
முத்தழிழ் விழாவில் தேசியத்தலைவர் அவர்களின் உரை.
1991ம் ஆண்டு முத்தழிழ் விழாவிலேயே தழிழீழ தேசியத்தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் நேரடியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். 1987ம் ஆண்டு சுதுமலையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் மக்கள் சமூத்திரத்தின் முன்னே தோன்றிய தேசியத்தலைவர் நான்காண்டு இடைவெளியின் பின் மக்கள் சமூத்திரத்தின் முன்னே மக்களின் சந்தோச முழக்கங்களுக்கு மத்தியில் தோன்றினார்.
சாவகசேரியில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த விழாவிலே தமிழீழத்தில் பலதுறைகளிலும் சிறப்பாக சேவை செய்தமைக்காக தேர்வு செய்யப்பட்ட பத்து மாமனிதர்களுக்கு தலைவர் பிரபாகரன் அவர்கள் மாமனிதர் பட்டம் வழங்கி கௌரவித்தார்.
அவ்விழாவில் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் ஆற்றிய உரை. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தழிழீழ மக்களே. நான் இன்று இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நிகழ்வில் நேரடியாக பங்குகொள்வதையிட்டு பெரு மகிழ்ச்சியடைகிறேன். தமிழீழ மண்ணின் விடிவிற்காக, தமிழீழ மக்களின் விமோசனத்திற்காக தமிழீழ தேசிய பண்பாட்டின் மறுமலர்ச்சிக்காகவும் உழைத்தோரும், உழைத்து வருபவர்களுமான உன்னத மனிதர்களை உண்மையான மண்ணின் மைந்தர்களை மதிப்பளித்து கௌரவிப்பதற்கு எனக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு நான் பெருமைப்படுகிறேன்.
நற்பணியாற்றும் நல்ல மனிதர்களுக்கு மதிப்பளிப்பதும் கௌரவம் செலுத்துவதும் தமிழனின் பண்பாடு. இந்த சீரிய மரபிற்குகேற்ப இந்த சிறப்பு வைபவத்தை ஒழுங்கு செய்த எமது இயக்கத்தின் கலைப்பண்பாட்டு கழகத்தினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழீழ தேசத்தின் அதியுயர்ந்த கௌரவமாக தேசிய விருது வழங்கி இங்கு கௌரவிக்கப்படுவோர்களை நாம் மாமனிதர்கள் என மதிப்பளிக்கின்றோம், என்னென்றால் இவர்கள் அனைவரும் அர்ப்புதமான இலட்சியவாதிகள் இனப்பற்றும், நாட்டுப்பற்றுமுடைய தேசாவிமானிகள்.
சுயநலவாழ்வின் குறுகியவட்டத்திற்கு அப்பால் நின்று சமூக நலத்திற்காக, தேசிய நலத்திற்காக, மக்கள் நலத்திற்காக சேவையாற்றிய அபூர்ப மனிதர்கள். இவர்களது அறிவாற்றல், படைப்பாற்றல், செயலாற்றல் அனைத்துமே தமிழீழ சமூகத்தின் மேன்மைக்கு உரமூட்டுவதாக அமைந்திருக்கின்றது. இவர்களது பணி மேலும் தொடர வேண்டும் இவர்களது தொண்டு மேலும் சிறக்கவேண்டும். இதனால்தான் இவர்களுக்கு பெரு மதிப்பளித்து தேசிய விருது வழங்கி கௌரவிக்க தீர்மானித்தோம்.
இந்த கௌரவ பரிசளிப்பை தேசிய விருது என நாம் அழைப்பதில் அர்த்தமும் முக்கியத்துவமும் இருக்கத்தான் செய்கிறது. தமிழீழ மக்களாகிய நாம் ஒரு தேசிய கட்டமைப்பைக் கொண்டவர்கள். நாம் வரலாற்றுரீதியாக ஒரு தேசியமாக வாழ்ந்து வந்தோம், தேசியமாகவே வாழ்ந்து வருகின்றோம். தேசியமாகவே வாழப்போகின்றோம். எமது தேசியத்தை எதிரியானவன் ஏற்றுக்கொண்டாலும் சரி ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் சரி எமது தேசிய தனித்துவமானது என்றும் அழிக்கமுடியாத எதார்த்தமான அரசியல் உண்மை என்பதை நாம் உலகிற்கு சதா பிரகடனம் செய்துகொண்டே இருப்போம்.

தேசிய விருது என நாம் பட்டம்மளிப்பதும் இப்படியான ஒரு பிரகடனமே. பிரத்தியேக தேசிய தொண்டாற்றிய சிலருக்கு இன்று தேசிய விருது வழங்கி கௌரவிக்கின்றோம். இந்த தேசிய விருது அளிப்பிற்கு ஒரு சில தேசபக்தர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஒட்டு மொத்தத்தில் இந்த பரிசளிப்பு மக்கள் அனைவருக்கும் வழங்கப்படும் கௌரவமாகவே கருதப்படவேண்டும்.
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள், கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசிய போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானது அல்ல அவர்களின் பங்களிப்பு அளப்பரியது என்று தான் சொல்வேன். இலைமறைகாயாயிருந்து போராட்டத்திற்கு தோள் கொடுத்து வரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மனவுறுதி படைத்த மாமனிதரகள்; என்றுதான் அழைக்கவேண்டும.
நீண்டகாலமாகவே போராட்டத்தின் பெரும்பலுவை பெதுமக்களே சுமந்து வருகிறார்கள். சாவும் அழிவும், பசியும் பட்டினியும், இரத்தமும் கண்ணீருமாக எமது மக்கள் எதிர் கொண்ட தாங்கொணத்துன்பத்தை சொற்களில் சித்தரிக்கமுடியாது. உலகில் எல்லா விடுதலைப்போராட்டங்களிலும் ஒடுக்குமுறையின் நெருப்பில் குளிப்பது பொதுசனங்களே, ஏன்என்றால் அடக்குமுறையாளர்கள் போராளிகளை அழிப்பதில் காட்டும் தீவிரத்தை விட பொதுமக்களின் ஆன்மிக உறுதியை உடைக்க வேண்டும் என்பதில்தான் அதீத அக்கறை காட்டுகிறார்கள். ஆனால் இந்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றியளிப்பதில்லை. மக்களின் விடுதலையுணர்வை அடக்குமுறையில் அழித்துவிடமுடியாது.
உலக வரலாறு பகரும் உண்மை இது. ஏன் என்றால் விடுதலையுணர்வே மனித ஆன்மாவின் சாரமாக உயிர்முச்சாக இயங்குகின்றது. மனித வரலாற்றை இயக்கும் மகத்தான சக்தியும் அதுவே சிங்கள பேரினவாத அடக்கமுறையானது எமது மக்களுக்கு சாவையும் அழிவையும் தாங்கொணாத்துயரையும் கொடுத்தபோதும் என்றுமில்லா வகையில் தேசிய பற்றுணர்வையும் சுதந்திர தாகத்தையும் தூண்டிவிட்டிருக்கின்றது. தமிழரின் தேசிய ஆன்மாவை விழித்தெழச் செய்திருக்கின்றது. இன்று நாம் கொண்டாடி வரும் முத்தமிழ் விழா எமது மக்களின் எழுச்சியின் அபாரமான வெளிப்பாடு என்றே சொல்லவேண்டும்.
போராட்ட சூழலில் எல்லைகளில் எதிரியின் போர்முரசு கேட்கும் யுத்தகாலத்தில் சமூத்திரம் போல் பல்லாயிரம் மக்கள் திரண்டு வந்து இந்த முத்தமிழ் விழாவில் பங்கு கொள்கிறார்கள் என்றால் மக்களின் திடசந்தர்ப்பத்தை உறுதிப்பாட்டை சுதந்திர அறைகூவலை தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. இந்த சுதந்திர அறைகூவல் எமது எதிரிகளின் காதுகளுக்கு எட்டாமலில்லை.
சீற்றம்கொண்ட பூகம்பத்தின் தூறலாக எழும் எமது இனத்தின் எழுச்சிக்குரலை சிங்களதேசமும் சர்வேதேச சமூகமும் அசட்டை செய்யமுடியாது. இலட்சியத்தால் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றை படைப்பார்கள். இந்த வரலாற்றின் படைப்பாக எமது தேசிய மண் ஒரு சுதந்திர பூமியாக பிறப்பெடுக்கும் என்பது திண்மை.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.