அடுப்பங்கரைகளிலும், சினிமா கொட்டகைகளிலும் சிந்தைகளைப் பறி கொடுத்து தூங்கிக் கிடந்திடாமல் அலங்கார ஆடைகளையும் அழகு ஆபரணங்களையும் அணிந்து திரிந்து போலித்தனமான புளகாங்கிதம் அடையாமல் புரட்சிகரக் கருத்துக்களை உறுதியாகப் பற்றி போர்க் குணம் கொண்ட மங்கையாய்க் களம் புகுந்து எமது நீதியான யுத்தத்தின் மூலம் அநீதியான யுத்தமனைத்திற்கும் முடிவு கட்டலாம் ”என்றும்” நாட்டின் விடுதலைப் போராட்டம் என்பது நாயகன் கடமை மட்டுமல்ல நமது கடமையுமாகும்” என்பதனையும் உணர்ந்து எழுச்சி கொண்டு மகத்துவம் மிக்க எம் பெருந் தலைவன் அணியில் இணைந்து மகளிர் பயிற்சிப் பாசறையில் 11வது அணியில் அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்து கொண்டு வரதா எனும் பெயர் கொண்டு வரிப்புலியாகினார்.

(இவ் இடைப்பட்ட காலத்தில் கரும்புலியாக இருந்தார் தேசிய தலைவர். அனுமதியும் கிடைத்து இருந்தது)

2001 இல் எமது போராட்டமானது பரிணாம வளர்ச்சியடைந்து நாம் யாழ் குடா நாட்டைக் கைப்பற்றும் அளவுக்கு பலமாக இருந்தோம். இலங்கை இராணுவமானது பலவீனமடைந்து காணப்பட்டது. இதன் காரணத்தினால் யாழ் குடாநாட்டையும் மொத்த தமிழீழத்தையும் நாம் மீட்டெடுத்து விடுவோம் என்று பயமடைந்து அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க நரி மூளையுடன் நோர்வே அரசின் தலையீட்டுடன் 22.02.2002 இல் நிரந்தரமான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் எம்முடன் இணைந்து கையெழுத்திட்டார்.

இதனால் மக்கள் இலங்கை அரசின் கபடத் தனத்தை உணராமல் தமக்குத் தீர்வு கிடைத்து விட்டது என மகிழ்ச்சியில் திகழ்ந்தார்கள்.
2004 காலப் பகுதியில் வரதா அக்காவும் திருமண வயதைக் கடந்து விட்ட காரணத்தினால் அவரின் தந்தையாரின் வேண்டுகோளிற்கிணங்க தேசியத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் கட்டளைத் தளபதி பால்ராஜ் அண்ணா இணையேற்றார். திருமணம் ஆகிவிட்டாலும் அவர் கடற்புலிகள் மகளிர் அணியிலேயே தனது பணியினைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்திருந்தார்.

2006 இல் மீண்டும் மூண்ட நாலாம் கட்ட ஈழப் போரின் காரணத்தினால் A9 பாதை மூடப்பட்டு மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்தன.இதன் காரணத்தினால் எமது போராட்ட மரபுப்படி ”துணைவனும் துணைவியும் நடைமுறை வாழ்விலும் நாட்டை மீட்கும் மகத்துவமான விடுதலைப் போரிலும் சம பங்கு கொண்டு புறப்பட வேண்டிய வேளை இது தான் புறப்படுவோம் ”என்று வரதா அக்காவும் அவரது துணைவரும் தத்தமது படையணிகளுடன் இணைந்து தமது பணியினை செவ்வனே மேற் கொண்டனர்.

அந்த வகையில் வரதா அக்காவும் கடற்புலிகள் மகளிர் படையணியுடன் இணைந்து (ரேடார் RADAR) மின் காந்த அலைக் கருவியூடாக அவதானிக்கும் தொலை தூர நோக்கி கண்காணிப்பு பிரிவில் கட்டளையிடும் அதிகாரியாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டார். 30.10.2006 இல் மட்டக்களப்பில் இருந்து வன்னி நோக்கி காட்டு வழியாக நகர்ந்து வந்து கொண்டிருந்த போது எங்கள் வரதா அக்கா மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் அரவம் தீண்டி எம்மையெல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டு மீளாத் துயில் கொண்டு விட்டார்.

எமது தேச விடுதலைக்காக தானும் தன் கனவனும் களமாடிய உன்னதமான வரலாறுகள் எமது தாயகத்திலே நடந்தது பால்ராஜ் யார் என்பது உலகம் அறிந்தது ஆனால் அதே தீரமும் வீரமும் அன்பும் கொண்டவர்தான் அவர் மனைவி எமது தேசம் விடுதலை பெற களமாடி களமாடி வெற்றி கோண்ட வீரர்கள் இவர்கள்.

வரலாறு எமக்கு ஓர் வாய்ப்பை தரும் அன்று உலகம் புகழ்பாடும் எம் தளபதிகளின் வீரம்.

🖋 வீரவணக்கம்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments