
கொசோவா சுதந்திரப் பிரகடமும். தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டமும்
சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் சர்வதேச ஊடகங்கள் மத்தியிலும் சிலாகித்து பேசப்படும் ஒருவிடயமாக கொசோவா சுதந்திரப் பிரகடனம் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களும் அவற்றிற்கு எதிரான எதிர்வினைகளும் சிறிதுகாலமாக பேசாப் பொருளாக சிலாகித்துப் பேசப்படாத விடயமாக இருந்துவந்த நிலைமையை கொசோவச் சுதந்திரப் பிரகடனம் மாற்றியமைத்துவிட்டது.
உலகின் பெரிய வல்லரசான அமெரிக்காவும் ஒரு பலமான சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பாக விளங்குகின்ற ஐரோப்பிய யூனியனும் ஏகோபித்த குரலில் கொசோவா சுதந்திரப் பிரகடனத்திற்கு ஆதரவளித்தமை அதனுடைய சர்வதேச பரிமாணத்தை சர்வதேச சமூகத்தின் மத்தியில் பெருமளவு பேசப்படும் பொருளாக மாற்றியமைத்துவிட்டது. மாஷல் டிட்டோ தலைமையில் ஒன்றிணைக்கப்பட்டிருந்த ஒருதேசம் படிப் படியாக அவரது மறைவிற்குப் பின்னர் தேசிய இனங்களின் போராட்டக்களமாக மாறியது. சேர்பிய இராணுவத்தினுடைய அடக்குமுறைகள், இனச்சுத்திகரிப்பு, மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் இவற்றிற்கு எதிராக எல்லாத்தேசிய இனங்களும் போராடவேண்டும் என்ற உணர்வு அங்கு வளர்ச்சியடைந்துவந்தது. பொஸ்னியா, மொண்டினிறோ போன்ற பல்வேறு நாடுகளில் வாழ்ந்த தேசிய இனங்கள் அடக்கு முறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து சுதந்திரத்தை பெற்றுக்கொண்டன. இந்த நாடுகளில் இடம்பெற்ற ஆட்கடத்தல், காணாமல்போதல், இனப்படுகொலைகள், மனிதப் புதைகுழிகள் இவையெல்லாம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்தபொழுது அடக்கு முறையாளர்கள் சர்வதேச சமூகத்தின் மத்தியில் அம்பலப்பட்டுப் போனார்கள். தேசிய இனங்களுடைய சுதந்திர வேட்கையை கட்டுப்படுத்தமுடியாமல் அடக்கு முறையாளர்கள் தமது இராணுவத்தை வாபஸ் பெறவேண்டியதாயிற்று. இறுதியாக உலக வரைபடத்தில் கொசோவா என்ற ஒருநாடு உதயமாவதற்கும் ஐக்கியநாடுகள் சபையில் அதன் கொடி பட்டொளி வீசிப் பறக்கவும் சர்வதேச சமூகம் அங்கிகாரம் அளித்துள்ளது.
கொசோவா சுதந்திரப் பிரகடனம் சர்வதேச சமூகத்தை இரண்டு அணிகளாக பிரித்துவிட்டதாக ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். அமெரிக்கா, ஐரோப்பிய சமூகம், நோர்வே என்பன இந்த சுதந்திரப் பிரகடனத்திற்கு தமது பரிபூரண ஆதரவை கொடுத்திருக்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ச் புஷ் வெளிப்படையாகவே தமது ஆதரவை வெளியிட்டமை உலகின் கவனத்தை பெரிதும் ஈர்த்துக் கொண்டது. சர்வதேச சமூகத்தின் மத்தியில் அமெரிக்கா தேசிய இனங்களுடைய உணர்வை மதிப்பதில்லை என்ற கண்டனக் குரல் இப்பொழுது அடக்கிவாசிக்கப்படுகிறது.
கொசோவா சுதந்திரப் பிரகடனத்தை ஒவ்வொரு நாடும் தத்தமது உள்நாட்டு சொந்தப்பிரச்சனையின் தளத்தில் வைத்தே பார்க்கின்றன. இதனால் சுதந்திர கொசோவா நாட்டினுடைய தேசிய இனத்தின் ஆத்மார்த்தமான அபிலாசைகளை அவை இரண்டாம் பட்ச நிலைக்கு தள்ளி விட்டுள்ளன. என்ற குற்றச்சாட்டில் சர்வதேச முன்னணி ஊடகங்களால் வெளிச்சம் போட்டுக்காட்டப்பட்டுள்ளன. ரஷ்யா இந் தப் பிரகடனத்தை எதிர்க்கிறது. அதற்குக் காரணம் அங்கு இடம்பெற்றுவரும் செச்செனிய விடுதலைப்போராட்டம் உத்வேகம் பெற்றுவிடுமோ என்ற அச்சமாகும். சீனாவும் இந்தப் சுதந்திரபிரகடனத்தை எதிர்க்கிறது இதற்குக் காரணம் தாய்வானில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளாகும். இதே போல ஸ்பெயின் நாடும் இந்தப்பிரகடனத்தை எதிர்க்கிறது. இதற்குக்காரணம் அங்குள்ள பாஸ்க் இனத்தவர்கள் பல ஆண்டுகளாக விடுதலைகோரி போராடி வரும் போராட்டமேயாகும் இதேபோல சிறிலங்காவும் இந்த பிரகடனத்தை, அப்பிரகடனம் செய்யப்பட்டு பன்னிரெண்டு மணித்தியாலயத்திற்குள் தாம் எதிர்ப்பதாக அறிக்கை வெளியிட்டது. சிறிலங்காவினுடைய வெளிநாட்டமைச்சர் ரோகித போகல்லாகம சிறிலங்காவினுடைய எதிர்ப்பிற்கு காரணம் கூறுகின்றபோது சேர்பிய பெரும் பான்மை இனத்தவர்களது விருப்பத்திற்கு மாறாக இப்பிரகடனம் அமைந்துள்ளது எனக்குறிப்பிட்டார்.
சிறிலங்கா கொசோவப் பிரகடனத்தை இலங்கையினுடைய இனப்பிரச்சினையினுடைய தளத்தில் வைத்து பார்க்கின்றது. பெரும்பான்மையினுடைய விருப்பமென்பது ஒரே இனத்தவர்கள், ஒரே மதத்தவர்கள் ஒரே தேசிய இனத்தவர்கள் மத்தியிலிருந்து உருவாகும்போதுதான் அது ஜனநாயக ரீதியாக பரிணாமத்தை வெளிப்படுத்தும். பல தேசிய இனத்தவர்கள் பலமொழி பேசு கின்றவர்கள் பல மதத்தைப் பின்பற்றுகின்றவர்கள் பல்பரிமாணக் கலாச்சாரத்தை உடையவர்கள் மத்தியில் பெரும்பான்மையினருடைய ஏகோபித்த அபிப்பிராயம் என்பது எப்போதுமே சிறிய தேசிய இனங்கள் மீது பெரும்பான்மையினர் தமது அபிப்பிராயத்தை திணிக்கின்ற ஒருபோக்காகவே இருந்துவருகின்றது.
இலங்கை ஒரு தோல்வியுற்றநாடு, இலங்கை ஊடகவியலாளர்களிற்கு ஆபத்தான நாடு, இலங்கை தன்னார்வுத் தொண்டர்களுக்கு ஆபத்தான நாடு, இலங்கை சுற்றுலாப்பயணிகளிற்கு நெருக்கடி நிறைந்த நாடு இவ்வாறு இன்று சர்வதேச சமூகத்தால் சிறிலங்கா அடையாளப்படுத்தப்பட்டு பிரச்சாரமயப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் இலங்கை பல்தேசிய இனங்கள் வாழ்கின்ற ஒருநாடு, பல மதத்தவர்கள் வாழ்கின்ற நாடு, பல மொழிகள் பேசுகின்றவர்கள் வாழ்கின்ற நாடு என்ற அதனுடைய பல் பரிமாணத்தை அடைவதில் படுதோல்வியடைந்துவிட்டது. சிறிலங்கா தனது 60வது சுதந்திரதினத்தை கொழும்பு காலிமுகத்திடலில் கொண்டாடுகின்ற வேளையிலும் நாட்டின் பலபாகங்களிலும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. இந்த குண்டுவெடிப்புச்சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றபாடம் என்ன? இலங்கை இன்னமும் தனது சரியான தடத்தில் கால்பதிக்கவில்லை. பெரும்பான்மையினருடைய விருப்பம், இறைமை, ஒற்றையாட்சி, எந்தவகையிலும் மாற்றியமைக் கப்படமுடியாத அரசியலமைப்பு என்றொரு வட்டக்களரிக்குள் சுற்றிச் சுழலாடிக்கொண்டிருக்கின்றது.
இந்த வட்டத்திற்குள் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியாத சிறிலங்கா சர்வதேச சமூகத்தின் தேசிய இனங்களின் விடுதலைப்போராட்டத்தையும் இறுகிப்போயுள்ள தனது பேரினவாத சிந்தனைகளில் நின்றுதான் பார்க்கின்றது. ஆனபடியால்தான் கொசோவா சுதந்திரப் பிரகடனத்தையும் சிறிலங்கா அரசு சமகால அரசியல் செல்நெறிகளிற்கு எந்தவகையிலும் அனுகூலம் இல்லாத ஒரு வெறுமையில் இருந்துகொண்டு பார்க்கின்றது. இந்தப்பார்வை கூட சர்வதேச சமூகம் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள அது தூண்டியுள்ளது. சிறிலங்காவினுடைய அறிக்கை வெளியான பின்னர் அமெரிக்காவினுடைய முன்னாள் பிரதி சட்டமா அதிபர் அமெரிக்காவிலுள்ள இலங்கையினுடைய தூதுவர் பேனாட் திலகரட்னாவை இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக ஒரு பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்புவிடுத்திருக்கின்றார்.
இவ்வாறாக உலகப்புகழ்பெற்ற சட்ட – மேதை கரேன் பார்க்கர் தமிழர் தாயகம் பூரணமான ஒரு சுதந்திரப்பிரகடனத்தை வெளியிடுவதற்கு போதுமான அளவு அதனுடைய உள்கட்டுமானங்கள் வளர்ச்சி பெற்றிருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார். இவ்வாறு பார்க்கின்றபோது கொசோவா வினுடைய சுதந்திரப்பிரகடனமும் அதற்கெதிராக சிறிலங்கா எடுத்துக்கொண்ட நிலைப்பாடும் சர்வதேச சமூகத்தின் மத்தியில் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு மேலும் பலம் சேர்த்திருக்கின்றன.
கடந்த 26.02.2008 அன்று கொழும்பிலி ருந்து வெளிவரும் டெய்லி மிரர் தினசரியில் பிரபல ஆய்வாளர் ஜெகன் பெரேரா அவர்கள் எழுதிய கட்டுரையொன்றில் கொசோவி னுடைய சுதந்திரப்பிரகடனம் பற்றியும் தமிழ்த்தேசிய விடுதலைபற்றியும் சிறிலங்கா அரசு சர்வதேச சமூகத்தில் எவ்வாறு அம்பலப்பட்டு நிற்கின்றது என்பது தொடர்பாகவும் விரிவாக ஆராய்ந்துள்ளார்.
சிறிலங்கா நாட்டினுடைய ஒற்றையாட்சி தத்துவமும், சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையும் இராணுவ மேலாதிக்கப் போக்கும் சிறிலங்காவினுடைய பொருளாதார வளர்ச்சியும் இனங்களிற்கிடையில் முரண்பாடுகளை கூர்மையாக்குவதில் எத்தகைய பங்கினை பெற்றுள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டி கொசோவா சுதந்திரப் பிரகடனம் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதர்சமாக அமைகின்றது. என்பதை சுட்டிக்காட்டியிருக்கின்றார். இறைமை என்பது பகிர்ந்தளிக்கப்பட முடியாத இறுகிப்போன ஒரு கற்பாறையல்ல ஒரு தேசியஇனம் வாழுகின்ற நாட்டில் இறைமையென்பது ஒரேயொரு தேசிய இனத்திற்கு ஏற்புடைய ஒரு வரையறையாக அமையலாம் ஆனால் இலங்கை போன்ற பலமொழி பேசுகின்ற பலதேசிய இனங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டிற்கு ஒற்றையாட்சி தத்துவமோ ஏகபோக இறைமைக்கோட்பாடோ ஒருபோதும் இனமுரண்பாடுகளை தீர்த்துவைக்கப் பயன்படாது. மாறாக அவற்றை மேலும் சிக்கலாக்கும் தேசிய விடுதலைப்போராட்டம் வளர்ச்சிபெற்று கூர்மை அடைவதற்குரிய ஏதுநிலைகளை அவை உருவாக்கும். உலகின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற தேசிய இனங்களின் விடுதலைப்போராட்டம் இதைத்தான் உணர்த்திநிற்கின்றது. பாகிஸ்தானில் சர்வாதிகாரி எகயாகான் வங்கதேச விடுதலைப்போராட்டத்தை ஒடுக்குவதற்காக ஜெனரல் திக்காக்கான் தலைமையில் ஒரு இனஅழிப்புப் படையை அனுப்பிவைத்தார். அவர் தலைமையிலான இன அழிப்புப் படை 1970 களில் முப்பது நாளில் முப்பது இலட்சம் வங்காளிகளை கொன்று குவித்தது.
ஆனாலும் அவர்களால் வங்கதேச விடுதலைப்போராட்டத்தை அடக்கமுடியவில்லை. காலம் சென்ற முஜீபுர் ரகுமான் தலைமையில் பங்களாதேஷ் 1971ல் விடு தலைபெற்றது. பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியாளர்கள் இதிலிருந்தும்கூட பாடங் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. ஏனெனில் கொசோவா சுதந்திரப்பிரகடனத்தை பாகிஸ்தான் இன்று எதிர்க்கின்றது. அதற்குக் காரணம் பாகிஸ்தானின் உள் நாட்டில் பலுஸ்தானியர்கள் என்ற தேசிய இனம் நடத்திவருகின்ற விடுதலைப் போராட்டமேயாகும். ஆனால் கடைசியாக இடம்பெற்ற பொதுநலவாய அமைப்பு நாடுகளின் ஒன்றியம் முஷாரப்பினுடைய அர சாங்கத்தை அவரது ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிராக கண்டனம் தெரிவித்த தோடு பாகிஸ்தானை பொதுநலவாய அமைப்பிலிருந்து வெளியேற்றியும்விட்டது. இந்த வெளியேற்றம் தொடர்பாகக்கூட சிறிலங்காவால் சரியான நிலைப்பாட்டை எடுக்கமுடியவில்லை இலங்கையினுடைய வெளிநாட்டமைச்சர் ரோகித போகல்லாகம பாகிஸ்தானுடைய வெளியேற்றத்தை ஆதரித்து பொதுநலவாய அமைப்பு நாடுகளில் தனது வாக்கை அளித்தார். ஆனால் இலங்கையில் கொழும்பில் பிரதம மந்திரி ரட்ண சிறி விக்கிரமநாயக்கா தலைமையில் கூடிய முதன்மை அமைச்சர்கள் பாகிஸ்தானிற்கு ஆதரவுதெரிவித்தார்கள். பொதுநலவாய அமைப்பைக் கண்டித்தார்கள்.
ஆகவே இன்று சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கையினுடைய வெளிநாட்டுக்கொள்கை ஒரு தளம்பல்நிலையை கொண்டிருக்கின்றது. உள்நாட்டுப்பிரச்சினையிலும் குறிப்பாக வன்னிப்பிரதேசத்தின் மீதான பேரினவாத இராணுவப் படையெடுப்பு சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது. வாழ்க்கைச்செலவு உயர்வு, வாழ்க் கைத்தரவீழ்ச்சி, கட்டுப்படுத்தமுடியாத பணவீக்கம், இனப்பிரச்சினைச் சிக்கல் போன்ற இன்னோரென்ன பிரச்சினைகளால் சிறிலங்காவில் உள்நாட்டுப் பொருண்மியம் தளம்பல் நிலையை அடைந்திருக்கிறது. ஆகவே இன்று உலக வரைப்படத்தில் சிறிலங்கா தோல்வியுற்ற நாடு அதற்கு எதிர்காலமே இல்லை என்ற குறியீட்டு அடையாளம் மேலும் மேலும் வலுப்பெற்றுவருகின்றது.
– பொன் பூலோகசிங்கம்
– மார்ச் 2008 எரிமலை
– தொகுப்பு: தமிழரசன் அப்துல்காதர்