
தன்னிச்சையான வன்முறை
தமிழீழத்தில் தலையெடுத்த வன்முறைப் போராட்டம், சிங்கள அரசுக்கு ஒரு புதிய சவாலாக எழுந்தது. 1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென்னிலங்கையில் வெடித்த ஜே.வி.பி.யினரின் ஆயுதக் கிளர்ச்சியை வெற்றிகரமாக நசுக்கிப் பதினையாயிரம் சிங்கள இளைஞர்களைக் கொன்று குவித்த பண்டாரநாயக்கா அம்மையார், தமிழீழத்திலும் அரச அடக்குமுறையை முடுக்கிவிடத் தயங்கவில்லை. அரச ஆயுதப் படையினரால் தமிழ் இளைஞர்கள் வேட்டையாடப்பட்டனர். விசாரணையின்றி சிறையில் தள்ளப்பட்டனர். மிருகத்தனமான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொடுமை காரணமாகப் பல தீவிரவாத இளைஞர்கள் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ள நேர்ந்தது. ஆயினும் வன்முறை அலைகள் ஓயவில்லை.
தமிழ் இளைஞர்களின் வன்முறைப் போராட்டம், ஒழுக்கம், கட்டுப்பாடு, கொள்கைத் திட்டத்தைக் கொண்ட ஒரு புரட்சிகர அமைப்பு மூலம் நெறிப்படுத்தப்படவில்லை. தனி நபர்களாகவும், ஒரு சிலரைக் கொண்ட குழுக்களாகவும், தன்னிச்சையான போக்கில் வன்முறையில் இறங்கிய இளைஞர்களுக்கு அனுபவமோ, ஆயுத வெடிமருந்துகள் பற்றிய அறிவோ, பயிற்சியோ, போர் யுக்தி, போர்முறைத் திட்டங்கள் பற்றிய தெளிவோ இல்லாததால், பெரும்பாலான வன்முறை முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. எனினும் விடுதலையுணர்வும், தேசியப் பற்றுணர்வும், அரச ஒடுக்குமுறைக்கு எதிரான ஆவேசமும், புரட்சிகரப் போர்க்குணமும் இந்த இளைஞர்கள் மத்தியில் மிகுந்து காணப்பட்டது.