×

தமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 1998

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 1998.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே…

இன்று மாவீரர் நாள்.

தமிழீழத் தாய் நாட்டின் விடிவிற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த எம்முயிர்ப் போராளிகளை இன்று நாம் எமது இதயக் கோயில்களில் பூசித்துக் கௌரவிக்கும் புனித நாள்.

ஆண்டுதோறும் நிகழும் இன்றைய நாள் மட்டும் மாவீரர்களுக்கு உரித்தானதல்ல. இன்றைய காலமும் இக்காலத்தில் கட்டவிழும் வீர விடுதலை வரலாறும், அந்த வரலாற்றின் குழந்தையாகப் பிறக்கப்போகும் தேச விடுதலையும் அவர்களுக்கே உரித்தானவை.

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.

வரலாறு என்பது மனித விடுதலையை நோக்கி நகரும் ஒரு பேரியக்கம். சுதந்திரப் போராட்டங்களே இந்த வரலாற்றுப் பேரியக்கத்தின் சக்கரங்களைச் சுழற்றுகின்றன. எந்த ஒரு தேசம்-எந்த ஒரு மக்கள் சமூகம், சுதந்திரம் வேண்டிப் போராடுகிறதோ அங்குதான் வரலாற்றுப் புயல் மையம் கொள்கிறது.

நீண்டகாலமாகவே தமிழர் தேசம் விடுதலைக்காகப் போராடி வருகிறது. ஒரு சிறிய தேசமாக இருந்தபோதும் விடுதலைக்காய் நாம் கொடுத்து வரும் விலை மிகப் பெரிது. அடக்குமுறைக்கு அடி பணிந்து அடிமைகளாக வாழ்வதைவிட விடுதலைக்காக எத்தகைய விலையையும் கொடுக்க எமது தேசம் தயாராக இருக்கிறது. இதனால்தான் நாம் அதிகளவில் இரத்தம் சிந்தியும், அளப்பரிய உயிர்விலை கொடுத்தும், உறுதி தளராது போராடி வருகிறோம். அணையாத நெருப்பாகச் சுவாலை விட்டெரியும் எமது வீர விடுதலைப் போரில் நாம் புரிந்து வரும் அதியுயர் தியாகங்களும் அற்புதமான அர்ப்பணிப்புக்களும் இன்று முழு உலகத்தையுமே வியப்பில் ஆழ்த்தியுள்ளன. இந்த வீர விடுதலை வரலாற்றின் கதாநாயர்களாகத் திகழ்பவர்கள் எமது மாவீரர்களே.

எமது தேசத்தின் விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்த ஒவ்வொரு சுதந்திரப் போராளிக்கும் எமது தேசத்தின் வரலாற்றில் அழியாத இடமுண்டு. இவர்கள் சாதாரணமானவர்களாகச் சாவைத் தழுவவில்லை. எமது இனத்தின் இருப்பிற்காக, இவர்கள் தமது சுயத்தை அழித்தவர்கள். இந்த அற்புதமான துறவறத்தால் இவர்களது அடையாளங்கள் என்றுமே அழிவதில்லை. இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தனிமனித சரித்திரம். ஆயிரமாயிரம் மாவீரர்களின், ஆயிரமாயிரம் தனிமனித சரித்திரங்கள் சங்கமமாகிய பெருநதியாகவே எமது தேசத்தின் வரலாறு வீறு கொண்டு ஓடுகிறது.

எமது இனத்தை அழிக்க வந்த இனவாத இராணுவம் தன் அழிவையே சந்தித்து நிற்கிறது. வன்னிச் சமர்க்களங்களில் ஆயிரமாயிரமாக ஆக்கிரமிப்பாளர்கள் அழிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழீழம் எதிரி படைகளின் மயான பூமியாக மாறி வருகிறது. எமது பாசறைகளிலிருந்து படரும் சுதந்திர நெருப்பை எதிர்கொள்ள முடியாது எதிரி இராணுவம் திணறுகிறது. விடுதலைப் போரில் இந்தத் திருப்பத்தை ஏற்படுத்தித் தந்தவர்கள் எமது மாவீரர்கள் என்பதை நான் பெருமையுடன் கூறுவேன். எமது மாவீரர்கள் சிந்திய ஒவ்வொரு துளி இரத்தமும் அர்த்தமுள்ளதாக, எமது தேசத்தின் விடுதலைப் பாதைக்கு ஆதாரமானதாக அமைகிறது. அவர்களது ஒப்பற்ற உயிர்த்தியாகமே எமது மக்களை பாரிய இன அழிவிலிருந்து பாதுகாத்து வருகிறது. மாவீரர்களே எமது மண்ணின் காப்பரண்கள். எமது மக்களின் காவற்தெய்வங்கள்.

எனது அன்பார்ந்த மக்களே,

எமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய நாளில் எமது தேசியப் போராட்டத்தின் நிலை பற்றியும் வளர்ச்சிப் போக்குப் பற்றியும் நாம் சிந்திப்பது அவசியமாகிறது.

இன்றைய உலகம் மாறிவருகிறது என்பது உங்களிற்குத் தெரியும். புதிய நூற்றாண்டை நோக்கிய ஒரு புது யுகத்தில் மானிடம் காலடியெடுத்து வைக்கிறது. முடியப்போகும் இந்த இருபதாம் நூற்றாண்டை மனித வரலாற்றில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தியது போர், புரட்சி, போராட்டம் என்று இப்பூமியில் பூகம்பமாக வெடித்த நிகழ்வுகள் சமூக உறவுகளிலும் சர்வதேச நிலைமைகளிலும் பெரும் மாற்றங்களை உண்டுபண்ணின. நெருக்கடிகள் தணிந்து மனித சமூகங்கள் சுதந்திரமாக அமைதியுடன் வாழ வழி பிறந்தது. தேசிய விடுதலைப் போராட்டங்கள் வெற்றிபெற்று சுதந்திரமான தனியரசுகள் தோன்றின. இனப் பிணக்குகளுக்குத் தீர்வுகாணப்பட்டது. தீர்க்கப்படாத சிக்கல்களுக்கு தீர்வு முயற்சிகள் தொடர்கின்றன. முழு உலகமே அமைதிப் பாதையில் முன்னேறிச் சென்று, பிறக்கப்போகும் புது யுகத்திற்கு தன்னைத் தயார் செய்யும் இன்றைய சூழலில், இலங்கைத்தீவில் மட்டும் மிகக் கொந்தளிப்பான நிலைமை நிலவுகிறது. இங்கு தமிழரின் தேசியப் பிரச்சனை இன்னும் தணியாத நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது. இங்கு மட்டும் இன்னும் போரும் வன்முறையும் தலைவிரித்தாடுகின்றன. இலங்கையில் இந்தத் துயரமான அவலநிலை தொடர்வதற்குக் காரணம் என்ன? மாற்றமடைந்து வரும் இவ்வுலகில், நெருக்கடிகள் தீர்ந்து வரும் இச் சூழலில், அரை நூற்றாண்டுக் கால வரலாற்றைக் கொண்ட தமிழரின் இனச் சிக்கல் இன்னும் தீர்க்கப்படாது இழுபடுவதற்குக் காரணம் என்ன?

நீதியும் சத்தியமும் தமிழர் பக்கமாகவே நிற்கின்றன. தமிழர்கள் வேண்டுவதெல்லாம் தமக்கு உரித்தான உரிமைகளேயன்றி வேறொன்றுமல்ல. அரசியற் தர்மம் தமிழர்களுக்குச் சார்பாகவே இருக்கிறது.

நாம் எதனைக் கேட்கிறோம்? எதற்காக நாம் போராடி வருகிறோம். நாம் எமது மண்ணில், வரலாற்று ரீதியாக எமக்குச் சொந்தமான நிலத்தில், நாம் பிறந்து வாழ்ந்த எமது தாயக பூமியில், நாம் நிம்மதியாக, கௌரவமாக, எவரது தலையீடுமின்றிச் சுதந்திரமாக வாழ்வதற்கு விரும்புகிறோம். நாமும் மனிதர்கள், மனிதர்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கொண்ட ஒரு மனித சமூகம், தனித்துவமான மொழியையும், பண்பாட்டு வாழ்வையும், வரலாற்றையும் கொண்ட ஒரு தனித்துவமான இனத்தைச் சார்ந்த மனிதர்கள் நாம். எம்மை ஒரு மனித சமூகமாக, தனித்துவப் பண்புகளைக் கொண்ட மக்களாக ஏற்குமாறு கேட்கிறோம். எமது அரசியல் வாழ்வை நாமே தீர்மானித்துக்கொள்ளும் உரிமை எமக்குண்டு. இந்த உரிமையின் அடிப்படையில் நாமே எம்மை ஆளும் வகையில் ஒரு ஆட்சிமுறையை அமைத்து வாழவே நாம் விரும்புகிறோம்.

இதைத்தான் எமது மக்கள் கேட்கிறார்கள். இதற்காகவே எமது மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நியாயமான, நாகரீகமான கோரிக்கையை சிங்கள தேசம் மறுத்து கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நீதியான வேண்டுகோளுக்காக சிங்கள ஆட்சியதிகாரம் எமது மக்களைத் துன்புறுத்தி வருகிறது. கொடுமைப்படுத்தி வருகிறது; கொன்றொழித்து வருகிறது. எமது மக்களை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பாமல், பிரிந்துசென்று தனித்து வாழவும் விடாமல், எமது மக்களை அடிமைப்படுத்தி ஒழித்துக் கட்டவே சிங்கள அரசுகள் முனைந்தன. எனவேதான், அன்று தொட்டு இன்றுவரை ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, நாம் போராடி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டோம். வரலாற்றின் கட்டாயங்களுக்கு ஏற்ப எமது போராட்ட வடிவங்கள் மாறிய போதும், எமது உரிமைகளுக்கான எமது சுதந்திர வாழ்விற்கான போராட்டம் தொடர்கிறது. இப்போராட்டம் வளர்ந்து விரிந்து இன்று இரு தேசங்கள் மத்தியிலான போராக பேயுருவம் பெற்றிருக்கிறது.

இலங்கைத் தீவு இன்னும் வன்முறையின் கொப்பரையாக எரிந்து கொண்டிருக்கிறது என்றால், இதற்குக் காரணமாக விளங்குவது, சிங்கள – பௌத்த இனவாதத்தின் தமிழர் விரோதப் போக்கன்றி வேறொன்றுமல்ல. இனவாத ஒடுக்குமுறையின் வரலாற்று விளைபொருளாகவே தமிழரின் தேசியப்பிரச்சினை பிறப்பெடுத்தது.

காலநிலையின் ஓட்டத்தில் உலகம் மாறியிருக்கிறது. உலக அரசியலும் மாறியிருக்கிறது. ஆனால், சிங்கள தேசத்து அரசியலில் மாற்றம் நிகழவில்லை. இதனை சிங்கள அரசியல்வாதிகள் இன்னும் உணரவில்லை என்பதுதான் மிகவும் வேதனைக்குரிய விடயம். ஒரு புராணத்துக் கற்பனையில் உதித்த கருத்துருவம் பூதாகரமாக வளர்ந்து சிங்கள அரசியல் உலகை மட்டுமன்றி அறிவியல் உலகையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் தமிழர் பிரச்சினையின் அடிப்படைகளையும், நியாயப்பாடுகளையும் அறிவுரீதியாகப் புரிந்து அவற்றை மனிதாபிமானத்துடன் அணுகும் ஆற்றலையும் பெருந்தன்மையையும் சிங்களம் இழந்துவிட்டது என்றே சொல்லவேண்டும்.

சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடியில் சிக்கி இத்தனை காலமாக தமிழினம் வடித்துவரும் இரத்தக் கண்ணீர் இன்னும் உலக சமூகத்தின் மனச்சாட்சியைத் தொடவில்லை என்பது எமக்கு ஆழ்ந்த கவலையைத் தருகிறது. சர்வதேச சமூகத்தின் இந்தப் பாராமுகப் போக்கும், சிறீலங்காவுக்கு இந்த நாடுகள் வழங்கி வரும் பெருமளவிலான பொருளாதார, இராணுவ உதவிகளும் தமிழரின் பரிதாப நிலையை மேலும் மோசமடையச் செய்கின்றன. அத்தோடு இவ்வெளியுலக உதவிகள் சிங்களப் பேரினவாதத்தின் இறுக்கமான, விட்டுக்கொடாத, கடும்போக்கிற்கும் ஊக்கமளிப்பதாக அமைகின்றன. உலகின் எந்த மூலையிலும் மனித உரிமைகள் மீறப்படும்பொழுதும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்தபொழுதும், சிறிய தேசிய இனங்கள் நசுக்கப்படும்பொழுதும், குரலெழுப்பியும், தலையிட்டும் மனித தர்மத்தை வேண்டும் சர்வதேச சமூகம் ஈழத்தமிழரின் பேரவலத்தைக் கண்டும் மௌனம் சாதித்து வருவது எமக்கு வேதனையைத் தருகிறது. சர்வதேச நாடுகளிலிருந்து பெறப்படும் பொருளாதார இராணுவ உதவிகளையும் அரசியற் தார்மீக ஆதரவையும் இராஜதந்திர முண்டுகொடுப்புக்களையும் பின்புலப் பலமாகக் கொண்டே சிங்களப் பேரினவாதமானது தமிழருக்கு எதிரான இன அழிப்புக் கொள்கையை துணிவுடனும், திமிருடனும், ஈவிரக்கமின்றியும் தொடர முடிகிறது.

உண்மைகளை மூடிமறைத்து பொய்களைப் புனைந்து சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் நுட்பமான பரப்புரைகளால் சர்வதேச சமூகம் ஏமாற்றப்பட்டு வருகிறது என்பது எமக்குத் தெரியும். சமாதானத்திற்கான போர் என்றும், தீர்வுக்கான பொதி என்றும் சிங்கள அரசு கட்டவிழ்த்து விடும் புரளிகளை உலக நாடுகள் விசாரணையின்றி விழுங்கிக்கொள்கின்றன. இதனால் உலகத்தின் ஆதரவு சிறீலங்காவுக்கு கிட்டிவருகிறது. ஆயினும் தமிழர் தரப்பு உண்மைகளும் உலகத்திற்கு எட்டத்தான் செய்கின்றன.

கடந்த பல தசாப்தங்களாகத் தமிழருக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளும் அட்டூழியங்களும் அத்தாட்சிப் பத்திரங்களோடும் புள்ளிவிபரச் சான்றுகளோடும் சர்வதேச உலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு ஈழத் தமிழர்கள் மீது இன அழிப்பு பரிமாணத்தில் ஒடுக்குமுறை நிகழ்ந்து வருகிறது என்பதை உலக மனித உரிமை நிறுவனங்கள் எடுத்துக்கூறி வருகின்றன. காலம் காலமாக தமிழ் மண்ணில் சிங்களப் பேரினவாதம் நிகழ்தி வரும் ஊழிக்கூத்தினால் அறுபதினாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் அழிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதும் சந்வதேச உலகம் அறியாததல்ல. அத்தோடு நீண்டகாலமாக எமது தேசத்தில் நிகழ்ந்து வரும் போரின் போக்குப் பற்றியும் இரு தரப்பினரும் கையாண்டு வரும் போரியல் தந்திரோபாயங்கள், உத்திகள் பற்றியும் உலக இராணுவ நிபுணர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள் என்பதும் எமக்குத் தெரியும். எல்லாவற்றிலும் மேலாக, தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளின் கண்கண்ட சாட்சியாக எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தமிழர்கள் உலக நாடுகள் எங்கும் தஞ்சம் புகுந்து வாழ்கிறார்கள். இந்த உண்மையை உலக சமூகம் அறியும். அப்படியிருந்தும் தமிழீழ மக்கள் அனுபவித்து வரும் பேரவலம் உலகத்தின் புருவத்தை உயர்த்தவில்லை என்பது எமக்கு ஒருபுறம் ஆச்சரியமாகவும், மறுபுறம் வேதனையாகவும் இருக்கிறது.

