×

அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள் – மீறாவோடை

அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள்.
~~~~~~~~~~~~~~~
மீறாவோடை

கடந்த காலங்களில் குறிப்பாக 1990 ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானதன் பின்னர் பல தமிழ் கிராமங்கள் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டு வந்ததைக் கடந்த கால நிகழ்வுகள் தெரிவிக்கின்றன.

சில கிராமங்களில் மக்களை அச்சமடைய வைக்கும் விதத்தில் படையினராலும் படையினருடன் இணைந்து செயற்பட்டு வந்த ஊர்காவல்படை மற்றும் ஏனைய குழுக்களாலும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் உடமைகள் அழிக்கப்பட்டதாலும் பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு மக்கள் தமது வீடு வாசல்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவ்வாறான வெளியேற்றங்கள் மைலந்தனை போன்ற மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருந்தது. வெகுதொலைவில் நகரத்துடன் உடனடித் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாது தனித்து விடப்பட்ட எல்லைக் கிராமங்களில் மாத்திரமின்றி நகரத்துக்கு அண்மையாக அருகருகாக பல கிராமங்கள் அமைந்திருந்த தமிழ் முஸ்லிம் எல்லைக் கிராமங்களில் கூட நடந்துள்ளன.

இவ்வாறான வெளியேற்றங்கள் தமிழ் கிராமங்களை மாத்திரமின்றி முஸ்லிம் கிராமங்களையும் பாதித்தன என்பதே உண்மை. இதில் மற்றொரு விடயம் என்னவென்றால் இந்தக் கிராமங்கள் மீதான தாக்குதல்களுக்கும் உடமைகள் சூறையாடப்பட்டதற்கும் அப்பாவித் தமிழ் மக்களோ முஸ்லிம் மக்களோ காரணமல்ல.

இரண்டாம் கட்ட ஈழப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலும் சரி அதற்கு முந்திய 1985 ஆம் ஆண்டு காலத்திலும்சரி சிறிலங்கா அரசும் அதன் படைகளும் தமிழ் – முஸ்லிம் மக்களிடையே இனவிரிசலை ஏற்படுத்தி கலவரங்களை உண்டாக்கும் கருமங்களிலேயே கூடுதல் கவனம் செலுத்தின. இவ்வாறான கலவரங்களை உருவாக்கினால் தமிழீழப் போராட்டத்தை நசுக்கிவிடலாமென இச்சக்திகள் சதித் திட்டங்களைத் தீட்டின.

இதற்கு முஸ்லிம் சமுகத்தில் இருந்து இளைஞர்கள் ஊர்காவல் படைக்குச் சேர்த்து அவர்களுக்கு பயற்சியும் வழங்கி ஆயுதங்களுடன் நடமாட வைக்கப்பட்டது. அது மாத்திரமன்றி இரு சமுகத்திற்கு மிடையில் ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் திரைமறைவில் நடத்தின. முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்துதல், கொலை, கடத்தல், சொத்துக்களைச் சேதமாக்குதல் போன்ற சம்பவங்ளை நடத்துவதன் மூலம் அச்சமுகத்தைச் சேர்ந்த ஊர்காவல் படையினர் பதில் தாக்குதலை நடத்தும் வகையில் தூண்டுதல் முயற்சிகளையும் மேற்கொண்டன.

முஸ்லிம் சமுகம் மீதான இவ்வாறான சம்பவங்கள் முழுக்க முழுக்க சதித்திட்டத்தினால் நடக்காது போனாலும் சிலவற்றில் உண்மைகள் இருந்தாலும் 1985 மற்றும் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் திட்டமிட்டு, சதி முயற்சிகளாகவே பல சம்பவங்கள் இடம்பெற்றன.

