×

எம்.ஜி.ஆரும் புலிகளும்: விடுதலைக்கு வித்திட்ட மாமனிதர்

அந்த வரலாற்றுக் காலகட்டத்தில், அந்த மனிதரிடம் தான் தமிழ்நாட்டை ஆட்டிப் படைக்கும் அரசியல் அதிகாரம் இருந்தது. அரசியல் அதிகாரத்துடன் பண பலமும் இருந்தது. இல்லாதோருக்கு வாரி வழங்கும் மன வளமும் இருந்தது. ஏழை மக்கள் அவரை ஒரு தெய்வமாகப் பூசித்தனர். மக்கள் திலகமென தமிழுலகம் அவரைப் போற்றியது. அவர் ஒரு அபூர்வமான மனிதர். அதிசயமான குணவியல்புகள் கொண்டவர். நெஞ்சில் உறுதியும் நேர்மையும் கொண்ட ஒரு உன்னதமான மனிதாபிமானி. அவரிடம் ஒரு புதுமையான மனிதம் இருந்தது. அந்த மனிதப் பண்பு மனிதர்களைக் கவர்ந்து இழுக்கும் சக்தி பெற்று விளங்கியது. அவர் மிகவும் கவர்ச்சி மிக்க தலைவராக விளங்கினார். அவர்தான் எம்.ஜி.ஆர் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு. எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள்.

எம்.ஜி.ஆர் அவர்களின் பெருமை பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அவரது திராவிட இயக்கப் பின்னணி பற்றியும் கலை உலக, அரசியல் உலக வாழ்க்கை பற்றியும் அறிந்திருக்கின்றேன். ஆயினும் அவரை சந்தித்துப் பழகும் வாய்ப்புக் கிட்டுமென நான் கனவுகூட கண்டதில்லை. என்றாலும் அந்த வாய்ப்புக் கிட்டத்தான் செய்தது. எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் மத்தியில் ஒரு உறவு பிறந்தது. அது ஒரு வரலாற்று உறவாக மலர்ந்தது.

தலைவர் பிரபாகரனது புரட்சிகரமான வாழ்வும் வீர விடுதலை வரலாறும் எம்.ஜி.ஆரை வெகுவாகக் கவர்ந்தது. அவர்கள் மத்தியிலான உறவு நல்லுறவாக வளர்ந்து, நட்புறவாகப் பரிணமித்தது. பிரபாகரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குத் தன்னாலான உதவிகளை வழங்க எம்.ஜி.ஆர் முன்வந்தார். பல வழிகளில் உதவியும் செய்தார். அவரது பேருதவிகள் எமது விடுதலை இயக்கத்தின் வளர்ச்சியிலும் விரிவாக்கத்திலும் என்றுமில்லாத ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தின.

எம்.ஜி.ஆர் அவர்கள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு எந்த வழிகளில், எப்படியாக உதவினார்? எத்தகைய ஆபத்தான எதிர்விளைவுகளையும் பொருட்படுத்தாது எப்படியெல்லாம் துணிந்து அவர் காரியங்களைச் சாதித்தார்? எமது இயக்கத்திற்கு ஏற்பட்ட அழுத்தங்கள், நெருக்குவாரங்களிலிருந்து எவ்வாறு எமக்குக் கைகொடுத்து உதவினார்? இப்படியான பல விடயங்கள் காலத்தால் சாகாத நினைவுகளாக எமது போராட்ட வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டியவை. எம்.ஜி.ஆர் அவர்களை விடுதலைப் புலிகள் இயக்கம் சார்பில் முதன்முதலாகச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதனைத் தொடர்ந்து, தனித்தும் தலைவர் பிரபாகரனுடனும் பல சூழ்நிலைகளில் முதலமைச்சரை சந்தித்து உறவாடும் அரிய சந்தர்ப்பங்களும் எனக்குக் கிடைத்தன. அவற்றை எல்லாம் உண்மை வழுவாது சுருக்கமாக இங்கு பதிவு செய்துள்ளேன். தமிழீழ விடுதலை வரலாற்றில் ஆர்வமும் அக்கறையும் கொண்ட அனைவருக்கும் இக்குறிப்புகள் பயன்படும் என்பது திண்ணம்.

முதன் முதலாகத் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களைச் சந்தித்த பின்னணி ஒரு சுவாரஸ்யமான கதை.

1984ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம். அப்பொழுது நானும் எனது மனைவி அடேலும் சென்னை நகரப் புறத்திலுள்ள திருவான்மையூரில் விடுதலைப் புலிப் போராளிகளுடன் வசித்து வந்தோம். எமது இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களும் மூத்த தளபதிகள் சிலரும் போராளிகளும் எமது இருப்பிடத்திற்குச் சமீபமாகத் தங்கியிருந்தனர். இந்திய மத்திய அரசு இரகசியமாக ஒழுங்கு செய்த இராணுவப் பயிற்சி முடிந்தபோதும், தமிழக நாட்டுப் புறங்களில் பயிற்சிப் பாசறைகளை நிறுவி, புதிய போராளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அடையாறில் அமையப்பெற்ற விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமையகத்தில் நான் பணிபுரிந்து வந்தேன்.

அந்தக் காலகட்டத்தில், விடுதலைப் புலிகள் மட்டுமன்றி மற்றைய போராளி அமைப்புகளும் சென்னையைப் பிரதான பின்தளமாகக் கொண்டு இயங்கி வந்தன. தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பு (புளொட்), ஈழ விடுதலை அமைப்பு (ஈரோஸ்) ஆகியன, இந்திய இராணுவப் பயிற்சியை முடித்துக் கொண்டு தமிழ்நாட்டில் செயற்பட்டு வந்தன. பிளவுபட்டு, பிரிந்து நின்ற போராளி அமைப்புக்களை ஒரே இலட்சியத்தில், ஒரே அணியாக ஒன்றிணைத்தால் தமிழீழ விடுதலைப் போராட்டம் பலப்படும் என தமிழ் மக்கள் மத்தியில் அவ்வேளை பரவலாக கருத்தொற்றுமை நிலவியது. பல்வேறு வட்டாரங்களிலிருந்து ஒற்றுமை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவில் வசித்த ஈழத் தமிழ் பிரமுகர்கள் சிலர் சென்னைக்கு வருகை தந்து விடுதலை அமைப்புக்களின் தலைவர்களைச் சந்தித்து ஒற்றுமையை வலியுறுத்தினர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆர்வமும் அக்கறையும் கொண்ட தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் இந்த ஒற்றுமை முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். 1983ஆம் ஆண்டு ஜூலையில் தமிழர்களுக்கு எதிராகச் சிங்களக் காடையர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான இன ஒழிப்புக் கலவரத்தை அடுத்து தமிழ்நாடு எங்கும் தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சி கிளர்ந்தது. என்றுமில்லாத வகையில் தமிழின உணர்வு மேலோங்கி நின்றது. தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருந்த போராளி அமைப்புகள் மீது அனுதாபமும் ஆதரவும் நிலவியது. ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு நல்கி, தமிழ்நாட்டுத் தமிழரின் நல்லெண்ணத்தைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மத்தியில் போட்டியும் நிலவியது. இந்தச் சூழ்நிலையில்தான் ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்தது.

அப்பொழுது திரு.எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவி வகித்தார். ஈழ விடுதலை அமைப்புகள் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்த அவர், விடுதலை அமைப்புக்களின் தலைவர்களுக்கு ஒரு பகிரங்க அழைப்பையும் விடுத்தார். ஒரு குறிப்பிட்ட நாளில் ஈழ விடுதலை அமைப்புக்களின் தலைவர்கள் தம்மைச் சந்திக்குமாறு வேண்டிக்கொண்டார். திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் இந்த அழைப்பை தமிழ்நாட்டுத் தினசரிகள் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்தன.

இந்த அழைப்பு விடுக்கப்பட்ட மறுதினம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு.மு.கருணாநிதி அவர்களிடமிருந்து இன்னொரு அழைப்பு வந்தது. திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் குறிப்பிட்ட தினத்திற்கு முதல்நாள் தம்மைச் சந்திக்குமாறு ஈழ விடுதலை அமைப்புகளின் தலைவர்களுக்கு திரு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். கலைஞரின் அழைப்பினைத் தி.மு.க. பத்திரிகைகள் முக்கியமளித்துப் பிரசுரித்தன.

ஈழ விடுதலை இயக்கங்களின் ஒற்றுமை முயற்சியில் தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களும் போட்டியில் இறங்கியது எமக்கு ஒரு சிக்கலையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியது. தமிழ்நாட்டு அரசியலில் தலையிடுவதில்லை என்பது விடுதலைப் புலிகளின் நிலைப்பாடாக இருந்தது. தமிழ்நாட்டு அரசியலில் பக்கசார்பற்ற நிலையைப் பேணுவதும் எமது கொள்கையாக இருந்தது. அப்படியிருக்கும் பொழுது திராவிட இயக்கத்தின் இருபெரும் தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ள இப்போட்டி எமக்கு ஒரு புதிய சவாலாக அமைந்தது. திரு. பிரபாகரன் அவர்களுடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாடினேன்.

கலைஞரின் அழைப்பை ஏற்று அவரைச் சந்தித்தால் எம்.ஜி.ஆரைப் பகைக்க நேரிடும், கலைஞரின் அழைப்பை நிராகரித்து, எம்.ஜி.ஆரைச் சந்தித்தால் கலைஞரைப் பகைக்க நேரிடும். இவ்விரு தலைவர்களினதும், அவர்கள் தலைமை தாங்கும் அரசியல் இயக்கங்களினதும் ஆதரவும் அனுதாபமும் எமக்கு அவசியம்; எமது விடுதலைப் போராட்டத்திற்கு அவசியம். ஆகவே பக்க சார்பு நிலையெடுத்து யாரையும் பகைத்துக் கொள்ள நாம் விரும்பவில்லை. அத்துடன் எமக்கு இன்னொரு பிரச்சினையும் இருந்தது. எமது இயக்கத் தலைமையின் பாதுகாப்புப் பிரச்சினை அது. அக் காலகட்டத்தில் போராளி அமைப்புகள் மத்தியில் முரண்பாடும் பகைமையும் நிலவியது. குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கும் புளொட் இயக்கத்திற்கும் மத்தியில் மோதல் வெடிக்கும் அளவிற்குப் பகைமை இருந்தது. ஏற்கனவே, சென்னையிலுள்ள பாண்டி பஜாரில் புளொட் தலைவர் உமா மகேஸ்வரனுக்கும் பிரபாகரன் அவர்களுக்கும் மத்தியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து, இரு அமைப்புகள் மத்தியிலும் விரோதம் முற்றியிருந்தது. அப்படியான சூழ்நிலையில் ஈழ விடுதலை அமைப்புகளின் தலைவர்கள் ஒரே இடத்தில் ஒன்றாகக் கூடுவது என்பது சாத்தியமற்றது. ஆபத்தானதும் கூட. ஒற்றுமையை வேண்டி நின்ற தமிழக அரசியல் தலைவர்களுக்கு எம்மிடையே நிலவிய முரண்பாடுகள், பகைமை உணர்வுகள் பற்றி எடுத்து விளக்கிப் புரிய வைப்பதும் சாத்தியமில்லை. இந்தச் சிக்கல்கள் எல்லாவற்றிற்கும் ஒரேயொரு தீர்வுதான் இருந்தது. அதாவது கலைஞரையும் எம்.ஜி.ஆரையும் சந்திக்காமல் தவிர்ப்பது. இந்த யோசனையைப் பிரபாகரன் ஏற்றுக் கொண்டார்.

கலைஞர் கருணாநிதி அழைப்பு விடுத்த நாள் வந்தது. விடுதலைப் புலிகளையும் புளொட் இயக்கத்தையும் தவிர ஏனைய அமைப்புகளின் தலைவர்களான திரு.பத்மநாபா (ஈ.பி.ஆர்.எல்.எப்), திரு.சிறீசபாரெத்தினம் (ரெலோ), திரு.பாலகுமார் (ஈரோஸ்) ஆகியோர் கலைஞரைச் சந்தித்தனர். திரு.பிரபாகரனும், திரு.உமா மகேஸ்வரனும் தமது அழைப்பை ஏற்று வரவில்லை என்பது கலைஞருக்குக் கவலைதான். ஆயினும், எம்.ஜி.ஆரைச் சந்திப்பதற்கு முன்னராக ஏனைய ஈழ விடுதலை அமைப்புகளின் தலைவர்களைச் சந்தித்ததை அவர் ஒரு அரசியல் வெற்றியாகக் கருதியிருக்க வேண்டும். அதனால்தான் அந்த சந்திப்பை அவர் ஒரு முக்கிய அரசியல் நிகழ்வாக பெரிதுபடுத்திப் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். மறுநாள் அந்தச் சந்திப்பைத் தலைப்புச் செய்தியாகப் புகைப்படங்களுடன் தி.மு.க. பத்திரிகைகள் பிரசுரித்தன.

தான் குறித்த தினத்திற்கு முதல் நாளே, கலைஞர் கருணாநிதி மூன்று ஈழ விடுதலை அமைப்புகளின் தலைவர்களைச் சந்தித்து, ஒரு அரசியல் நாடகத்தை மேடையேற்றி, அதனை ஒரு முக்கிய அரசியல் நிகழ்வாகப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தது எம்.ஜி.ஆருக்குக் கடும் சினத்தை ஏற்படுத்தியது. ஒரு நல்ல நோக்குடன் தான் மேற்கொண்ட ஒற்றுமை முயற்சியைச் சுயநல அரசியல் நோக்கத்திற்காகக் கலைஞர் குழப்ப முயற்சிக்கிறார் என அவர் எண்ணினார் போலும்.

அன்று மாலை, தமிழ்நாட்டு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உதவிப் பொலிஸ்மாஅதிபர் (D.I.G) திரு.அலெக்ஸாந்தர் அடையாறிலிருந்த எமது அரசியல் செயலகத்திற்கு வருகை தந்து என்னைச் சந்தித்தார். திரு.அலெக்ஸாந்தரை எனக்கு ஏற்கனவே தெரியும். பல தடவைகள் சந்தித்து உறவாடியதால் நல்ல பழக்கம். சென்னையில் எழுந்த சில பிரச்சினைகளை அவர் தலையிட்டுத் தீர்த்து வைத்து எமக்கு உதவியவர். முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் நெருக்கமானவர் என்பதும் எனக்குத் தெரியும்.

“கலைஞர் கருணாநிதி மீதும், அவரைச் சந்தித்த போராளி அமைப்புகளின் மீதும் முதலமைச்சர் கடும் சினங்கொண்டிருக்கிறார். அந்த மூன்று அமைப்புகளின் தலைவர்களையும் தான் இன்று சந்திக்கப்போவதில்லை என்றும் முதல்வர் கூறினார். விடுதலைப் புலிகளை மட்டும் அவர் இன்று சந்திக்க விரும்புகிறார். இன்று மாலை விடுதலைப் புலிகளை, சென்னை பறங்கிமலையிலுள்ள தனது இல்லத்திற்கு அழைத்து வருமாறு எனக்கு அவர் ஆணை பிறப்பித்து இருக்கிறார்.” இவ்வாறு சொன்னார் திரு.அலெக்ஸாந்தர்.

எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. எதற்கும் நான் தலைமைப்பீடத்துடன் கலந்துரையாடிய பின்னரே முடிவு எடுக்க வேண்டும் என்றேன். “முதலமைச்சர் உங்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பார். தயவு செய்து அவரை ஏமாற்றிவிட வேண்டாம். நீங்கள் முதலமைச்சரையும் தமிழ்நாட்டு அரசையும் பகைத்துக் கொண்டால் தமிழ்நாட்டில் செயற்படுவது கடினமாக இருக்கும்.” என்று லேசாக ஒரு எச்சரிக்கையும் விடுத்தார். உமா மகேஸ்வரனையும் முதல்வர் சந்திப்பாரா என்று கேட்டேன். புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் புளொட்டின் தலைவர் உமாவுக்கும் மத்தியிலான பகை முரண்பாடு பற்றி அலெக்ஸாந்தர் நன்கு அறிவார். உமாவைப் பிறிதொரு தினத்தில் முதலமைச்சர் சந்திப்பார் என்றும், முக்கியமாகப் பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் சந்திப்பதையே அவர் பெரிதும் விரும்புகிறார் என்றும் அலெக்ஸாந்தர் சொன்னார்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆரைச் சந்திப்பது தவிர்க்க முடியாதது என்றாகிவிட்டது. முதல் சந்திப்பில் எமது இயக்கத்தை அறிமுகப்படுத்த வேண்டும். எமது இயக்கத்தின் போராட்ட இலட்சியத்தை எடுத்து விளக்க வேண்டும். ஆகவே, முதற் சந்திப்பிற்கு என்னைப் போகுமாறு பிரபாகரன் பணித்தார். எம்.ஜி.ஆர் வற்புறுத்தினால் பின்பு தாம் அவரைச் சந்திக்கலாம் என்றும் பிரபாகரன் முடிவு எடுத்தார். எனது தலைமையில் ஒரு குழுவாகச் சென்று அன்று மாலை முதலமைச்சரை சந்திப்பதென்று முடிவாயிற்று. என்னுடன் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேபி சுப்ரமணியம் (இளங்குமரன்), சமீபத்தில் வீரச்சாவு எய்திவிட்ட கேணல் சங்கர், அன்று ‘விடுதலைப் புலிகள்’ பத்திரிகையின் ஆசிரியராக பணிபுரிந்த திரு.மு.நித்தியானந்தன் ஆகியோர் அன்று மாலை முதலமைச்சர் எம்.ஜி.ஆரை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்ட எம்.ஜி.ஆர் எம்மை அன்புடனும் பண்புடனும் வரவேற்றார். முதலில் நாம் எம்மை அறிமுகம் செய்து கொண்டோம். “உங்கள் தலைவர் பிரபாகரன் வரவில்லையா? அவரைச் சந்திக்க நான் ஆவலாக இருப்பதாகச் சொல்லுங்கள்” என்றார். “அவர் சென்னைக்கு வெளியே ஒரு பயிற்சிப் பாசறைக்கு அவசர அலுவலாக சென்றிருக்கிறார். அடுத்த தடவை நிச்சயமாக அவரை அழைத்து வருவோம்.” என்றேன்.

“கலைஞர் கருணாநிதியின் அழைப்பை நீங்கள் ஏன் ஏற்கவில்லை? அவரை எதற்காகச் சந்திக்க மறுத்தீர்கள்?” என்று ஒரு சங்கடமான கேள்வியை எழுப்பினார் எம்.ஜி.ஆர்.

“ஈழ விடுதலை அமைப்புகள் ஒன்றுபட வேண்டும், ஈழ விடுதலைப் போராட்டம் வலுப்பட வேண்டும் என்ற உயரிய நோக்குடன் நீங்கள்தான் முதலில் ஈழ விடுதலை அமைப்புகளுக்கு அழைப்பை விடுத்தீர்கள். இன்றைய நாளை சந்திக்கும் தினமாக குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் கலைஞர் கருணாநிதி வீம்பிற்காக தானும் ஒரு அழைப்பை விடுத்து ஒரு நாள் முன்கூட்டியே ஈழ விடுதலை அமைப்புகளைச் சந்திக்க விரும்பினார். கலைஞர் விடுத்த அழைப்பு ஒற்றுமை முயற்சியை நோக்காகக் கொண்டதன்று. அவர் உங்களுடன் போட்டி போட்டு அரசியல் இலாபம் தேட முயற்சித்தார். அதனால்தான் நாங்கள் அவரது அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.” என்று விளக்கினேன். முதல்வரின் முகம் மலர்ந்தது. “நீங்கள் தமிழ்நாட்டு அரசியலை நன்கு புரிந்து வைத்திருக்கின்றீர்கள்.” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.

“ஈழ விடுதலைப் போராளிகள் ஐந்து அமைப்புகளாக ஏன் பிளவுபட்டு நிற்க வேண்டும்? ஒரே அணியில் ஒன்றுசேர முடியாதா?” என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.

“ஒற்றுமைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். ஒரு உறுதியான, தெளிவான இலட்சியத்தின் அடிப்படையில்தான் போராளி அமைப்புகள் ஒன்றுசேர முடியும். ஆனால் விடுதலைப் புலிகளுக்கும் ஏனைய அமைப்புகளுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு நிறையவுண்டு. நடத்தையிலும் வேறுபாடு உண்டு. விடுதலைப் புலிகள் தனித்துவமானவர்கள். தனித்துவப் பண்பியல்பு கொண்டவர்கள். ஒழுக்கம், கண்ணியம், கட்டுப்பாடு போன்ற உயரிய பண்புகளை இறுக்கமாகப் பேணுபவர்கள். சாவுக்குத் துணிந்தவர்கள். எதிரியின் கையில் உயிருடன் சிக்காதிருக்க நஞ்சுக் குப்பிகளை அணிந்திருப்பவர்கள். தமிழீழத் தாயக விடுதலை என்ற இலட்சியத்திற்காகத் தமது உயிரையும் அர்ப்பணிக்கத் தயாரானவர்கள். இந்த அற்புதமான பண்புகளும் இலட்சிய உறுதிப்பாடும் ஏனைய அமைப்பினரிடம் காணமுடியாது.” என்று விளக்கினேன். மௌனமாக ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். விடுதலைப் புலி வீரர்கள் கடைப்பிடிக்கும் பண்பியல்புகள் அவரை வெகுவாகக் கவர்ந்தன.

உமா மகேஸ்வரனைப் பற்றிக் கேட்டார். “அவரும் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவராமே? தனது இயக்கம் தான் உண்மையான புலி இயக்கம் என்று சொல்லித் திரிகிறாராம். பிரபாகரனுக்கும் அவருக்கும் என்ன பிரச்சினை?” என்று கேட்டார்.

“போராளி அமைப்புக்களைச் சேர்ந்த அனைவரையுமே ஈழத்துப் புலிகள் என்று தமிழ்நாட்டு மக்கள் அழைப்பது வழக்கமாகிவிட்டது. இந்தக் குழப்பத்தால் மற்றைய அமைப்புகள் புரியும் பாவம், பழி எல்லாமே புலிகள் இயக்கம் மீது விழுந்து விடுகிறது. உமா மகேஸ்வரனும் ஒரு காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தவர். இயக்கத்தின் ஒழுக்க விதிகளை மீறி ஒரு பெண்ணுடன் தகாத உறவு கொண்டதால் அவர் அமைப்பிலிருந்து விலக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் புளொட் என்ற புதிய அமைப்பை உருவாக்கி விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் செயற்பட்டு வருகிறார். புலிகளின் தலைமையை அழிக்கவும் முயற்சி செய்து வருகிறார். அவர் ஒரு கொடிய மனிதர், தமிழ் நாட்டிலுள்ள அவரது பயிற்சி முகாம்களில் கொடுமைகள் நிகழ்வதாகச் சொல்லப்படுகிறது. அவை வதை முகாம்களாக மாற்றப்பட்டிருக்கின்றனவாம். பல அப்பாவி இளைஞர்கள் சித்திரவதைகளுக்கு ஆளாகிக் கொல்லப்பட்டிருப்பதாக நம்பகமான தகவல்கள் எமக்குக் கிடைத்திருக்கிறது.” என்று கூறினேன்.

“அப்படியான பேர்வழியா? எனக்கு அவர் பற்றி விபரமாகத் தெரியாது. அவரை நாளை சந்திப்பதாக நேரம் ஒதுக்கியிருக்கிறேன். அதை இரத்துச் செய்ய வேண்டும். இப்படியான பேர்வழியுடன் எந்த உறவும் வைத்திருக்கக் கூடாது.” என்றார்.

“விடுதலைப் புலிகளின் கொள்கை என்ன? அரசியல் சித்தாந்தம் என்ன? விடுதலைப் புலிகள் கம்யூனிசத் தீவிரவாதிகள் என்று எனது அமைச்சர் ஒருவர் சொல்கிறாரே, அது உண்மையா?” என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.

“விடுதலைப் புலிகள் கம்யூனிஸ்டுகள் அல்லர். விடுதலைப் புலிகள் புரட்சிவாதிகள், சுதந்திரப் போராளிகள். தமது தாயகமான தமிழீழத்தின் சுதந்திரத்திற்காகப் போராடுபவர்கள். சாதியக் கொடுமை, பெண் அடிமைத்தனம் மற்றும் சமூக முரண்பாடுகள் நீங்கிய சமத்துவமும் சமூக நீதியும் நிலவும் ஒரு உன்னதமான, சுதந்திரமான சமுதாயத்தைப் படைக்கவே நாம் போராடுகிறோம். இப்படியான எமது புரட்சிகரக் கொள்கையைப் புரிந்து கொள்ளாமல் எம்மைக் கம்யூனிசத் தீவிரவாதிகள் என சிலர் தவறாகக் கருதக்கூடும். ஏழைகளின் சுபீட்சத்திற்காகவும் ஒடுக்கப்படும் மக்களின் விடிவிற்காகவும் நாம் ஆயுதம் ஏந்திப் போராடுகிறோம். இரத்தம் சிந்தி, உயிரை அர்ப்பணித்துப் போராடுகிறோம். எமது இந்த இலட்சிய உறுதியை தீவிரவாதம் என்று சொல்ல முடியாது. விடுதலை வேட்கை என்று சொல்வதே பொருந்தும்.” என்று விளக்கினேன். விடுதலைப் புலிகளின் கொள்கையையும் சித்தாந்தத்தையும் விபரிக்கும் போது கடினமான, சிக்கலான சொற்பிரயோகங்கள், கோட்பாடுகளைத் தவிர்த்து மிகவும் எளிமையாக அவர் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் விளக்க முயன்றேன்.

“ஏழைகளின் நண்பனாக, தொழிலாளர்களின் தோழனாக, நசுக்கப்படும் மக்களின் நாயகனாக நீங்கள் திரையுலகில் நடித்து தமிழ் நாட்டில் சமூக விழிப்புணர்வை தட்டியெழுப்பவில்லையா? இதனால் தமிழ் மக்களின் இதயங்களில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடிக்கவில்லையா? இன்னும் தமிழகத்தின் முதல்வராக உயர் பதவி வகிக்கும் நீங்கள் ஏழைகளின் துயர் துடைக்கத் தொண்டாற்றவில்லையா? நீங்கள் சினிமா உலகில் சாதித்ததை விடுதலைப் புலிகள் நிஜவுலகில் சாதிக்கிறார்கள். உங்களுக்கும் புலிகளுக்கும் இலட்சியம் ஒன்றுதானே? கொள்கையளவில் நோக்கினால் உங்களையும் பிரபாகரனையும் சமூகப் புரட்சிவாதிகள் என்றுதான் சொல்லவேண்டும்.” என்று விளக்கினேன். அவர் புன்முறுவலுடன் தலையசைத்த போது நான் கொடுத்த விளக்கம் அவருக்கு நன்றாகப் பிடித்துக் கொண்டது என்பது தெளிவாகியது.

அடுத்ததாக சிங்கள அரச பயங்கரவாதத்தின் கொடுமைகளையும் ஈழத் தமிழ் மக்கள் அனுபவித்துவரும் தாங்கொணாத் துன்பங்களையும் எடுத்துக் கூறினோம். சிங்கள ஆயுதப் படைகள் தமிழர் தாயகத்தில் நிகழ்த்திய படுகொலைகளை விபரித்துக் கூறிய திரு. பேபி சுப்பிரமணியம், அந்தக் கொடூரக் காட்சிகளைச் சித்தரிக்கும் புகைப்படங்களை எம்.ஜி.ஆரிடம் காண்பித்தார். அந்தக் கொலைக் காட்சிகளை படங்களில் பார்த்ததுமே அவரது முகம் விகாரமடைந்தது. “இதைப் பார்க்க முடியவில்லையே. இப்படியெல்லாம் கொடுமை செய்வார்களா?” என்று கவலையுடனும் ஆச்சரியத்துடனும் கேட்டார்.

“ஈழத்தில் இனக்கொலை நடக்கிறது. எமது மக்கள் கொன்றொழிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தத் தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்தி, எமது மக்களையும் மண்ணையும் மீட்கவே நாம் ஆயுதமேந்திப் போராடுகிறோம்.” என்று விளக்கினேன்.

“இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளை இந்திய அரசு சும்மா பார்த்துக் கொண்டிருக்கிறதா? ஈழத்துப் போராளிகளுக்கு ஏதோ இரகசியமாக உதவி செய்வதாகக் கேள்விப்பட்டேன். இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் பணமும் கொடுப்பதாகச் சொல்லுறாங்க. உண்மையா?” என்று கேட்டார் முதலமைச்சர்.

“மிகவும் சிறிய அளவில் உதவி புரிகிறார்கள். யானைப் பசிக்குச் சோளப் பொரி போட்ட மாதிரி. எமது அமைப்பைச் சேர்ந்த இருநூறு போராளிகளுக்கு இராணுவப் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். சிறிய தொகையில் பழைய துருப்பிடித்த ஆயுதங்களும் தந்திருக்கிறார்கள். இவற்றில் பல பாவனைக்கு உகந்தன அல்ல என்று எமது தளபதிகள் சொல்கிறார்கள். தமிழீழ மக்களின் அரசியல் விடுதலைக்காக இந்திய அரசு எமக்கு உதவி புரியவில்லை. தனது பூகோள – அரசியல் நலனுக்காகவே எமக்கு உதவி புரிகிறது. அதாவது மேற்குலக அரசியல் – இராணுவ வலைக்குள் சிக்குண்டு நிற்கும் இலங்கை அரசைத் தனது ஆதிக்க வியூகத்தினுள் கொண்டு வருவதற்கே இந்தியா முயல்கின்றது. இந்த நோக்கை அடைவதற்காகவே ஈழத்துப் போராளிகளை இந்தியா பகடைக் காய்களாகப் பாவிக்கிறது. இந்த இராணுவப் பயிற்சித் திட்டத்திலும் பாகுபாடு காட்டப்படுகிறது. ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளுக்கு இராணுவப் பயிற்சி மறுக்கப்பட்டது. ஆயினும் இந்திரா காந்தி அம்மையாரின் தலையீட்டின் பின்னரே இந்தப் பயிற்சித் திட்டத்தில் நாம் இணைக்கப்பட்டோம். அப்படியிருந்தும் எம்மைவிட மற்றைய அமைப்புகளுக்கே கூடுதலாகப் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு பணமும் வழங்கப்படுகிறது. எமக்கு நிதியுதவி எதுவும் வழங்கப்படவில்லை.” என்று சொன்னேன்.

“என்ன காரணத்திற்காக இப்படிப் பாராபட்சம் காட்டுகிறார்கள்?” என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.

“நாம் தனித்துவமான போக்குடையவர்கள் என்பது இந்திய அரசுக்குத் தெரியும். அத்தோடு, வரித்துக்கொண்ட இலட்சியத்தில் நாம் உறுதியாக நிற்போம் என்பதும் அவர்களுக்குத் தெரியும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் இரகசியத் திட்டங்களுக்கு இசைந்து போய் வளைந்து கொடுக்க மாட்டோம் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஏனைய அமைப்புகள் அப்படியல்ல. அவர்களுக்கு உறுதியான இலட்சியம் எதுவுமில்லை. இந்திய அரசின் அழுத்தங்களுக்கு அவர்கள் பணிந்து சென்று வளைந்து கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். இதன் காரணமாகவே ஏனைய போராளி அமைப்புகளை இராணுவ ரீதியாகப் பலப்படுத்தி விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்த இந்திய அரசு முனைகிறது.” என்று விளக்கினேன்.

எல்லாவற்றையும் மிகவும் உன்னிப்பாகவும் பொறுமையாகவும் கேட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், “எல்லாம் எனக்குப் புரிகிறது. இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்? எத்தகைய உதவியை என்னிடமிருந்து எதிர்பார்க்கின்றீர்கள்?” என்று கேட்டார்.

“எமது விடுதலைப் போராட்டத்திற்கு நீங்கள் கைகொடுத்து உதவ வேண்டும். இந்திய அரசு ஒழுங்கு செய்த பயிற்சி அறவே போதாது. இந்தியப் பயிற்சி பெற்ற இருநூறு போராளிகளுடன் சிங்கள இராணுவத்தைச் சமாளிப்பது மிகவும் கடினம். நாம் தமிழ் நாட்டில் பயிற்சி முகாம்களை அமைத்து எமது போராளிகளுக்கு நாமே பயிற்சி கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம். குறைந்தது ஆயிரம் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சியளித்து அவர்களுக்கு ஆயுதம் தரிக்க விரும்புகின்றோம். இத் திட்டத்தை நிறைவு செய்யப் பண உதவி செய்வீர்களா? அப்படி உதவினால் அது எமது ஆயுதப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும். அந்த உதவிக்காக எமது மக்கள் என்றுமே உங்களுக்கு நன்றி உடையவர்களாக இருப்பார்கள்.” என்றேன்.

“அது சரி என்னிடமிருந்து எந்தளவு பணத்தை எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார் எம்.ஜி.ஆர். மிகவும் சங்கடமான கேள்வி. என்ன சொல்வதென்று தெரியாது தடுமாறியபடி, “பெரிய தொகையாகத் தேவைப்படும்.” என்று இழுத்தேன்.

“அது சரி. எந்தளவு தொகையை எதிர்பார்க் கிறீர்கள்?” என்று மீண்டும் கேட்டார். நான் சங்கடப்படுவதைக் கண்ட கேணல் சங்கர் “குறைந்தது இரண்டு கோடியாவது தேவைப்படும். ஆயிரம் போராளிகளுக்குப் பயிற்சி அளிக்க ஒரு கோடியும், அந்த ஆயிரம் பேருக்கும் ஆயுதம் தரிக்க இன்னொரு கோடியுமாக இரண்டு கோடி தேவைப்படும்.” என்று சொன்னார்.

“ஆக இரண்டு கோடிதானா? நாளைக்கே கொடுத்து விடுகிறேன்.” என்று கூறிய முதலமைச்சர், என்னைச் சுட்டிக்காட்டி, மறுநாள் இரவு பத்து மணியளவில் ஒரு வாகனத்துடன் தனது வீட்டுக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

நாம் வாயடைத்துப் போனோம். அந்த நேரத்தில் இரண்டு கோடி இந்திய ரூபாய் என்றால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத தொகை. அப்பொழுது எமக்கு பயங்கரமான பணப் பிரச்சினை. வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்த ஆதரவாளர்களிடமிருந்து கிடைத்த சிறு தொகைப் பணத்தில்தான் மிகச் சிரமத்துடன் முழு இயக்கமும் ஓடிக்கொண்டிருந்தது. இப்படியாகத் திடீரென எம்.ஜி.ஆரின் உருவத்தில் அதிர்ஸ்ட தேவதை எம் மீது கருணை காட்டுவாளென நாம் எதிர்பார்க்கவில்லை.

எம்.ஜி.ஆருக்குப் புகழாரம் பாடி, விரைவில் தலைவர் பிரபாகரனுடன் வருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு விடை பெற்றோம். வெளியே வந்ததும், “இன்னும் கூடுதலாகக் கேட்டிருந்தால் கொடுத்திருப்பார் போலத் தெரிகிறதே?” என்று கேணல் சங்கரிடம் கேட்டேன்.

“முதலில் இந்தத் தொகை கிடைப்பதே பெரிய காரியம். தேவை ஏற்பட்டால் பின்பும் உதவி கேட்கலாம்தானே?” என்றார் சங்கர். அவர் சொன்னது எனக்குச் சரியாகப்பட்டது.

தலைவர் பிரபாகரனுக்கு இந்த மகிழ்ச்சிகரமான செய்தியைத் தெரிவித்தபோது அவர் முதலில் நம்ப மறுத்துவிட்டார். கேலி செய்கிறோம் என்று எண்ணினார் போலும். பின்பு முழு விபரத்தையும் கூறினோம். மிகவும் பூரிப்படைந்த பிரபாகரன், சில தினங்களில் எம்.ஜி.ஆர் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கப் போவதாகச் சொன்னார்.

மறுநாள் இரவு சரியாகப் பத்து மணியளவில் ஒரு கயஸ்வான் வண்டியுடன் பறங்கிமலையிலுள்ள எம்.ஜி.ஆர் அவர்களின் வீட்டுக்குச் சென்றோம். ரகு என்ற போராளி வாகனத்தை ஓட்டி வந்தார். எம்மை எதிர்பார்த்தபடி அந்தப் பங்களாவின் முன் வாசலில் எமக்காகக் காத்து நின்றார் முதல்வர்.

வாகனத்தை வீட்டுக்கு ஓரமாக நிறுத்தும்படி சொல்லிவிட்டு என்னை மட்டும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். “யார் அந்தப் பையன்?” என்று கேட்டார். “பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரியவர். ஒரு விடுதலைப் போராளி” என்றேன்.

வீட்டுக்குள் ஒரு லிப்ட் (lift) இருந்தது. அதைத் திறந்து உள்ளே வர அழைத்தார். பாதாளம் வரை ஒரு தளத்துக்குக் கொண்டு சென்று அது திறந்து கொண்டது. அங்கு விரிந்து அகன்ற ஒரு அறை. அந்த அறை நிறையப் பெட்டிகள். ஒன்றின் மேல் ஒன்றாக, நிரையாகப் பத்து அடி உயரம் வரை அடுக்கப்பட்டு இருந்தன. அது ஒரு பாதாளப் பண அறை. அந்த அறைக்குள் இரண்டு காவலாளிகள் ஓரமாக ஒதுங்கி நின்றனர். அவர்களிடம் இரு விரல்களைக் காட்டி மலையாள மொழியில் ஏதோ சொன்னார். பத்துப் பெட்டிகள் வரை எடுத்து வந்து லிப்டுக்குள் அடுக்கினார்கள். பின்பு வெளியே வந்ததும் பெட்டிகள் எமது வாகனத்திற்குள் அடுக்கப்பட்டன.

அந்த நள்ளிரவில் கோடிக்கணக்கான பணத்துடன் சென்னை நகரம் ஊடாக திருவான்மையூரிலுள்ள எமது வீட்டுக்குச் செல்வதில் சிக்கல்கள் எழலாம். சில சமயம் காவல்துறையினர் மறித்துச் சோதனையிட்டாலும் பிரச்சினை வரலாம். எம்.ஜி.ஆரிடம் விடயத்தைக் கூறினோம். எமக்குப் பாதுகாப்பு ஒழுங்கு செய்வதாகக் கூறிவிட்டு யாரிடமோ தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஒரு சில நிமிடங்களுக்குள் இரு ஜீப் வண்டிகளில் ஆயுதம் தரித்த காவல்துறையினர் அங்கு வந்து சேர்ந்தனர்.

முன்பாக ஒரு ஜீப் வண்டியும், பின்னால் இன்னொன்றுமாக, ஆயுதம் தரித்த காவல்துறையினர் புடைசூழ நானும் ரகுவும், இரண்டு கோடி ரூபா அடங்கிய பெட்டிகளும் சென்னை நகர வீதிகள் ஊடாகப் பவனி சென்று திருவான்மையூரை அடைந்தோம். எமது வீட்டில் தலைவர் பிரபாகரனும் நிதிப் பொறுப்பாளர் திரு. தமிழேந்தியும் கேணல் சங்கரும் மற்றும் சில போராளிகளும் எமக்காகக் காத்திருந்தனர். எமது இருப்பிடம் வந்தடைந்ததும் காவற்துறையினர் விடைபெற்றுச் சென்றனர். பணப் பெட்டிகள் வீட்டின் மேல்மாடியிலுள்ள எமது படுக்கை அறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டன. ஒவ்வொரு பெட்டியாகத் திறந்து நூறு ரூபா நோட்டுகள் அடங்கிய கட்டுகளை எடுத்து அடுக்கி எண்ணி முடிக்க விடிந்து விட்டது. அன்றிரவு தூக்கத்தைத் துறந்த போதும், திடீரென அதிர்ஸ்டம் ஏற்பட்டு துயரங்கள் தீர்ந்தது போன்ற குதூகலம் எல்லோரது முகத்திலும் தென்பட்டது. வெகு விரைவாக முதலமைச்சர் எம்.ஜி.ஆரைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார் பிரபாகரன்.

ஒரு முக்கியமான வரலாற்றுக் காலகட்டத்தில் நிதி நெருக்கடியால் நாம் திணறிக் கொண்டிருந்த வேளையில் எம்.ஜி.ஆர் அவர்கள் செய்த பண உதவி எமது விடுதலை இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைந்தது. இராணுவ அரசியற் பிரிவுகளின் விரிவாக்கத்திற்கும், புதிய பயிற்சி முகாம்களை அமைக்கவும், நவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்குமே எம்.ஜி.ஆர் அளித்த நிதியுதவியைப் பிரபாகரன் பயன்படுத்தினார்.

அந்த வாரமே பிரபாகரன் – எம்.ஜி.ஆர் சந்திப்பு நிகழ்ந்தது. நானும் பிரபாகரனுடன் சென்றிருந்தேன். பிரபாகரனின் வாழ்க்கைப் பின்னணி, அவரது போராட்ட வாழ்க்கை, ஈழத்து அரசியல் இராணுவ நிலைமை, தமிழீழ மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள், இந்தியப் புலனாய்வுத் துறை ஒழுங்கு செய்த இராணுவப் பயிற்சித் திட்டம், விடுதலைப் புலிகளுக்கும் ஏனைய போராளி அமைப்புகளுக்கும் மத்தியிலான முரண்பாடு போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. எம்.ஜி.ஆர் காட்டிய ஆர்வத்தைப் பார்த்த பொழுது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அவர் மிகவும் அக்கறை கொண்டுள்ளார் என்பது புலனாகியது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நின்று, ஈழ மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்குத் தன்னாலான உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாகத் தலைவர் பிரபாகரனிடம் சொன்னார். முதற் சந்திப்பிலேயே பிரபாகரனை அவருக்கு நன்றாகப் பிடித்துக் கொண்டது. அன்றைய நாளில் ஒரு வரலாற்று நட்புறவுக்கு அடித்தளம் இடப்பட்டது.

எம்.ஜி.ஆர் அவர்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். குழந்தை உள்ளம் படைத்தவர். நண்பர்களுக்கு நண்பர். தனக்குப் பிடித்தவர்கள் மீது அளப்பரிய அன்பு காட்டுவார். ஒரு தடவை அவரது அன்புத் தொல்லையில் நான் சிக்குப்பட்டு இரு வாரங்கள் வரை ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவஸ்தைப்பட நேர்ந்தது. இதுவொரு சுவாரஸ்யமான சம்பவம்.

ஒரு நாள் காலை எம்.ஜி.ஆர் அவர்கள் என்னையும் பிரபாகரனையும் அவசரமாகத் தனது இல்லத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். நாங்கள் அவரது வீட்டுக்கு விரைந்து சென்றோம். ஏதோ அதிமுக்கிய விடயமாக இருக்கலாமென எண்ணிக் கொண்டோம். அங்கு சென்றபோது, எம்.ஜி.ஆரின் செயலர் எம்மை வரவேற்றார். “எதற்காக எம்மை அழைத்திருக்கிறார்?” என்று அவரிடம் கேட்டோம். “அப்படியாக ஒரு முக்கிய விடயமும் இல்லை. உங்களுடன் சேர்ந்து காலை விருந்து உண்ண விரும்புகிறார். தனக்குப் பிடித்தவர்களைக் காலை விருந்துக்கு அவர் அழைப்பது வழக்கம்.” என்றார் செயலர். சாப்பாட்டு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கே முதல்வர் எமக்காகக் காத்திருந்தார். “வாருங்கள், வாருங்கள். உங்களுக்கென்று விசேடமாக காலை உணவு தயாரித்திருக்கிறோம்.” என்று கூறிப் பெரியதொரு சாப்பாட்டு மேசையில் எம்மை அமரச் செய்தார்.

முதலில் இட்டலி, அதன் பின் தோசை, பின்பு பூரி, உப்பு மா, தயிர் வடை இப்படியாகச் சுடச் சுட வாழை இலையில் உணவு வகைகள் மாறி மாறிப் பரிமாறப்பட்டன. எம்.ஜி.ஆருக்கு ஈடாகப் பிரபாகரன் சுவைத்து ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இவர்களுக்கு ஈடுகட்ட முடியாமல் திணறிக் கொண்டிருந்தேன் நான். நீரிழிவு வியாதி இருப்பதால் எனக்கு உணவுக் கட்டுப்பாடு. அவசரத்தில் இன்சுலின் ஊசி ஏற்றாமல் வந்துவிட்டதால் அதிகமாகச் சாப்பிட முடியாத நிலை. சிறிய அளவாகத்தான் சாப்பிட முடிந்தது. எம்.ஜி.ஆரின் கழுகுக் கண்கள் அதனைக் கவனித்து விட்டன.

“எனது வீட்டிற்கு உணவருந்த வருபவர்கள் வயிறு நிறையச் சாப்பிட வேண்டும். தம்பி பிரபாகரன் நன்றாகச் சாப்பிடுகிறார். நீங்கள் சிரமப்படுவதுபோலத் தெரிகிறது. நிறையச் சாப்பிடுங்கள்.” என்று கூறிச் சமையற்காரப் பையனிடம் சைகை காட்டினார். அவன் இட்டலி, தோசை, சாம்பாருடன் ஓடி வந்தான்.

“சார், எனக்கு நீரிழிவு வியாதி. இன்சுலின் ஊசியும் ஏற்றவில்லை. உணவுக் கட்டுப்பாடும் இருக்கிறது. அதிகம் சாப்பிட முடியாது” என்றேன்.

“நீரிழிவு வியாதியைக் குணப்படுத்தலாம் அல்லவா? எனக்கும் நீரிழிவு இருந்தது. இப்பொழுது குணமாகிவிட்டது. நீரிழிவு இருந்தால் சாப்பிடக் கூடாது என்று யார் சொன்னார்கள்? எந்த முட்டாளிடம் வைத்தியம் பார்க்கிறீர்கள்?” என்றார் எம்.ஜி.ஆர்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வீணாக வம்புக்குள் மாட்டிவிட்டோம் போலத் தோன்றியது. எனது வாழையிலை மீது இட்டலிகள் குவிந்தபடி இருந்தன.

“நீரிழிவு வியாதியைக் கட்டுப்படுத்த இன்சுலின் ஊசி பாவிக்கிறேன். காலையும் இரவும் இரு தடவைகள் ஊசி ஏற்ற வேண்டும். இந்த ஊசியில்தான் உயிரே தங்கியிருக்கிறது. நீரிழிவு நோய் முற்றிவிட்டால் அதனைக் குணப்படுத்த முடியாது என்று லண்டனிலுள்ள மருத்துவ நிபுணர்கள் சொன்னார்கள்” என்றேன்.

“நான் சொல்கிறேன் நீரிழிவு வியாதியைக் குணப்படுத்த முடியும். நான் குணப்படுத்திக் காட்டுகிறேன்.” என்று சவால் விட்டபடி தனது சொந்த மருத்துவரை உடன் வருமாறு அழைப்பு விடுத்தார். எனது கெட்ட காலம், மருத்துவரும் உடனே அங்கு வந்து சேர்ந்தார்.

“வாருங்கள் டாக்டர். நீங்கள் ஒரு மருத்துவ நிபுணர். நீங்கள்தான் சொல்ல வேண்டும். தனக்கு நீரிழிவு வியாதி இருப்பதாகவும் அந்த வியாதியைக் குணப்படுத்த முடியாது என்றும் பாலசிங்கம் சொல்கிறார். நான் சொல்கிறேன் குணப்படுத்த முடியும் என்று. யார் சொல்வது சரி?” என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.

“சார் நீங்கள் சொல்வதுதான் சரி” என்று கூனிக் குறுகியபடி பதிலளித்தார் அந்த வயோதிப மருத்துவர்.

“நீரிழிவைக் குணப்படுத்த எவ்வளவு காலம் பிடிக்கும்? இரண்டு வாரங்கள் போதும் அல்லவா?” என்று முதல்வர் கேட்க, “ஆமா” போட்டார் அந்த டாக்டர். நான் வாயடைத்துப் போனேன்.

“உடனடியாக, இப்பொழுதே இவரை அழைத்துச் சென்று அப்பலோ மருத்துவமனையில் சேர்த்து விடுங்கள். எனக்கு மிகவும் வேண்டியவர் என்று சொல்லுங்கள். நன்றாகக் கவனிப்பார்கள்.” என்று மருத்துவரிடம் சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து, “உடனே புறப்படுங்கள்.” என்று ஆணையிட்டார்.

நான் பரிதாபமாகப் பிரபாகரனைப் பார்த்தேன். சிரிப்பை அடக்கிக் கொண்டு, ‘சீரியஸான’ முக பாவனையுடன் “போய் வாருங்கள் அண்ணா.” என்றார் பிரபாகரன்.

வீட்டுக்கு வெளியே வந்ததும் மருத்துவரின் காரில் ஏறினேன். “என்ன டாக்டர், வீணாக என்னை மாட்டிவிட்டீர்களே? இன்சுலின் ஏற்றுமளவுக்கு நீரிழிவு நோய் முற்றியிருக்கிறது. அப்படியிருந்தும் நோயைக் குணப்படுத்த முடியும் என்கிறீர்கள். உண்மையாக அப்படிக் கருதுகிறீர்களா?” என்று ஆத்திரத்துடன் கேட்டேன்.

“முதலமைச்சர் சொல்வதற்கு மாற்றுக் கருத்து எப்படிச் சொல்வது? எதற்கு எனக்கு வீண் வம்பு? அப்பலோ மருத்துவமனையில் எல்லா வசதிகளுடனும் ஒரு தனி அறை ஒழுங்கு செய்து தரலாம். ஓய்வு எடுத்தால் உங்களுக்கு நல்லது. இரண்டு வாரங்கள் தானே. பொழுது போவது தெரியாது.” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். கன்னத்தைப் பொத்தி அறைய வேண்டும் போல இருந்தது.

எம்.ஜி.ஆரின் அன்புத் தொல்லையால் அப்பலோ மருத்துவமனையில் இரண்டு வாரம் சிறை இருந்தேன். மூன்று மாதங்கள் கழிந்த பின் ஒரு நாள் என்னையும் பிரபாகரனையும் காலை உணவருந்த அழைத்தார் எம்.ஜி.ஆர். இம்முறை இன்சுலின் மருந்தைக் கூடுதலாக ஏற்றிவிட்டுச் சென்றேன்.

என்னைக் கண்டதுமே, “சிகிச்சை எடுத்தீர்களா? நீரிழிவு நோய் குணமாகிவிட்டதா?” என்று மிகவும் ஆர்வுமாகவும் கருணையுடனும் கேட்டார் முதலமைச்சர். “ஆமா சார். மிகவும் நன்றி.” என்றேன்.

இட்டலி, தோசை, வடை, பூரி என்று எனக்குப் படைத்ததை எல்லாம் வயிறு நிறைய விழுங்கினேன். எம்.ஜி.ஆருக்குப் பரம திருப்தி.

விடுதலைப் புலிகள் தலைமை தாங்கி முன்னெடுத்து வரும் தமிழீழ சுதந்திர இயக்கத்திற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் நல்கிய உதவி அளப்பரியது. எல்லாவற்றையுமே முழுமையாக இங்கு ஆவணப்படுத்த முடியாதபோதும், ஒரு சில முக்கிய சம்பவங்களையாவது பதிவு செய்வது வரலாற்று ரீதியாகப் பயன்படும் எனக் கருதுகிறேன். இப்பொழுது தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் என்ற சொல்லை உச்சரிப்பதே சட்டவிரோதமான ஒரு குற்றச் செயலாகக் கருதப்படுகிறது. எம்.ஜி.ஆர் அவர்கள் வளர்த்துவிட்ட அ.தி.மு.க கட்சியும், அதன் தலைமையும் இன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தி நிற்கின்றன. ஆனால் அன்று எம்.ஜி.ஆர் அவர்கள் ஈழ மக்களின் விடுதலைக்காக மிகவும் துணிச்சலான காரியங்களைப் புரிந்து எமக்கு கைகொடுத்து உதவியிருக்கிறார்.

ஒரு தடவை சென்னைத் துறைமுகம் ஊடாக ஆயுதங்களைத் தருவிக்க முயன்றோம். எமக்கான நவீன ஆயுதங்கள் அடங்கிய கொள்கலனுடன் வெளிநாட்டுக் கப்பல் ஒன்று சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது. துறைமுகம் ஊடாக ஆயுதக் கொள்கலனை வெளியே எடுக்க நாம் செய்த பகீரத முயற்சிகள் பயனளிக்கவில்லை. சரியாக ஒரு மாதத்திற்கு முன்புதான் உமா மகேஸ்வரன் ஒழுங்குசெய்த ஆயுதக் கப்பல் ஒன்று இந்தியப் புலனாய்வுத் துறையினரால் கைப்பற்றப்பட்டது. பல கோடி பெறுமதியான ஆயுதங்களைப் புளொட் இயக்கம் இழக்க நேரிட்டது. புலிகளுக்கும் இந்தக் கதி நேரக் கூடாதென விரும்பினோம். ஆயுதங்களை பறிகொடுக்காமல் வெளியே எடுப்பதற்கு எம்.ஜி.ஆரின் உதவியை நாடுவதே ஒரேயொரு வழியாக எனக்குத் தென்பட்டது. பிரபாகரனும் நானும், எம்.ஜி.ஆரிடம் சென்றோம். நிலைமையை எடுத்து விளக்கினோம்.

“நீங்கள் கொடுத்த பணத்தில் இந்த ஆயுதங்களை வாங்கியிருக்கிறோம். சென்னைத் துறைமுகத்தில், ஒரு கப்பலில், ஒரு கொள்கலனுக்குள் இந்த ஆயுதங்கள் இருக்கின்றன. எப்படியாவது அதனை வெளியே எடுத்துத் தரவேண்டும். நீங்கள் மனம் வைத்தால் முடியும்.” என்று கேட்டோம். எதுவித தயக்கமோ, பதட்டமோ அவரிடம் காணப்படவில்லை. “இதுதானா பிரச்சினை? செய்து முடிக்கலாம்.” என்று கூறிவிட்டு, துறைமுக சுங்க மேலதிகாரிகளுடன் தொலைபேசியில் கதைத்தார். பின்பு எம்மிடம், ஒரு சுங்க அதிகாரியின் பெயரைக் குறித்துத் தந்து, அவரைச் சந்தித்தால் காரியம் சாத்தியமாகும் என்றார் முதலமைச்சர். அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு நாம் மகிழ்வுடன் வீடு திரும்பினோம்.

சென்னைத் துறைமுகத்திலிருந்து ஆயுதக் கொள்கலனை மீட்டு வரும் பொறுப்பைக் கேணல் சங்கரிடம் கையளித்தார் பிரபாகரன். ஒரு சில தினங்களுக்குப் பின்னர் ஒரு நாள் இரவு தமிழ்நாட்டுக் காவற்துறையினரின் பாதுகாப்புடன் பாரம் தூக்கி பொருத்திய கனரக வாகனத்தில் எமது ஆயுதக் கொள்கலன் சென்னை நகரம் ஊடாகப் பவனி வந்து நாம் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இறக்கப்பட்டது. அதில் ஒரு தொகுதி ஆயுதங்கள் திருவான்மையூரில் நாம் வசித்த வீட்டில் குவிக்கப்பட்டன. ஏவுகணைகள், தானியங்கித் துப்பாக்கிகள், ரவைப் பெட்டிகள், கைக்குண்டுகளாக வீடு நிறைந்திருந்தது. அவை வீட்டிலிருந்து அகற்றப்படும் வரை என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.

எந்தப் பிரச்சினையுமின்றி பாதுகாப்பாக ஆயுதங்களைப் பெற்றுத் தந்ததற்காக எம்.ஜி.ஆருக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார் பிரபாகரன். அந்தப் பேருதவியின் நினைவுச் சின்னமாக இறக்கப்பட்ட ஆயுதங்களிலிருந்து ஒரு புதிய ஏ.கே-47 ரக தானியங்கித் துப்பாக்கியை எம்.ஜி.ஆரிடம் கையளித்தார் பிரபா. அந்தத் துப்பாக்கியை கழற்றிப் பூட்டி அதன் செயற்பாட்டு இயக்கத்தையும் விளங்கப்படுத்தினார். எம்.ஜி.ஆருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

இந்தச் சம்பவம் நிகழ்ந்து நீண்ட கால இடைவெளியின் பின்னர் ஒரு தடவை சுகவீனமுற்றிருந்த முதலமைச்சரை நான் சந்திக்கச் சென்றேன். பிரபாகரனைச் சுகம் விசாரித்தார். தமிழீழத்தில் சௌக்கியமாக இருக்கிறார் என்றேன். அப்பொழுது தனது படுக்கையில் தலையணிகளின் கீழ் வைக்கப்பட்டிருந்த ஒரு ஏ.கே-47 துப்பாக்கியை எடுத்துக் காண்பித்து, “இது பிரபாகரன் தந்த நினைவுப் பரிசு.” என்று பெருமிதத்துடன் சொன்னார்.

எமக்குத் தேவை ஏற்பட்ட வேளைகளில் எம்.ஜி.ஆர் அளித்த நிதி உதவிகளை ஆதாரமாகக் கொண்டே இயக்கம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு தடவை எமக்குப் பெருமளவில் நிதி தேவைப்பட்டது. தலைவர் பிரபாகரன் அவர்கள் என்னை எம்.ஜி.ஆரிடம் தூது அனுப்பினார். நான் எம்.ஜி.ஆரைச் சந்தித்த பொழுது முதல்வருடன் அமைச்சர் பண்டுருட்டி இராமச்சந்திரனும் இருந்தார்.

“இராணுவ – அரசியல் ரீதியாக எமது விடுதலை இயக்கம் பெருமளவில் வளர்ச்சி கண்டுவிட்டது. பல்வேறு வேலைத் திட்டங்களை நிறைவு செய்ய வேண்டி இருக்கிறது. இம்முறை பெரிய தொகையில் பணம் தேவைப்படுகிறது. தம்பி பிரபாகரன் உங்களைத் தான் நம்பியிருக்கிறார்” என்றேன்.

“பெரிய தொகையா? எவ்வளவு தேவைப்படுகிறது?” என்றார் முதல்வர்.

“ஐந்து கோடிவரை தேவைப்படுகிறது” என்றேன்.

எம்.ஜி.ஆர் அவர்கள் திரு.பண்டுருட்டி இராமச்சந்திரனைப் பார்த்து, “மாநில அரசு மூலமாக ஏதாவது செய்யலாமா?” என்று கேட்டார்.

அமைச்சர் சில வினாடிகள் வரை சிந்தித்து விட்டு, “போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்து மக்களுக்கென தமிழ்நாட்டு அரசால் திரட்டப்பட்ட நிதி இருக்கிறது. நான்கு கோடிக்கு மேல் வரும். அந்த நிதியை இவர்களுக்குக் கொடுக்கலாமே? ஈழ மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு இந்நிதி வழங்கப்படுவதில் தப்பில்லை அல்லவா?” என்றார்.

“அப்படியே செய்யுங்கள். இந்த விடயத்தை உங்கள் பொறுப்பில் விடுகிறேன்.” என்றார் எம்.ஜி.ஆர்.

இதனையடுத்து அமைச்சர் பண்டுருட்டி இராமச்சந்திரன் அவர்களின் இல்லத்திற்கு இரவு பகலாக அலைய வேண்டியிருந்தது. “தமிழ்நாட்டு அரசின் பொறுப்பிலுள்ள நிதி என்பதால், ஒழுங்கான முறையில் செய்ய வேண்டும். உங்களது தமிழர் புனர்வாழ்வு அமைப்பின் வாயிலாக அதிகாரபூர்வமான வேலைத்திட்டம் (project) ஒன்று தயாரித்துத் தாருங்கள். இத் திட்டம் நான்கு கோடி ரூபா வரையிலான செலவீனங்களைக் கொண்டிருக்க வேண்டும்.” என்றார் அமைச்சர். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு மருத்துவமனை நிர்மாணத்திற்கான வேலைத்திட்டத்தைத் தயாரித்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சார்பில் அமைச்சரிடம் கையளித்தேன். இறுதியாக ஒரு அரச செயலகத்தில் வைத்து நான்கு கோடி ரூபாவுக்கான காசோலை எனக்குக் கையளிக்கப்பட்டது. இந்நிதி விவகாரத்தில் அரச அதிகாரிகள் பலர் ஈடுபட்டதால், தமிழ்நாட்டு ஊடகங்களுக்குச் செய்தி கசிந்து விட்டது. மறுநாள் காலை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கிலப் பத்திரிகையின் தலைப்புச் செய்தியாக இவ்விவகாரமும் அம்பலமாகியதும் அது ஒரு அரசியற் பூகம்பத்தைக் கிளப்பியது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு தமிழ்நாட்டு அரசு நிதியுதவி செய்வதாகவும் தமிழக முதலமைச்சர் இலங்கையின் இறைமையை மீறுவதாகவும் ஜனாதிபதி ஜெயவர்த்தனா இந்தியப் பிரதமர் திரு.ரஜீவ் காந்தியிடம் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தார். ரஜீவ் காந்தி உடனடியாகவே எம்.ஜி.ஆரிடம் தொடர்பு கொண்டு தமது ஆட்சேபத்தைத் தெரிவித்தார். அன்று மாலை தன்னை அவசரமாக சந்திக்குமாறு எம்.ஜி.ஆர் எனக்கு அழைப்பு விடுத்தார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கவலையோடு நான் முதலமைச்சரின் இல்லத்திற்குச் சென்றேன். அங்கு முதல்வருடன் அமைச்சர் பண்டுருட்டி இராமச்சந்திரனும் இருந்தார்.

ஆத்திரத்துடன் காணப்பட்டார் எம்.ஜி.ஆர். ஜெயவர்த்தனா ரஜீவிற்கு முறையிட்டதையும் ரஜீவ் தனக்கு ஆட்சேபனை தெரிவித்ததையும் விபரமாகச் சொன்னார். சிங்கள வெறியன் என்றும், ஈழத் தமிழர்களுக்குக் கொடுமை இழைப்பவன் என்றும் முதலில் ஜெயவர்த்தனாவைத் திட்டித் தீர்த்தார். ரஜீவையும் விட்டு வைக்கவில்லை. துணிவில்லாதவர் என்றும் பயந்த பேர்வழி என்றும் ரஜீவிற்கும் திட்டு விழுந்தது. “ஈழத் தமிழர்களுக்கு திரட்டிய நிதியை அந்த மக்களின் உரிமைக்காகப் போராடும் விடுதலை இயக்கத்திற்கு கொடுப்பதில் என்ன தவறு? இதனைப் பிரதம மந்திரி புரிந்து கொள்கிறார் இல்லையே.” என்று ஆதங்கப்பட்டார் முதல்வர்.

“அந்தக் காசோலையை வைத்திருக்கிறீர்களா? வங்கியில் போடவில்லை அல்லவா?” என்று கேட்டார்.

“அந்தக் காசோலை என்னிடம் தான் இருக்கிறது” என்றேன். அதனை அமைச்சரிடம் திருப்பிக் கொடுக்கும்படி சொன்னார்.

“நாளை இரவு வீட்டுக்கு வாருங்கள். எனது சொந்தப் பணத்திலிருந்து நான்கு கோடி தருகிறேன்.” என்றார். போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் எம்.ஜி.ஆருக்கும் அமைச்சர் பண்டுருட்டிக்கும் நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். வீடு திரும்பியதும், நடந்ததை எல்லாம் பிரபாகரனுக்கு எடுத்துச் சொன்னேன். முதல்வரின் பெருந்தன்மையைப் பாராட்டினார் பிரபாகரன். மறுநாள் இரவு எம்.ஜி.ஆரின் பாதாளப் பண அறையிலிருந்து நான்கு கோடி ரூபா புலிகளின் கைக்குக் கிட்டியது.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் மத்தியில் நல்லுறவு நிலவியது. எமது இயக்கத்தின் மீதும் தலைவர் பிரபாகரன் மீதும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் கொண்டிருந்த அன்பும் மதிப்புமே இந்த நல்லுறவுக்கு ஆதாரமாக விளங்கியது. தமிழ் நாட்டில் எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் எமது போராளிகள் நல்லொழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பேணிவந்தனர். இவ்விடயத்தில் திரு.பிரபாகரன் மிகவும் கண்டிப்பாக இருந்தார். ஆயினும் தமிழ்நாட்டில் செயற்பட்டு வந்த ஏனைய அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் எவ்வித ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பேணவில்லை. தமிழ் நாட்டில் இவர்களது குற்றச் செயல்களும், வன்முறைச் சம்பவங்களும், சமூக விரோதச் செயற்பாடுகளும் தலைவிரித்தாடின. இதனால் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பொதுவாக ஈழப் போராளிகள் மீது வெறுப்புணர்வு வளரத் தொடங்கியது. பல்வேறான ஈழப் போராளி அமைப்புகள் பற்றியும் அவர்கள் மத்தியில் நிலவிய வேறுபாடுகளையும் புரிந்து கொள்ளத் தவறிய தமிழகப் பத்திரிகைகள் எல்லோரையுமே ‘ஈழத்துப் புலிகள்’ என்றும், ‘ஈழத்துத் தீவிரவாதிகள்’ என்றும் பொதுவாகக் கண்டனக் குரல் எழுப்பின. இதனால் எமது அமைப்பிற்குச் சிக்கல் எழுந்தது. பத்திரிகைகள் மட்டுமன்றித் தமிழகக் காவல்துறையினரும் இக் குழப்பத்திற்குள் சிக்கி எமக்கு விரோதமாகத் திரும்பினர். வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து தமிழ் நாட்டில் சட்டமும் ஒழுங்கும் பாதிக்கப்பட்ட பொழுது முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இதுவொரு சவாலாக எழுந்தது.

ஏனைய அமைப்புகளின் வன்முறைச் சம்பவங்கள் தமிழ் நாட்டை ஆட்டிப் படைத்தன. உதாரணமாக 1984 ஆகஸ்ட் மாதம் தமிழீழ இராணுவம் என்ற குழுவின் தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன், சிறீலங்கா எயர்லைன் விமானத்திற்கு குறிவைத்த வெடிகுண்டு, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தவறுதலாக வெடித்ததில் 30 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 50 பேர் வரை படுகாயமடைந்தனர். இந்த வன்முறைச் சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமன்றி முழு இந்தியாவையுமே உலுப்பிவிட்டது. விடுதலைப் புலிகளைத் தவிர ஏனைய அமைப்புகள் இந்தியாவில் பயிற்சி எடுத்த போராளிகளை உடனடியாகத் தமிழீழக் களத்திற்கு அனுப்ப முடியவில்லை. அதற்கான போரியல் திட்டங்களும் அவர்களிடம் இருக்கவில்லை. அத்துடன் பெருந்தொகையான போராளிகளைப் பராமரிக்க அவர்களிடம் பண பலமும் இருக்கவில்லை. இதனால் சில அமைப்புகளின் கட்டுப்பாடு உடைந்தது. ஒழுங்கீனமும் சீர்கேடும் தலைதூக்கியது. இலக்கின்றி அலைந்த ஈழத்து இளைஞர்கள் சமூக விரோதச் செயல்களில் இறங்கினர். தமிழ்நாட்டுக் கிராமப் புறங்களிலுள்ள உள்ளூர் மக்கள் சிலர் கொல்லப்பட்டனர். வீடுகள் சூறையாடப்பட்டன. 1985 டிசம்பரில் வேதாரணியத்தில் ஆயுதம் தரித்த புளொட் உறுப்பினர்கள் உள்ளூர் விவசாயிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் ஒருவர் கொல்லப்பட்டும் பலர் படுகாயமடைந்தனர். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போன்று 1986ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி, தீபாவளித் தினத்தன்று சென்னை நகரின் மையத்தில் அமைந்திருக்கும் சூளைமேட்டில் ஒரு வன்முறைச் சம்பவம் நிகழ்ந்தது. இந்த வன்முறைச் சம்பவத்தின் கதாநாயகராக விளங்கியவர் டக்ளஸ் தேவானந்தா. இப்பொழுது சனநாயகவாதியாக வேடம்பூண்டு ஈ.பி.டி.பி இன் தலைவராக விளங்கும் இவர் அப்பொழுது ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் இராணுவப் பிரிவில் பணிபுரிந்தவர்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தலைமைச் செயலகம் சூளைமேட்டுப் பிரதான வீதியில் அமைந்திருந்தது. அன்று தீபாவளி பண்டிகை என்பதால் வீதியெங்கும் சனசமுத்திரம். நண்பகல் வேளை. ஓட்டோவில் தனது அமைப்பின் செயலகத்திற்கு முன்பாக வந்திறங்கினார் தேவானந்தா. ஓட்டோ கூலிக்கு பேரம் பேசியதில் எழுந்த சிறு தகராறு சொற் சண்டையாக வெடித்தது. “நான் யாரென்று தெரியுமா? காட்டுகிறேன் பார்.” என்று மிரட்டியபடி தனது அமைப்பின் செயலகத்திற்குள் ஓடிய தேவானந்தா, ஒரு தானியங்கித் துப்பாக்கியுடன் திரும்பி வந்தார். துப்பாக்கியைக் கண்டதுமே ஓட்டோவை விட்டுவிட்டு ஓட்டம் பிடித்திருக்கிறான் ஓட்டோக்காரன். ஓடியவனை நோக்கித் தனது துப்பாக்கியால் தேவானந்தா சிலாவிச் சுட, துப்பாக்கி வேட்டுகள் வீதியால் சென்று கொண்டிருந்த அப்பாவிப் பொதுசனங்களைப் பதம் பார்த்தன. பத்துப் பேர் வரை படுகாயத்துடன் சாய்ந்தனர். ஒரு இளம் வழக்கறிஞர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். சூளைமேடு அல்லோலகல்லோலப்பட்டது. தமிழ்நாடு எங்கும் கண்டனக் குரல்கள் எழுந்தன. ஈழப் போராளி அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக ஊடகங்கள் வற்புறுத்தின. ஈழ விடுதலை அமைப்புகள் மீது பழிவாங்கத் தமிழக காவற்துறையினருக்கு ஒரு அரிய வாய்ப்புக் கிடைத்தது.

எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் நிர்வாக ஆட்சியில் சர்வ அதிகாரம் படைத்த உயர் அதிகாரியாக விளங்கியவர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் திரு.கே.மோகனதாஸ். மிகக் குள்ளமாக இருந்தாலும் வல்லமை படைத்தவர். தமிழ் நாட்டில் சட்டம், ஒழுங்கிற்கு இவரே பொறுப்பதிகாரி. தமிழகப் புலனாய்வுப் பிரிவின் தலைவரும் இவரே. இவர் எம்.ஜி.ஆருக்கு விசுவாசியாகக் காட்டிக் கொண்ட போதும் இலங்கை அரசாங்கத்துடன் மிகவும் நெருக்கமான உறவை வைத்திருந்தார். ஈழப் போராளிகள் பற்றிய சகல விடயங்களையும் இலங்கைப் புலனாய்வுத் துறையினருக்குத் தகவல் கொடுத்து வந்தார். இலங்கை அரசுடன் மிகவும் நெருங்கியவர் என்பதால், ஈழப் போராளிகளுக்கு இந்திய மத்திய அரசு இராணுவப் பயிற்சி வழங்கி ஊக்குவிப்பது இவருக்குப் பிடிக்கவில்லை. இந்தியப் புலனாய்வுக் கட்டமைப்பின் உள்துறை (I.B), வெளித்துறை (RAW) பிரிவுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஈழ விடுதலை அமைப்புகளுடன் இரகசியத் தொடர்புகளை வைத்திருப்பதையும் இவர் விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் விடுதலைப் புலிகளுடன் கொண்டிருந்த நல்லுறவையும் இவர் வெறுத்தார். சூளைமேட்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை சாக்காக வைத்து, விடுதலைப் புலிகள் உட்பட சகல ஈழ விடுதலை அமைப்புகள் மீதும் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கினார்.

இது ஒருபுறமிருக்க, கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பங்ளூரில் நவம்பர் 15-17 வரை சார்க் மாநாடு நடைபெறவிருந்தது. இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இம் மாநாட்டில் பங்குபற்ற இருந்தார். ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கு ஈழத்துப் போராளிகளால் உயிராபத்து ஏற்படலாம் என அச்சம் கொண்ட இந்திய உள்துறை அமைச்சு தமிழ்நாட்டில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொண்டது. இந்தக் கோரிக்கையும் மோகனதாஸிற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. விடுதலைப் புலிகள் உட்பட தமிழ்நாடு அடங்கிலும் செயற்பட்டு வந்த சகல ஈழ விடுதலை அமைப்புகளையும் நிராயுதபாணிகளாக்க மோகனதாஸ் திட்டமிட்டார். தனது திட்டத்திற்கு “புலி நடவடிக்கை” (Operation Tiger) எனவும் பெயரிட்டார். தனது ஆயுதக் களைவு நடவடிக்கைக்கு இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியும், தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும் முழு ஆதரவு தந்ததாகப் பின்பு எழுதிய ஒரு நூலில் (எம்.ஜி.ஆர் மறைந்த பின்பு, MGR: The Man and the Myth என்ற தலைப்பில் எழுதிய நூலில்) கூறுகிறார். மத்திய அரசின் அழுத்தத்திற்குப் பணிந்து ரஜீவ் காந்தியை திருப்திப்படுத்துவதற்காக மோகனதாஸின் ஆயுதக் களைவு நடவடிக்கைக்கு எம்.ஜி.ஆர் மிகவும் தயக்கத்துடன் இறங்கியதாகப் பின்பு அறிந்தோம். ஆயினும் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட முறையும், தமிழகப் பொலிஸாரால் தலைவர் பிரபாகரனுக்கும் எனக்கும் இழைக்கப்பட்ட அவமானமும் எம்.ஜி.ஆரை ஆழமாகக் கவலை கொள்ளச் செய்தது.

1986 நவம்பர் 8ஆம் நாள் அதிகாலை ஆறு மணி இருக்கும். மோகனதாஸின் அதிரடிப் படைகள் ஈழப்போராளி அமைப்புகளை நிராயுதபாணிகளாக்கும் ‘புலி நடவடிக்கையில்’ குதித்தன. போராளிகளின் சகல வீடுகளும் பாசறைகளும் சூறையாடப்பட்டன. எனது வீட்டுக்குள் புகுந்த ஆயுதம் தரித்த காவல்துறை அணியொன்று, வீட்டைச் சல்லடை போட்டுத் தேடியது. எனது மனைவியின் கைத் துப்பாக்கியை மட்டும் அவர்களால் கைப்பற்ற முடிந்தது. தேடுதல் முடிந்ததும் என்னைக் கைது செய்து உள்ளூர் காவல் நிலையம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார்கள். பல கோணத்தில் நிறுத்திப் படம் பிடித்தார்கள். கை ரேகையைப் பதிவு செய்தார்கள். தகாத வார்த்தைகளைப் பிரயோகித்து அவமானப்படுத்தினார்கள். உட்கார வைக்கவில்லை. தண்ணீர் கேட்டும் தரவில்லை. மோகனதாஸின் பணிப்பின் பேரில் திட்டமிட்டு இம்சைப்படுத்தியது போலத் தெரிந்தது. தலைவர் பிரபாகரனுக்கும் இதே கதிதான். அவரும் அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டு வேறொரு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். படம் பிடித்து, கைரேகை பதிந்து, குற்றவாளியைப் போல விசாரிக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டார். பல மணி நேரமாக நிகழ்ந்த குறுக்கு விசாரணையின் பின்னர் எம்மை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். வீட்டுக்கு முன்பாக ஆயுதம் தரித்த காவற்துறையினர் நிலையெடுத்து நின்றனர். நானும் பிரபாகரனும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தோம். ஆயுதக் களைவு பற்றியும், எனக்கும் பிரபாவுக்கும் இழைக்கப்பட்ட அவமானம் பற்றியும் எம்.ஜி.ஆருக்கு முறையிட நான் எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. எந்தக் காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியேற முடியாது என்றார்கள். அன்றைய தினம் எம்.ஜி.ஆர் சென்னையில் இருக்கவில்லை. புதுடில்லியில் இருந்ததாகப் பின்பு அறிந்தோம்.

தலைவர் பிரபாகரன் மிகவும் கொதிப்படைந்தார். ஒரு குற்றவாளிபோல் காவல்துறையினரால் கைதாகி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. தனது சுயகௌரவத்திற்கு மட்டுமன்றி தமிழீழ மக்களின் சுதந்திர இயக்கத்திற்கும் ஏற்பட்ட இழுக்காகவும் இதனை அவர் கருதினார். தமிழ்நாட்டில் ஏனைய அமைப்புகள் புரியும் குற்றச் செயல்களுக்கும் அடாவடித்தனங்களுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கம் தண்டிக்கப்பட்டதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாட்டு அரசு மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை இடிந்து போனது. முதலமைச்சரின் அனுமதியின்றி இக்கைது நடவடிக்கையும் ஆயுதக் களைவும் நடைபெற்றிருக்க முடியாது எனப் பிரபாகரன் கருதினார். ஆயினும் காவல் நிலையத்தில் வைத்து பிரபாகரனையும் என்னையும் அவமானப்படுத்தியதில் மோகனதாஸிற்குப் பெரும் பங்குண்டு என்பதையும் அவர் அறிவார். எனினும் தொடர்ந்தும் தமிழ்நாட்டில் தஞ்சம் பூண்டிருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்தார்.

ஈழ விடுதலை அமைப்புகளை நிராயுதபாணிகளாக்கி, அவ்வமைப்புகளின் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்துவிட்டுப் பங்களூரில் சார்க் மாநாட்டிற்கான ஆயத்தங்களை செய்தது மத்திய அரசு. சார்க் மாநாட்டிற்கு ஜனாதிபதி ஜெயவர்த்தனா வருகை தர இருப்பதால் பங்களூரில் வைத்து இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் ஒரு முயற்சியை மேற்கொள்வதற்கு ரஜீவ் காந்தி விரும்பினார். அக்காலகட்டத்தில் கிழக்கு மாகாணத்தை மூன்று கூறுகளாகப் பிரித்து அதிகாரப் பகிர்வு செய்யும் ஒரு தீர்வுத் திட்டத்தை இந்திய-இலங்கை அரசுகள் தயாரித்தன. தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத இத்திட்டத்தைப் பங்களூரில் வைத்து விடுதலைப் புலிகளிடம் திணித்துவிட வேண்டும் என ரஜீவ் காந்தி திட்டமிட்டார். பங்களூர் மாநாட்டிற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பாக தலைவர் பிரபாகரனுக்கும் எனக்கும் போடப்பட்டிருந்த வீட்டுக் காவல் திடீரென நீக்கப்பட்டது. நவம்பர் 16ஆம் திகதி இரவு பிரபாகரனும் நானும் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்த ஒரு விமானப் படை விமானத்தில் பங்களூர் கொண்டு செல்லப்பட்டோம்.

பங்களூரிலுள்ள ராஜபவனுக்கு நாம் போய்ச் சேர இரவு பத்து மணி ஆகிவிட்டது. அங்கு எம்மைச் சந்திப்பதற்காக இந்திய அரசாங்கத்தின் பிரமுகர்கள் பலர் காத்திருந்தனர். அமைச்சர் நட்வார் சிங், வெளிவிவகாரச் செயலர் வெங்கடேஸ்வரன், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் திரு. ஜே.என்.டிக்சிட், வெளிவிவகார அமைச்சைச் சேர்ந்த குல்திப் சகாதேவ், மற்றும் இந்தியப் புலனாய்வுத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் அங்கிருந்தனர். நாம் அங்கு சென்றதுமே முதலில் திரு. டிக்சிட் எம்மை வரவேற்று நாம் எதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதைக் கூறி, கிழக்கு மாகாணத்தைக் கூறுபோடும் தீர்வுத் திட்டம் பற்றி ஒரு விளக்கமும் தந்தார். ஏற்கனவே அவமானப்பட்டு நொந்து போயிருந்த எமக்கு, ஏற்கமுடியாத ஒரு தீர்வுத் திட்டத்தை இந்தியத் தூதுவர் திணிக்க முயன்றது கடும் சினத்தை ஏற்படுத்தியது. கடுமையான தொனியில் ஒரே வசனத்தில் பதிலளித்தார் பிரபாகரன். “தமிழர் தாயகத்தைப் பிரிக்கவும் முடியாது, பிரிக்கவும் விடமாட்டோம்” என்று அடித்துச் சொன்னார். கிழக்கு மாகாண வரை படத்தைச் சுட்டிக் காட்டி, விளக்கங்கள் கூறி, ஏதோவெல்லாம் அலம்பிக் கொண்டிருந்தார் டிக்சிட். எதிலுமே அக்கறை காட்டாது, பதிலும் கூறாது, இறுக்கமாக மௌனம் சாதித்தார் பிரபா. இறுதியில் நான் குறுக்கிட்டு, “எமது இயக்கத்தின் நிலைப்பாட்டை இரத்தினச் சுருக்கமாகச் சொல்லவிட்டார் திரு.பிரபாகரன். தமிழர் தாயகத்தைக் கூறுபோடும் எந்தத் திட்டத்தையும் நாம் ஏற்கப்போவதில்லை. இது பற்றிக் கதைத்தும் பலனில்லை” என்றேன். என்னையும் பிரபாவையும் முறைத்துப் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றார் டிக்சிட். இந்தியத் தூதுவரின் முயற்சி தோல்வியில் முடிந்ததும், அடுத்ததாக திரு.வெங்கடேஸ்வரனைக் களத்தில் இறக்கினார்கள். ரஜீவ் காந்தியின் நிர்வாகத்திலுள்ள ஒரு முக்கிய தமிழ் அமைச்சர் என்பதால் அவர் மூலம் ஏதாவது சாதிக்கலாம் என எண்ணினார்கள் போலும். திரு.வெங்கடேஸ்வரன் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் கதைத்தார். எமது நிலைப்பாட்டை இந்தியத் தூதுவர் தமக்கு எடுத்துரைத்ததாகச் சொன்னார். ஆயினும் இப்பொழுது முன்வைக்கப்படும் தீர்வுத் திட்டம் நிரந்தரமானதன்று என்றும் ஒரு இடைக்கால ஒழுங்கு என்றும் விளக்கினார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு வெகு விரைவில் ஒரு தீர்வு காணப்படவேண்டும் என்பதில் ரஜீவ் ஆர்வமாக இருக்கிறார். இந்த சார்க் மாநாட்டில் ஒரு தீர்வு எட்டப்படுமானால் அது அவருக்கு ஒரு பெரிய அரசியல் – இராஜதந்திர வெற்றியாக அமையும் என்றார். இப்படியெல்லாம் கூறிவிட்டு எமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டார். பிரபாகரனுக்குக் கோபம் வந்துவிட்டது. “ரஜீவ் காந்தியைத் திருப்திப்படுத்துவதற்காக எமது விடுதலைப் போராட்டத்தை விற்கவா சொல்கிறீர்கள்?” என்று கடிந்து சொன்னார். வெங்கடேஸ்வரன் மலைத்துப் போனார். “எனக்கு உங்களது மனநிலை புரிகிறது.” என்று சொல்லி ஒருவாறு சமாளித்துக் கொண்டு விடைபெற்றார். அடுத்ததாக, இந்தியப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வந்தார்கள். எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தார்கள். முடியவில்லை. பிரபாகரனை நெகிழ்வுபடுத்தும் இறுதி ஆயுதமாக எம்.ஜி.ஆரைப் பயன்படுத்த முடிவாகிற்று. மறுநாள் தமிழக முதல்வர் பங்களூருக்கு அழைக்கப்பட்டார்.

தலைவர் பிரபாகரனும் நானும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களைச் சந்தித்தபொழுது, அவரோடு அமைச்சர் பண்டுருட்டி இராமச்சந்திரனும் இருந்தார். நாம் எமது நிலைப்பாட்டை அவருக்குத் தெளிவாக விளக்கினோம். வரலாற்று ரீதியாக தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் தாயக பூமியைக் கூறுபோடும் திட்டம் ஒன்றைத் தயாரித்து அதனை எம் மீது திணித்து விட ரஜீவ் அரசு முயற்சிக்கிறது என்பதைக் கூறி, இத்திட்டத்தை எம்மால் ஏற்க முடியாது என உறுதிபடக் கூறினோம். எமது வாதத்தை எம்.ஜி.ஆர் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். எமது நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்வது போன்று இடையிடையே தலையையும் அசைத்துக் கொண்டார். நாம் பேசி முடித்ததும், அமைச்சர் பண்டுருட்டியைப் பார்த்து, “ஈழத் தமிழர் வாழும் பிரதேசத்தை எதற்காகக் கூறுபோட்டுப் பிரிக்க வேண்டும்?” என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.

“கிழக்கு மாகாணத்தில், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் தமிழர்களுடன் சிங்களவர்களும் முஸ்லிம்களும் வாழ்ந்து வருகிறார்கள். அதனால்தான் கிழக்கு மாகாணத்தைக் கூறுபோட முனைகிறார்கள்.” என்றார் அமைச்சர். உடனே நான் குறுக்கிட்டு, “கிழக்கில் தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் வாழ்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் கிழக்கில் பெரும்பான்மையான சிங்களவர்கள் பலவந்தமாகச் சிங்கள ஆட்சியாளர்களின் உதவியுடன் தமிழர் நிலத்தில் குடியேற்றப்பட்டவர்கள்.” என்றேன். எம்.ஜி.ஆர் சிறிது நேரம் சிந்தித்தார். பின்பு அமைச்சர் பண்டுருட்டியைப் பார்த்து, “தமிழர் வாழும் நிலம் தமிழருக்குச் சொந்தம். சிங்களவர்கள் வாழும் நிலம் சிங்களவர்களுக்குச் சொந்தம். அதுதானே இந்திய அரசு கூறும் நியாயம்?” என்று கேட்டார். அதற்கு ஆமாப் போட்டார் அமைச்சர்.

எம்.ஜி.ஆருக்கும் பண்டுருட்டியாருக்கும் மத்தியிலான விவாதம் ஒரு விசித்திரமான திசையை நோக்கி நகர்ந்தது. எம்.ஜி.ஆர் கேள்விகளை அடுக்கிச் செல்ல ‘ஆமா’ போட்டுக் கொண்டிருந்தார் அமைச்சர்.

“வடக்குக் கிழக்கில் பெரும்பான்மையாக வாழ்பவர்கள் யார்? தமிழர்கள் அல்லவா?”

“ஆமா சார்.”

“தென் இலங்கையை எடுத்துக் கொண்டால், மலைநாட்டில் பொரும்பான்மையாக வாழ்பவர்கள் யார்? தமிழர்கள் அல்லவா?”

“ஆமா சார்.”

“தென்னிலங்கைத் தலைநகரான கொழும்பில் பெரும்பான்மையாக வாழ்பவர்கள் யார்? தமிழர்கள் அல்லவா?”

சிறிது தயக்கத்துடன் ஆமாப் போட்டார் அமைச்சர்.

“முழு இலங்கையிலும் தமிழர்கள்தானே பரவலாக வாழ்கிறார்கள் இல்லையா?”

“ஆமா சார்.”

“அப்படிப் பார்த்தால், இந்திய அரசின் நியாயப்படி, முழு இலங்கைத் தீவும் தமிழர்களுக்குத் தானே சொந்தமாக்கப்பட வேண்டும்? பின்பு எதற்காக தமிழர் நிலத்தைப் பிரிக்க வேண்டும்? முழு இலங்கையையும் புலிகளுக்கு அல்லவா கொடுக்க வேண்டும்?” என்றார் எம்.ஜி.ஆர். சொல்வது தெரியாது தடுமாறினார் பண்டுருட்டியார்.

“என்ன நான் சொல்வதில் நியாயம் இருக்கிறது தானே?” என்று கூறி அமைச்சரைப் பார்த்தார் எம்.ஜி.ஆர். இம்முறை பண்டுருட்டியாரின் அடித் தொண்டையிலிருந்து “ஆமா” என்ற சொல் ஆர்வமிழந்து அரைகுறையாக வெளிவந்தது.

நானும் பிரபாவும் எதுவுமே பேசவில்லை. மௌனமாக இருந்து, உரையாடலை ரசித்துக் கொண்டிருந்தோம். எம்.ஜி.ஆர் எம்மைப் பார்த்து, “நீங்கள் போகலாம். இந்தியாவின் யோசனையை ஏற்கமுடியாது என நீங்கள் கருதினால், ஏற்க வேண்டாம். ஏற்றுக் கொள்ளும்படி நான் வற்புறுத்த மாட்டேன்.” என்றார்.

எம்.ஜி.ஆருக்கு நன்றி கூறிவிட்டு, அவரது அறையிலிருந்து வெளியேறி நடந்து கொண்டிருந்த பொழுது, எம்மை அழைத்தவாறு அமைச்சர் பண்டுருட்டி எமக்குப் பின்னால் ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தார். “முழு இலங்கையையும் புலிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று தலைவர் சொன்னார் அல்லவா? அதனை சீரியஸாக எடுக்க வேண்டாம். ஒரு வாதத்திற்காக அப்படிச் சொன்னார். தயவு செய்து பத்திரிகையாளர்களிடம் இது பற்றிக் கதைக்க வேண்டாம்.” என்று மன்றாட்டமாகக் கேட்டார். நாம் அதற்கு இணக்கம் தெரிவித்தோம்.

பங்களூரில் இந்திய அரசு முன்வைத்த யோசனைகளை விடுதலைப் புலிகள் நிராகரித்தது ரஜீவ் காந்திக்குக் கடும் சினத்தை ஏற்படுத்தியது. சார்க் மாநாட்டின்போது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை அறிவித்து, புகழ்மாலை சூட்டிக் கொள்ள விரும்பிய ரஜீவுக்குப் புலிகளின் விட்டுக்கொடாத உறுதியான நிலைப்பாடு ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் கொடுத்தது. அற்ப சொற்ப அதிகாரப் பரவலாக்கத்துடன் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, இலங்கை அரசைத் தனது வல்லாதிக்கத்தின் கீழ் கொண்டு வர விரும்பிய இந்திய அரசுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு சவாலாக நின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஏனைய போராளி அமைப்புகளின் தலைவர்களும் இந்திய அழுத்தத்திற்குப் பணிந்து போகத் தயாராக இருக்கும் பொழுது, தலைவர் பிரபா மட்டும் வணங்கா முடியாக, கொண்ட இலட்சியத்தில் உறுதி பூண்டு நிற்பது இந்திய ஆட்சியாளருக்கு எரிச்சலை ஊட்டியது. இந்தியாவில் பயிற்சி எடுத்து, இந்திய மண்ணில் பயிற்சிப் பாசறைகளை அமைத்து, இந்தியாவில் வாழ்ந்து கொண்டு, இந்திய அழுத்தங்களை எதிர்க்கத் துணிந்த பிரபாகரனுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டுமென ரஜீவ் ஆட்சிப் பீடம் எண்ணியது. இதன் அடிப்படையில் பிரபாகரன் பாவித்து வந்த மிக நவீனகரமான, விலையுயர்ந்த தொலைதொடர்புச் சாதனங்களைப் பறிமுதல் செய்து, விடுதலைப் புலிகளின் தலைமைக்கும், தமிழீழ களத்திற்கும் மத்தியிலான தகவல் தொடர்புகளைத் துண்டித்துவிட மத்திய அரசு முடிவெடுத்தது. தமிழீழ சுதந்திரப் போராட்டத்திற்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் எதிராகச் செயற்பட்ட தமிழ்நாட்டுப் புலனாய்வுப் பிரிவின் அதிபரான உதவிப் பொலிஸ் மாஅதிபர் மோகனதாஸின் உதவியுடன் இந்நடவடிக்கை நிறைவேற்றப்பட்டது.

தனது தொலைதொடர்புச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை அறிந்ததும் கடும் சினம் கொண்டவராக எனது வீட்டுக்கு வந்தார் பிரபாகரன். “நரம்பு மையத்தில் கைவைத்து விட்டார்கள். இதனை அனுமதிக்க முடியாது. எப்படியாவது, இந்தக் கருவிகளைத் திருப்பிப் பெற வேண்டும்.” என்றார். தமிழீழக் களத்துடனும், அனைத்துலக கிளைகளுடனும் திடீரென தொடர்புகள் துண்டிக்கப்பட்டமை பிரபாகரனுக்கு ஆத்திரத்தை மூட்டியதுடன் இந்தியா மீதுள்ள நம்பிக்கையையும் முற்றாகத் தகர்த்தது. முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மீதும் அவருக்குக் கோபம். முதல்வரின் அனுமதியின்றி தமிழ்நாட்டுக் காவல்துறை இந் நடவடிக்கையை எடுக்க முடியாது என அவர் கருதினார். இனித் தொடர்ந்தும் தமிழ்நாட்டில் தங்கியிருப்பது தனது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்றும் சொன்னார்.

பறிமுதல் செய்யப்பட்ட தொலைதொடர்பு சாதனங்களைத் திருப்பித் தருமாறு கோரிக்கை விடுத்து சாகும்வரை உண்ணாவிரதம் கடைப்பிடிக்கப் போவதாகப் பிரபாகரன் முடிவெடுத்தார். உடனடியாகவே எனது வீட்டில் வைத்தே உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். உணவையும் நீரையும் துறந்த கடும் விரதம். என்னால் தடுத்து நிறுத்த முடியவில்லை. பிரபாகரன் தனது முடிவில் மிகவும் உறுதியாக நின்றார். நான் உடனடியாக பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டுவித்து, பிரபாகரனின் உண்ணாவிரதத்தை உலகிற்குத் தெரியப்படுத்தினேன். மறுநாள் காலை பிரபாகரனின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழ்நாட்டு ஊடகங்கள் செய்தியைப் பிரசுரித்தன. இதனையடுத்து தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், இயக்க ஆதரவாளர்கள், ஊடகவியலாளர் ஆகியோரும் தமிழீழ விடுதலை விரும்பிகளுமாக ஏராளமானோர் உண்ணாவிரதம் நடைபெற்ற எனது இல்லத்திற்கு வருகை தந்து, பிரபாகரனுக்குத் தமது நல்லாதரவைத் தெரிவித்தார்கள். வீட்டுக்கு முன்புறமாக அணி திரண்ட சனக்கூட்டம் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாகக் குரல் எழுப்பியது. பல்வேறு அரசியல் இயக்கங்களும், அமைப்புகளும், பத்திரிகைகளும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டன. பிரபாகரனின் உண்ணாவிரதப் போராட்டம் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் சூறாவளியைக் கிளப்பிவிட்டது. முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் அப்பொழுது சேலத்தில் இருந்தார். பிரபாகரனின் உண்ணாவிரதப் போராட்டம் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளதை அறிந்து மிகவும் கலங்கிப் போனார். விடுதலைப் புலிகளின் தொலைதொடர்புக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தமக்குத் தெரியாது என அறிக்கை வெளியிட்ட அவர் புதுடில்லி மீது பழியைச் சுமத்தினார். பதிலுக்கு மத்திய அரசு தமிழ்நாட்டு அரசு மீது குற்றம் சுமத்தியது.

ஈழ மக்களின் விடுதலைப் போராட்டம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்த காலகட்டம் அது. சிங்கள அரச ஒடுக்குமுறையிலிருந்து ஈழத்தமிழர்கள் விடுதலை பெற வேண்டும் என்பதில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் பெரும் ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்தனர். விடுதலைப் புலிகள் சுதந்திர வீரர்களாக மதிக்கப்பட்டனர். தலைவர் பிரபாகரன் ஒரு வரலாற்று நாயகனாகப் போற்றப்பட்டார். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் வீரன் தமிழ் நாட்டு அரசிடம் நீதி கேட்டு, மகாத்மா காந்தியின் அகிம்சை வழியில் சாகும் வரை உண்ணாவிரதம் கடைப்பிடித்து வருவதனை அறிந்ததும் தமிழ்நாட்டு மக்கள் கொதிப்படைந்தனர். எம்.ஜி.ஆரின் நிர்வாகம் மீதும் குறிப்பாகத் தமிழ்நாட்டுக் காவல்துறை மீதும் வெறுப்புணர்வு பரவத் தொடங்கியது. உண்ணாவிரதம் நீடித்து பிரபாகரனுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதன் அரசியல் விளைவுகள் படுபாதகமாக அமையும் என எம்.ஜி.ஆர் பயந்தார்.

பிரபாவின் சாகும் வரை உண்ணாவிரதத்தின் இரண்டாவது நாள். முதலமைச்சரிடமிருந்து எனக்கு ஒரு அவசரத் தகவல் வந்தது. உடனடியாக தம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டிருந்தார். எனது வீட்டிற்கு அருகிலுள்ள எமது அரசியற் செயலகத்திற்குச் சென்று எம்.ஜி.ஆருடன் தொலைபேசியில் கதைத்தேன். முதலில் பிரபாவின் உடல்நிலைபற்றி மிகவும் பரிவோடு விசாரித்தார். மிகவும் சோர்ந்து போய் இருக்கிறார் என்றும், உண்ணாவிரதம் நீடித்துச் சென்றால் உடல்நிலை மோசமடையும் என்றும் சொன்னேன். முதலில் உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு பிரபாகரனுக்கு ஆலோசனை வழங்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். தாம் சென்னைக்குத் திரும்பியதும் எம்மை நேரில் சந்தித்து பிரச்சினை பற்றிப் பேசுவதாகச் சொன்னார். பிரபாகரன் ஒரு முடிவு எடுத்தால் அதிலிருந்து பின்வாங்க மாட்டார் என்பதை முதல்வருக்குத் தெளிவாக விளக்கினேன்.

“தமிழ்நாட்டு அரசு தனக்கு அநீதி இழைத்துவிட்டதாக பிரபாகரன் கருதுகிறார். தொலைதொடர்புக் கருவிகளைப் பறித்து, தாயகக் களத்துப் போராளிகளுடன் தொடர்பைத் துண்டித்தது மிகவும் பாரதூரமான பழிவாங்கும் நடவடிக்கை என எண்ணி அவர் மிகவும் வேதனை அடைந்து இருக்கிறார். தொலைதொடர்பு சாதனங்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டாலன்றி அவர் உண்ணாவிரதத்தைக் கைவிடப் போவதில்லை.” என்று கூறினேன். முதலமைச்சர் சிறிது நேரம் மௌனம் சாதித்தார். ஏதோ ஆழமாகச் சிந்திப்பது போல் தெரிந்தது. காவல்துறையினருடன் கலந்தாலோசித்துவிட்டு மீண்டும் தொடர்பு கொள்வதாகச் சொன்னார். எம்.ஜி.ஆருடன் கதைத்த விபரத்தை பிரபாகரனுக்கு எடுத்துக் கூறினேன். முதலமைச்சரின் பதிலுக்காகக் காத்திருந்தோம். சில மணிநேரத்தின் பின் தன்னுடன் தொடர்பு கொள்ளுமாறு எம்.ஜி.ஆர் தகவல் அனுப்பியிருந்தார். “உங்களது தொலைதொடர்புச் சாதனங்களை உங்களிடம் திருப்பி ஒப்படைக்குமாறு நான் காவல்துறையினரைப் பணித்திருக்கிறேன். ஒரு சில தினங்களுக்குள் அவற்றைத் திருப்பித் தருவார்கள். உடனடியாகத் தம்பி பிரபாகரனை உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு சொல்லுங்கள்.” என்று கேட்டுக்கொண்டார். நான் அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு, பிரபாகரனிடம் சென்று தகவலை அறிவித்தேன்.

எம்.ஜி.ஆர் அளித்த வாக்குறுதி பிரபாகரனைத் திருப்திப்படுத்தவில்லை. தமிழ்நாட்டுக் காவல்துறையினரை, குறிப்பாக மோகனதாஸை அவர் நம்பத் தயாராக இல்லை. உண்ணாவிரதத்தைக் கைவிட்டதற்கு அப்புறம் தொலைதொடர்புச் சாதனங்களை காவற்துறையினர் திருப்பி ஒப்படைக்க மறுத்தால் என்ன செய்வது எனக் கேள்வி எழுப்பினார். பிரபாகரனது வாதத்தில் ஒரு நியாயப்பாடு இருப்பதாக எனக்குத் தோன்றியது. “எனது தொலைதொடர்பு சாதனங்கள் நேரடியாக என்னிடம் திருப்பி ஒப்படைக்கப்படும் வரை உண்ணாவிரதத்தை நான் கைவிடப் போவதில்லை. இதனை முதலமைச்சரிடம் சொல்லுங்கள்.” என்றார். மீண்டும் எம்.ஜி.ஆருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரபாகரனின் நிலைப்பாட்டை எடுத்து விளக்கினேன். எம்.ஜி.ஆருக்கு நிலைமை புரிந்தது. தமிழக காவல்துறையினர் மீது பிரபாகரன் கசப்புணர்வுடன் இருப்பதன் காரணத்தையும் அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது. பிரபாகரன் விரும்பியபடியே செய்கிறேன் என்றார்.

அன்று மாலை பறிமுதல் செய்யப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் திருப்பி ஒப்படைக்கப்பட்டன. இந்த சாதனங்களை எனது வீட்டுக்குள் சுமந்து வந்த தமிழக காவல்துறை அதிகாரிகள் அவற்றை பிரபாகரன் முன்பாக வைத்தார்கள். மிகவும் சோர்ந்து போயிருந்த பிரபாகரனது முகத்தில் லேசாக ஒரு புன்னகை மலர்ந்தது. பிரபாகரனது நாற்பத்து எட்டு மணி நேர உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. திராவிடக் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் பழச்சாறு ஊட்ட, அங்கு குழுமியிருந்த பெருந்திரளான ஆதரவாளர்கள், போராளிகள், பத்திரிகையாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் தெரிவிக்க, அந்த வரலாற்று நிகழ்வு முடிவுக்கு வந்தது.

ஒரு சில வாரங்களுக்குப் பின்னர் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் தலைவர் பிரபாகரனையும் என்னையும் பறங்கிமலையிலுள்ள தனது இல்லத்திற்கு அழைத்தார். எம்மைக் கைது செய்து அவமானப்படுத்தியது, எமது ஆயுதங்களையும் பின்பு தொலைதொடர்பு சாதனங்களையும் பறித்தெடுத்தது சம்பந்தமாக நீண்ட நேரம் கலந்துரையாடல் நிகழ்ந்தது. தனது மனவேதனைகளை மனம் திறந்து கொட்டினார் பிரபாகரன். உதவிப் பொலிஸ் மாஅதிபர் திரு.மோகனதாஸ் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு விரோதமானவர் என்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் தலைமையையும் வெறுக்கிறார் என்றும் சிங்கள அரசின் உளவுத்துறையுடன் அவருக்கு நெருங்கிய உறவுண்டு என்பதையும் விளக்கிச் சொன்னோம்.

அப்பொழுது, திரு.மோகனதாஸ் பற்றி எமக்குச் சில அந்தரங்கத் தகவல்கள் கிடைத்திருந்தன. அவர் சிங்கப்பூருக்கு அடிக்கடி பயணம் செய்து ஒரு சிங்கள உயர்தர அதிகாரியைச் சந்திப்பதாகவும், பெரும் தொகையில் லஞ்சம் வாங்கி ஈழ விடுதலை அமைப்புகள் பற்றித் தகவல்களைப் பரிமாறுவதாகவும் மிகவும் நம்பிக்கைக்குரிய மலையாளப் பத்திரிகையாளர் ஒருவர் எமக்குத் தெரிவித்திருந்தார். இந்த விபரங்களை எல்லாம் நாம் முதலமைச்சருக்கு தெரிவித்தோம். நாம் கூறியதையெல்லாம் மிகவும் ஆர்வமாகவும் உன்னிப்பாகவும் கேட்டுக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். நாம் கொடுத்த தகவல்கள் முதலமைச்சருக்கும் மோகனதாசுக்கும் மத்தியில் பெரிய விரிசலை ஏற்படுத்தியது என்பதை பின்பு அறிந்தோம்.

எம்.ஜி.ஆருடனான அன்றைய சந்திப்பு எமக்குச் சாதகமாக அமைந்தது. விடுதலைப் புலிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் அனைத்தையும் திருப்பி ஒப்படைக்குமாறு தமிழக காவல்துறையினருக்கு உத்தரவிட்டார் எம்.ஜி.ஆர். எமது இயக்கத்திடமிருந்து பறிக்கப்பட்ட ஆயுதங்கள் மிகவும் சொற்பம். இந்திய அரசிடமிருந்தும் வெளியுலகத்திடமிருந்தும் பெறப்பட்ட ஆயுதங்களில் பெரும்பாலானவற்றை நாம் ஏற்கனவே தமிழீழத்திற்கு அனுப்பியிருந்தோம். ஏனைய அமைப்புகளிடமிருந்தே ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மொத்தம் நாற்பது கோடி பெறுமதியான ஆயுதங்களைக் கைப்பற்றியதாக திரு.மோகனதாஸ் அறிவித்திருந்தார். ஏனைய அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட ஆயுதங்களையும் புலிகளிடம் ஒப்படைக்குமாறு கேட்டோம். எவ்வித தயக்கமுமின்றி அதற்கு இணங்கினார் எம்.ஜி.ஆர். ஏனைய அமைப்புகளிடமிருந்து பறிமுதல் செய்த சகல ஆயுத தளபாடங்களையும் விடுதலைப் புலிகளிடம் திருப்பி ஒப்படைக்கும் பொறுப்பும் திரு.மோகனதாஸிடம் கையளிக்கப்பட்டது. எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஆயுதப் பறிமுதல் அதிர்ஸ்டத்தில் முடிந்தது என எண்ணிக் கொண்டோம்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அன்பும் ஆதரவும் இருந்தபோதும், தமிழ்நாட்டில் தங்கியிருந்து இந்திய அரசின் அழுத்தங்களுக்கு ஆளாவதை தலைவர் பிரபாகரன் விரும்பவில்லை. இந்திய ஆதிக்கப் பிடியிலிருந்து விடுபட்டு, தமிழீழத்தில் சுதந்திரமாக இயங்கி போராட்டத்தை முன்னெடுப்பதையே அவர் விரும்பினார். யாழ்ப்பாணம் செல்வதற்கான இரகசியத் திட்டங்கள் தீட்டப்பட்டன. 1987ஆம் ஆண்டு ஜனவரி முற்பகுதியில் பிரபாகரன் தமிழீழம் சென்றடைந்தார். நானும் அடேலும் தொடர்ந்தும் சென்னையில் தங்கியிருந்து அரசியற் பரப்புரைப் பணியில் ஈடுபட்டிருந்தோம். பிரபாகரன் யாழ்ப்பாணம் சென்றுவிட்டார் என்ற செய்தி தமிழகப் பத்திரிகைகளில் பிரசுரமாகியதை அடுத்து முதலமைச்சர் என்னை அவசரமாக அழைத்தார்.

எம்.ஜி.ஆர் அவர்களுடன் திரு.சிதம்பரமும் இருந்தார். அப்பொழுது சிதம்பரம் இந்திய மத்திய அரசின் ஒரு முக்கிய அமைச்சராகப் பணிபுரிந்தார். பிரதமர் ரஜீவ் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். இலங்கையின் இனப் பிரச்சினை குறித்து ரஜீவிற்கு ஆலோசனையும் வழங்கி வந்தார். மத்திய அரசின் தூதுவராக ஏதோ பிரச்சினையுடன் வந்திருக்கிறார் என எண்ணினேன்.

புன்முறுவலுடன் என்னை வரவேற்ற எம்.ஜி.ஆர் தனக்கு முன்பாக அமரச் சொன்னார். நான் அமர்ந்த அந்தக் கணமே திரு.சிதம்பரம் என் மீது சீறி விழுந்தார். “நீங்கள் நன்றிக் கடன் உள்ளவர்களா? உங்களுக்கு பொறுப்புணர்வு ஏதாவது உண்டா?” என்று கதறினார். எதற்காக இப்படி ஆத்திரப்படுகிறார்? முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“உங்களது இயக்கத்திற்கு இந்திய அரசு எத்தனையோ உதவிகளைச் செய்திருக்கிறது. உங்களுக்கு புகலிடம் தந்து, உங்களது போராளிகளுக்குப் பயிற்சி கொடுத்து, ஆயுதங்கள் கொடுத்து உதவி செய்யவில்லையா? இப்பொழுதும் கூட ஈழத் தமிழரின் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண இந்திய அரசு எத்தனையோ முயற்சிகளை எடுத்து வருகிறது. இப்படி எல்லாம் நாம் செய்தபோதும் நீங்கள் எமக்கு விரோதமாகச் செயற்படுகிறீர்கள். இந்திய அரசுக்கு நீங்கள் எந்த வகையிலும் ஒத்துழைப்புத் தரவில்லை.” என்றார் அமைச்சர் சிதம்பரம். நான் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

“இப்பொழுது உங்களது தலைவர் பிரபாகரன் எங்கே இருக்கிறார்? திடீரென மாயமாக மறைந்து விட்டார். யாருக்கும் தெரிவிக்காமல் யாழ்ப்பாணம் சென்றுவிட்டாராமே? இப்படிச் செய்வது சரியா? மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தாதது பரவாயில்லை. ஆனால் தமிழ்நாட்டு அரசுக்காவது தெரியப்படுத்தியிருக்கலாம் அல்லவா? அப்படித்தான் செய்யாவிட்டாலும் முதலமைச்சருக்காவது சொல்லியிருக்கலாம் அல்லவா? முதலமைச்சர் உங்களுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார். ஆதரவாக இருக்கிறார். அவருக்காவது தெரியப்படுத்தியிருக்கலாம் அல்லவா? அப்படிச் செய்யாதது பெரிய தவறு.” என்றார் திரு.சிதம்பரம். முதலமைச்சருடன் முடிந்துவிடப் பார்க்கிறார் என்பது தெளிவாகியது. எம்.ஜி.ஆர் எதுவுமே பேசவில்லை. என்னைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“எண்பத்து மூன்று இறுதிப் பகுதியிலிருந்து பல வருடங்களைப் பிரபாகரன் இந்தியாவில் கழித்துவிட்டார். அவர் இங்கு தஞ்சம் கேட்டு வரவில்லை. இராணுவப் பயிற்சித் திட்டம் சம்பந்தமாக இந்திய அரசின் அழைப்பின் பேரில்தான் அவர் இங்கு வந்தார். இங்கு தங்கியிருந்த காலத்தில் பல கசப்பான அனுபவங்களையும் பெற்றார். இப்பொழுது போராட்ட களத்திற்குச் செல்ல வேண்டிய காலமும் வரலாற்றுத் தேவையும் அவருக்கு ஏற்பட்டு விட்டது. தமிழீழக் களத்திலிருந்துதான் எமது மக்களின் உரிமைப் போராட்டத்தை அவர் முன்னெடுக்க விரும்புகிறார். அதனால்தான் அவர் தாயகம் செல்ல வேண்டி நேர்ந்தது. சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் செல்வது மிகவும் ஆபத்தான பயணம். தரைப் பாதை மட்டுமன்றி, கடல் கடந்தும் செல்ல வேண்டும். பிரபாகரனுக்குப் பல எதிரிகள் இருக்கிறார்கள். அவருக்கு விரோதமாகப் பல சக்திகள் செயற்படுகின்றன. ஏனைய போராளி அமைப்புகளும் அவரைப் பழி தீர்ப்பதற்காக வெறிகொண்டு அலைகின்றன. இப்படியான சூழ்நிலையில் பிரபாகரனின் பாதுகாப்புக் கருதியே அவரது பயணத்தை இரகசியமாக வைத்திருக்க எமது இயக்கம் முடிவெடுத்தது.” இப்படியாக ஒரு விளக்கம் கொடுத்தேன்.

அமைச்சர் சிதம்பரம் என்னை விட்டபாடில்லை. “சரி, பிரபாகரன் தான் பாதுகாப்புக் கருதி அவசரமாக, இரகசியமாக யாழ்ப்பாணம் போய்விட்டார். நீங்களாவது முதலமைச்சருக்கு அத்தகவலைத் தெரிவித்திருக்கலாம் அல்லவா?” என்று கூறி என்னை மடக்க முயன்றார். முதலமைச்சரும் என்னைக் கேள்விக் குறியுடன் நோக்கினார். உண்மையைச் சொல்வதுதான் ஒரே வழியாகத் தென்பட்டது.

முதலமைச்சரைப் பார்த்துச் சொன்னேன். “சார், பிரபாகரன் யாழ்ப்பாணம் சென்றது உண்மையில் எனக்கும் தெரியாது. அவர் எனக்கும் கூட தெரியப்படுத்தவில்லை. மிகவும் இரகசியமான காரியங்களை இரகசியமாக செய்து முடிப்பதுதான் எமது இயக்கத்தின் மரபு. நேற்றுத்தான் எனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து தகவல் அனுப்பியிருந்தார் பிரபாகரன். உங்களுக்கு அறிவிக்குமாறு பணித்திருந்தார். நான் உங்களுக்கு அறிவிப்பதற்கு முன்னராக நீங்கள் என்னை இங்கு அழைத்து விட்டீர்கள்.” என்றேன். சகுனியார் வாயடைத்துப் போய் இருந்தார்.

முதலமைச்சருக்கு நிலைமை புரிந்தது. தலைவர் பிரபாகரன் தாயகம் திரும்பியதன் அவசியத்தை அவர் உணர்ந்து கொண்டார். அந்தப் பயணம் குறித்து இரகசியம் பேணப்பட்டதையும் அவர் புரிந்து கொண்டார். மத்திய அமைச்சர் சிதம்பரம் முடிந்துவிட முனைகிறார் என்பதையும் விளங்கிக் கொண்டார்.

“பிரபாகரன் சௌக்கியமாக இருக்கிறாரா?” என்று கேட்டார் எம்.ஜி.ஆர். “ஆமா சார்” என்றேன்.

“அவரைப் பாதுகாப்பாக இருக்கச் சொல்லுங்கள்.” என்றார். “நான் விசாரித்ததாகவும் சொல்லுங்கள்.” என்றார். சந்திப்பு சுமுகமாக முடிந்தது. முகத்தை தொங்கப் போட்டபடி இருந்தார் சிதம்பரம்.

1987ஆம் ஆண்டு ஜுலை மாதம், இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக நானும் பிரபாகரனும் முதலமைச்சர் எம்.ஜி.ஆரைப் புதுடில்லியில் சந்தித்தோம். அதுவே எமது கடைசிச் சந்திப்பாக அமைந்தது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் நிகழ்ந்த இறுதிச் சந்திப்பிலும் எம்.ஜி.ஆர் அவர்கள் எமக்கு அனுசரணையாக நின்று எமது நிலைப்பாட்டை ஆதரித்தார். புதுடில்லியில் நிகழ்ந்த அந்தச் சந்திப்பின் பின்னணியே ஒரு விசித்திரமான கதை.

1987 ஜுலை மாதம் 24ஆம் திகதி. தலைவர் பிரபாகரன், யோகரத்தினம் யோகி, திலீபன் ஆகியோருடன் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் முதற் செயலர் ஹர்தீப் பூரியையும் ஏற்றிக் கொண்டு இந்திய விமானப் படையின் உலங்குவானூர்தி ஒன்று சுதுமலை அம்மன் கோவில் மைதானத்திலிருந்து சென்னை புறப்பட்டது. பிரபாகரனும் அரசியல்துறையைச் சேர்ந்த போராளிகளும் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்படுகிறார்கள் என்றும், அங்கு சென்று அவர்களைச் சந்திக்குமாறும் எனக்குத் தகவல் தரப்பட்டது. மீனம்பாக்கம் சென்றபொழுது அவர்கள் எனக்காகக் காத்து நின்றார்கள். நாம் அவசரமாகப் புதுடில்லி செல்ல வேண்டும் என்றும், ஒரு முக்கிய விடயமாக பிரதமர் ரஜீவ் காந்தி எம்மைச் சந்திக்க விரும்புவதாகக் கூறிய இந்தியத் தூதரக அதிகாரி திரு.பூரி தம்மைக் கட்டாயப்படுத்தி அழைத்து வந்ததாகவும் பிரபாகரன் சொன்னார். இதில் ஏதோ தில்லு முல்லு இருப்பதாக எனக்குத் தோன்றியது. எனினும் இந்தியப் பிரதமர் விடுத்த அழைப்பை நிராகரிப்பது நாகரீகம் அல்ல. எதற்கும் புதுடில்லி சென்று பார்ப்போமே என நினைத்தேன். ஒரு இந்திய விமானப்படை விமானத்தில் புதுடில்லி சென்றோம். அங்கு அசோகா விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.

அது ஒரு ஐந்து நட்சத்திர விடுதி. புதுடில்லியில் மிகவும் பிரபல்யமானது. விமான நிலையத்திலிருந்து ஆயுதம் தாங்கிய காவல்துறையினரின் பாதுகாப்புடன் சென்றுகொண்டிருந்த எமது வண்டி விடுதியின் முன் வாயிலை அடைந்தபோது அங்கு பல நூற்றுக்கணக்கான இந்திய இராணுவ அதிரடிப் படையினர் (கறுப்புச் சீருடை அணிந்த கரும்பூனைகள்) விடுதிக் கட்டடத்தைச் சூழ நிற்பதைக் கண்டோம். நாம் சந்தேகத்துடன் ஒருவரை ஒருவர் பார்ப்பதைக் கண்டதும், “உங்களுக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.” என்றார் பூரி.

கரும்பூனைகள் சூழ விடுதியின் அதியுயர் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். ஆளுக்கு ஒரு அறையும், கலந்துரையாடுவதற்கு ஒரு கூடமுமாக அந்த மாடியின் ஒரு பகுதி எமக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. எமது அறைகளுக்கு முன்பாகவும் மாடிபூராகவும் ஆயுதம் தரித்த கரும்பூனைகள் பாதுகாப்பாக நிலையெடுத்து நின்றனர். சிறிது நேரத்தில் இந்தியப் புலனாய்வு உயர் அதிகாரி ஒருவர் அங்கு வந்தார். எமது பாதுகாப்புக் குறித்து நாம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் விடுதியை விட்டு வெளியேற எமக்கு அனுமதியில்லை என்றும் தொலைபேசி மூலம் வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ள முடியாதென்றும் எமது நிலைமையைத் தெளிவுபடுத்தினார். சற்று நேரத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் திரு.டிக்சிட் எம்மைச் சந்திப்பார் என்றும் நாம் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டதன் அரசியல் காரணத்தை அவர் விளக்கிக் கூறுவார் என்றும் சொன்னார். இந்திய அரசின் பொறிக்குள் சிக்கி விட்டோம் என்பது புலனாகியது. எதுவுமே செய்யமுடியாத நிர்க்கதியான நிலை. இந்தியத் தூதுவருக்காகக் காத்திருந்தோம்.

ஒரு மணிநேரம் கழித்து, திரு.டிக்சிட் அங்கு வந்தார். முகத்தைக் கடுப்பாக வைத்துக் கொண்டு, தனது சுங்கானைப் பற்றவைத்த பின்னர் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார். “இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் மத்தியில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியப் பிரதமர் திரு.ரஜீவ் காந்தி வெகு விரைவில் கொழும்பு சென்று அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இருக்கிறார். இந்த ஒப்பந்தம் தமிழரின் இனப் பிரச்சினைக்கு ஒரு நல்ல, நியாயமான தீர்வை வழங்குகிறது. இவ்வொப்பந்தத்தை நீங்கள் கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.” என்று அடித்துக் கூறினார். பின்பு தனது பைக்குள்ளிருந்து ஒப்பந்தத்தின் பிரதி ஒன்றை எடுத்து என்னிடம் கையளித்துவிட்டு, அதனை மொழிபெயர்த்து பிரபாகரனுக்கு விளங்கப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். இரண்டு மணி நேரத்தின் பின்பு தான் திரும்பி வருவதாகவும் அப்பொழுது ஒரு முடிவுடன் இருக்குமாறும் கூறியவர் எமது பதிலுக்காகக் காத்திராது அவசரமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக மொழிபெயர்த்து பிரபாகரனுக்கு விளங்கப்படுத்தினேன். உப்புச் சப்பற்ற மாகாண சபைத்திட்டம் ஒன்று இனப் பிரச்சினைக்கு தீர்வாக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் அதிகாரங்கள் மத்திய அரசிடம் குவிக்கப்பட்டிருந்தது. வட கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்படுமென விதிக்கப்பட்டிருந்தது. மாகாண சபையைக் கலைக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உடன்படிக்கை கைச்சாத்திட்ட 72 மணி நேரத்திற்குள் எமது ஆயுதத் தளபாடங்கள் இந்திய அமைதிப் படைகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்டிருந்தது. எமக்குத் தரப்பட்ட இரண்டு மணிநேர கால அவகாசத்தில் ஒரு தீர்க்கமான முடிவைப் பிரபாகரன் எடுத்தார். அதாவது, எந்தக் காரணத்திற்காகவும் இந்த ஒப்பந்தத்தை ஏற்பதில்லை என உறுதியான தீர்மானம் மேற்கொண்டார்.

சரியாக இரு மணிநேரத்தின் பின் திரு.டிக்சிட் திரும்பி வந்தார். வந்ததும் எமது முடிவைக் கேட்டார். இந்த ஒப்பந்தத்தை எக்காரணத்தைக் கொண்டும் ஏற்க முடியாது என்றோம். ஏன் ஏற்க முடியாது என்று கேட்டார். காரணங்களை விளக்கிக் கூறினோம். ஒப்பந்தத்தில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் மாகாணசபைத் திட்டத்திலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இத்திட்டம் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யத் தவறிவிட்டது என்றோம். எமது முடிவை மாற்றுமாறு மன்றாட்டமாகக் கேட்டார். பின்பு வற்புறுத்திக் கேட்டார். இறுதியாக மிரட்டத் தொடங்கினார்.

“நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இரு நாடுகள் செய்து கொள்ளும் உடன்பாடு இது. இதனை நீங்கள் எதிர்த்தால் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்.” என்று மிரட்டினார். எப்படியான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என்று கேட்டபொழுது, “இங்கே தொடர்ந்தும் தடுப்புக் காவலில் இருக்க வேண்டி நேரிடும். ஒப்பந்தத்தை ஏற்கும் வரை இந்தியாவில் உங்களை தடுத்து வைத்திருக்க எம்மால் முடியும்.” என்றார்.

“எத்தனை காலமோ, எத்தனை வருடங்களோ எம்மைத் தடுப்புக் காவலில் வைத்தாலும் நாம் இந்த ஒப்பந்தத்தை ஏற்கப் போவதுமில்லை. ஆயுதங்களை ஒப்படைக்கப் போவதுமில்லை.” என்று உரத்த குரலில் சொன்னார் பிரபாகரன். ஆத்திரத்தில் அவரது விழிகள் பிதுங்கின. திரு. டிக்சிட் கேரளத்தைச் சேர்ந்தவர். அவருக்கு தமிழ்மொழி நன்கு தெரியும். நான் மொழிபெயர்ப்பதற்கு முன்னரே பிரபாகரன் அடித்துச் சொன்னது அவருக்கு ஆத்திரத்தை மூட்டியது.

“ஆயுதங்களை நீங்கள் ஒப்படைக்க மறுத்தால், இந்திய இராணுவத்தைக் கொண்டு உங்களது ஆயுதங்களைப் பறித்தெடுப்போம். இந்திய இராணுவத்திற்கு முன்பாக உங்களது போராளிகள் வெறும் தூசு.” என்று ஆவேசத்தில் கூச்சலிட்டவர் தனது சுங்கானை எடுத்து பிரபாகரனிடம் காண்பித்து, “இதனை நான் பற்றவைத்து புகைத்து முடிக்கும் நேரத்திற்குள் இந்திய இராணுவம் உங்களது போராளிகள் அனைவரையும் துவம்சம் செய்துவிடும்.” என்று கூறிவிட்டு ஏளனமாக ஒரு எக்காளச் சிரிப்புச் சிரித்தார். எங்கள் எல்லோரது முகங்களும் கோபத்தினால் சிவந்தது. மிகவும் சிரமப்பட்டு ஆத்திரத்தை அடக்கிய பிரபாகரன், “உங்களால் முடிந்ததைச் செய்து பாருங்கள். ஆனால் நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.” என்று உறுதிபடக் கூறினார்.

டிக்சிட்டுக்குக் கோபத்தால் உதடுகள் நடுங்கின. “மிஸ்டர் பிரபாகரன், நீங்கள் இந்திய அரசாங்கத்தை இத்துடன் நான்கு தடவைகள் ஏமாற்றிவிட்டீர்கள்.” என்றார். “அப்படியானால், நான்கு தடவைகள் எமது மக்களை இந்திய அரசிடமிருந்து காப்பாற்றியிருக்கிறேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன்.” என்றார் பிரபாகரன். திடீரென எழுந்த டிக்சிட் அங்கிருந்து வெளிநடப்புச் செய்தார்.

இந்தியத் தூதர் டிக்சிட்டின் ‘மிரட்டல் இராஜதந்திரம்’ தோல்வி அடைந்த போதும், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் மீது திணித்துவிடும் முயற்சி தொடர்ந்தது. ரஜீவ் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள், மாறி மாறி, ஒவ்வொருவராக எம்மைச் சந்தித்து ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை எடுத்து விளக்கினார்கள். இந்திய உள்ளக புலனாய்வுத் துறையின் (I.B) அதிபர் திரு.எம்.கே நாராயணன், வெளிவிவகார அமைச்சரின் கூட்டுச் செயலர் திரு.சகாதேவ், வெளிவிவகார அமைச்சைச் சேர்ந்த திரு.நிகல் சேத், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த ஹர்தீப் பூரி ஆகியோர் தொடர்ச்சியாக மாறி மாறிச் சந்திப்புக்களை நிகழ்த்தினர். புதுடில்லியில் அசோகா விடுதியில் இந்தத் திரைமறைவு நாடகம் பல நாட்களாகத் தொடர்ந்தது. திரு.பிரபாகரன் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. தனது நிலைப்பாட்டில் உருக்குப் போல உறுதியாக நின்றார். புலிகள் மிகவும் பிடிவாதமாக நிற்கின்றார்கள் எனப் பிரதமர் ரஜீவ் காந்திக்கு அறிவிக்கப்பட்டது. அவர் தனது அதிகாரிகளை அழைத்து மந்திராலோசனை நடத்தினார். இறுதி முயற்சியாக தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களைப் புதுடில்லிக்கு அழைப்பதென முடிவாகியது. ஜுலை 26ஆம் திகதி பிரதமரின் விசேட விமானத்தில் எம்.ஜி.ஆர் புதுடில்லிக்கு அழைத்து வரப்பட்டார்.

அன்றிரவே, இந்திய தலைநகரிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சரைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தலைவர் பிரபாகரனும் நானும் யோகரத்தினம் யோகியும் எம்.ஜி.ஆரிடம் அழைத்துச் செல்லப்பட்டோம். முதலமைச்சருடன் திரு.டிக்சிட்டும் இருந்தார்.

இந்திய – இலங்கை ஒப்பந்தம் பற்றியும் அதில் பரிந்துரைக்கப்பட்ட மாகாண சபைத் திட்டம் பற்றியும் இம் மாகாண சபைத்திட்டம் மூலம் ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளது என்றும் ஒரு நீண்ட புராணம் பாடிக் கொண்டிருந்தார் டிக்சிட். நாடியில் கையூன்றியவாறு பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

“தமிழர் விடுதலைக் கூட்டணியும் சகல போராளிக் குழுக்களும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றன. ஆனால் இவர்கள் மட்டும் இதனை எதிர்க்கிறார்கள். தமிழீழத் தனியரசைத் தவிர இவர்கள் எதையுமே ஏற்கமாட்டார்கள் போலத் தெரிகிறது. ஆனால் இந்திய அரசு தனியரசு அமைவதை ஒருபொழுதும் அனுமதிக்கப் போவதில்லை. இவர்கள் இந்தியாவை விரோதித்தால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று சீறினார் இந்தியத் தூதுவர்.

“இந்த மாகாண சபைத் திட்டத்தில் உருப்படியாக ஒன்றுமில்லை. தமிழ் மக்களின் அபிலாசையை இது பூர்த்தி செய்யவில்லை. அப்படியிருக்க இத்திட்டத்தை நாம் எதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும்?” என்றார் யோகரத்தினம் யோகி. இதைத் தொடர்ந்து யோகிக்கும் டிக்சிட்டுக்கும் கடும் வாக்குவாதம் மூண்டது. “சென்ற வாரம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த திரு.பூரி இந்த ஒப்பந்தம் பற்றியும் மாகாணசபைத் திட்டம் பற்றியும் உமக்கு விபரமாக விளக்கினாராம். அப்போது அதற்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் இப்போது எதற்காக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?” என்று டிக்சிட் கதற, அதனை மறுத்துரைத்தார் யோகி. “யாழ்ப்பாணத்தில் இந்த ஒப்பந்தம் பற்றி எதுவுமே பேசப்படவில்லை.” என்றார் யோகி. “அப்பொழுது என்னை ஒரு பொய்யன் என்று சொல்கின்றீர்களா?” என்று கேட்டார் டிக்சிட். “நீங்கள் உண்மை பேசவில்லை.” என்றார் யோகி. வாக்குவாதம் சூடு பிடித்தது. கோபாவேசம் கொண்டவராக முதலமைச்சரைப் பார்த்து, “பாருங்க சார், என்னைப் பொய்யன் என்று சொல்கிறார்.” எனக் கதறினார் டிக்சிட். ஒரு ஏளனப் புன்னகையுடன் மௌனம் சாதித்தார் பிரபாகரன். இந்த விவாதத்தில் நானும் குறுக்கிடவில்லை. இந்தியத் தூதுவர் டிக்சிட் நிதானம் இழந்து உணர்ச்சி வசப்படுகிறார் என்பதை உணர்ந்து கொண்டார் எம்.ஜி.ஆர். “நீங்கள் சிறிது நேரம் வெளியே இருக்கிறீர்களா? நான் இவர்களுடன் பேச வேண்டும்.” என டிக்சிட்டைப் பண்பாக வேண்டிக் கொண்டார் முதலமைச்சர். சிறிது தயக்கத்துடன் அங்கிருந்து வெளியேறினார் இந்தியத் தூதுவர்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகள் பற்றியும் அதனை ஏற்றுக்கொள்ள நாம் மறுப்பதன் காரணங்கள் பற்றியும் எம்.ஜி.ஆர் எம்மிடம் வினவினார். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி எமது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கினோம். ஈழத்து அரசியற் கட்சிகளும் ஆயுதக் குழுக்களும் இந்திய அரசின் நெருக்குவாரத்திற்கும் மிரட்டலுக்கும் பணிந்து விட்டார்கள் என்றும், இந்திய அச்சுறுத்தல்களுக்குப் பணிந்து நாம் எமது மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்றும் சொன்னோம். தமிழரின் இனப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணாத நிலையில், சிங்கள ஆயுதப் படைகள் தமிழர் மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சூழ்நிலையில், எமது ஆயுதங்களைக் கையளித்து, எமது போராளிகளைச் சரணடையுமாறு கேட்பது நியாயமற்றது என்பதையும் எடுத்து விளக்கினோம்.

எமது விளக்கங்களை முதலமைச்சர் பொறுமையுடன் செவிமடுத்தார். எமது நிலைப்பாட்டின் நியாயப்பாடுகளையும் அவர் புரிந்து கொண்டார். இந்திய-இலங்கை ஒப்பந்தமானது இந்தியாவின் கேந்திர-புவியியல் நலனைப் பேணுவதற்காகவே செய்து கொள்ளப்பட்டது என்பதையும் உணர்ந்து கொண்டார். இந்திய – இலங்கை ஒப்பந்த விவகாரத்தில் பிரபாகரன் என்ன முடிவு எடுக்கின்றாரோ, அதற்குத் தனது முழு ஆதரவும் இருக்கும் என்றார் எம்.ஜி.ஆர். அழுத்தங்களுக்கு விட்டுக் கொடுக்காது, கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பது குறித்துப் பிரபாகரனை அவர் பாராட்டவும் தவறவில்லை. முதலமைச்சருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

முதலமைச்சரின் சந்திப்பு அறைக்கு வெளியே திரு.டிக்சிட்டும் ஒரு இந்தியப் புலனாய்வு அதிகாரியும் நின்று கொண்டிருந்தனர். எம்மை வழிமறித்த இந்தியத் தூதுவர், “ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளும்படி முதலமைச்சர் வற்புறுத்தினார் அல்லவா?” என்று கேட்டார். நாம் பதிலளிக்காது மௌனமாக நின்றோம். “முதலமைச்சர் சொன்னபடியே செய்யுங்கள்.” என்றார். “அப்படியே செய்வோம்.” என்று கூறிவிட்டுச் சென்றோம்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களுடனான கடைசிச் சந்திப்பு அதுதான். இந்திய-புலிகள் யுத்தம் தொடங்கிய காலத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் கடும் சுகவீனமுற்றிருந்தார். அப்பொழுது ஒரு நாள் சென்னையில் தங்கியிருந்த கேணல் கிட்டுவைத் தனது வீட்டுக்கு அழைத்துப் பண உதவி செய்ததுடன், இந்திய இராணுவத்துடன் போர் நிறுத்தம் செய்யுமாறும் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறும் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு தகவல் அனுப்பியிருந்தார்.

1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் காலமானார். மறு நாள் 25ஆம் திகதி இந்தியத் தேசிய துக்க தினமாக பிரகடனம் செய்யப்பட்டது. அன்றைய நாளில் தமிழீழத்தை ஆக்கிரமித்து நின்ற இந்தியப் படைகள் போர் நிறுத்தம் அறிவித்தனர். வீதிகளில் ரோந்து சென்ற இந்தியத் துருப்புக்கள் முகாம்களில் முடக்கப்பட்டன. அவ்வேளை யாழ்ப்பாணம் வடமராட்சியில் இந்தியப் படைகளின் கடும் வேட்டைக்கு இலக்காகிப் பல்வேறு அவலங்களை அனுபவித்து வந்த நானும் எனது மனைவி அடேலும் அன்றைய நாள், எம்.ஜி.ஆரின் நினைவாக அமைதி பேணப்பட்ட அந்தச் சுமுக சூழலைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்திலிருந்து தப்பிச் செல்ல முடிந்தது.

தமிழ் நாட்டில் நாம் வசித்தபோது எமது அமைப்பின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பேருதவி புரிந்த அந்தப் பெரிய மனிதர் தனது மறைவில் கூட எமக்கு உயிர் அளிப்பதில் பெரும் பங்கு வகித்தார் என அடேல் பாலசிங்கம் ‘சுதந்திர வேட்கை’ என்ற தமது நூலில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

எம்.ஜி.ஆரும் புலிகளும்: விடுதலைக்கு வித்திட்ட மாமனிதர்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments