
குமரபுரம் குண்டுவீச்சு – 10 அக்டோபர் 2008
குமரபுரம் கிளிநொச்சி நகர மையத்திலிருந்து ஏழு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இதன்மீது 10 அக்டோபர் 2008 அன்று நிகழ்த்தப்பட்ட வான்குண்டு வீச்சு, சன அடர்த்திமிக்க கிளிநொச்சி நகரமையம், மற்றும் அதனையண்டிய பகுதிகளில் நீண்ட நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட வான்;குண்டு வீச்சுக்களில் ஒன்றாகும். இக் காலம், இடம்பெயர்ந்த மக்களும், உள்ளுர்வாசிகளும், இக் குண்டுவீச்சுக்கள் காரணமாக மிகப்பெரிய அளவில் தமது இருப்பிடங்களைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்த காலமாகும். மேற்குறிப்பிட்ட குண்டுவீச்சில் ஒரு பாடசாலை ஆசிரியை, அவரது பத்துவயது மகள், மேலுமோர் பெண் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஆசிரியையின் கணவன், அவரது மகன், மேலும் பல பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த கணவன் இத் துயர சம்பவத்தின் பின்னர் பின்வருமாறு கூறினார்:
‘நான் பச்சிலைப்பள்ளி உதவி அரசாங்க அதிபர் பிரிவில், உள்ளுராட்சி அமைப்பு ஊழியன். எமக்கு மூன்று பிள்ளைகள் உண்டு. நாம் எமது சொந்த ஊராகிய பச்சிலைப்பள்ளியிலிருந்து ஆகஸ்ட் 2006 இல் இடம் பெயர்ந்தோம். அப்போதிருந்து கிளிநொச்சி குமரபுரத்தில் ஒரு மண்வீட்டைக் கட்டி வாழ்ந்திருந்தோம். அந்த துர்ப்பாக்கிய நாளில் நானும் மனைவியும், அன்று வேலைக்குச் செல்லும் முன்பதாக காலை 6.25 மணியளவில் அன்றைய சமையலில் ஈடுபட்டிருந்தோம். அந்நேரம் குண்டுவீச்சு விமானங்களின் இரைச்சல் கேட்டது.
நாம் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு பதுங்கு குழிக்கு ஓடினோம். எமது வீட்டைச் சுற்றி மூன்று குண்டுகள் வீழ்ந்தன. அவற்றில் ஒன்று எமது பதுங்கு குழிக்கு மிகவும் அண்மையில் விழுந்தது. எனது மனைவி தலத்திலேயே இறந்துவிட்டார். மகள் மூர்ச்சையாகிப் பின்னர் வைத்தியசாலையில் இறந்தாள். நானும் எனது மகனும் காயமடைந்ததுடன், குண்டு வெடித்தவுடன் மூச்சு விட சிரமப்பட்டோம். வெடிச்சத்தத்தினாலும், அதிர்ச்சியினாலும் எனது செவிப்புலன் பாதிக்கப்பட்டுள்ளது. நாம் மீண்டும் இடம் பெயர்ந்து இப்போது எனது உறவினருடன் வாழ்கின்றோம். இங்குதான் நாம் எனது மனைவி, மகள் இருவரினதும் ஈமச்சடங்கினை நிறைவேற்றினோம்’.
இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)
![]()