
கால்களில் வேகம் பூட்டி; காற்றாய் விரைவோம்.
மகளே!
கால்கள் வலிக்கிறதா?
கலங்காதே.
ஊருக்குத் திரும்பும் மகிழ்ச்சியில்
தூரம் குறுகிவிடும்.
இன்னும் சொற்ப தூரம்தான்.
மகளே எட்டிநட.
எம்மைப் பிடித்த பீடையொழிந்தது.
இருட்டு அழிந்தது.
எங்களூரில் வேர்விட்டிருந்த; கள்ளியும், நாகதாளியும் இல்லாதழிந்தனவாம்.
நெருஞ்சியும், நாயுருவியும் நீறாகிப் போயினவாம்.
இனித் தென்றல் வந்து தோளிலேறி விளையாடும்.
மேச்சல் முடிந்து வீடுதிரும்பும் மாடுகளின் மகிழ்ச்சியல்லவா எமக்கு?
மகளே!
நின்று; விழிகளைத் தூரவீசு.
அந்தோ ஊரின் எல்லை தெரிகிறது.
அந்த வயல்வெளிகளைக் கடந்து விட்டால் அதற்கப்பால் பனைக்கூடல் ஒன்றுவரும்.
அதையும் கடந்து நடந்தால் …
மணிப்புறாவும், ஆட்காட்டியும். கௌதாரியும் குடியிருக்கும் பரந்தவெளி விரிந்து கிடக்கும். அதையும் கடப்போம் அதற்கப்பால்.
வெள்ளைமணல் விரித்த கடற்கரை வரும் ஈரம் சுவறிய கரையின் மீது பாதம் நனைய நடந்து போனால் ‘பூதவராயர் கோயில்’ வரும் அந்தக் கோயிலின் பக்கமாகவே முன்னரெம் குடியிருப்புக்கள் இருந்தன. மகளே !
அப்போது உனக்கு இரண்டு வயது திடுமென ஒருநாள் எங்களூருக்கு “இயமன்” வந்தான் அவனோடு ஆயிரம் “கிங்கரர்” வந்தனர். ஊர்முழுதும் தீக்குளித்தது. எண்ணையூற்றி எரித்ததால் ஊரின்முகம் கருகிப் போனது. வீடு – வயல் – தோட்டம் – துரவு கோயில் – பசு கன்று – மரங்கள் ஆண்கள் – பெண்கள் சிறுவர் – கிழடுகள் எல்லாமே எரிந்து போயின. கோயிற் கிணற்றில் தண்ணீரள்ளப்போன உன்தாயும் நெசவடிக்கப் போன உன் அக்காவும் அன்று வீடு திரும்பவில்லை. மீண்டும் வரவேயில்லை. அன்று உன்னை வாரியெடுத்து ஓடிவந்தேன். அதன்பிறகு இன்றுதான் வீடு திரும்புகின்றோம். மகளே! எங்கள் வீடு பத்து வருடங்கள் நாங்களிருந்த அகதிமுகாம் போன்றதல்ல….
மகளே! அது அழகான வீடு.
அத்திவாரத்திலிருந்து கோப்பிசம் வரையும்
என் வியர்வையில் நனைந்தவீடு.
முற்றத்தில்…..
உன் அக்கா வளர்த்த பூங்கன்றுகளின்
முகங்கள் தினசரி சிரிக்கும். விதம், விதமான நிறங்களில்
கொள்ளையழகு குடியிருக்கும். கிணற்றடியில் செவ்விளனீர்க் கன்று குலைதள்ளியிருக்கும் வீட்டுக்குப் பக்கத்தில் இரண்டு வேப்ப மரங்கள் தலையாட்டிச் சுகம் கேட்க ஜில்லென்று காற்று வீசும். குயில்கள் வந்திருந்து கூவும். மைனாக்கள் ஏதேதோ பேசும். உன் வீடு அழகானதென்பதை பார்த்ததும் ஏற்றுக்கொள்வாய். மகளே ! ஐயோ என்மகளே! பூதவராயர்கோவிலைக் காணவில்லையே என்னயிது? பூமி பிளந்து என்னை விழுங்குகிறதா? மகளே! இதுதான் எங்கள் வீடிருந்த இடம். அப்போ எங்கள் வீடு எங்கே? என் மனைவி எங்கே? உன் உடன்பிறப்பு எங்கே? பன்னிரண்டு வயதான என் சின்னமகளே! விடுதலைக்கு நாங்கள் பெரிய விலை கொடுத்துவிட்டோம். வா மகளே !
இங்கேதான் அந்த வேப்பமரங்கள் நின்றன.
இந்த இடத்தில்
இனியொரு கொட்டில்கட்டிக் குடியிருப்போம்.
– புதுவை இரத்தினதுரை
வெளிச்சம் – பங்குனி 1995.