இன்றைய உலக ஒழுங்கில் ஒவ்வொரு நாடும் தனது சொந்த தேசிய அபிலாசைகளிலும், வர்த்தக நலனிலும் அக்கறை கொண்டு செயற்படுகிறது என்பது எமக்குத் தெரியாததல்ல. எனினும் மனித உரிமை, மனித சுதந்திரம் என்ற பொதுமையான விழுமியங்களுக்கு நாகரிக உலகத்திற்கு தலைமை தாங்கும் நாடுகள், சிறீலங்காவில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அநாகரிகமான ஒடுக்குமுறைக்கு எதிராக குரலெழுப்ப தயங்குவது எமக்கு துயரத்தைத் தருகிறது. எனினும் நாம் மனம் தளர்ந்து போகவில்லை. என்றோ ஒரு நாள் தமிழீழத்தின் புதைகுழிகளுக்குள் மூடப்பட்டு உறங்கும் உண்மைகள் வெளிவரத்தான் செய்யும் அவ்வேளை சிங்களப் பேரினவாதத்தின் முகமூடி கிழியும். அப்பொழுது எமது மக்களின் சோகக் கதை உலகத்தின் இதயத்தை உலுப்பும். அதுவரை அனைத்துலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்கள் உலகத்தின் மனச்சாட்சியை உறுத்தும் வகையில், தாயகத்து உண்மை நிலைகளை சர்வதேச சமூகத்திற்கு இடித்துரைத்து வரவேண்டும்.

சிங்கள நாட்டிலிருந்து போருக்கு எதிராக பகுத்தறிவின் குரல் எதுவும் ஒலிக்கவில்லை. போரைக் கைவிட்டு,, அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறு எவருமே கேட்கவில்லை. சிங்களத்தின் அரசியல் வாதிகளிலிருந்து மதவாதிகள் வரை, அறிவுஜீவிகளிலிருந்து பத்திரிகையாளர்கள் வரை, போரைத் தீவிரப்படுத்துமாறே குரலெழுப்பி வருகிறார்கள். சிங்கள நாடு போரைத் தொடர விரும்புகிறது, போரினால் தமிழினத்தை அடிமைகொள்ள விரும்புகிறது.

சிங்களம் ஒரு பௌத்த நாடு. அன்பையும், அறத்தையும், ஆன்மீக ஞானத்தையும் போதித்த காருணிய மகானை வழிபடும் தேசம். தர்மத்தின் தத்துவத்தில் தழைத்த பௌத்த சமூகத்தில் இனக்குரோதமும், போர்வெறியும் விஸ்வரூபம் பெற்று நிற்பது எமக்கு வியப்பாக இருக்கிறது.

தமிழர் தேசம் போரையும் வன்முறையையும் விரும்பவில்லை. அமைதி வழியில் அகிம்சை வழியில் தர்மத்தை வேண்டி நின்ற எமது மக்கள் மீது வன்முறையை திணித்தவர்கள் யார்? நாம் எமது உயிரையும், உடமைகளையும் பாதுகாக்க ஆயுதமேந்திப் போராட வேண்டிய நிர்ப்பந்த சூழ்நிலையை உருவாக்கிவிட்டவர்கள் யார்? சிங்கள பௌத்த தீவிரவாதமே தமிழர்களை ஆயுதபாணிகளாக்கி தேச சுதந்திரப் போராட்டத்தில் குதிக்க வைத்தது.

இன்று இந்தப் போர் என்றுமில்லாதவாறு வளர்ச்சிபெற்று, அகற்றிபெற்று நிற்கிறது. இரு தேசங்களது படைகளும் முழு அளவிலான போருக்கு முகம் கொடுத்து நிற்கின்றன. சிங்கள தேசம் ஒரு ஆக்கிரமிப்புப் போரை நடத்துகிறது. எமது மண்ணை அபகரித்து எமது மக்களை அடிமை கொள்ள முனைகிறது. அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து எமது மண்ணை விடுவித்து, எமது மக்களைக் காக்கவே நாம் போராடுகிறோம். சிங்களம் ஒரு அநீதியான போரை நடத்துகிறது. நாம் ஒரு நீதியான விடுதலைப் போராட்டத்தை நடாத்துகிறோம். இந்தப் போரில் தர்மம் எமக்கு சார்பாக நிற்கிறது.

தமிழின ஒடுக்குமுறையின் சிகரத்தில் ஏறிநிற்கும் சந்திரிகா அரசு இந்தப் போரை தீவிரப்படுத்தி தொடரவேண்டும் என்பதில் முழு முனைப்பாக நிற்கிறது. எத்தனையோ பேரழிவுகளின் மத்தியிலும் பொருளாதாரம் சீரழித்த நிலையிலும் இராணுவ இயந்திரம் ஆட்டம்கண்ட நிலையிலும் போரைத் தொடரவே சந்திரிகா அரசு விரும்புகிறது. போரை அரசியலாகவும், அரசியலைப் போராகவும் மாற்றம் செய்திருக்கும் சந்திரிகாவின் ஆட்சிக்காலமானது ஒரு நீண்ட, முடிவில்லாத யுத்த காண்டமாகவே தொடர்கிறது.

எத்தனையோ கற்பனைகளோடும் அரசியற் கனவுகளோடும் ஆரம்பிக்கப்பட்ட சந்திரிகாவின் போர்த் திட்டம் இன்று எதையும் சாதிக் முடியாது சிதைவுற்றுக் கிடக்கிறது. சிங்கள நாட்டின் இராணுவ பலத்தையும் வளத்தையும் ஒன்று குவித்து புலிகள் இயக்கத்தை வேரோடு சாய்க்க வேண்டும் என சந்திரிகா விரும்பினார். இந்தக் கனவுதான் போரின் மூலோபாயமாக வரிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது. ஆனால் புலிகள் இயக்கம் சாய்ந்துவிடவில்லை. மாறாக, வேர் பரப்பி வளர்ந்து விருட்சமாக நிமிர்ந்து நிற்கிறது. இந்த போர் எமக்கு புதிய அனுபவங்களை தந்து எமது விடுதலை இயக்கத்தின் பேராற்றலை என்றுமில்லாத அளவில்
வளர்த்துவிட்டது. எத்தகைய பலம்கொண்ட எந்த சக்தியாலும் எம்மை வென்றுவிட முடியாதென்றே மனோ திடத்தையும், தன்னம்பிக்கையையும் தந்தது. வற்றிப் போய்க் கிடந்த எமது ஆயுதக் களஞ்சியங்களை பெருமளவில் நிரப்பிவிட்டது. இந்தப் போர் எம்மைப் பல வழிகளில் பலப்படுத்தி வளப்படுத்தியிருக்கிறது.

சந்திரிகாவின் போர்த் திட்டம் இன்று ஆட்டம் கண்டு நிற்கிறது. பூகம்பமாக வெடித்த வன்னிச் சமர்களில் சிங்களத்துச் சேனைகள் பேரழிவுகளைச் சந்தித்தன. நெருப்பாக எரிந்த எமது வீரர்களின் நெஞ்சுறுதிக்கு முன்னால் எதிரியின் ஆட்பலமும் ஆயுத பலமும் நிலைத்துநிற்க முடியவில்லை.

சந்திரிகாவின் அரசின் பாதை திறக்கும் பெரும் சமர், ஒன்றரை ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நகர்ந்து தோல்வி நிச்சயம் என்ற நிலையில் இடை நடுவே நிற்கிறது. கிளிநொச்சியில் நாம் ஈட்டிய மகத்தான வெற்றி புலிகளின் போரியல் சாதனைக்கு மகுடம் சூட்டியதோடு ஜெயசிக்குறுப் படைகளின் கிளிநொச்சிப் பயணத்துக்கு முடிவுகட்டியது.

போரினால் ஆக்கிரமித்த பகுதிகளில் அரச நிர்வாகத்தை நிறுவும் சந்திரிகாவின் அரசியல் நோக்கமும் தோல்வியையே சந்தித்து வருகிறது. யாழ்ப்hணக் குடாநாட்டில் தனது கைப்பொம்மைகளான, தமிழ்க்குழுக்களின் ஆதரவோடு அரச நிர்வாக ஆட்சியை நிறுவி விடலாமென சந்திரிகா கண்ட கனவும் கலைந்து வருகிறது. எத்தனை காலமானாலும் எமது தாயகத்தின் ஒரு அங்குல நிலத்தில் கூட ஆக்கிரமிப்பாளர்கள் நிலைகொண்டு நிற்பதை நாம் அனுமதிக்கப்போவதில்லை. எமது மக்களின் தேசிய வாழ்விற்கும் வளத்திற்கும் ஆதாரமான எமது மண்ணிற்காகவே நாம் இரத்தம் சிந்தி போராடி வருகிறோம். இந்தப் புனித மண்ணில் எதிரியின் ஆக்கிரமிப்புப் பாதங்களை பதியவிட நாம் அனுமதிக்க முடியாது. இதனை எமது எதிரியும், எதிரியின் அடிவருடிகளும் புரிந்துகொள்வார்கள் என நான் நம்புகிறேன்.

இலங்கையின் ஐம்பது ஆண்டுகால இன ஒடுக்கல் வரலாற்றில் மிகவும் இரத்தக்கறை படிந்த ஒரு அத்தியாயத்தின் கதாநாயகியாக விளங்கும் சந்திரிகா, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தி அமைதி வழியில் தமிழரின் தேசிய பிரச்சினையைத் தீர்த்துவைப்பார் என நான் நம்பவில்லை. அவர் இராணுவத் தீர்வில் நம்பிக்கை கொண்டவர். இராணுவப் பலத்தைப் பயன்படுத்தி அரசியற் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டுவிடலாம் என்ற கனவுகளில் வாழ்பவர். அத்தோடு, அவர் சிங்களப் பேரினவாத சித்தாந்தத்திற்குள் சிறைப்பட்டும் கிடக்கின்றார். இத்தகைய ஒரு தலைமை, தமிழர் மீது கருணை கொண்டு தமிழருக்கு நீதியும் நியாயமும் வழங்குமென நாம் எதிர்பார்க்கவில்லை.

நாம் சமாதானத்திற்குக் கதவடைக்கவில்லை. சமாதான வழியில் பேச்சுக்களை நடத்தி பிரச்சினையைத் தீர்க்கும் நாகரிகமான நடைமுறையையும் நாம் கைவிடவில்லை. சிங்களத் தலைமையின் நேர்மையில் எமக்கு நம்பிக்கையில்லை என்பதால் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் நாம் சமாதானப் பேச்சுக்களில் பங்கு கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால், சமாதானப் பேச்சுக்கு அரசு விதிக்கும் முன்நிபந்தனைகள் எதையும் ஏற்பதற்கு நாம் தயாராக இல்லை. அத்தோடு போர் ஓய்ந்த நிலையில், இராணுவ ஆக்கிரமிப்பும் பொருளாதார நெருக்குவாரங்களும் நீங்கிய இயல்பான சூழ்நிலையில் அரசியற் பேச்சுக்கள் நடைபெறுவதையே நாம் விரும்புகிறோம்.

நாம் பேச்சுக்கு முன்நிபந்தனைகளை விதிக்கவில்லை. சமாதானப் பேச்சுக்கள் அமைதியான புறநிலையில், நல்லெண்ண சூழ்நிலையில் எமது மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் துன்பப் பளுக்கள் அகன்ற நிலையில் நிகழ்வதையே நாம் விரும்புகிறோம். எமது மண்ணில் இராணுவ ஆக்கிரமிப்பும், எமது மக்களின் பொருளாதார வாழ்வுமீது தடைகளும் அரசியல் அழுத்தங்களாகப் பிரயோகிக்கப்படும்பொழுது சுதந்திரமாக, சமத்துவமாக பேச்சுக்களை நடாத்துவது சாத்தியமில்லை என்பதே எமது நிலைப்பாடு. எனவே, இந்த அழுத்தங்களை நீக்குவது பற்றியும், அரசியற் பேச்சுக்கான அடிப்படைகளை வகுப்பது பற்றியும் ஆராய்ந்து பார்க்கவும் நாம் தயாராக இருக்கிறோம்.

எமது மக்கள் இன்று துன்பத்தின் பளுவை சுமக்க முடியாது திணறுகிறார்கள். சாவும், அழிவும், பசியும், பட்டினியும், இடம்பெயர்ந்த வாழ்வும், இராணுவ அட்டூழியங்களும், சொந்த மண்ணில் சிறைப்பட்ட வாழ்வும் என்ற ரீதியில் நாளாந்தம் அவர்கள் அனுபவிக்கும் துயரம் மிகக் கொடியது. பேச்சுக்கள் தொடங்கி, அது வெற்றிகரமாக நடைபெற்று, இறுதியில் அரசியற் தீர்வு ஏற்பட்டு, பின்னர் அது நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் பின்னர் தமது நாளாந்த பிரச்சினைகளுக்கெல்லாம் முடிவு கட்டப்படும் என எமது மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கத் தயாராக இல்லை. போர் நிறுத்தப்பட்டு, தமது மண்ணில் நிலைகொண்டு நின்று தம்மைத் துன்புறுத்திவரும் ஆக்கிரமிப்புப்படைகள் விலக்கப்பட்டு, தமது நாளாந்த பிரச்சினைகளுக்கு உடன் தீர்வுகாணப்பட வேண்டும் என்பதையே எமது மக்கள் விரும்புகிறார்கள். ஒடுக்கப்பட்டு, துன்பப்படும் எமது மக்களின் உடனடியான தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்த்து ஒரு சமாதான நல்லெண்ண சூழ்நிலையில் பேச்சுக்களை நடத்த சந்திரிகா அரசு தயாராக இருக்கிறதா? இல்லாது போனால் சமாதானமும் அமைதிவழியிலான அரசியற் தீர்வும் ஏற்படுவது சாத்தியமில்லை.

சிங்களப் பேரினவாதத்தின் கடும்போக்கிலும் தமிழர் விரோதக் கொள்கையிலும் அடிப்படையிலான மாற்றங்கள் எதுவும் நிகழும் என நாம் எதிர்பார்க்கவில்லை. எதிர்காலத்தில் இந்த மாற்றம் நிகழாது. போனால் தமிழீழத் தனியரசு உதயமாகும் புறநிலையை உருவாக்கித் தந்த வரலாற்றுப் பெருமை சிங்களப் பேரினவாதத்திற்கே சாருமென்பதை நான் திடமாகக் கூறுவேன்.

தமிழீழத் தனியரசே தமிழ் மக்களின் இறுதியான தீர்வாக அமையுமென உறுதியாக நம்பி நாம் எமது இலட்சியப் போரைத் தொடருவோம்.

விடுதலைக்காக எத்தகைய துன்பங்களையும் சுமக்கத் தயாராகும் தேசமே இறுதியில் விடுதலையை வென்றெடுக்கும் என்ற அசையாத நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்து போராடுவோம்.

விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்து எமது தேசத்தின் ஆன்மபலமாக நிற்கும் எமது மாவீரர்களை நினைவுகூர்ந்து இலட்சிய உறுதியுடன் நாம் எமது போராட்டத்தைத் தொடருவோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments