×

யாழ்ப்பாணம் 1996 நத்தார்…

யாழ்ப்பாணம் 1996 நத்தார்…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஸ்தோத்திரம் சுவாமி கூரை பெயர்க்கப்பட்ட வீட்டிலிருந்து நான் செய்யும் இரவுப் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ளும்.

இவ்வருடம் நீர் பிறந்தபோது எங்கள் தேவாலயங்கள் அடைக்கப்பட்டிருந்தன. நம்முடைய வருகையின் அறிவிப்பாய் வரும் நள்ளிரவு மணியோசை கைது செய்யப்பட்டிருந்தது.
மறுதலிக்கப்பட்ட புனித இரவில் மத்தலோனா தன் தலைமுறைகளுக்காக அழுதாள். புலம்பினாள்; மன்றாடினாள். தீனமான தாயின் குரலின் கீழ் குருதி சிதறிக் கிடந்தது. பரிசுத்தமான அவளது கண்ணீர் விளக்கற்ற கரியதெருக்களை கழுவியோடியது.

ஊரடங்கிய இரவில் பிதாவே நீர் பிறந்தபோது எங்கள் நகரில் நாங்கள் அன்னியராய் இருந்தோம். எங்கள் முற்றங்களில் நாங்கள் மந்தைகளாக நடத்தப்பட்டோம். எங்களுடைய கிராமங்கள் திருடப்பட்டன; வரலாற்றின் பூளோகப்பரப்பிலிருந்து துடைத்தெறியப்பட்டன. வெற்றிப் பிரகடனக் கூச்சல்களால் என்பட்டினம் அவமானப்படுத்தப்பட்டது.

பிதாவே. உம்முடைய சனங்களெல்லாம் சிதறிப்போனார்கள். அவர்களது வீடுகள் வெறிச்சோடிப்போயுள்ளன. அவர்களது குரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. உம்முடைய தேவாலயத்தின் வழிகளெல்லாம் அவர்களது உதாசீனம் செய்யப்பட்ட துயரங்கள் குடியிருக்கின்றன.

சேவல் கூவுவதற்கு முன்பாக பேதுரு எல்லாவற்றையும் பன்முறை மறுதலித்தான். பிதாவே சிறைபிடிக்கப்பட்ட நகருக்குப் பாடல் இல்லை; பண்டிகை இல்லை; மகிழ்ச்சியும் இல்லை. எனினும், நீர் பிறந்துள்ளீர் குருதியாறாத நிலத்தில் நித்யமோனத்தில் என்பதை நான் அறிவேன்.

பா. அகிலன்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments