×

இந்தியாவும்,ஈழத்தமிழர் பிரச்சினையும்.

இந்தியாவும்,ஈழத்தமிழர் பிரச்சினையும்.
(சில உண்மை விளக்கங்கள், பகுதி:2)

தமிழீழ அரசியல் அரங்கில் ஒதுக்கப்பட்ட சந்திரகாசன் இந்தியப் பயிற்சித் திட்டத்தையும் ‘ரா’ வின் நட்புறவையும் பயன்படுத்தி அரசியல் தலைமைப்பீடத்தைக் கைப்பற்றக் கனவு கண்டார். தனக்குக் கீழ்ப்படிவும் விசுவாசமும் மட்டுமன்றி, தன்னைத் தலைவராக ஏற்றுக்கொள்ளும் அமைப்புக்களை வளர்த்துவிட அவர் திட்டம் தீட்டினார். இந்த வகையில் தமிழீழ விடுதலை இயக்கத்தையும் (டெலோ) அதன் தலைவர் ஸ்ரீசபாரத்தினத்தையும் வளர்த்துவிட சந்திரகாசன் முடிவு செய்தார். அந்தக் காலகட்டத்தில் டெலோ இயக்கம் அமைப்பு வடிவம் எதுவுமற்ற 6 பேரை மட்டும் கொண்ட சிறு குழுவாக, சென்னையில் செயலற்றுக் கிடந்தது. சந்திரகாசனின் தலையீடு செத்துப்போய்க்கிடந்த டெலோவிற்கு மறுவாழ்வை அளித்தது.

ஒரு தெளிவான சித்தாந்தமும் உறுதியான கொள்கைத் திட்டமும் இல்லாத காரணத்தினால் டெலோ இயக்கத்தை முதன்மைப்படுத்தி வளர்த்துவிட ‘ரா’ வும் விரும்பியது. தனித்துவமான கொள்கையும், இலட்சியப்பற்றும் இல்லாத குழு ஒன்றை இராணுவரீதியாக வளர்த்துவிட்டு, இந்தியாவின் கூலிப்படையாக அதை இயங்கச் செய்வதே ‘ரா’ வின் நோக்கமாக இருந்தது.

டெலோ இயக்கத்திற்குப் பயிற்சித் திட்டம் ஆரம்பமானது. அந்தக் காலகட்டத்தில் ஜூலை இனக்கலவரமும் சிங்களப் பேரினவாதத்தின் வெறியாட்டமும் தமிழீழத்தில் விடுதலை எழுச்சியைத் தூண்டிவிட்டிருந்தது. சிங்கள அரசின் மீது வெறுப்பும், ஆத்திரமும் கொண்ட தமிழ் இளைஞர் சமுதாயம் ஆயுதப்போராட்டத்தில் குதிக்க ஆயத்தமாக இருந்தது. இந்தப் புரட்சிகரச் சூழ்நிலையைப் பயன்படுத்தி டெலோ இயக்கம் தனது ஆள் திரட்டும் வேலையை ஆரம்பித்தது. எந்தவொரு தேர்வு ஒழுங்கு முறையுமின்றி, கண்டபடி ஆள்சேகரிப்பு நடந்தது. இதனால் சமூகவிரோத சக்திகளும் இவ் இயக்கத்தில் பெருமளவு ஊடுருவின. ஸ்ரீசபாரத்தினத்தின் இராணுவத் தலைமையின் கீழ் சந்திரகாசன் ஒரு கூலிப்பட்டாளத்தை உருவாக்கினார். இதற்கிடையில் ஈழப்புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்), ஈழப் புரட்சி அமைப்பு (ஈரோஸ்) அணியினரும் சந்திரகாசனிடம் சரணடைந்து பயிற்சித்திட்டத்தில் சேர்ந்து கொண்டனர்.

இந்தியாவின் இந்தத் தலையீடு தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதன் இயல்பான பரிணாம வளர்ச்சியையும்.
அதன் புரட்சிகரத் தன்மையையும் வெகுவாகப் பாதித்தது. விடுதலை அமைப்புக்கள் மத்தியிலான உறுப்பினர் தொகையும், இராணுவ பலமும் தலைகீழாக மாற்றப்பட்டது. செயற்கையான திடீர் வீக்கத்தால் ஈழத்தமிழரின் சுதந்திர இயக்கம் களங்கமுற்றது. ஒழுக்கம், கட்டுப்பாடு அற்ற ஆயுதக்கும்பல்கள் அதிகரித்ததால் அராஜகம் தலைதூக்கியது. இந்தியாவின் இத் தலையீட்டினால் மிகவும் பாதிக்கப்பட்டது த வி பு இயக்கமே.

தமிழீழ ஆயுதப் போராட்டக்களத்தில் இருந்து எம்மை முற்றாக ஒதுக்கிவிட்டு, டெலோவின் இராணுவத் தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை அமைத்து, தனது அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்த முயற்சித்தார் சந்திரகாசன்.
பிரபாகரனோ, புலிகளோ தன்னை ஒருபோதும் தமிழீழ மக்களின் தலைவராக வரித்துக் (ஒப்புக்) கொள்ள மாட்டார்கள் என்பது சந்திரகாசனுக்கு நன்கு தெரியும். புலிகளின் சுயமான போக்கும் நேர்மையும், கொள்கை உறுதியும், வளைந்து கொடாத தன்மையும், தனது நாசகார அரசியல் சூழ்ச்சிக்கு உகந்த பண்புகளல்ல என உணர்ந்து கொண்ட சந்திரகாசன், புலிகளை இந்தியப் பயிற்சித் திட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட முயற்சித்ததோடு டெலோ இயக்கம் மூலம் புலிகளை அழித்து விடலாம் எனவும் திட்டம் தீட்டினார். சந்திரகாசனின் சூத்திரதாரப் பொறிக்கிடங்குக்குள் சிக்கிவிட நாம் விரும்பவில்லை. அதேவேளை இந்தியாவின் கூலிப்படையாகவும் இயங்க நாம் தயாராக இல்லை. ஆயினும் இந்தியாவின் உதவியை நாம் பெறாது போனால் ஏனைய அமைப்புக்களின் இராணுவப் பலத்துக்கு ஈடுகொடுக்க முடியாது நாம் அழிந்து போக நேரிடும். எமது அழிவு, தமிழீழ மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக முடியும். எனவே, இந்திய அரசு மிகவும் காலம் தாழ்த்தி எம்மை அணுகி, எமக்கு வரையறுக்கப்பட்ட அளவில் உதவி தர முன் வந்ததை நாம் ஏற்றுக் கொண்டோம். எமக்கு வரையறுக்கப்பட்ட அளவில் உதவி கிடைத்தது. ஆயினும், நாம் எமது சொந்த முயற்சியினால் பயிற்சி முகாம்களை அமைத்து, இயக்க வீரர்களுக்குப் பயிற்சிகளை வழங்கி, இராணுவ அமைப்பை விஸ்தரித்தோம். இந்தியாவை எதிர்பாராது எமது சுயமுயற்சியான திட்டங்களின் மூலம் எமது ஆயுத பலத்தையும் பெருக்கிக் கொண்டோம். இதனால் இராணுவ சமபலத்தை மாற்றி அமைத்து, புலிகளைப் பலவீனப்படுத்தும் ‘ரா’ வின் சதித்திட்டத்தை நாம் முறியடிக்க முடிந்தது.

இதற்கிடையில் டெலோ, ஈபிஆர்எல்எப், ஈரோஸ் அணியினர் சந்திரகாசனின் தூண்டுதலின் பேரில் ஒரு கூட்டணியை அமைத்துக்கொண்டனர். ஈழ தேசிய விடுதலை முன்னணி (ஈஎன் எல்எப்) என இதற்குப் பெயர் சூட்டப்பட்டது. புலிகள் இயக்கத்தைத் தனிமையாக ஒதுக்கிவிட்டு, தமிழர் விடுதலைக் கூட்டணி (டியுஎல்எப்), தமிழீழ மக்கள் விடு தலைக் கழகம் (பிளாட்) மற்றும் சகல விடுதலை அமைப்புக்களையும் இந்த முக்கூட்டு முன்னணியுடன் சேர்த்து, ஈழத்தமிழர் தேசியக் கவுன்சில் ஒன்றை உருவாக்கி அதன் தலைமைப் பீடத்தைக் கைப்பற்றவும் சந்திரகாசன் முனைந்து வந்தார். இதற்கான பேச்சுக்களும் சென்னையில் நடைபெற்றன. இந்தத் தேசியக் கவுன்சில்களுக்கான விதிமுறை ஒன்றும் தயாரிக்கப்பட்டது. இதன் பின்னணியில் ‘ரா’ வும் செயற் பட்டது. அமெரிக்காவில் இருந்த சில தமிழ்ப் பிரமுகர்களும் இந்தத் தேசிய சபையை உருவாக்கி சந்திரகாசனுக்கு கிரீடம் சூட்ட அயராது முயன்றனர்.

தமிழ்ப் போராளி அமைப்புக்களைப் பகடைக்காய்களாக வைத்து நடைபெற்ற இந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தை முறியடித்து, அமெரிக்க ஏகாதிபத்திய தாசர்களின் ஊடுருவல்களைத் தடுத்து நிறுத்தி, விடுதலை அமைப்புக்களிடையே விரிசலையும் மோதலையும் தவிர்த்து, இந்தியாவை எதிர்பார்க்கும் நிலையில் இருந்து விடுபட்டு போராட்டத்தை முன்னெடுக்க நாம் முடிவு செய்தோம். இந்த உன்னத நோக்குடன் நாம் ஈழத் தேசிய விடுதலை முன்னணி அமைப்புடன் கூட்டுறவாகச் செயற்பட்டு, ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் வளர்க்க முயன்றோம். ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தி, சந்திரகாசனுக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய தாசர்களுக்கும் மத்தியில் உள்ள தொடர்புகளைச் சுட்டிக்காட்டி, சந்திரகாசனின் ஆதிக்கத்தில் இருந்து முற்றாக விடுபட்டு, சோசலிசப் புரட்சிப் பாதையில் போராட்டத்தை முன்னெடுக்க வரும்படி வலியுறுத்தி வந்தோம். ஆனால் டெலோ, ஈபிஆர்எல்எப் போன்ற அமைப்புக்கள் அரசியல் ஆலோசனை, நிதியுதவி போன்ற விஷயங்களில் சந்திரகாச னிடம் தங்கி இருந்ததால் எமக்கு மத்தியில் முரண்பாடுகள் தலைதூக்கின.

தொடரும்…….
-அரசியல் பிரிவு தவிபு 1987
தொகுப்பு: தமிழரசன் அப்துல்காதர்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments