
தமிழ்நாட்டில் முன்னோர் வழிபாடு
தமிழ்நாட்டில் முன்னோர் வழிபாடு, ஐயனார் வழிபாடு, வானியல் சாத்திரம், சோதிடம், அணுக் கொள்கை, ஊழியல் கோட்பாடு, தீதும் நன்றும் பிறர் தர வாரா, முயற்சி தம் மெய்வருத்தக் கூலி தரும் போன்ற அறிவியல் மற்று நிதர்சன தத்துவங்கள் படித்த பெருமக்களிடம் மட்டுமல்லாது சாதாரண பொது மக்களிடமும் பரவலாக இருந்தது .போதும், “ஆசீவகம்” என்ற மதம் ஜெயினம் போலவோ, பௌத்தம் போலவோ ஒரு பெரிய மதமாகப் பரவியிருக்கவில்லை.
தமிழகத்தில் ஆசீவகத்தை ஒரு மதமாகத் தேடாமல் ஒரு சித்தாந்தமாக, ஒரு கலாச்சாரமாக, ஒரு பண்பாடாகத் தேடினால், செல்லும் இடமெல்லாம் கொட்டிக் கிடப்பதை இன்றும் நம்மால் காண முடிகிறது.
அவை தொடர்பாக இலங்கையிலும் பண்டைய தமிழக நிலப்பரப்பாகிய குறிப்பாக பாண்டிய நாட்டிலும் இவை போன்ற நிறைய பழங்கால கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. குறிப்பாக தெற்காசிய கண்டத்தில் இந்த பாண்டிய நாட்டை விடவும் மிகக் கூடுதலான கல்வெட்டுக்கள் ஈழத்தில்தான் காணப்படுகின்றன. அவை சமணம் பற்றியே பேசுகின்றன. சமணம் என்ற சொல் பொதுவாக அருகம், ஆசீவகம் ,பெளத்தம் ஆகிய மதங்களை குறிக்கப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டாலும் கூட முற்றும் முழுவதுமாக சமணம் என்ற சொல் பண்டைய காலத்தில் ஆசீவகத்தையே குறிக்கும் இத்தகைய சமணர்கள் எனப்படும் ஆசீவகம் பற்றிய கல்வெட்டுக்கள் ,பாழிகள் அவை எங்கே காணப்படுகின்றன என்றால் அவை பழம்பாண்டிய நாடாக விளங்கிய சங்ககால தமிழக நிலப்பகுதியான ஈழத்தில் தான் காணப்படுகின்றன.
ஏனிங்கே பழம்பாண்டிய நாடாகிய ஈழம் என்று குறிக்கப்படுகிறது என்றால் இங்குள்ள கல்வெட்டுக்கள்,நாணயங்கள் போன்ற அனைத்திலும் பாண்டியர்களுடைய மீன் இலட்சனையும் கூடவே ஆசீவக சுழற்குறி அடையாளமும் கொண்டு விளங்குகின்றன. அப்பெயர்களில் மிக முதன்மையானதாக திஸ்ஸ, பரதவ திஸஹ,போன்ற பெயர்களும் பாண்டியர் அடையாளமாக மீன்,சுழற்குறி ஆகிய அடையாளங்களை கொண்டே விளங்குகின்றன. இவ்வாறு குறிப்பிடுகின்றன கல்வெட்டுக்கள் ,நாணயங்கள் குறிப்பாக பழந்தமிழக நிலப்பரப்பிலே தான் காணப்படுகின்றன. இத்தகைய பாழிகள் போன்ற அமைப்புக்களோ அல்லது கல்வெட்டுக்களோ வடநாட்டில் கிடையாது. இத்தகைய பாழிகள்,கல்வெட்டுக்கள் ஜெய்ன, பெளத்தர்களுக்கு உரியதென்றால் அவை தோன்றிய வட நாட்டில் ஏன் காணப்படவில்லை. இவை இரண்டும் அங்கேதானே தோன்றி வளர்ந்தன. எனவே இத்தகைய கல்வெட்டுக்கள் இருக்கும் இடங்கள் அனைத்தும் ஆசீவகர்களுக்கு மட்டுமே உரித்தானது என்பது உள்ளங்கை நெல்லிக் கனி போல தெளிவு.
இத்தகைய பெரும்பாலான கல்வெட்டுக்கள் கி.மு. 5,தொடக்கம் கி.மு 1 நூற்றாண்டுக்கும் முந்தைதாகும். அதாவது சங்ககாலத்தைச் சேர்ந்தவையாகும். எனவே பெளத்தமும் தமிழும் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட மயிலை சீனிவாசன் போன்றவர்களுடைய ஆய்வுகள் மீளாய்வு செய்யப்பட வேண்டிய காலத்தை உணர்த்தி நிற்கின்றன. ஆகவே அரிட்டாபட்டி கல்வெட்டுக்களும் அங்குள்ள பாழிகளும் பெளத்தத்தோடோ அல்லது ஜைனத்தோடோ தொடர்புபட்டவையல்ல.அவை ஆசீவகத்தோடு தொடர்புபட்டவை. அது மாத்திரமல்ல பண்டைய காலத்தில் இலங்கையில் காணப்பட்ட பாகத கல்வெட்டுக்களும் இந்த ஆசீவகத்தோடே தொடர்புபட்டவை. அது பற்றிய மேலதிக தகவலுக்கு திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் வழியில் ஒரு 10 கி.மீ.தூரத்தில் இருக்கும் ஒரு சிற்றூர்தான் பெருமுக்கல்.
நற்றிணை என்னும் சங்க இலக்கியத்தில் பாடல் எண் 272 ஐ எழுதியுள்ள சங்க காலப் புலவர் “முக்கல் ஆசான் நல்வெள்ளையார்” இந்த ஊரில் பிறந்து இந்த ஊரில்தான் அடக்கமானவர் என்பது பொதுவான நம்பிக்கை. இவர் பெயரிலுள்ள “நல்வெள்ளையார்” என்பது ஆசீவகத்தில் சொல்லப்படும் “ கழிவெண்மை” அடைந்தவர் என்று பொருள்படும்.
அதுமட்டுமல்லாது இவர் பெயரிலுள்ள ஆசான் என்னும் சொல், மாங்குளம் கல்வெட்டு சொல்லும் “கணி நந்த அஸிரிய்இ குவன்” என்ற கணி நந்தாசிரிய இயக்கனைக் குறிக்கும். எனவே, முக்கல் ஆசான் நல்வெள்ளையார் என்ற சங்க காலப் புலவரும், நம்ம கணி நந்தனும் ஒரே நபர்தான் என்கிறார் சமீபத்தில் மறைந்த பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள்.
அது மட்டுமல்ல. இந்த ஊரில் உள்ள ஒரு மலையின் (குன்றின்) மேல் முக்தயாஜலேஸ்வரர் திருக்கோயில் என்று ஒன்று உள்ளது. அது முக்தி அடைந்த ஒருவருக்காக எழுப்பப்பட்ட கோயில் மாதிரி இருக்கிறது (இறந்தவர்களுக்கு எழுப்பப்படும் பள்ளிப்படை ) . இதை வைத்துப் பார்க்கையில் இந்தக் குன்றில்தான் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் என்னும் கணி நந்தாசிரியன் அடக்கமாயிருக்க வேண்டும் என்கிறார் நெடுஞ்செழியன் அவர்கள். இவ்வாறான பள்ளிப்படைதான் இலங்கையிலும் பாலி நூல்களில் எல்லாளன் என அழைக்கப்படுகின்ற இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கல்லறையாக காணப்படுகின்றது. இதுபோன்ற கல்லறைகளையே அசோகரால் பண்டைய தமிழகத்தில் எழுதப்பட்ட தூபிகளாக பிற்கால பெளத்த துறவிகள் உருவகப்படுத்துகிறார்கள். இவற்றுக்கும் அவைக்கும் எந்தவித தொடர்புமில்லை. அவை ஆசீவக துறவிகளுடைய நீத்தார் கல்லறைகளாகும்.
அதை ஊர்ஜிதப்படுத்தும் விதத்தில் அருகில் உள்ள ஒரு அய்யனார் கோயிலுக்கு “ஆகாச அய்யனார்” என்ற பெயர் இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார் அவர். இந்த இடத்தில் கணி நந்தன் வானியல் ஆய்வு செய்தவர் என்பதை நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். வரலாற்று ஆய்வு என்பது வெறும் கல்வெட்டுக்கள், அகழாராய்வு, நாணயவியல் என்பதையும் தாண்டி, இந்த மண்ணை ஆக்கிரமித்த அந்நிய ஆட்சியாளர்கள் எழுதிவைத்த நூல்களை அடிப்படையாக கொண்டு ஆராயாமல் இன்றும் எம்மோடு இருக்கும் இந்த மண்ணின் சில பழக்க வழக்கங்களையும், பண்பாட்டின் எச்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
அந்த வகையில் இதுவரை நமக்குக் கிடைத்த கல்வெட்டுக்களிலேயே காலத்தாம் மிகவும் பழைமையானது புலிமான்கோம்பை நடுகல் கல்வெட்டுத்தான். இது கி.மு. நான்காம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிறது. இது வேறு எந்தக் குறியீடுகளும் இல்லாமல் சுத்தத் தமிழியில் உள்ள ஒரு கல்வெட்டு.
ஆனால், பெருமுக்கல் கல்வெட்டில் முதல் எழுத்து சிந்துவெளி குறியீடு போல உள்ளது.
அப்படியென்றால் சுத்தத் தமிழியில் எழுதத் தொடங்குவதற்கு சில காலத்திற்கு முன் சிந்துவெளிக் குறியீடுகளும் கலந்து எழுதும் முறை இங்கு இருந்திருக்க வேண்டும் ( இலங்கை ஆனைக்கோட்டை காசு போல) . அதாவது புலிமான் கோம்பை காலத்திற்கு நூறு அல்லது இருநூறு ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்க வேண்டும் இந்த பெருமுக்கல் கல்வெட்டு. அப்படிப் பார்த்தால் இதன் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டாக ( Transition Period ) இருக்க வாய்ப்புள்ளது. அந்த காலகட்டத்தில்தான் புத்தர், மகாவீரர், மற்கலி கோசாலர் மற்றும் கணி நந்தன் வாழ்ந்தனர். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நமக்குச் சொல்லப்பட்ட சங்க இலக்கியங்களின் விளக்க உரைகளை அதன் காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பாக எழுதிய விடயங்களும் திருத்தி எழுதப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன..
அது மாத்திரமல்ல அறிவர்கள் எனும் போது ஏதோ எமக்கு முன்பின் அறிமுகமில்லாத யாரோ ,எவரோ என்ற கேள்விகள் பல தோன்றலாம். அவர்கள் வேறுயாருமல்ல நரிவெருட்டித்தலையார்,ஈழத்து புதன் தேவனார், கணியன் மணி பூங்குன்றனார்,நிலம்,நீர்,விசும்பு பற்றிய நெடுஞ்சேரலாதன் ,அவனை பாடிய முரஞ்சியூர் முடிநாகராயர், மாந்தையில் இருந்த இமயவரம்பன் வெண்ணிப் பறந்தலைப் போரில் கரிகால் சோழனுடைய போரில் முதுகில் விழுப்புண் அடைந்து நாணி வடக்கிருந்ததும் இந்த சங்கால ஆசீவக வழிமுறைக்குள் அடக்கம். ஆகவே ஆசீவகம் என்றால் சங்ககாலம், இது கி.மு மூன்றாம் நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே
களவாடப்பட்ட இறை மறுப்புக் கோட்பாடு அது. இது எந்தெந்த புராணங்களிலெல்லாம்
எந்தெந்த இதிகாசங்களிலெல்லாம்
எந்தெந்த மதங்களிலெல்லாம்
எந்தெந்த மார்கங்களிலெல்லாம்
எந்தெந்த நெறிகளிலெல்லாம்
எந்தெந்த வழிபாட்டு முறைகளிலெல்லாம்
யானை பற்றிய குறிப்புகள் உள்ளதோ,
தாமரை பற்றிய குறிப்புகள் உள்ளதோ,
அரசமரம் பற்றிய குறிப்புகள் உள்ளதோ,
அவையெல்லாம் ஆசீவகத்தின் வேர்களில் இருந்து முளைத்தவை. அவையெல்லாம் ஆசீவக தொன்மை மூலத்திலிருந்து தோன்றியவை. என்ன அரசமரமா என கேட்க தோன்றுகிறது. ஆம் அரசமரமும் தான். இந்த அரசமரம் மீமிக பழங்கால சிந்துவெளி காலத்திலேயே அரசர்களை குறிக்கும் உருவ எழுத்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆசீவக வேர்களில் ஒன்றுதான் விநாயகரும். அவரே இந்த எல்லா மதங்களிலும் முதன்மையானவர் ஆக கருதப்படுகிறார்.ஏன் அதற்கு காரணம் அதன் பண்டைய சுவாஸ்திக் அடையாளம் .அது சிந்துவெளி காலத்தை சேர்ந்தது. இந்த சிந்துவெளி நாகரிகம் தமிழர்களுடைய தொன்மை என்பது நிரூபிக்கப்பட்டும் விட்டன.