×

லெப் கேணல் மதனா 

லெப் கேணல் மதனா 

மட்டக்களப்பில் போராட்டத்திற்கு மேன் மேலும் ஆளணி சேர்ப்பதில் ஈடுபட்டு, பயிற்சி வழங்கி, படையணியைக்கட்டி வளர்த்ததில் இவர் பங்கு குறிப்பிடத்தக்கது. இக்கால கட்டம் இவர்களுக்கு மிகவும் வேதனையும் சோதனையும் நிறைந்த காலமாகவே இருந்தது. மட்டுநகர் காடுகளை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றுமுழுதாக ஆக்கிரமித்து இருந்த காலமது. அடிப்படை வசதிகள் கூட இன்றிய நிலையில் நம்பிக்கையும் மனவுறுதியும் பலமாக கொண்ட தருணங்களில் மதனா ஒருபோதும் சோர்வடைந்ததில்லை. தனது தோழிகளுக்கு தெம்பூட்டி உற்சாகப்படுத்துவார்.

இதன் பின்னர் படையணியைத்திரட்டி, அப்படையணிகள் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்களில் பங்குபற்ற வகைசெய்தார்.

கட்டுமுறிவு இராணுவத்தளத் தகர்ப்பு, தரவைக்குள் இராணுவத் தளத்தகர்ப்பு, 4ம் முச்சந்தி இராணுவத்தளத் தகர்ப்பு போன்ற பாரியதாக்குதல்களிலும் அனைத்து பதுங்கித்தாக்குதல்களிலும் திறம்பட செயலாற்றினார். 4ம் முச்சந்தி இராணுவத்தளத் தகர்ப்பின்போது கப்டன் அன்பரசி வீரச் சாவடைந்தார். அன்பரசி ஒரு சுறுசுறுப்பான விவேகமான போராளி. இவரும் மதனாவுடன் சேர்ந்து மகளிர் படையணியின் வளர்ச்சிக்கு தோளோடு தோள் கொடுத்து உதவியவர். அவரது ஞாபகமாகவே மட்டு அம்பாறை மகளிர் படையணிக்கு அன்பரசி படையணி என்று பெயர் சூட்டப்பட்டது. மதனாவின் சுறுசுறுப்பையும், துணிவையும், புரிந்துணர்வையும் களங்களில் படை நடத்தும் திறமையையும் கண்ணுற்ற தலைமைப்பீடம் மதனாவை அன்பரசி படையணியின் சிறப்புத்தளபதியாக நியமித்தது.

மதனா அன்போடும் அரவணைப்போடும் தன்தோழிகளுடன் ஆடிப்பாடி மகிழ்வார். தளத்தில் தாயாகவும், கடமையில் கண்ணியமாகவும் களத்தில் படைநடத்தும் தளபதியாகவும் நின்று போராளிகளை வழிநடத்திக்கொண்டிருந்தார். இவருக்கு சகதோழியருடன் சேர்ந்து விளையாடுவதென்றாலே பெருவிருப்பம். பின்னேரம் நான்கு மணியாகிவிட்டால் தன் படையணியினரை தளத்தில் தங்க விடமாட்டார். கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், வட்டக்காவடி, எனப்பல்வேறு விளையாட்டுக்காக சக தோழியர் அனைவரையுமே விளையாடுவதற்கு ஊக்கப்படுத்தி தானும் சேர்ந்து விளையாடு
வார். இதனால் ஒவ்வொரு போராளியின் மனநிலையும் சமநிலைப்படுகின்றது என்பது அவரின் எண்ணம்.

மதனா பங்கு பற்றிய தாக்குதல்களில் மக்கள் நிறைந்து வாழும் சந்திவெளி, முறக்கொட்டாஞ் சேனை, மாவடிவேம்பு ஆகிய இடங்களில் காவலுலா சென்ற சிங்கள இராணுவத்தினர் மீது மேற் கொண்ட தாக்குதல்கள் மக்கள் மனதில் இடம் பிடித்தன. இதில் பெருமளவு எதிரிகளும் இராணுவ தளபாடங்களும் அழிக்கப்பட்டன. மதனாவின் வழி நடத்தலில் பெண்புலிகளின் வீரங்கண்டு எதிரி அதிர்ந்தான். மக்கள் அதிசயித்தனர். புளுகுணாவ வெற்றிச் சமரிலும் மதனா தனது படையணியினருடன் பெரும் பங்காற்றினார். மட்டக்களப்பில் இவரின் பாதம் படாத மண்ணே இல்லையெனலாம். கிழக்குக்காடுகளின் காட்டு மரங்கள், மலைகள், அருவிகள் அத்தனையும் இவரை அறியும்.

1997.03.05 இல் கஜபாகு சிறப்புப் படையணினர் நிலை கொண்டிருந்த வவுணதீவு ஆக்கிரமிப்பு இராணுவத்தளம் மீதான தாக்குதலில் இவரது அணிக்கு ஒரு இலக்கு கொடுக்கப்பட்டது. அதி காலை 1.05 மணிக்கு சண்டை ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து எட்டு மணிநேர உக்கிர மோதல் தொடர்ந் தது. நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதும் எஞ்சிய எதிரிகள் திகில் அடைந்து ஓடத் தொடங்கினர். தனக்குக் கொடுக்கப்பட்ட பகுதியை வெற்றிகரமாகக் கைப்பற்றிய மதனாவின் குரல் ஆர்வத்துடன் தொலைத்தொடர்பு சாதனத்தில் ஒலித்தது.

“நாங்கள் எங்கள் பகுதியை முற்றாகப் பிடித்து கிளியர் பண்ணிவிட்டோம்”

களத்தில் அவரது பணி முடிந்த பின்னர் கூவிச் சென்ற எறிகணை ஒன்று இவரது உயிரைப் பறித் துக்கொண்டது. காயம்பட்ட தோழியொருத்தி மதனாவின் உடலைச் சுமந்தபடி வந்துகொண்டிருந்தார்.

மதனா… மகளிர் படைநடத்திய இளைய தளபதி அவர். அவரது பெயர் சொல்ல இன்று நீண்ட அணியாய் அவர்கள்.

– சுதாமதி
– சூரியப்புதல்வர்கள்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments