×

தமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 1996

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 1996.
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே…

இன்றைய நாள் வணக்கத்திற்குரிய நாள்.

ஆயிரம் ஆயிரம் சுதந்திரச் சுடர்களாக எமது விடுதலைக் கோவிலை அலங்கரித்து நிற்கும் எமது மாவீரர்களுக்கு இன்று நாம் வணக்கம் செலுத்தி கௌரவிக்கும் புனித நாள்.

இன்றைய நாள் சாவுக்கு கலங்கி அழும் சோக நாள் அல்ல. அன்றி, துயரத்தில் உறைந்து போகும் துக்க நாளுமல்ல. இன்று தியாகிகளின் திருநாள்.

ஒரு சத்திய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் இனிய வீரர்களை இன்று நாம் எமது நெஞ்சப் பசுமையில் நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களது வீரத்திற்கும், அதியுயர்ந்த தியாகத்திற்கும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்போம்.

ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை. எந்த ஒரு நாட்டிலும், எந்த ஒரு காலத்திலும், எந்த ஒரு போராட்டத்திலும் நிகழாத அற்புதமான அற்ப்பணிப்புக்கள் எமது மண்ணில், எமது காலத்தில் எமது போராட்டத்தில் நிகழ்திருக்கிறது. மானிட வரலாறு கண்டிராத ஒரு வீரகாவியம் எமது மண்ணில் படைக்கப்பட்டிருக்கிறது.

நீண்ட காலமாகக் தமிழரின் விடுதலை எழுச்சி, நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விடுதலைத் தீயை
அணைத்துவிட எமது எதிரியோடு கைகோர்த்து நின்று எத்தனையோ சக்திகள், எத்தனையோ வகையில் அயராது முனைந்து வருகின்றன. இதனால், எமது சுதந்திர இயக்கம் காலத்திற்குக் காலம் பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. எந்தவித உதவியுமின்றி, எந்தவித ஆதரவுமின்றி, எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளுக்கு எதிராக நாம் தனித்து நின்று போராட நிற்பந்திக்கப்பட்டுள்ளோம். இதனால் விடுதலைக்கு நாம் கொடுக்கும் விலை மிகப் பெரிது. தமது உயிரையே விலையாகக் கொடுத்து தமிழரின் தேச சுதந்திரத் தீயை அணையாது காத்துவருபவர்கள் மாவீரர்கள். எனவே, மாவீரர்களை எமது தாயக விடுதலையின் காவற் தெய்வங்களாக நாம் கௌரவிக்க வேண்டும்.

நீண்டதாகத் தொடரும் எமது விடுதலைப் பயணத்தில் நாம் பல நெருப்பு ஆறுகளை நீந்திக் கடந்துள்ளோம். இந்த அக்கினிப் பிரவேசத்தில் நாம் அழிந்து போகாமல் நிலைத்து நிற்பதற்கு, எமது இலட்சிய உறுதிதான் காரணம். அடக்குமுறைக்கு ஆளாகி, இன அழிவைச் சந்தித்து நிற்கும் எமது மக்களுக்கு தன்னாட்சி கோரி நாம் வரித்துக்கொண்ட இலட்சியம் நேரானது, சரியானது, நியாயமானது. அன்றிலிருந்து இன்றுவரை நாம் எமது கொள்கையை உறுதியாகப் பற்றி நிற்கின்றோம். எமது இலட்சியமே எமது மலையான பலம். அந்த மலையான பலத்தில் நாம் நிலையாக நிற்பதால்தான் எமது இயக்கத்திற்கு ஒரு தனித்துவமும், முக்கியத்துவமும், சிறப்பான சரித்திரமும் உண்டு. தமிழீழத்தில் அதிர்ந்த அரசியற் பூகம்பங்களுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஏனைய தமிழ்க் குழுக்களின் இலட்சியக் கோட்டைகள் தகர்ந்து போயின. எமது உறுதியை மட்டும் எந்தவொரு சக்தியாலும் உடைத்துவிட முடியவில்லை.

தமிழீழ மண்ணை முழுமையாக விழுங்கிய இந்தியப் படையெடுப்பு, அன்று எமது உறுதிக்கு பெரும் சவாலாக எழுந்தது. அன்றைய அந்த வரலாற்றுச் சூழலில், ஒரு உலக வல்லரசின் இராணுவ வல்லாதிக்கம் எம்மைப் பலமாக நெருக்கிய பொழுதும் நாம் எமது இலட்சியத்தை தளரவிடாது நெஞ்சுறுதியுடன் போராடினோம். அந்த ஆபத்தான கட்டத்தில் உறுதிதான் எமது இறுதி ஆயுதமாக இருந்தது. அந்த ஆன்மீக பலத்துடன் உலகின் மிகப் பெரிய ஆயுத பலத்தை எம்மால் எதிர்கொள்ள முடிந்தது.

இன்று நாம் ஒரு புதிய சவாலை சந்தித்து நிற்கிறோம். ஒரு புதிய ஆக்கிரமிப்புப் போரை எதிர் கொண்டு நிற்கிறோம்.

எமது வரலாற்றுப் பகைச் சக்தியான சிங்கள – பௌத்த பேரினவாதம் ‘சந்திரிகா அரசு’ என்ற நிறுவன வடிவம் கொண்டு, தமிழினத்திற்கு எதிராக இன அழிப்புப் போர் ஒன்றை நடத்தி வருகிறது. சிங்களத்தின் முழுப் படை பலத்தையும் ஒன்று திரட்டி வடபுலத்தில் தமிழரின் வரலாற்று நிலங்களை ஆக்கிரமித்து நிற்கிறது.
பெரிய தொகையில் படையணிகளையும், பெரிய அளவில் வெடிப் பொருள் சக்தியையும் பயன்படுத்தி, புலிகளின் படை வலுவை அழிப்பதுதான் இந்த ஆக்கிரமிப்புப் போரின் முக்கிய இராணுவ மூலோபாயமாக அமைந்தது. ஆயினும் இந்தக் குறிக்கோளை அடைவதில் சிங்கள இராணுவம் படுதோல்வியையே சந்தித்திருக்கிறது.

நான்கு புறமும் கடல் சூழ்ந்த குடாநாட்டுப் பகுதியில், புவியியல் ரீதியாக எமக்குப் பாதகமான நிலப் பரப்பில், பெரும் மரபுவழிச் சமர்களை தொடுத்து எமது படைவலுவை அழிக்க இராணுவம் திட்டமிட்டது. இந்தச் சூழ்ச்சிகர திட்டத்தை நாம் நன்கறிவோம். ஆகவே, எதிரியின் இராணுவப் பொறிக்குள் சிக்கிவிடாது, மிகவும் சாதுரியமாகப் போரிட்டு, தந்திரோபாயமான படை நகர்வுகளை மேற்கொண்டு, எமது படை வலுவைச் சீர்குலையாது நாம் பாதுகாத்தோம். இதன் காரணமாக, யாழ்ப்பாணச் சமரில் இராணுவத்தின் முக்கிய மூலோபாயம். கைகூடவில்லை என உறுதியாகச் சொல்லலாம்.

கொரில்லாப் போர்முறையைக் கையாளும் ஒரு விடுதலை இயக்கம், பெரும் உயிர் சேதத்தை தவிர்க்கும் நோக்கில், படையணிகளை பின் நகர்த்துவதும் சில நிலப் பகுதிகளிற் கட்டுப்பாட்டை இழப்பதும் தோல்வியைக் குறிக்காது; இதனை ஒரு தற்காலிகப் பின்னடைவாகவே கொள்ளலாம். படை வலுவையும், போராட்ட உறுதியையும் தக்கவைத்துக் கொண்டால் எமக்கு சாதகமான புறநிலைச் சூழலில், நாம் தெரிவு செய்யும் நேரத்தில், தாக்குதலை நடத்தி எதிரியின் படை வலுவை எம்மால் அழிக்க முடியும். இதனால் இழந்த பிரதேசங்களையும் நாம் மீட்டெடுப்பது சாத்தியமாகும். முல்லைத்தீவில் நாம் ஈட்டிய மகத்தான இராணுவச் சாதனை இதற்கு ஒரு சிறப்பான உதாரணமாகும். இத்தாக்குதலில் சிங்களப் படைகளுக்கு பாரிய உயிர்ச் சேதத்தை விளைவித்து, எதிரியின் படைவலுவைப் பலவீனப் படுத்தியதோடு இழந்த பிரதேசங்களையும் நாம் மீட்டெடுக்க முடிந்தது. எமது படை வலுவை நாம் தக்கவைத்துக் கொண்டதால்தான் இந்த வெற்றியை எம்மால் ஈட்டமுடிந்தது. அத்தோடு எமது படை வலுவை நாம் மேலும் பலப்படுத்தவும் முடிந்தது.

“சமாதானத்திற்கான போர்” என்றும், “தமிழரை விடுதலை செய்யும் படையெடுப்பு” என்றும், பரப்புரை செய்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆக்கிரமிப்புப் போர், தமிழரின் அமைதியைக் குலைத்து, தமிழரை அகதிகளாக்கி, தமிழரை அடிமைகளாக்கி, தமிழரின் சமூக பொருளாதார வாழ்வைச் சீரழித்து, தமிழருக்கு என்றுமில்லாத பெரும் அவலத்தைக் கொடுத்திருக்கிறது. சமாதானத் தத்துவம் பேசி உலகத்தை ஏமாற்றிய போதும், இது தமிழருக்கு எதிரான போர் என்பதை சந்திரிகா அரசு நடைமுறையில் காட்டியுள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாடு ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு வலயங்களாக துண்டு போடப்பட்டு, மண்மேட்டு அரண்களும், முட்கம்பி வேலிகளும், மூலைக்கு மூலை காவற் சாவடிகளுமாக காட்சிதரும் தமிழரின் இப் புகழ் மிக்க வரலாற்று மண்ணில் ஒரு இராணுவப் பயங்கரவாத ஆட்சி நடைபெறுகிறது. கைதுகளும், சிறைவைப்பும், சித்திரவதைகளும், பாலியல் வல்லுறவுகளும், கொலைகளும், காணாமல் போதலும், பின் மனித புதைகுழிகளுக்குள் கண்டெடுக்கப்படுவதுமாக நிகழ்ந்துவரும் கோரமான சம்பவங்கள் ஒரு உண்மையைப் புலப்படுத்தி காட்டுகிறது. அதாவது, இராணுவ ஆட்சி நடைபெறும் தமிழ்ப் பகுதிகளில் மிக மோசமான ஒரு இன அழிப்புக் கொள்கை மறைமுகமாக செயற்படுத்தப்படுகிறது என்பதையே இது காட்டுகிறது.

ஆக்கிரமித்த பகுதிகளில் நிகழும் அட்டூழியங்களும், மற்றும் பரவலாக தென்னிலங்கையில் நடைபெறும் தமிழர் விரோத நடவடிக்கைகளும் சந்திரிகா அரசின் உண்மையான இனவாத முகத்தை அம்பலப்படுத்தி காட்டுகிறது. முந்திய இனவாத அரசுகளை விட சந்திரிகாவின் ஆட்சிபீடம் தமிழரின் தேசிய ஆன்மாவை ஆழமாக புண்படுத்தியிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

சந்திரிகா அரசு தமிழருக்கு நீதி வழங்கப் போவதில்லை என்பதையும், தமிழரின் தேசிய பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்போவதில்லை என்பதையும் நாம் ஆரம்பத்தில் இருந்தே உணர்ந்து கொண்டோம். சமாதானப் பேச்சுக்களின் போது சந்திரிகா அரசு கடைப்பிடித்த கடுமையான போக்கும், விட்டுக்கொடாத மனப்பாங்கும் எமக்குப் பெரும் ஏமாற்றத்தை தந்தது. தமிழரின் சாதாரண வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்யும் அற்ப சலுகைகளை மறுத்து, இராணுவத்தின் மேலாதிக்க நலன்களைப் பேண முனைந்ததால் அன்றைய பேச்சுக்கள் அர்த்தமற்றதாக முடிவுற்றது. இராணுவப் பலத்திலும் இராணுவ அணுகுமுறையிலும், இராணுவத் தீர்விலும் நம்பிக்கை கொண்டிருந்ததால் பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் கொடாது. பேச்சுக்கள் முறிவடைவதற்கான புற நிலைகளையும் சந்திரிகா அரசு உருவாக்கியது. தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி ஆயுத அடக்குமுறையின் கீழ் தமிழர்களை ஆட்சி புரிய வேண்டும் என்பதே. அன்றும் இன்றும் இந்த அரசின் ஆழமான அபிலாசையாக இருந்து வருகிறது.

இராணுவவாதமும், இனவாதமும் மேலோங்கி நிற்கும் இந்த அணுகு முறையானது இனப்பிரச்சினையை என்றும் இல்லாதவாறு சிக்கலாக்கியுள்ளது. சமாதானத்தின் கதவுகளை இறுக மூடியுள்ளது. போரை விரிவுபடுத்தி தீவிரமாக்கியுள்ளது. சிங்களத்தின் பொருண்மியத்தை சீரழித்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் சந்திரிகாவின் அரசாங்கம் இன்று மீள முடியாத ஒரு நெருக்கடிக்குள் சிக்குப்பட்டு நிற்கிறது.

சந்திரிகாவின் “சமாதானத்திற்கான போர்” தமிழரின் தேசிய வாழ்வை சீரழித்து இருப்துடன், முழு இலங்கையையுமே பேரழிவிற்குள் தள்ளிவருகிறது என்பதை சர்வதேச சமூகம் இன்று உணரத் தொடங்கியுள்ளது. விரிவடைந்து செல்லும் போருக்கும், இராணுவ கடும் போக்கிற்கும் எதிராக உலகத்தில் இருந்து எழும் அழுத்தத்தை திசைதிருப்பும் நோக்கில் சந்திரிகா அரசு சமாதான சமிக்ஞைகளை விடத் தொடங்கியுள்ளது.

மூன்றாம் தரப்பு மத்தியத்துவம் என்றும் புலிகளுடன் பேசத்தயார் என்றும் சமீபத்தில் அறிக்கைகளை விட்டுவரும் சந்திரிகா, புலிகள் இயக்கம் ஆயுதங்களை சரணடைவு செய்ய வேண்டும் என்ற கேலிக்கூத்தான நிபந்தனையையும் முன்வைக்கிறார். எந்த ஒரு தன்மானமுள்ள விடுதலை இயக்கமும் இத்தகைய அவமதிப் பூட்டும் நிபந்தனையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தை “பயங்கரவாதம்” என்றும், அந்தப் போராட்டத்தை தலைமை தாங்கி முன்னெடுக்கும் எமது விடுதலை இயக்கத்தை “பயங்கரவாத அமைப்பு” என்றும் சர்வதேச உலகில் தீவிர பரப்புரை செய்து, உள்நாட்டிலும், வெளியுலகிலும் எமது இயக்கத்திற்கு தடைவிதிக்க இந்த அரசு பகீரத முயற்சிகளைச் செய்து வருகிறது. அதேவேளை ஒரு ஆண்டிற்குள் புலிகளை ஒழித்துவிடுவோம் என அறைகூவல்களை விடுத்து போரைத் தொடர்வதற்கு படைகளை தயார் நிலைப்படுத்தியும் வருகிறது. இந்தச் சூழலில், சந்திரிகா சமாதானம் பற்றி பேசுவது எமக்கு சந்தேகத்தை எழுப்புகிறது.

நாம் சமாதானத்தின் விரோதிகள் அல்லர். அன்றி, சமாதான வழியில் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எதிரானவர்களும் அல்லர். நாம் வேண்டுவது உண்மையான சமாதானத்தையே. எமது மக்கள், எமது மண்ணில், நிம்மதியாக, சுதந்திரமாக, அந்நியத் தலையீடு இன்றி அமைதியாக வாழ்ந்து, தமது அரசியல் வாழ்வை தாமே தீர்மானிக்கக் கூடிய உண்மையான, கௌரவமான, நிரந்தரமான சமாதானத்தையே நாம் விரும்புகிறோம். இந்த சமாதான வாழ்வை தமிழருக்கு வழங்க சிங்கள – பௌத்த பேரினவாத சக்திகள் இணங்குமா என்பது சந்தேகத்திற்கு உரியது.

இனவிரோதமும், ஆதிக்க வெறியும், இராணுவத் தீர்வில் நம்பிக்கையும் கொண்ட எந்தவொரு சிங்கள அரசும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு சமாதான வழியில் தீர்வு காணப்போவதில்லை. தமிழீழ மக்கள் வரலாற்று ரீதியாகக் கண்டுகொண்ட உண்மை இது. சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் பாதுகாவலனாகவும், அரசியல் பிரதிநிதியாகவும் விளங்கும் சந்திரிகா அரசு, இனப்பிரச்சினைக்கு தீர்வுகண்டு தமிழ் மக்களுக்கு உண்மையான சமாதான வாழ்வை உருவாக்கி கொடுக்கும் என நாம் நம்பவில்லை. இந்த நம்பிக்கையீனத்தின் அடிப்படையில்தான் நாம் மூன்றாம் தரப்பு நடுநிலையை நாடினோம். எதிர்காலத்தில் சமாதானப் பேச்சுக்கள் சாத்தியமாவதானால், அது சர்வதேச மத்தியத்துவத்துடன் நடைபெறவேண்டும் என ஒரு வருடத்திற்கு முன்னரே நாம் அறிவித்திருந்தோம். ஆனால், சந்திரிகா அரசு அப்பொழுது எமது யோசனையைக் கருத்தில் எடுக்கவில்லை. மாறாக வடபுலத்தில் ஆக்கிரமிப்புப் போரை விஸ்தரித்து, இன நெருக்கடியை மோசமாக்கி, சமாதானப் பேச்சுக்கான சூழ்நிலையைக் கெடுத்தது.

தமிழர் மண்ணை ஆக்கிரமித்து, அந்த ஆக்கிரமிப்பை இராணுவ மேலாதிக்க நிலையாகக் கருதி, அதனைத் தனக்கு அனுகூலமான அழுத்தமாகப் பாவித்து, பேச்சுக்களை நடத்த சிங்கள அரசு எண்ணலாம். ஆனால், எம்மைப் பொறுத்தவரை இவ்விதமான பேச்சுவார்த்தை சுதந்திரமானதாக, சமத்துவமானதாக அமையாது. ஏனெனில், இராணுவ பலத்தை துருப்புச் சீட்டாக வைத்து எமது மக்களின் உரிமைகளுக்காகப் பேரம்பேச முயலும் ஒரு அரசிடம் நாம் நீதியை எதிர்பார்க்க முடியாது. அதனால் தான், இராணுவ ஆக்கிரமிப்பின் அழுத்தம் நீங்கிய சுமூகமான இயல்பு நிலையில் பேச்சுக்கள் நடைபெறுவதை நாம் விரும்புகிறோம். படைகள் விலகுதல், நெருக்கடியைத் தணித்தல், இயல்பு நிலையைத் தோற்றுவித்தல் ஆகியன அரசியல் பேச்சு வார்த்தைகளுக்கு முன் நிகழ்வாக அமைதல் அவசியம் என்பதே எமது நிலைப்பாடாகும். இப்பிரச்சினைகள் பற்றிப் பேசி ஓர் உடன்பாட்டைக் காணவும் நாம் தயாராக இருக்கிறோம்.

எமது நியாயமான நிலைப்பாட்டை சந்திரிகா அரசு ஏற்றுக்கொள்ளும் என நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள – பௌத்த பேரினவாதமானது, காலம் காலமாக, இராணுவ மேலாண்மையில் நம்பிக்கைகொண்டு செயற்பட்டு வருகிறது. இராணுவ பலத்தின் நிழலின் கீழேயே சந்திரிகாவினது ஆட்சியும் நடக்கிறது. எனவே, இராணுவ பலத்தைக் கைவிட்டு, தார்மீக பலத்தின் அடிப்படையில், நீதியின் அடிப்படையில் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க சந்திரிகா அரசு முன்வருமா என்பது சந்தேகத்திற்குரிய விடயமே.

சிங்கள ஆட்சியாளரிடம் கைநீட்டி நின்று, நாம் எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது. நாமே எமது உரிமைகளைப் போராடி வென்றெடுக்க வேண்டும். போராடாது, இரத்தம் சிந்தாது, சாவையும் அழிவையும் சந்திக்காது, தியாகங்கள் புரியாது எந்தவொரு தேசமும் விடுதலை பெற்றுக்கொண்டதாக வரலாறு இல்லை.

ஆகவே, நாம் போராடுவோம். எமது இரத்தத்தை விலையாகக் கொடுக்கும் எமது இலட்சியத்திற்காகப் போராடுவோம். வெற்றிகளை ஊக்கமாக எடுத்து, பின்னடைவுகளைச் சவாலாக ஏற்று, நாம் தொடர்ந்து போராடுவோம். எவ்வித இன்னல்கள் வந்தாலும், எவ்விதத் துன்பங்கள் நேர்ந்தாலும் நம்பிக்கை இழக்காது நாம் தொடர்ந்து போராடுவோம். எமது மண்ணிலிருந்து சிங்களப் படைகளை விரட்டும் வரை, எமது தேசத்திற்கு விடுதலை கிட்டும்வரை, எமது மக்களுக்கு விடிவு ஏற்படும் வரை நாம் உறுதி தளராது துணிந்து போராடுவோம்.

ஆக்கிரமிப்பாளனின் அடக்குமுறைக்கு ஆளாகி, அவலக்குரல் எழுப்பி நிற்கும் எமது தேசத்திற்குரியவர்களின் துயரக் கண்ணீரைத் துடைப்போம் என உறுதியெடுத்து, மாவீரர்களுக்கு இன்று எமது வீரவணக்கத்தைச் செலுத்துவோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments