×

உயிர் துடிக்கும் கணங்கள்.

உயிர் துடிக்கும் கணங்கள்.

யாழ் குடாநாடு பகைவனால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது.

திறந்தவெளிச் சிறைச்சாலையாக சில நூறாயிரம் மக்கள் பலவாயிரம் இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டுள்ளனர். சிறைச்சாலையின் தடுப்புச் சுவர்கள்போல் உருவாக்கப்பட்டுள்ள தொடர் காவலரண்களினாலும் மண் அணைகளினாலும் அப்பிரதேசம் துண்டாடப்பட்டுள்ளது. பொட்டல் வெளிகளில் காணப்படும் சிறு பற்றைக்காடுகளையும், சதுப்பு நிலங்களில் வளரும் கண்டல் தாவரங்களையும் வெட்டைவெளி முடிவில் அடர்ந்திருக்கும் பனை வடலிகளையும், மறைவிடங்களாக்கி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் புலிவீரர்கள். தமிழர் தலைநிமிர்விற்கு ஏதுவாக இருந்த பூமி, ஏளனத் திமிருடன் பகை உலாவரும் இடமானது. பகைவன் நித்திரையைக் குலைக்கவும் நிம்மதியைச் சிதைக்கவும் வல்ல தாக்குதல்களைப் புலிகள் நடத்துகின்றனர்.

1996ஆம் ஆண்டு

மாவீரர் தினம் அண்மித்துக்கொண்டிருந்தது. பகைசூழ்ந்த பிரதேசமொன்றினுள் போராளிகள் அணியொன்று தங்கியுள்ளது. அதனால் அது ஒப்பீட்டளவில் பாதுகாப்பான இடத்திற்கு வரவேண்டும். அவ்வேளை சில காவலரண்களை தாக்கியழிக்கத் திட்டமிடப்படுகின்றது. அவர்கள் தாக்குதல் திறனை அதிகரிக்க இன்னோர் அணியினர் உள்நுழைந்து இணையவேண்டியுள்ளது. வெளியிருந்து போலித்தாக்குதல் நடாத்தப்பட்டு பகைவன் திசை திருப்பப்படுவான். அவ்வேளை உட்புறமிருந்து காவலரண்களின் பின்புறமாக அதிரடித்தாக்குதல் நடாத்தப்படும். பகை கொன்று ஆயுதங்களைக் கைப்பற்றி, காவலரண்களை அழித்து வெளியேறி வெளிநிற்கும் அணியுடன் இணைந்து பின்வாங்குதல் வேண்டும். பல மைல் தொலைவில் இருந்து தீட்டப்பட்ட திட்டம் உள்நிற்கும் அணிக்கும் உரியமுறையில் தெரியப்படுத்தப்பட்டுவிட்டது. இப்பொழுது உள்நுழையும் அணியுடன் போராளி மருத்துவன் மலரவன் இணைந்துகொள்கின்றான். இரவிரவாக நகர்ந்தவர்கள் பகற்பொழுதில் வெட்டையொன்றின் சிறு பற்றைக்குள் உருமறைத்துக் கொள்கிறார்கள். ஏதேட்சையாக அங்குவந்த இராணுவத்தினரால் அப்பகுதி மேலெழுந்தவாரியான தேடுதலுக்கு உட்படுத்தப்படுகின்றது.

உருமறைந்திருந்தவர்கள் நீரும் உணவும் தவிர்த்து சிறு அசைவும் காட்டாமல் தற்காத்துக் கொள்கின்றார்கள். தகுந்த நேரம் வந்தவுடன் வெளிவந்து முட்கம்பி வேலியும் மண் அரணும் கடந்து குறித்த அணியினருடன் இணைந்துகொள்கின்றார்கள்.

திட்டமிட்டவாறு தாக்குதல் நடத்தி மீண்டும் வெளியேறவேண்டும்.

மீண்டும் பகைவன் காவலரண்கள் நோக்கி பின்புறமாக நகர்கின்றார்கள். மருத்துவர் மலரவன் முட்கம்பி வேலியொட்டி நிற்கும் மரமொன்றில் நிலையெடுத்துக் கொள்கின்றான். முற்குறித்தவாறு சக அணியினர் முன்பக்கமாக

தாக்குதல் தொடங்கவேண்டும். துரதிஸ்டவசமாக அவர்கள் வந்துசேர முன்னரே தாக்குதல் ஆரம்பித்துவிட்டது. அப்பொழுது மலரவனின் இடது தோள்பட்டையை ரவையொன்று பதம் பார்க்கின்றது. சில அடிகள் பின்னால் தூக்கி எறியப்பட்டான். எழுந்து மறுகையால் தடவிப்பார்க்கின்றான். குபுகுபுவென இரத்தம் பாய்கிறது. வலதுகையால் இடதுகை நாடித்துடிப்பை உறுதிப்படுத்திக் கொள்கிறான். கையின் இருப்பை அச்சுறுத்தும் காயம் இல்லை என்பதால் திருத்திப்பட்டுக் கொள்கிறான். இவனால் இரத்தப் பெருக்கை நிறுத்த கட்டுப்போட முடியாது. தளபதிக்கு நிலமையை அறிவிக்கின்றான். பின்னர் மருத்துவப் பையையும் தூக்கிக்கொண்டு நகர்கின்றான். தணலாய் பாயும் ரவைகளையும் சிறு பீரங்கித் துண்டுகளையும் அலட்சியம் செய்தவண்ணம், முட்கம்பியூடு புகுந்து மண் அரண் ஏறி மறுபக்கம் இறங்குகிறான். தலை சுற்றுவதுபோல் இருக்கின்றது. காவலரண்களுக்கு இடைப்பட்ட மண் அரணின்கீழ் இருக்க முயற்சிக்கின்றான். காலில் ஏதோ தட்டுப்பட தடவிப் பார்க்கின்றான். அது RPG எறிகணை செலுத்தியென

அடையாளம் காண்கின்றான். இவ்விடத்தில் இருப்பதோ, மயங்குவதோ உசிதமானதல்ல என முடிவெடுக்கின்றான். மெல்ல RPGயையும் எடுத்துக்கொண்டு, உள்ள பலமெல்லாம் திரட்டி முன்னோக்கி நகர்கின்றான்.

முதலில் தாக்குதல் நடாத்தவேண்டிய அணியினருடன் தொடர்பெடுத்து இணைந்துகொள்கிறான். அவ்வணியில் வந்த போராளி மருத்துவன் அமுதனால் முதலுதவி செய்யப்படுகின்றது. தாக்குதல் முடிவிற்கு வருகையில் இருவர் வீரச்சாவடைந்துவிட்டனர். பதினெட்டுப் போராளிகள் பாரிய, சிறிய காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். பொழுது விடிந்தால் சுற்றிவளைக்கும்

பகைவனால் பலர் அழிக்கப்படுவர். அதனால் இரவோடு இரவாகவே பலமைல்கள் பின்வாங்குகின்றார்கள்.

காயமடைந்தவர்களை வன்னித்தளம் அனுப்பவேண்டும். சில நாட்களிற்கு அது சாத்தியமற்றது. உள்ளே வைத்து சிகிச்சையளிப்பது என முடிவெடுக்கப்படுகின்றது. அவசர தேவைக்கென சதுப்புநில கண்டல் மரங்களுக்கு இடையில் அமைக்கப்பட்ட பரண்களில் ஒளிந்துகொள்கின்றார்கள். கீழே சதுப்புநிலம் மேலே சில அடிகள் உயரத்திற்கு கண்டல் பற்றைமரங்கள். ஆள் நிமிர்ந்து நிற்கமுடியாத அளவு பதிவான கொட்டில், துருப்பிடித்த தகரத்திலே தளம் அமைக்கப்பட்டுள்ளது. முதலுதவிச் சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்ட காயக்காரர்கள்

சூழ்ந்திருக்கின்றார்கள்.

காயமடைந்த மலரவனுடன் அமுதனும் முரளியும் என்ன செய்வதென ஆலோசனை கலக்கின்றனர். ஒரு போராளிக்கு வயிற்றில் ஊடுருவல் காயம். உள்ளே குருதி பெருகுவதற்கான அறிகுறி தென்படுகின்றது. அவனுக்கு வயிற்றை திறந்து(laprotomy) சத்திரசிகிச்சை செய்யவேண்டும். அது இவ்விடத்தில் சாத்தியமற்றது. எனவே மரபுரீதியான சிகிச்சையை (concervative mangment) வன்னிக்கு அனுப்பும்வரை செய்யவேண்டியதுதான். இன்னொருவனுக்கு முழங்கால் சிதைந்துவிட்டது. அவனுக்கு தொடையுடன் காலை வெட்டியகற்றினால்தான் உயிர் தக்கவைக்கலாம். ஆனால் குருதிப்பிரிவு சோதிக்கும் கருவிகள் குருதி அமுக்கம் அளக்கும் கருவிகள் எதுவும்

கைவசம் இல்லை. சத்திரசிகிச்சைக்கான ஏனைய உபகரணங்கள் வெளியில் பதுக்கிவைத்திருந்த இடங்களிலிருந்து எடுத்துவர ஆட்கள் சென்றிருந்தனர். மலரவனுக்கு மயக்கமருந்து கொடுத்து சிகிச்சை செய்தால் அவனது பணி தடைப்பட்டுப் போய்விடும். ஆகவே அதனைக் கைவிட்டு மூவரும் இணைந்து ஏனையவர்களுக்கு சிகிச்சையைத் தொடர முடிவெடுக்கின்றனர்.

சிதைந்த காலை வெட்டியகற்றும் சத்திரசிகிச்சையைத்தான் முதலில் செய்யவேண்டும். மிகமிகக் குறைந்த இரத்த இழப்புடன் சத்திரசிகிச்சையினை முடிக்கவேண்டும். அப்பொழுதுதான் அப்போராளி உயிர் தப்புவதற்குச்

சாத்தியங்கள் அதிகமாகும். மலரவன் ஒருகையால் மயக்கமருந்து கொடுக்கிறான். ஏனைய இருவரும் சிதைந்த காலை அகற்றத் தொடங்குகின்றனர். அப்பொழுது வயிற்றுக்காயப் போராளி மூச்சுவிடமுடியாமல் திணறிக் கத்துகின்றான். நிலைமையை அவதானித்த முரளி அவனருகில் சென்று பரிசோதிக்கின்றான். பிறகு 50ml ‘சிரிஞ்சை’ எடுத்து அவன் வயிற்றில் குத்தி உட்பெருகியிருந்த குருதியை எடுத்து வெளியில் விடுகின்றான். அவ்வாறு சிலமுறை செய்ய அவனுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் குறைகின்றது. மீண்டும் வந்து கால் சத்திரசிகிச்சையை அமுதனுடன் சேர்ந்து தொடர்கின்றான். குருதியிழப்புக்கு திரவ ஊடகம் மட்டுமே மாற்றீடாக ஏற்றப்பட்டு சிகிச்சை தொடர்கின்றது. வெட்டுக்காயத்தில் இருந்து வெளியேறும் குருதி தனது பாகுநிலைத் தன்மையை இழந்து திரவத்தன்மையை அதிகம் வெளிக்காட்டுகின்றது. இதுவொரு ஆபத்தான நிலை. குருதி அமுக்கம் அளக்க வசதியில்லை. நாடித்துடிப்பையும்

உணர முயவில்லையென மலரவன் குறிப்பிடுகின்றான். அமுதனும் முரளியும் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்.

யோசிப்பதற்கு எதுவும் இல்லை. ஒருங்கூட்டல் பரிசோதனை செய்யாமலே குருதி மாற்றீட்டை ஒருமுறை செய்வது என முடிவெடுக்கின்றனர். அமுதனிடம் இருந்து குருதி பெறப்பட்டு சத்திரசிகிச்சை செய்யப்பட்டவனுக்கு ஏற்றப்படுகின்றது. அவனது உடல் நிலையில் முன்னேற்றம் தென்படுகின்றது. அப்பொழுது வயிற்றுக்காயப் போராளி முரளியை அழைத்து தனது வயிற்றினுள் நிரம்பும் குருதியை மீண்டும் குத்தி வெளியில் விடச்சொல்கின்றான். இவனும் மீண்டும் அவ்வாறே செய்ய அவனுக்கு சுகமாக இருக்கின்றது. காலிற்கான சத்திரசிகிச்சையை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கின்றனர். அப்பொழுது தலையில் காயப்பட்ட போராளி ஒருவனின் மனநிலை குழம்பிவிட்டது. அவன் அங்கும் இங்கும் ஓடித்திரிய ஆரம்பித்துவிட்டான். ஏனையவர்களுக்கு ஏறிக்கொண்டிருந்த திரவ ஊடக ‘ரியூப்களை’ இழுத்து தொல்லை கொடுக்கின்றான். தொங்குபறியில் சதுப்பு நிலத்தில் நிற்கும் அவர்களின் கொட்டிலும் ஆடத்தொடங்கிவிட்டது. உடனடியாக அவனுக்கு தளர்விக்கும் ஊசிமருந்து ஏற்றப்படுகின்றது. பின்பு மற்றையவனுக்கு கால் துண்டிக்கப்படும் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்படுகின்றது. இரண்டாம் நாள் அனைத்துக் காயக்காரர்களும் கட்டுமரங்களின் உதவியுடன் வன்னிக்கு நகர்த்தப்படுகின்றார்கள். மருத்துவப் பலம் குறையாது இருப்பதற்காக மலரவன் தொடர்ந்தும் உள்ளே நின்று பணி தொடர்வதென முடிவெடுக்கப்படுகின்றது.

நெருக்கடியான அந்த களமருத்துவப்பணி முடிந்த திருப்தியுடன் ஏனைய மருத்துவப் போராளிகள் அணியினருடன் தளம் திரும்புகின்றனர்.

-தூயவன்

-விபு இதழ் 126.

தொகுப்பு: தமிழரசன்அப்துல்காதர்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments