
செம்மணிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புதைகுழி அகழ்வு மற்றொரு பதைபதைக்க வைக்கும் காட்சி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வாயைக் கயிற்றால் (நூலால்) இறுக்கிக் கட்டிய நிலையில், உட்கார்ந்த கோலத்தில் கண்டெடுக்கப்பட்ட அந்த எலும்புக்கூடு வெறும் எலும்புக் கூடு அல்ல; அது ஒரு மனிதனின் மீதான உச்சக்கட்ட வதைக்கும், கோழைத்தனமான கொலையின் அப்பட்டமான சாட்சி.
அந்த எலும்புக்கூட்டின் இறுக்கப்பட்ட வாய் நம்மைப் பார்த்து எதையோ சொல்ல முயல்கிறது.
“என் உயிரை எடுப்பதற்கு முன்பு என் குரல்வளையை நெரித்தீர்கள்; எனது கடைசி அலறலைக்கூட இந்த உலகம் கேட்கக்கூடாது என்று என் வாயைக் கயிற்றால் கட்டினீர்கள். ஆனால், காலம் என்னை மண்ணுக்குள் புதைத்தாலும், எனது எச்சங்கள் இன்று உங்களது குற்றத்தை உலகிற்குப் பறைசாற்றுகின்றன!” என்று அது கதறுவது போல் ஒரு நடுக்கம் நம்மைத் தொற்றிக் கொள்கிறது.
பேசும் சுதந்திரத்தைப் பறித்து, உரிமை கேட்ட தமிழினத்தின் குரல்வளையை எப்படி சிங்கள இராணுவம் துப்பாக்கியாலும் கொடூர வதைகளாலும் ஒடுக்கியது என்பதன் நேரடி சாட்சிதான் இந்த வாய்கட்டப்பட்ட எலும்புக்கூடு. இது தனிப்பட்ட ஒரு மனிதனின் மரணம் அல்ல; ஒரு தேசத்தின் மீதான திட்டமிட்ட இனப்படுகொலையின் அப்பட்டமான சாட்சி.
ஈழ மண்ணில் அரங்கேறிய படுகொலைகள் தற்செயலானவை அல்ல; அவை சிங்கள பேரினவாத அரசுகளாலும், அதன் கட்டுப்பாட்டில் இயங்கிய முப்படைகளாலும் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டவை.
ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு, இரவோடு இரவாகக் கடத்தப்பட்டு, செம்மணி போன்ற தனிமைப்படுத்தப்பட்ட வெளிகளில் சித்திரவதை செய்து புதைக்கப்பட்டனர்.
சொந்த மண்ணில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்கும் உரிமை கூட தமிழர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, குற்றவாளிகளை ஆட்சியின் உச்சத்தில் அமர வைக்கும் சிங்கள அரசுகளின் நாடகம் இன்றும் தொடர்கிறது.
செம்மணி என்பது ஒரு குறியீடு மட்டுமே. இலங்கையின் வடக்கு-கிழக்கு எங்கும் இதுபோன்ற நூற்றுக்கணக்கான புதைகுழிகள் எவ்வித அடையாளமும் இன்றித் துயரத்தின் மீசையாய் உறைந்து கிடக்கின்றன.
“இன்னும் எத்தனை எலும்புக்கூடுகள் அகழப்படாமல், இந்த மண்ணின் ஆழத்தில் அழுதுகொண்டிருக்கின்றனவோ? எத்தனை தாய்மார்களின் கண்ணீர் இந்த மணலில் காய்ந்திருக்கிறது?”
என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் ரத்தக் கண்ணீரை வரவழைக்கிறது. நீதி விசாரணை என்ற பெயரில் காலத்தை இழுத்தடிக்கும் சர்வதேச நாடுகளும், உள்ளக விசாரணை நாடகமாடும் சிங்கள அரசும் எப்போதுமே குற்றவாளிகளுக்குத் துணை போயுள்ளனவே தவிர, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்கிய வரலாறே இல்லை.
செம்மணியின் ஆழத்திலிருந்து துடிக்கும் அந்த எலும்புக்கூடுகள் நமக்கு விட்டுச்செல்லும் செய்தி ஒர் எச்சரிக்கை மட்டுமல்ல, ஒரு கடமையுமாகும். காலங்கள் கடந்தாலும், புதைகுழிகள் தோண்டப்பட்டாலும், சிங்கள இனவெறி அரசின் குற்றங்கள் ஒருபோதும் மாய்ந்துவிடாது.
மண்ணுக்குள் புதைக்கப்பட்ட ஒவ்வொரு எலும்பும் நாளை வரலாற்றின் முன் சிங்கள பேரினவாதத்தை குற்றவாட்டுக் கூண்டில் நிறுத்தப் போகும் சாட்சிகள்.
நீதி கிடைக்காமல் போகலாம்; ஆனால், உண்மைகள் என்றும் செத்துப்போவதில்லை!
செம்மணிப் புதைகுழிகள் உலக மனசாட்சியின் முகத்தில் அறைந்து கொண்டே இருக்கும்; தமிழினத்தின் விடுதலை வரலாற்றில் அழியாத வடுக்களாய் என்றென்றும் நீடிக்கும்!
தசாப்தங்களாகத் தொடரும் அநீதிகள், சர்வதேசத்தின் மெத்தனப் போக்கு, மற்றும் நீதிக்கான நம் நீண்ட காத்திருப்பு ஆகியவை நம்மை ஆழமான இயலாமைக்கும் சோர்வுக்கும் தள்ளுவது இயல்பே.
முகநூல் பதிவுகளோடு நமது கடமை முடிந்துவிடுகிறது என்ற ஏக்கம், இன்று ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் மனசாட்சியைச் சுடும் ஒரு குற்றவுணர்வாகும்.
ஆனால், இந்த இயலாமை உணர்வை எங்ஙனம் ஆக்கப்பூர்வமானதோர் அரசியல் மற்றும் சட்டபூர்வ ஆற்றலாக மாற்றுவது என்பதே இன்றைய அவசியமான கேள்வி.
மண்ணுக்குள் புதைக்கப்பட்ட எலும்புகள் நம்மைப் பார்த்து எப்போதுமே கேள்விகளைத்தான் எழுப்புகின்றன. அந்தக்கேள்விகளுக்குப் பதில் தரும் பொறுப்பு இன்றும் நம் கைகளில்தான் உள்ளது.
முகநூல் பதிவுகளைத் தாண்டி, உண்மையான நீதிக்கான உறுதியான படியை நோக்கி நாம் நகர வேண்டிய தருணம் இது.