×

பல தமிழர்கள் மறந்துவிட்ட ஒருபுத்தகம்

பல தமிழர்கள் மறந்துவிட்ட ஒருபுத்தகம் பழந்தமிழரின் வீரப்பெட்டகமாகிய புறநானூறு.

தன்பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவையுண்டு. தான் உண்டு. என்ற சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்ட சிறியவர்களாகிப் போனவர்களின் குருதி ஓட்டத்தில் வீர உணர்ச்சி முழுமையாக விடுபட்டுப் போய்விட்டது. போகவே,
புற நானூறு போன்ற வீர எழுச்சிப் புத்தகங்கள் அவர்களுக்குத் தேவையில்லை. என்னைப் பொறுத்த வரை. ‘வீரமே தமிழினத்தின் உயிர்மூச்சு, அது இருக்கும் வரையில் தமிழன், தன் இனமானம் காக்கும் தமிழ் மனிதனாக வாழ்கிறான், அதைத் துறந்துவிட்ட உடனேயே. அவன் வெற்றுடம்பாக வீழ்ந்து போகிறான். எனவே தமிழ் இன வழித்தோன்றலாகிய எனக்கு, வீரக் கனல் ஏற்றும் புறநானூறு அடிப்படைத் தேவைகளையும் மிஞ்சிய ஓர் உயிர்த்தேவை. அதைப் படிக்கிறேன். அடிக்கடி படிக்கிறேன்.

ஒளியுடைய ஒருவன்
ஒருநாள் அந்த வீர ஏட்டின் இதழ்களைப் புரட்டிக் கொண்டு இருந்தபோது. தமிழ் ஈழ விடுதலை மறவன் வே. பிரபாகரனைப் பற்றிய ஒரு பாட்டு, அப்போதே, அந்தப் புத்தகத்தில் வைர வரிகளால் வரையப்பட்டிருப்பது கண்டு வியப்படைந்தேன்! வீரம் என்பது காலம் கடந்தது. அது எப்போதும் ஒரே விதமாகத்தான் இருக்கிறது. அதை வெளிப்படுத்தும் வீரனைப் பற்றிய நெருப்புவரிப் பாட்டும் அன்றும், இன்றும், என்றும் ஒரே விதமாகத்தான் இருக்கிறது!

3000 ஆண்டுகளுக்கு முன்பே. இந்தப் பிரபாகர மறவனை முன்னுணர்ந்து புறநானூற்றுப் புலவன் பாடிய (புறம் 309 ஆம்) பாடல் இது. ஒரு போர்வீரன் தன்னுடைய வீரத் தளபதித் தலைவனைப் பற்றிச் சொல்லும் பாடல்,

“இரும்பு முகம் சிதைய நூறி
ஒன்னார் இருஞ்சமம் கடத்தல்
ஏனோர்க்கு எளிதே
நல்லரா உறையும் புற்றம் போலவும் கொல்லேறு திரிதரு மன்றம் போலவும்
மாற்றருந் துப்பின் மாற்றோர் ‘பாசறை உளன்’ என
வெரூஉம் ஓர் ஒளி
வலன் உயர் நெடுவேல் என்னைக் கண்ணதுவே”

மற்றுள்ள புகழ்வாய்ந்த வீரர்களோடு தன் தலைவனை ஒப்பிட்டு பார்க்கிறான் இந்தப் போர்வீரன். அந்த வீரர்களும் களம் பல கண்ட காளைகளே. பல போர்முனைகளில் மாற்றாரை வென்று ஆர்ப்பரித்த மறவர்களே. ஆனாலும், இவனுடைய தலைவனுக்கு இருக்கின்ற ஒரு புகழ் அவர்களில் யாருக்கும் கிடைத்ததில்லை. கிடைத்ததாக அவன் கேள்விப்பட்டதில்லை.

அது என்னவென்றால் அந்த மறவர்களை எதிர்த்து அவர்களின் பகைவர்கள் போர் புரிவார்கள், தோல்வியடைவார்கள். இவர்கள் வெற்றி பெற்றுக் களிப்படைவார்கள். எனினும் அவர்களில் எவர் ஒருவரைக் கண்டும் பகைவர்கள், முன்வந்து போரிடாமல் முதுகு திருப்பி ஓடியதில்லை.

இவனுடைய தலைவனின் நிலையோ முற்றிலும் வேறுபட்டது. முழுமையான உயர்வு பெற்றது! இவனுடைய எதிரிகள் இவனிடம் போருக்கு வந்து தோல்வி அடையவில்லை. போருக்கு வராமலே அவர்கள் தோல்வி அடைந்து போகிறார்கள்.

காரணம் இவன் பாசறையில் இருக்கிறான் என்றாலே ஒரு விதமான நடுக்கம் அவர்களின் உள்ளத்தில் கொடுக்காகக் கொட்டத் தொடங்கி விடுகிறது. அவன் போருக்கு வந்திருக்கிறானா? பாசறையிலே இருக்கிறானா? அவன் வந்து இருக்கிறான் என்றால், நம் கதி அதோகதிதான்! என்று அவனை நேரில் பார்ப்பதற்கு முன்பே. அஞ்சி நடுங்கி அலமருகிறார்கள்.

இதுதான் பகைவரை வெல்லுகின்ற மற்ற வீரர்களுக்கும் இவனுடைய தலைவனாகிய அந்த மாவீரனுக்கும் உள்ள வேறுபாடு. இவன் பாசறைக்கு வந்திருக்கிறான் என்றாலே. இந்தப் பாசறையை “நல்லரா உறையும் புற்றம் போலவும் கொல்லேறு திரிதரு மன்றம் போலவும்” கருதி அஞ்சிப் பதைபதைக்கிறார்கள். அந்த எதிரிகள். அதாவது அவன் இருக்கிற பாசறையை நினைத்தால், நல்ல பாம்பு வசிக்கிற பயங்கரமான புற்றும், யாரையும் குத்திக் கொல்லுகிற கூரிய கொம்புகளோடு முரட்டுக் காளை ஒன்று வலம் வருகிற ஊர்ப் பொது இடமும்தான்(ஏறுதழுவுதல் நடக்கும் திடல்) அவர்களுக்கு நினைவுக்கு வருகின்றன. அவன் இருக்கிற பக்கம் நெருங்கி நடக்கவே அவர்கள் அஞ்சுகிறார்கள்!

வள்ளுவத்தலைவன் ஒருவன். தன்னுடைய வீரத்தைக் குறித்து (குறள் 1088) ‘ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும் என் பீடு’ என்று சொல்லிப் பெருமிதமடைகிறான். இவனை நினைத்தால். இவனோடு மோத முடியாது என்பது மட்டுமல்ல, நினைத்த மாத்திரத்திலேயே ஓர் அச்ச நடுக்கமும் அவனுடைய எதிரி களுக்கு உண்டாகிறது. சற்றேறக்குறைய இதே நிலையில் தான் புறநானூற்று வீரனையும் அவனுடைய படைமறவன் காண்கிறான்.

புகழ் ஒளி புதுக்கிய பிரபாகரன்
இந்த செய்திகளை நினைக்கும் போது தமிழ் ஈழத் தளபதி, தம்பி -பிரபாகரன் தான் நம்முடைய நினைவிலே எழுந்து நிற்கிறான்.’

தமிழ் வரலாறு பல்லாயிரம் போர் மறவர்களைச் சந்தித்திருக்கிறது. அவர்களில் சில நூறு பேர்களாவது தத்தம் அளவில் இணை சொல்ல முடியாத தறுதண்மையாளர்களாக விளங்கியவர்களே. இவர்களைப் பாராட்டும் நடுகற்களும், கல்வெட்டுகளும், புகழ்ச்சிப் பாட்டுகளும் வெகு தாராளமாகவே உள்ளன. இடைக்காலத்திலே கூட, கங்கை கொண்டவன் என்றும் கடாரம் வென்றவன் என்றும் களப்பிரர் இருட்டைக் களைந்தெறிந்தவன் என்றும் பலபேர் இருந்திருக்கிறார்கள். இத்தனை பேர் ஆட்சி செய்து மாட்சிகள் விளைவித்த பின்னும் தமிழ் இனத்தின் தனிப்பெரிய வீரப்புகழ் உலகின் மற்றப் பகுதிகளில் சென்று படர்ந்து நிலைக்கவில்லை .

வெகு தொலைவில் உள்ள நாடுகளிலே மட்டுமல்ல, இந்தியாவில் விந்தியமலைக்கு வடக்கே உள்ள நிலப்பரப்பிலே கூடத் தமிழர்கள் தமிழர்களாக அறியப்பட்டிருக்கவில்லை. (இன்றைக்கும் வட இந்தியாக்காரர்கள் தமிழகத்துத் தமிழர்களை மதராசிகள் என்ற பெயரிலேயே அழைக்கிறார்கள்) மாண்புயர்ந்த தமிழ் மொழி ஒன்று உள்ளது என்பதையே, மேலை நாட்டுப் பாதிரிமார்கள்தான் கண்டெடுத்து உலகுக்குச் சொல்ல வேண்டியிருந்தது. அந்த அளவுக்கு, தமிழினத்தின் இறங்குமுக வரலாறு தாழ்ந்து தாழ்ந்து தரைதட்டிக் கிடந்தது.

இந்தியத் துணைக்கண்டத்தில் தமிழ் இனம் என்ற ஒரு மக்கட் கூட்டம் இருக்கிறது என்கிற செய்தி உலக மக்களில் 100க்கு 99 பேருக்குத் தெரியாமலே இருந்தது. அண்மைக் காலமாக இங்கே ஆட்சிக் கட்டிலுக்குப் போட்டி போட்ட கட்சிக்காரர்கள், படுகேவலமான இந்தப் பச்சை உண்மையை மறந்துவிட்டு. புரட்சிக்கவிஞர் சொன்னது போல, “தோளிலே மிடுக்காம்? அவர் தொழுவதோ வடக்காம்!” என்ற பாணியிலேயே செயல்பட்டுக் கொண்டு திரிந்தார்கள். திசைகெட்ட இந்தத் திரிவின் விளைவாக, பல்லாயிரம் ஆண்டுகளாக மங்கிக் கொண்டு வந்த தமிழரின் இனமானம் இருளடைந்தே போய்விட்டது.

அந்தப் பெரிய இருட்டைக் கிழித்துக் கொண்டு கிழக்கிலே எழுந்தான் ஒரு மாந்தமிழ் மறவன். அவன்தான் பிரபாகரன், ஈழத் தமிழரின் விடுதலைப் போர்முனையை வெற்றித் திசையில் நடத்திவரும் தமிழர் தளபதி பிரபாகரன்!

சற்றே எண்ணிப் பாருங்கள், தாய்த் தமிழகத்திலே விடுதலை உணர்வு அநேகமாகப் புதைக்கப்பட்டுப் போன நிலையில் ஈழத் தமிழகத்தில் அது பிடர் சிலிர்த்து எழுந்தது. அந்த எழுச்சி பல்வேறு வடிவங்களாக உருமாறி உருமாறி, பிரபாகர வீரனின் தலைமையில் புலிப்படையாக மீசை முறுக்கியது.

நான் வீரன், நீ வீரன் என்று நாத் துடிக்கப் பேசிக் கொண்டு, ஈழத்திலும் வேறு சிலர் கிளம்பினார்கள். அவர் களெல்லாம் அரை வழியில் நின்று அந்நியர்களின் பைக்குள் அடக்கமாகிப் போன பிறகும், புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் முழக்கோடு புறப்பட்டது புலிப்படை. வீர வித்தகன், தளபதி வே. பிரபாகரனின் தலைமைத் தடத்தில் நடைகொண்டது அந்தப் படை.

புறநானூற்றுப் பாடலிலே ஒரு போர்வீரன் சொன்னது போல, “இரும்பு முகம் சிதைய நூறி, ஒன்னார் இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே” என்று சொன்னது போல ஈழத்திலும் பலபேர் தங்களுக்குத் தாங்களே! ‘போராளிகள்’ என்று பெயர் வைத்துக் கொண்டார்கள், அவர்களுக்கு ஆயுதங்களும் பயிற்சிகளும் ஆடம்பரச் செலவுக்குப் பணமும் தந்திட அண்டைநாட்டு நயவஞ்சகர்கள் காத்திருந்தார்கள்.

ஆனாலும் பிரபாகரப் பெருவீரன் தலையெடுத்த பிறகு தான்.”தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அதற்கொரு குணம் உண்டு!” என்னும் தமிழத் தனிச்செய்தி உலகெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. பிரபாகரனின் புலிப்படை போர்முனைக்கு வந்தபிறகே,விடுதலை புலிகளைச் சாதாரணமாக நினைக்கக் கூடாது என்கிற அச்சம் கலந்த உணர்வு தமிழின் எதிரிகளுக்கு ஏற்பட்டது.

குறிப்பாக, இந்தியாவும் சிறீஇலங்கையும் ஓர் உலக்கைக் கொழுந்து ஒப்பந்தத்தைச் செய்து கொண்டு, போராளிகள் என்று பேர் வைத்துக் கொண்டு திரிந்த புல் பூண்டுகளை எல்லாம் கிள்ளி எடுத்துத் தங்கள் பெட்டிக்குள் போட்டுக் கொண்ட போதுதான். ‘தமிழனுக்கும் வீரம் உண்டு, அது எவனுக்கும் தலைவணங்காது’ என்கிற வரலாற்றுப் பேருண்மை. பிரபாகரத் தீரனின் வடிவிலே ஒரு பெரிய புதிய உதயம் செய்தது.

இந்தியக் கொலைப்படை மட்டும் என் உதவிக்கு வராதிருந்தால் நான் பிரபாகரனின் காலில் விழநேர்ந்திருக்கும்” என்று புலம்பினான் சிங்கள ஆட்சித் தலைவன், “பிரபாகரனையும் அவனுடைய புலிப்படையையும் மட்டும் பிடித்து அடைத்துவிட்டால் தமிழ் ஈழ விடுதலைப் போருக்கே முற்றுப்புள்ளி வைத்து விடலாம்” என்று இன்றைக்கும் மனத்துக்குள் கொறித்துக் கொண்டு இருக்கிறது அமைதிப்படை என்ற பெயரிலே ஒரு அமளிப்படையைப் பிரபாகர வீரன் மேல் ஏவிவிட்ட இந்திய அரசாங்கம்!

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments