
கைதடி கிருசாந்தி படுகொலை – 07 செப்ரெம்பர் 1996
யாழ் குடாநாட்டின் தென்மராட்சிப் பிரதேசத்தில் கைதடிக் கிராமம் அமைந்துள்ளது. யாழ் நகரப் பகுதியிலிருந்து கிழக்குப் புறமாக யாழ். – கண்டி வீதி வழியாக ஏறக்குறைய ஐந்து மைல் தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது.
கைதடிச் சந்தியிலிருந்து வடக்குப் புறமாக இருநூறு யார் தூரத்தில் கிருசாந்தியின் வாழ்விடம் உள்ளது. இயற்கை எழில் கொண்டதும், பெரும்பகுதி விவசாயப் பகுதியாகவுமுள்ள கைதடிக் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்த குமாரசாமி இராசம்மா தம்பதியினர் பிரசாந்தி, கிருசாந்தி, பிரணவன் ஆகிய மூன்று பிள்ளைகளோடு தமது வாழ்க்கையினை நடத்தி வந்தார்கள். தந்தையார் குமாரசாமி 1984 தை மாதம் காலமானதும், தாயின் அரவணைப்பிற் பிள்ளைகள் வாழ்ந்து வந்தார்கள். தந்தையின் இழப்பின் பின் மூத்த புதல்வி பிரசாந்தி க.பொ.த உயர்தரம் வரை கல்விகற்று, உயர்கல்வி கற்பதற்கு வசதிகளற்று உறவினர்களின் உதவியுடன் கொழும்பில் சிறிது காலம் தங்கியிருந்து கணினிக் கல்வி கற்றுப் பின்னர் வெளிநாடு செல்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்து வெளிநாடு சென்றார்.
குமாரசாமி இராசம்மா தம்பதிகளின் இரண்டாவது மகளான கிருசாந்தி யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் கல்வி பயின்றுவந்தார். கல்விப் படிப்பில் க.பொ.த சாதாரண பிரிவில் திறமை சித்தியடைந்ததும், க.பொ.த உயர்தரப் பிரிவில் விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயின்று வந்தார். இளைய மகன் பிரணவன் யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரியில் சாதாரண பிரிவில் கல்வி பயின்று கொண்டிருந்தார்.
1996ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானத்துறையில் கல்வி பயின்று வந்த கிருசாந்தி முதல் நாள் நடந்த இரசாயனவியற் பாடத்தினை திறம்பட எழுதியிருந்தார். இப்பாடத்திற்குரிய பெறுபேறு முதல் தரம் எனப் பின்னர் தெரியவந்தது. 07.09.1996 அன்று நடந்த இரண்டாவது பாடம் இராசாயனவியல் பகுதி ஒன்று பரீட்சையை எழுதியிருந்தார். அன்றையதினம் தனது உற்ற நண்பி ஜனாநந்தினி கணநாதனின் மரணச் சடங்கிற்குச் சென்று விட்டு மதியம் 01:30 மணியளவில் கண்டி வீதி வழியாக வீடு திருமப்பிக் கொண்டிருந்தார் அவ்வேளை செம்மணி வெளியருகில் யாழ் நகரை வரவேற்கும் வரவேற்பு வளைவு அமைந்துள்ள இடத்தில் காவலரணிலிருந்த இராணுவத்தினர் கிருசாந்தியை வழிமறித்து நாற்பத்தைந்து நிமிடங்களாக விசாரித்துக்கொண்டிருந்தார்கள். கிருசாந்தி காவலரணில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்ட உறவினர் தாயாரிடம் சென்று சம்பவத்தினைத் தெரியப்படுத்தியிருந்தார்.
மதியம் 02:30 மணியளவில் சம்பவத்தினைக் கேள்வியுற்ற தாயார் இராசம்மா அயலவரான கிருபாமூர்த்தியின் உதவியுடன் சம்பவ இடத்தினை நோக்கி விரைந்தார். இதன் பின்னர் தமது படிப்பினை முடித்து வீடு திரும்பிய கிருசாந்தியின் தம்பியார் பிரணவனும் சம்பவத்தினை அறிந்து தயாருக்குப் பின்னால் சென்றார். தாயார் இராசம்மா குமாரசாமி, இளைய சகோதரன் பிரணவன் மற்றும் அயலவர் கிருபாமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட கிருசாந்தியைக் காணவில்லை. செம்மணி வீதியில் அமைந்திருந்த இராணுவ காவலரணிற் கேட்டபோது தாங்கள் யாரையும் கைது செய்யவில்லை எனக் குறிப்பிட்டார்கள். இதைத் தொடர்ந்து தாயார் சுண்டுக்குளி பாடசாலை மற்றும் மரணச்சடங்கு நிகழ்ந்த ஜனாநந்தினி கணநாதன் வீட்டிற்கு சென்று விசாரித்தபோது, கிருசாந்தி வந்து போனதாகக் கூறினார்கள். மீண்டும் தாயார் கிருசாந்தி தடுத்து வைக்கப்பட்டு விசாரித்த இடமான செம்மணிப் பகுதிக் காவலரணில் கடமையிலிருந்த படையினரிடம் விசாரிக்கச் சென்ற பின்னர் இவர்களும் காணாமற்போனார்கள்.
1996ஆம் ஆண்டு நடுப்பகுதியில் யாழ்குடா முழுவதையும் இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டின் கீழ்க்கொண்டு வந்த பின்னர் மாலை 6மணியுடன் ஊரடங்கு உத்தரவு அமுலிலிருந்தது. இவ்வாறான நெருக்குவாரங்களிற்குள் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
இதனால் 07.09.1996 அன்றைய தினம் கிருசாந்தியைத் தேடிச் சென்ற தாயார், தம்பியார், அயலவர் ஆகியோர் மாலை நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. ஆயினும் ஊரடங்கு உத்தரவால் உறவினர்களால் உடனடியாக விசாரிக்க முடியாதிருந்தது. மறுநாள் 08.09.1996 காலை கிருசாந்தி குடும்பத்தினரது உறவினர்களான ஆறுமுகநாதன், கோடீஸ்வரன் ஆகியோரும் கிருபாமூர்த்தியின் மனைவியான புவனேஸ்வரியும் தமது குடும்ப உறவினர்களைத்தேடி அதே இராணுவ முகாமிற்குச் சென்று விசாரித்தபோது, அப்படி இங்கு யாரையும் கைது செய்யவில்லை எனத்தெரிவித்தார்கள். பின்னர் யாழ். மனித உரிமை ஆணைக்குழு, யாழ் காவற்றுறை நிலையம் போன்ற இடங்களில் முறைப்பாடுகள் செய்தார்கள். இருந்தபோதும் அவர்களது மனம் கேட்காது மீண்டும் சம்பவம் நிகழ்ந்த செம்மணிக் காவலரணிலிருந்த இராணுவத்தினரிடம் கேட்டபோது ‘நாங்கள் யாரையும் கைது செய்யயவில்லை எனினும் மாலை நேரம் வந்;து பாருங்கோ’ என்றனர். இதைக்கேட்ட உறவினர்கள் கிருசாந்தி குடும்பத்தினருக்கு ஏற்பட்ட நிலை தமக்கும் ஏற்பட்டு விடுமோ எனப் பயந்து மாலைவேளை அங்கு செல்லவில்லை. தொடர்ந்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு, காவற்றுறை நிலையம் என்பவற்றில் முறைப்பாடு செய்தார்கள்.
உறவினர்கள் எடுத்த முயற்சியின் பயனாக சம்பவதினதத்திலிருந்து நாற்பத்தைந்தாம் நாள் இராணுவத்தின் ஐநூற்று இருபத்தோராம் பிரிகேட் படைப்பிரிவு அதிகாரிகள் உறவினர்களை விசாரணைக்காக அழைத்தார்கள். இதில் ஆறுமுகநாதன், புவனேஸ்வரி, கோடீஸ்வரன் ஆகியோர் சென்றிருந்தனர். விசாரணைகளில் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்களெனக் கருதப்பட்ட இராணுவத்தினர் ஆறு பேரையும் அழைத்து விசாரித்தபோது, கிருசாந்தி குடும்பத்தினர் உயிருடன் இல்லை என்ற செய்தி உறவினர்களிடம் கூறப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு இராணுவத்தினரும் இரண்டு காவற்றுறையினரும் சம்பவம் நிகழ்ந்த இடத்தினையும், புதைகுழியையும் காட்டுவதாக ஒப்புக்கொண்டனர். யாழ். வரவேற்பு வளைவு அமைந்துள்ள பகுதியிலிருந்த செம்மணிக் காவலரணிலிருந்து நூறு யார் தூரத்தில் நாயன்மார்கட்டு வீதியிலுள்ள மதகு அருகில் புதைகுழி அமைந்திருந்தது. கிருசாந்தியும் தாயாரும் ஒரு புதைகுழியிலும், பிரணவன் மற்றும் அயலவர் கிருபாமூர்த்தி இன்னொரு புதைகுழியிலுமாகக் கிடந்தனர். நான்கு அடி ஆழத்தில் உருக்குலைந்து, சிதைந்து, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலங்கள் காணப்பட்டன.
கிருசாநத்தியின் தாயார் அணிந்த சேலை, மூக்குக்கண்ணாடி, செருப்பு என்பன ஒரு பொலித்தீன் பையில் புதைகுழியினுள் கிடந்தது. கிருசாந்தி படையினரால் பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டும் கழுத்துப் பகுதி கயிற்றினால் நெரித்துக் கொல்லப்பட்டிருந்தார். பின்பு, தோண்டி எடுக்கப்பட்ட சடலங்கள் யாழ் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று, பின்னர் கொழும்புக்கு அனுப்பப்பட்டன. அங்கு மரபணுப் பரிசோதனை யாவும் பூர்த்தியான பின்னர் அடக்கம் செய்யப்பட்டன. கிருசாந்தி குடும்பத்தினர், கிருபாமூர்த்தி ஆகியோரின் உயிரிழப்புத் தொடர்பான வழக்கு உறவினர்களால் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தொடர் விசாரணைகள் மூலம் சந்தேகத்தின் பேரிற் கைதுசெய்யப்பட்ட ஆறு இராணுவத்தினரும் குற்றங்களை ஒப்புக்கொண்டதன் பேரில் குற்றவாளிகளென அடையாளங்காணப்பட்டார்கள்.
குற்றவாளிகளென அடையாளங் காணப்பட்டவர்களில் ஒருவரான ‘லான்ஸ் கோப்ரல் சோமரட்ண ராஜபக்ச’ கிருசாந்தி மற்றும் குடும்பத்தினர் மீதான தகவல்களை வழங்கியதுடன், மேலும் செம்மணிப் பகுதியில் அமைந்த வயல் நிலங்களில் மேலதிகாரிகளின் உத்தரவின் பேரில் இரவு நேரங்களில் கொண்டுசென்று புதைக்கப்பட்ட சடலங்களில் முன்நூறு, நாநூறு பேரது சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களையும் அடையாளப்படுத்த முடியுமெனவும் வாக்குமூலம் அளித்தார். இதன்மூலம் யாழ் குடாநாட்டில் காணாமல் போனோர் பலரது நிலைகளை இப் புதைகுழிகளிலிருந்து அறிய முடிந்தது.
இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)
![]()