
கிளிநொச்சி மருத்துவமனை அருகாமை படுகொலை – 02 நவம்பர் 2006
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வளாகத்தை அண்மித்த பகுதிகளில் சிறீலங்கா விமானப் படைக்குச் சொந்தமான கிபிர் விமானங்கள் 2006 நவம்பர் 02ஆம் நாள் பிற்பகல் 2.00மணியளவில் நான்கு தடவைகள் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டன. இதன்போது 16 குண்டுகள் வீசப்பட்டன. இவற்றில் 15 குண்டுகள் வெடித்துள்ளன.
இதன்போது பொது வைத்தியசாலைக்கு அருகிலிருந்த வீடொன்று முழுமையாக அழிவடைந்ததுடன் அதிலிருந்த ஐவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இருவர் பாடசாலை மாணவர்கள். குண்டு வீச்சுத்தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்களின் வீடு முழுமையாகச் சிதைவடைந்ததுடன் மேலும் கால்நடைகள் பலவும் பலியாகியதோடு பயன்தரு மரங்கள் பலவும் அழிவடைந்தன.
அத்தோடு கிளிநொச்சி மாவட்டப் பொதுமருத்துவனையும் சேதத்துக்குள்ளானது. இங்கு வைத்தியசாலை ஊழியர்கள் மூவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மூன்று நோயாளர்களும் காயமடைந்தனர். வைத்தியசாலையில் மேல்மாடிக் கூரையின் சீலிங் முற்றாகச் சேதமடைந்துள்ளது. விமானக் குண்டுச் சன்னங்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக் கட்டடத்தின் நோயாளர் விடுதிகளையும் தாக்கியுள்ளன. வைத்தியசாலையின் கர்ப்பிணிப் பெண்களுக்கான பிரசவ விடுதி மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் என்பவற்றை குண்டுச் சன்னங்கள் தாக்கியுள்ளன. இதேவேளை சத்திர சிகிச்சைக் கூடம் உட்பட வைத்தியசாலையின் பல்வேறு பகுதிகளிலும் கண்ணாடிகள் நொருங்கியுள்ளன.
இத்தாக்குதலையடுத்து வைத்தியசாலை விடுதிகளிற் தங்கிநின்று சிகிச்சைபெற்றுவந்த 300இற்கும் மேற்பட்ட நோயாளர்கள், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்கென வந்த 700இற்கும் மேற்பட்ட நோயாளர்களும் வைத்தியசாலை வளாகத்தை விட்டுச் சிதறிஓடினர்.
இத்தாக்குதலையடுத்து வைத்தியசாலையின் செயற்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்தன.
கிளிநொச்சி நகரப் பகுதி உட்பட கிளிநொச்சிப் பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் வாழ்கின்ற மக்களும் பாடசாலை மாணவர்களும் பெரும் அச்சமடைந்து வீதிகளிற் சிதறி ஓடினர். இதன் காரணமாக ஏ-09 நெடுஞ்சாலை மற்றும் உள் வீதிகள் அனைத்திலும் சன நெருக்கடி அதிகரித்திருந்தது. தாக்குதல் நடைபெற்ற இடத்தையும் இறந்தவர்களின் உடல்களையும் இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரும் நேரிற் சென்று பார்வையிட்டனர்.

இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)
![]()