ஏனெனில் 1985 ஆம் ஆண்டு காலங்களில் அதாவது 1984 ஆம் ஆண்டு மொசாட் திட்டத்தின் கீழ் விசேட அதிரடிப்படையினர் அமைக்கப்பட்டதன் பின்னர் தமிழ் முஸ்லிம் கலவரங்களைத் தூண்டி விடுவதிலேயே அதிரடிப்படையினர் அதிக கவனம் செலுத்தினர். இது மொசாட் திட்டத்தின் படி நடைபெற்றது. இக்காலகட்டங்களிலும் தமிழ் முஸ்லிம் சமுகத்திற்கிடையே பல கலவரங்கள் இடம்பெற்றதுடன் எல்லைக் கிராமங்களில் இருந்து இடம்பெயர்வுகளும் ஏற்பட்டன.

இதன்பின் 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இந்தியப் படைகள் இலங்கைக்கு வந்து தமது அட்டூழியங்களை நடத்திக் கொண்டிருந்தபோது இந்தியப் படைகள் ஒரு விளக்கமும் இல்லாமல் முஸ்லிம் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார்கள்.

இந்த வேளையில் விடுதலைப்புலிகள் இந்தியப்படையினர் மீது தாக்குதல் தொடுத்துக் கொண்டிருந்தபோது புலிகளுக்கு சில பகுதிகளில் உள்ள முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்கி வந்தனர். இச்சம்பவங்களை அப்போது இலங்கைப் படையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

1989 ஆம் ஆண்டு இந்தியப் படை நாட்டை விட்டுத் தோல்வியுடன் திரும்பியதை அடுத்து மீண்டும் இலங்கைப் படையினர் தமதுகைவரிசையைக் காட்டத் தொடங்கினர். இந்த நிலையில் 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் – முஸ்லிம் கலவரங்களைத் தூண்டி விடுவதில் இலங்கை அரசும் படையினரும் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கினர்.

இவ்வாறான சதித்திட்டங்களை சரியாகப் புரிந்துகொள்ளாத தமிழ் – முஸ்லிம் மக்கள் கடந்த காலங்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன் நீண்டகாலமாக ஒற்றுமையாகவும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வந்த வாழ்க்கையும் சீர்குலைக்கப்பட்டது. இந்த இனவிரிசல் இன்றுவரை பல பகுதிகளில் தொடர்ந்து வருவதுதான் துரதிஸ்டவசமானதாகும்.

கடந்த காலங்களில் இடம்பெற்று வந்த இவ்வாறான திட்டமிட்ட செயற்பாடுகளினால் தற்போதும் பல கிராமங்கள் அழிந்த வண்ணமே உள்ளன. இதற்கு வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள மிறாவோடை தமிழ் கிராமம் நல்லதொரு உதாரணமாகும். இக்கிராமத்தைச் சென்று பார்த்தால் அங்கு ஏற்பட்ட அனர்த்தங்களின் வடுக்கள் இன்றும் உள்ளதை அறியலாம்.

மிறாவோடை தமிழ் கிராமம் வாழைச்சேனை பிரதேசத்தில் மேற்காக வாவியோரத்தில் அமைந்துள்ளது. இக்கிராமத்திற்கு எல்லைக் கிராமங்களாக வடக்கே மிறாவோடை முஸ்லிம் கிராமம் கிழக்கே கொண்டயன்கேணி கிராமமும் தெற்கே கிண்ணையடி கிராமமும் உள்ளன.

வாழைச்சேனை பிரதேசத்தில் மிகவும் பழமை வாய்ந்த கிராமங்களில் ஒன்று மிறாவோடை தமிழ் கிராமம். ஆயிரத்து எண்ணூற்றுக்கு முற்பட்ட காலத்தில் இக்கிராமம் உருவாக்கம் பெற்றுள்ளது. வாழைச்சேனை பிரதேசத்தை எடுத்துப் பார்க்கையில் மிறாவோடை கிராமத்தில் வாழ்ந்தவர்களே பிற்பட்ட காலங்களில் வாழைச்சேனை மற்றும் அயற் கிராமங்களில் குடியேறியுள்ளனர். வாழைச்சேனையில் தற்போதுள்ள படித்தவர்களும் உயர் தொழில்களில் உள்ளவர்களின் பரம்பரைக் கிராமமாக மிறாவோடையே இருந்துள்ளது.

இக்கிராமத்தில் உள்ள ஓடையொன்றில் முறாக்கை என்று அழைக்கப்படும் மீன் உருவாகுவதாகும் அந்த மீனை அங்குள்ள மக்கள் பிடிப்பதாலும் முறாக்கையோடை என்ற பெயரே முன்பு இக்கிராமத்திற்கு இருந்துள்ளது. பின்னர் அது மருவி முறாவோடை என்று வழங்கலாயிற்று.

ஆனால் தற்போது அப்பழமை வாய்ந்த பெயருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இக்கிராமம் அழிந்தது மாத்திரமின்றி அதன் அடியொற்றலாக பெயரும் அழிக்கப்பட்டு மீராவோடை என்று மாற்றப்பட்டுள்ளது. இதற்கு அங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதுடன் இக்கிராமத்தின் பெயரை மிறாவோடை என்றே அழைக்கவேண்டுமெனவும் இப்பெயரே பதிவுகளில் இடம்பெற வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மிறாவோடை தமிழ் கிராமம் நல்ல சூழலில் வளங்கள் நிறைந்ததாகவே இருந்து வந்தது. முன்னர் அயற்கிராமங்களுடன் ஒப்பிடும்போது இக்கிராமத்திலேதான் அதிகமான கல்வீடுகள் இருந்ததுடன் வசதி படைத்தவர்களும் வாழ்ந்தனர்.

தமிழ் கிராமமும் முஸ்லிம் கிராமமும் அருகருகாக அமைந்திருந்ததால் இரு சமூகத்திற்குமிடையில் நல்ல உறவு இருந்தது. அவர்கள் அன்னியோன்னியமாகவே வாழ்ந்து வந்தனர். இரு சமுகமும் நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வதும் பண்டிகைக் காலங்களில் விருந்துண்டு மகிழ்வதும் வழக்கம்.

இக்கிராமத்தில் ஆரம்பத்தில் 460 குடும்பங்கள் இருந்தன. கிராமத்தின் மத்தியில் முருகன் ஆலயம், பிள்ளையார் ஆலயம், காளிகோயில் என்பன இருந்ததுடன் வருடாவருடம் உற்சவங்கள் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டும் வந்தன.

வாழைச்சேனை பிரதேசத்தில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு சில பாடசாலைகளில் இங்குள்ள பாடசாலையே பழமை வாய்ந்ததாக அறியப்படுகின்றது. இப்பாடசாலையில் கல்வி கற்றவர்கள் தற்போது உயர் தொழில்களில் உள்ளனர்.

இவ்வாறு வரலாறு மிக்க பெருமை வாய்ந்த கிராமம் இன்று அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளது. இங்கு முதலாவது கிராம அழிப்பு 1985 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் இப்பகுதியில் இடம்பெற்ற வன்செயல்கள் காரணமாக தமிழ் – முஸ்லிம் சமுகத்திற்கிடையில் கலவரங்கள் ஏற்பட்டன. இக்கலவரத்தில் மிறாவோடை தமிழ் கிராமமும் இலக்கானது.

இனக்கலவரத்தைத் தூண்டிவிட்ட படையினரும் சில சக்திகளும் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முஸ்லிம் சமுகத்தில் இருந்த இளைஞர்களைப் பயன்படுத்தின. மறைமுகமாக படையினர் செயற்பட்டனர்.

இக்கலவரம் காரணமாக மிறாவோடை தமிழ் கிராமத்தில் வாழ்ந்து வந்த குடும்பங்களில் பெரும்பாலானவர்கள் தமது வீடு வாசல்களை விட்டு வெளியேறினர். இதில் கிராமத்தின் முன்னணி எல்லையில் வாழ்ந்து வந்த சலவைத் தொழிலாளர்கள் முற்று முழுதாக இடம்பெயர்ந்ததுடன் கிராமத்தின் மத்தியில் பாடசாலை அமைந்திருந்த மத்திய பகுதி வரையிலான குடும்பங்கள் இந்த இடம்பெயர்வால் வெளியேறின.

அன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சமும் பீதியும் நிலவியதால் இடம்பெயர்ந்தவர்கள் தமது வீடு வாசல்களைச் சென்று பார்க்கவோ பராமரிக்கவோ முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பல வீடுவாசல்கள் உடைத்துச் சேதப்படுத்தப்பட்டதுடன் பொருட்களும் சூறையாடப்பட்டன.

இதனால் இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் தமது இருப்பிடங்களுக்குத் திரும்ப முடியாத நிலையே இருந்து வந்தது. இந்த நிலையில் பாடசாலை அமைந்துள்ள பகுதியில் இருந்து கிண்ணையடி நோக்கிய பகுதிகளில் மாத்திரம் மக்கள் வாழ்ந்து வந்தனர்.

இதையடுத்து 1990 ஆம் ஆண்டில் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானதை அடுத்து நிலமை மேலும் மோசமானது. மீண்டும் வன்செயல்கள் தலைதூக்கத் தொடங்கின. இக்கால கட்டத்தில் முஸ்லிம் கிராமங்களின் பாதுகாப்புக்கென ஊர்காவல் படையின் காவலரண்கள்,
இயங்கத் தொடங்கின. இதனால் மிறாவோடையில் வாழ்ந்த தமிழ் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மேலும் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்தன.

இந்த நிலையில் கிண்ணையடி இராணுவ முகாமின் ஒரு பகுதியாக மிறாவோடையில் பாடசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த பல வீடுகளைக் கொண்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டது. இந்த முகாம் அமைக்கப்பட்டதை அடுத்து முகாமின் பாதுகாப்புக்கென அப்பகுதியில் பொதுமக்களால் கைவிடப்பட்டிருந்த வீடுகள் இராணுவத்தினரால் புல்டோசர்களின் மூலம் தரைமட்டமாக்கப்பட்டன. பல மரங்கள் வெட்டப்பட்டதுடன் வாவி வரையிலான பகுதிகள் வெட்டவெளியாக்கப்பட்டன .

எல்லைப் பகுதியில் எஞ்சிய வீடுகளின் கூரைகள் இராணுவத்தினரின் உதவியுடன் அப்பகுதியில் வாழ்ந்த சிலரினால் இரவோடிரவாக கழற்றப்பட்டும் கதவு நிலைகள் அகற்றப்பட்டும் கொண்டு செல்லப்பட்டன. சில வீடுகளின் கூரைகள் இராணுவ முகாமின் காவலரண்களுக்கும் பயன்படுத்தப்பட்டன.

இவ்வாறு பாடசாலைக்கும் முஸ்லிம் கிராமத்திற்கும் இடைப்பட்ட தமிழ் பகுதியில் இருந்த 275 வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டதுடன் பிள்ளையார் ஆலயம், காளிகோவில், முருகன் ஆலயம் என்பனவும் உடைக்கப்பட்டன.

காளிகோவில் மற்றும் பிள்ளையார் ஆலயம் என்பன இன்றும் அரைகுறை நிலையில் காணப்படுகின்றன. வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு அடித்தளங்களே அதிகம் உள்ளன. ஒரு சில வீடுகள் இடிந்தவாறு கிடக்கின்றன .

90 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்த அச்சநிலையினால் பின்னர் ஏறக்குறைய அனைத்துக் குடும்பங்களும் வாழைச்சேனை, சுங்கான்கேணி, கண்ணன்கிராமம், விநாயகபுரம் ஆகிய இடங்களுக்கு இடம்பெயர்ந்ததால் பாடசாலை இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து பாடசாலையைத் தற்காலிகமாக கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் மாலை நேரத்தில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு அங்கு மாற்றப்பட்டது. ஆனால் வாழைச்சேனை மற்றும் கண்ணன்கிராமம் ஆகிய இடங்களிலேயே மக்கள் அதிகம் இடம்பெயர்ந்து வாழ்ந்ததால் சில மாதங்களின் பின் இப்பாடசாலை கண்ணன்கிராமத்திற்கு அருகிலுள்ள விநாயகபுரம் பாடசாலைக்கு மாற்றப்பட்டு அங்கும் மாலை நேரத்தில் இயங்கியது.

எனினும் இப்பாடசாலையில் கல்வி கற்று வந்த சுமார் 300 மாணவர்களில் பெரும்பாலான மாணவர்கள் இப்பாடசாலையில் இருந்து விலகி வாழைச்சேனை, வினாயகபுரம், பேத்தாழை, கறுவாக்கேணி ஆகிய பாடசாலைகளில் சேர்ந்ததால் மிறாவோடை பாடசாலையில் மாணவர்களின் தொகை நூற்றுக்கும் குறைவாகவே இருந்தது.

மிறாவோடை கிராமத்தில் இருந்த பொது நிறுவனமான இப்பாடசாலை இயங்கியதாலேயே முன்னர் இக்கிராமத்தில் மக்கள் தங்கியிருந்தனர். ஆனால் பாடசாலை மாற்றப்பட்டதும் கிராமம் முற்றாக வெறிச்சோடியது. இதனால் அங்கு மக்கள் செல்லவே பயந்தனர். பகல் வேளையில் ஒரு சில ஆண்கள் இக்கிராமத்திற்குச் சென்று வந்தனர். அவ்வாறு சென்று வந்தவர்களில் சிலர் காணாமல்போயினர். இவர்களை ஊர்காவல் படையினரே பிடித்துச் சென்றதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இவ்வாறு சுமார் பத்து பேர் வரை பிடித்துச் செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் பெண்களும் அடங்கியுள்ளனர்.

இதன் பின் 1995 ஆம் ஆண்டில் புலிகளும் சந்திரிகா அரசாங்கத்திற்கும் இடையில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டவேளையில் நிலமை ஓரளவு சுமுகமானதை அடுத்து இக்கிராமத்தின் கிண்ணையடியை அண்டிய பகுதியில் மாத்திரம் ஒரு சில குடும்பங்கள் மீளக்குடியமர்ந்தன. ஆனால் கிராமத்தின் மத்தியில் முகாம் அமைந்திருந்ததாலும் வீடுகள் தரைமட்டமாக்கப் பட்டிருந்ததாலும் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர முன்வரவில்லை. அவர்களின் பலர் வினாயகபுரம்,
கண்ணன்கிராமம் ஆகிய இடங்களிலேயே தொடர்ந்து வசித்து வந்தனர். இதனால் பாடசாலையை உடனடியாக அங்கு ஆரம்பிக்க முடியாத நிலை இருந்தது.

மீளக்குடியமர்ந்தவர்கள் தமது பிரதான தொழிலான மீன்பிடியையே நம்பியிருந்தனர். ஆனால் இரவில் இவர்கள் மீன்பிடிக்க கூடாதெனவும் பகலில் மாத்திரம் குறிப்பிட்ட சில இடங்களில் மீன்பிடிக்க முடியும் எனவும் படையினர் உத்தரவிட்டிருந்தனர். அத்துடன் மீன்பிடிக்கச் செல்பவர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்படுவதும் தாக்கப்படுவதும் தொடர்ந்ததுடன் சில வேளைகளில் துப்பாக்கிச் சூட்டுக்கும் இலக்காக வேண்டி இருந்தது. இதனால் மீளக்குடியமர்ந்தவர்களின் தொழிலும் பாதிக்கப்பட்டதுடன் அவர்கள் வருமானமின்றி வறிய வாழ்க்கை வாழ்ந்தனர்.

அடுத்த இரண்டொரு ஆண்டுகளில் சுமார் ஐம்பது குடும்பங்கள் வரை மிறாவோடையில் மீளக்குடியமர்ந்தன. இதனால் பாடசாலையை சொந்தக் கட்டிடத்தில் மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமென அவர்கள் அழுத்தம் கொடுத்ததை அடுத்து 1998 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாடசாலை சொந்தக் கட்டிடத்தில் இயங்கத் தொடங்கியது. ஆனால் பல மாணவர்கள் இப்பாடசாலையில் இருந்து விலகியதால் குறைந்தளவு மாணவர்களே மிறாவோடை பாடசாலையில் தொடர்ந்து இருந்தபோதிலும் பாடசாலைக்கு ஐம்பதுக்கும் குறைவான மாணவர்களே தினமும் வகுப்புகளுக்குச் சென்றனர்.

1985 ஆம் ஆண்டிலும் 1990 ஆம் ஆண்டிலும் இக்கிராமத்தில் வீடுகள் அழிக்கப்பட்டதாலும் இக்கிராமத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்களை மீளக்குடியமர்த்தாததாலும் இன்று வரை இக்கிராமம் அழிந்த நிலையிலேயே உள்ளது.

இங்கு தற்போது கூமார் 75 குடும்பங்கள் மாத்திரமே உள்ளன. இக்குடும்பங்களும் கிராமத்தின் ஒதுக்குப்புறமான கிண்ணையடியை அண்டிய பகுதியிலேயே உள்ளன. எனினும் கிராமத்தின் 75 சதவீதமான நிலப்பரப்பும் உடைந்த வீடுகளும் இன்றும் அனாதரவாகக் கிடக்கின்றன.

90 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இராணுவ முகாம் அப்படியே உள்ளது. பாடசாலைதான் இக்கிராமத்தின் ஒரு எல்லையாக உள்ளதுடன் ஏனைய பகுதிகள் வெறும் வெட்டவெளியாகவே உள்ளன.

ஆனால் இப்பகுதியில் எல்லைக்கிராமங்களாக இத்தமிழ் கிராமமும் அருகிலுள்ள முஸ்லிம் கிராமமும் உள்ளபோதிலும் மிறாவோடை முஸ்லிம் கிராமத்திற்கு தமிழ் கிராமத்திற்கு ஏற்பட்டது போன்று எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. இக்கிராமத்தை எவரும் தாக்கவுமில்லை வீடுகள் உடைக்கப்படவோ சூறையாடப்படவோ இல்லை. தற்போதும் அங்கு மக்கள் வாழுகின்றனர். எல்லைப் புறங்களிலும் எந்தவொரு அச்சமுமின்றி வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் பழமை வாய்ந்த இத்தமிழ் கிராமம் திட்டமிடப்பட்ட முறையில் அழிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனாதைகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இங்கு தற்போது மீளக்குடியமர்ந்து வாழும் மக்கள் புதிதாக காளிகோவிலையும், பிள்ளையார் மற்றும் முருகன் ஆலயங்களையும் தற்காலிகமாக தாம் வாழும் பகுதியில் அமைந்து பூசை வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

இக்கிராமத்தைச் சேர்ந்த ஏனைய நானூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழைச்சேனை, வினாயகபுரம், கண்ணன்கிராமம், சுங்கான்கேணி ஆகிய இடங்களில் வாழ்ந்து வருகின்றன. தமது கிராமத்தில் உள்ள படை முகாம் அகற்றப்பட்டு கிராமத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே மீளக்குடியமர்ந்து வாழ முடியும் என அவர்கள் கூறுகின்றனர். பலர் இக்கிராமத்தை மறந்த நிலையே உள்ளது.

தற்போது அங்கு பாடசாலை இயங்கி வருகின்றபோதிலும் ஐம்பதுக்கும் குறைவான மாணவர்களே வகுப்புகளுக்குச் செல்கின்றனர்.

இன்றைய சூழ்நிலையில் மிகவும் பழமை வாய்ந்த இக்கிராமத்தை அபிவிருத்தி செய்து மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு மீண்டும் கிராமவாசிகள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.ஜெயானந்த மூர்த்தி.

தொகுப்பு: தமிழரசன்அப்துல்காதர்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments