
யாழ் பொது நூலகம்
யாழ்ப்பாணம் என்றதுமே நம் நினைவுக்கு வரும் மற்றுமொரு பிரம்மாண்டமான அடையாளம், ‘யாழ் பொது நூலகம்’. இது வெறும் புத்தகங்களைச் சுமந்து நிற்கும் ஒரு செங்கற் கட்டிடம் அல்ல; ஈழத்தமிழர்களின் அறிவாற்றலின் அடையாளமாகவும், கலை மற்றும் கலாச்சாரத்தின் மாபெரும் பெட்டகமாகவும் திகழ்ந்த ஒரு வரலாற்றுச் சின்னமாகும். உலகத் தமிழர்களின் அறிவுத் தலைமையகமாக விளங்கி, பின்னர் பேரினவாதத்தால் ஒரு மாபெரும் துயரத்தைச் சந்தித்து, தன் சாம்பலிலிருந்தே மீண்டும் வீறுகொண்டெழுந்த யாழ் பொது நூலகத்தின் நெடிய வரலாற்றைத் தான் இன்று நாம் காணவிருக்கின்றோம்.
இந்த மாபெரும் அறிவுக் கோயில் எடுத்தவுடனேயே இவ்வளவு பிரம்மாண்டமாக உருவாகிவிடவில்லை. இதன் பின்னணியில் ஒரு மாமனிதரின் தியாகம் கலந்திருக்கின்றது. சமீபத்தில் தனது நூற்று முப்பதாவது ஜனன தினத்தை நிறைவு செய்த அறிஞர் கே.எம். செல்லப்பா அதாவது (புத்தூர் செல்லப்பா) என்ற தனிமனிதரின் தொலைநோக்குச் சிந்தனையால் உதித்ததே இந்த நூலகமாகும். ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்து மூன்றாம் ஆண்டு, தனது வீட்டில் இருந்த ஒரு சிறிய அறையிலேயே இந்த நூலகத்தை அவர் ஆரம்பித்தார். தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் புலமை பெற்ற அவர், தனது சொந்தச் சேமிப்பான ஆயிரத்து நூற்று எண்பத்து நான்கு ரூபாயையும், தன்னிடம் இருந்த அரிய நூல்களையும் வழங்கியே இந்த மாபெரும் பொது நூலகம் உருவாவதற்கு அத்திவாரமிட்டார்.
அவரது அயராத உழைப்பாலும், யாழ்ப்பாண மக்களின் ஏகோபித்த ஆதரவாலும், ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்து மூன்றாம் ஆண்டு இந்தப் புதிய நூலகக் கட்டிடம் கம்பீரமாக எழுப்பப்படத் தொடங்கியது. தென்னிந்தியக் கட்டிடக் கலைஞர் நரசிம்மன் அவர்களின் வடிவமைப்பில், இந்தோ-திராவிடக் கட்டிடக்கலை நுணுக்கங்களோடு, அரண்மனை போன்ற தோற்றத்தில் இது உருப்பெற்றது. இதற்கு அருட்தந்தை லாங் போன்ற பல உள்ளூர் மற்றும் சர்வதேச அறிஞர்கள் மாபெரும் பங்காற்றினர்.
ஒரு காலகட்டத்தில் தொண்ணூற்று ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைத் தன்னகத்தே கொண்டு, ஆசியாவிலேயே மிகப்பெரிய அறிவுப் பொக்கிஷமாக இது சிறப்புற்று விளங்கியது. சித்த மருத்துவம், சோதிடம் மற்றும் யாழ்ப்பாணச் சரித்திரம் தொடர்பான நூற்றுக்கணக்கான பழங்கால அரிய ஓலைச்சுவடிகள், மயில்வாகனப் புலவரால் எழுதப்பட்ட ‘யாழ்ப்பாண வைபவமாலை’யின் மூலப் பிரதிகள், ஆயிரத்து எண்ணூற்று நாற்பத்து ஒன்றாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘உதயதாரகை’ போன்ற ஆரம்பகாலத் தமிழ் இதழ்களின் முழுமையான தொகுப்புகள், அறிஞர் ஆனந்த குமாரசாமியின் அரிய கலை நூல்கள், மற்றும் ஆயிரத்து எண்ணூறுகளில் அச்சிடப்பட்ட முதலாவது தமிழ் விவிலியப் பிரதிகள் என உலகிலேயே வேறெங்கும் கிடைக்கப்பெறாத பல அரிய ஆவணங்கள் இந்த நூலகத்தை அலங்கரித்தன.
ஆனால், ஈழத்தமிழர்களின் அறிவுச் சொத்தாகத் திகழ்ந்த இந்த நூலகத்தின் மீது, ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து ஒன்றாம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி ஒரு மாபெரும் பேரவலம் நிகழ்த்தப்பட்டது. திட்டமிட்ட அரசியல் சிங்கள பேரினவாத போர் தாக்குதலின் பொது இந்த நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. இது வெறும் கட்டிட எரிப்பு அல்ல; மாறாகத் தமிழ் மக்களின் தனித்துவமான வரலாறு, பாரம்பரியம் மற்றும் கல்வி மேலாதிக்கத்தை அழிப்பதற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு கலாசார இன அழிப்பாகும் (Cultural Genocide). பல நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்ட விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் அனைத்தும் ஒரே இரவில் சாம்பலாகின. எரியும் நூலகத்தைக் கண்டு தாங்கமுடியாத அதிர்ச்சியில், புகழ்பெற்ற தமிழறிஞர் அருட்தந்தை டேவிட் அவர்கள் அந்தத் துயரம் தாளாமலேயே தன் இன்னுயிரை நீத்தார் என்பது என்றைக்குமான வரலாற்றுத் துயரமாகும்.
தமிழ் மக்களின் அடையாளத்தைச் சிதைக்கும் நோக்கில் இந்த எரிப்பு நிகழ்த்தப்பட்டாலும், யாழ் மக்களின் அறிவாற்றலையும், கல்விப் பசியையும் எவராலும் அழித்துவிட முடியவில்லை. “அறிவை ஒருபோதும் எரிக்க முடியாது” என்பதன் சாட்சியாக, அதே இடத்தில் மீண்டும் யாழ் பொது நூலகம் மறுசீரமைக்கப்பட்டு, இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு மீளத் திறந்து வைக்கப்பட்டது. எரிக்கப்பட்ட அந்தப் பழைய அரிய நூல்களை மீண்டும் கொண்டுவர இயலாது என்றாலும், நிறுவுநர் செல்லப்பாவின் கனவையும், தமிழ் மக்களின் வரலாற்றுத் தாகத்தையும் சுமந்து கொண்டு, தமிழர்களின் மீண்டெழும் வல்லமைக்கு ஒரு அழியாத சாட்சியாக இன்று கம்பீரமாக நிற்கின்றது இந்த நூலகம்.
யாழ் பொது நூலகம் என்பது ஒவ்வொரு தமிழரின் மனதிலும் அணையாமல் எரியும் அறிவின் சுடர்! என்றாவது நீங்கள் யாழ்ப்பாணம் சென்றால், இந்த அறிவுத் தேவாலயத்திற்குச் சென்று, அதன் பெருமையையும் அமைதியையும் ஒருகணம் உணர்ந்து பாருங்கள்.