×

யாழ். நூல் நிலையம், ஈழநாடு நாளேட்டுப் பணிமனை எரிக்கப்படல்.

இந்தச் சம்பவங்கள் நடைபெற்ற மறுநாள் யாழ்ப்பாணம் மாநகரசபைக்குச் சொந்தமான யாழ். பொதுநூலகம் தீமூட்டி எரிக்கப்பட்டது. அங்கிருந்த உசாத்துணை நூல்கள், இரவல் வழங்கும் பகுதி, சிறுவர் பிரிவு, இன்னும் பல பழைய ஓலைச்சுவடிகளென எல்லாமாக கிடைத்தற்கரிய கருவூலமாகப் பேணப்பட்டு வந்த தொண்ணூற்று மூவாயிரம் நூல்கள் தீயில் எரிந்து போயின. யாழ்ப்பாண நூல் நிலையம் எரிவதை யாழ். ஆயர் இல்ல மேல்மாடியிலிருந்து பார்த்த வணபிதா தாவீது அடிகளார் அநத் இடத்திலேயே மாரடைப்பால் மரணமானார். நூல் நிலையத்திற்குத் தீமூட்டிய தீயவர்கள் அங்கிருந்து சென்று மானிப்பாய் வீதியிலுள்ள ஈழநாடு பணிமனைக்குத் தீமூட்டினார்கள். அப்போது அங்கே இரவுக் கடமையிலிருந்த ஈழநாடு ஊழியர்களான சிவானந்தம் அவர்களும், ஐயா சச்சிதானந்தம் அவர்களும் எரிகாயங்களுக்கு இலக்கானார்கள். இவை நடைபெற்றது 1981ஆம் ஆண்டு யூன் மாதம் முதலாம் திகதியாகும். இதன் பின்னர் கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்தக் குண்டர்கள் திருநெல்வேலியிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைச் செயலகத்தினுள் நுழைந்தனர். இது யூன் மாதம் இரண்டாம் திகதி அதிகாலை இடம்பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருநெல்வேலிப் பணிமனையில் தங்கியிருந்த பாலஜோதி என்ற இளைஞனைச் சுட்டுக் கொன்றார்கள். கோப்பாயைச் சேர்ந்த விவசாய விரிவாக்க உத்தியோகத்தரான பரமேஸ்வரன் என்ற இளைஞன் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். குடாநாட்டின் பல பகுதிக்கும் சென்ற சிறிலங்காப் பொலிசார் அச்செழு என்ற இடத்தில் சண்முகம் என்ற சலவைத் தொழிலாளியை வீதியில் வைத்துச் சுட்டுக்கொன்றார்கள்.

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச்சபை தேர்தலில் ஒரு ஆசனத்தையாவது பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் ஐ.தே.கட்சியைச் சேர்ந்த காமினி திஸாநாயக்காவும், சிறில் மத்தியூவும் பெருமுயற்சி செய்தார்கள். 1981ஆம் ஆண்டு யூன் மாதம் நான்காம் திகதி நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் ஆறு வாக்குப் பெட்டிகள் காணாமற்போயின. இதற்கு ஐ.தே.கட்சி அமைச்சர்களே காரணம். அவர்களால் ஒரு ஆசனத்தைக் கூடப் பெறமுடியவில்லை. யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் எல்லா ஆசனத்தையும் தமிழர் விடுதலைக் கூட்டணியே கைப்பற்றியது.

இலங்கைக்கு 1931ஆம் ஆண்டு டொனமூர் குழுவின் பரிந்துரைப்படி  சர்வசன வாக்குரிமை அளிக்கப்பட்டது. இலங்கைக்கு சர்வசன வாக்குரிமை அளிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவுப் பூர்த்தி பொன்விழாவை 1981ஆம் ஆண்டு ஐ.தே.கட்சி அரசாங்கம் இவ்வாறு கொண்டாடியது. அதே ஐ.தே.கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களாலேயே யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆறு வாக்குச்சீட்டுப் பெட்டிகளும் களவாடப்பட்டன என தேர்தலைக் கண்காணித்த பக்கச் சார்பற்ற குழுவினர் தெரிவித்தனர்.

 

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments