
மே மாதம் 13ம் திகதி 1997 அன்று வன்னிப் பெருநிலப் பரப்பெங்கும்
மே மாதம் 13ம் திகதி 1997 அன்று வன்னிப் பெருநிலப் பரப்பெங்கும் அகலக் கால் பதித்து தமிழினத்தை அழித்தொழிக்கும் நோக்கில் பேரினவாத இராணுவத்தால் தொடங்கப்பட்ட “ஜெய சிக்குறு” நடவடிக்கை, எதிர்ச் சமரை சமாளிக்கமுடியாமல் ஏ9 வீதியில் மாங்குளம் வரையில் சேடம் இழுத்துக் கிடந்தது.
இப் படை நடவடிக்கைக்கு எதிரான ஒராண்டு எதிர்ச் சமர் வெற்றிவிழாவாக 1998ம் ஆண்டு மே மாதத்தை தமிழர் தேசம் கொண்டாடியது. கிராமங்கள் தோறும் இயங்கிய பொது அமைப்புகளை சேர்ந்தவர்கள் முன்னரங்க நிலைகளுக்கு சென்று போராளிகளை சந்தித்து உலர் உணவுப் பொருட்களை வழங்கி கலந்துரையாடி மகிழ்ந்தனர்.
வன்னிப் பெருநிலப் பரப்பு பாடசாலை மாணவர்களும் இக்காலத்தில் முன்னரங்க நிலைகளுக்கு சென்று போராளிகளை சந்திப்பதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இச் சந்திப்பை முன்னிட்டு மாணவர்கள் தங்களால் ஆன இனிப்பு பண்டங்கள், உலர்உணவுகள் மற்றும் பரிசுப் பொருட்களை முன்னரங்க நிலைகளுக்கு எடுத்துச் சென்று களமுனைகளில் பணியாற்றிய போராளிகளுக்கு வழங்கி அவர்களை உட்சாகப் படுத்தி மகிழ்ந்தனர். மாணவர்கள், கள அனுபவங்களை கேட்டும் பார்வையிட்டும் ஒரு வருடமாக எதிரியின் முன்னேற்றத்தை தடுத்து தேசம் காத்து நின்ற மறவர்களுடன் தமது அன்பையும் ஆதரவையும் பரிமாற்றிக் கொண்டனர்.
குறிப்பு; உலர்உணவுகள், இலகுவாக உட்கொள்ளக் கூடியதும் பழுதடையாமல் நீண்ட நாட்களுக்கு இருக்க கூடியதுமான சத்தான உணவுகள். இவ்வாறான உணவுகள் மக்களால் களமுனைகளுக்கு எப்போதும் வழங்கப்படுவது வழமை. உதாரணமாக- முட்டை மா, லட்டு, பருத்திதுறை வடை, பயத்தம் உருண்டை, பொரி கடலைகள்….