×

துணைப் படையின் மூன்றாண்டு வளர்ச்சியில்…

துணைப் படையின் மூன்றாண்டு வளர்ச்சியில்…

1984 ஆம் ஆண்டு மார்கழித் திங்கள் 21ஆம் நாள், முல்லை மாவட்டத்தின் மணலாற்றுப் பிரதேசத்தை, தடைப்பிரதேசமென சிங்கள அரசு பிரகடனம் செய்தது. அன்று வெளியேற்றப்பட்ட மக்கள் திரும்பவும் மீளக் குடியமர்த்தப்படவில்லை. மாறாக சிங்கள மக்களை அப்பிரதேசத்தில் ஆயுததாரிகளாய் குடியமர்த்தி வருகின்றது.

இடம்பெயர்ந்த தமிழர்களுக் கென வந்த – வருகின்ற- வெளிநாட்டு உதவிகளை, இப்பிரதேசத்தில் குடியமர்த்திய சிங்கள மக்களுக்கு வழங்கிவருகின்றது.

முல்லைப் பட்டினக் கிராமங்களின் மக்கள் முல்லைத்தீவு இராணுவ நடவடிக்கையின்போது வெளியேற்றப்பட்டனர். மூன்று ஆண்டுகளாகியும் அந்த மக்கள் நிலைபற்றி,சிங்கள அரசு சிந்திக்கவில்லை. எதிர் மாறாக முல்லை மணலாற்றுப் பிரதேசத்தில் மக்களின் வீடுகள், கல்விக்கூடங்கள், வழிபாட்டிடங்கள், மருத்துவமனைகள் என்பன வான்கள படைக் குண்டுவீச்சுக்கு இலக்காக்கப்பட்டன.

தொடர்ச்சியாக இம்மண்ணின் மக்களுக்கு சிங்கள அரசால் இழைக்கப்பட்ட கொடுமைகளின் வெடிப்பே, துணைப்படை. தம்மைத் தாமே காத்து, தமதுமண்ணில் சுதந்திரமாக வாழ,1990 இன் ஆரம்பத்தில் புலிகளின் துணை அமைப்பாக, துணைப்படை தோற்றம் பெற்றது.

முல்லை மணலாற்றுப்பிரதேச கிராம மக்கள் அனைவரும் இப்படையணியில் இணைந்துகொண்டனர். ஒருசில கிராமங்கள் தவிர்ந்த ஏனைய கிராம மக்கள், புலிகளின் துணையோடு அவர்தம் மண்ணில் மீண்டும் குடியமர்த்தப்பட்டனர். தம்மைத்தாமே தற்காத்துக்கொள்ளும் பயிற்சியோடு, வேட்டைத்துப்பாக்கியணியாகத் துணைப்படை எழுச்சி பெற்றது.

1991 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், துணைப்படை இரண்டாம் கட்ட வளர்ச்சியை எட்டியது. விசேட பயிற்சிபெற்று 303 ரக துப்பாக்கி, S. L. R. ரக துப்பாக்கியணியாக மாற்றம்பெற்றது.

1993 இன் ஆரம்பகாலம்வரை. முல்லை மணலாற்றுப்பிரதேசங்களில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட பாரிய நடவடிக்கைகளை புலிகள் முறியடித்தபோது, புலிகளின் தாக்குதலணிக்குப் பலவழிகளில் துணை நின்றனர்.

இன்றுவரை மூன்று துணைப்படை வீரர்கள் மாவீரர் துயிலும் இல்லத்தில் பூசிக்கப்படும் கல்லறைகளாயினர்.

1993 ஆம் ஆண்டு ஆனி மாதம், துணைப்படை மூன்றாம் கட்ட வளர்ச்சியினை எட்டியது பயிற்சி யிலும், ஆயுதப் பயன்பாட்டிலும் மாறுபட்ட வளர்ச்சிநிலை கண்டது. விசேட அதிரடிப் பயிற்சி பெற்று, கனரக இயந்திரத் துப்பாக்கியணியாய் நிமிர்ந்து நிற்கிறது.

தமிழீழ மக்களின் மனதில் நம்பிக்கை ஒளி ஏற்படுத்தியதும், சிங்கள அரசையும் இராணுவத்தளபதிகளையும் நிலைதடுமாற வைத்ததுமான ‘இதயபூமி- 1′ என்னும் புலிகளின் சிறப்பு நடவடிக்கையில், முல்லைமாவட்ட துணைப்படையணிகள் நேரடியாகக் களத்தில் நின்று உதவி புரிந்தன.

விடுதலைப் போராட்ட வரலாற்றில் இது ஒரு புதிய திருப்புமுனையாகும். இது மட்டுமல்ல, மக்கள் தம் மண்ணை மீட்டுவிட முடியுமென்ற நம்பிக்கையின் தொடக்கமும்கூட.

அன்று – சென்ற ஆண்டுகளில்-உயிரை பிச்சையெனக் கையேந்தியும் உயிர் பறிக்கப்பட்டது. இன்று அந்நிலைமாறி பகைவனே! உனது உயிரில் ஆசையிருந்தால் எங்கள் மண்ணில் கால்மிதிக்காதே “” என்ற நிலையில், முல்லை மாவட்ட மக்கள் களத்திலும் எல்லையிலும் ஆயுதத்துடன், சொந்த மண்ணைக் காத்து நிற்கின்றனர்.

-மணலாறு, விஜயன்

 

 

Ithaya poomi

மணலாற்றில் ஒரு போர்ப்பறை: ‘இதயபூமி – 1’ இராணுவ நடவடிக்கை.¨

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments