×

ஈழத்தமிழினமே! முதலில் அழுவதை நிறுத்து உனக்கானது ஒப்பாரியல்ல.

ஈழத்தமிழினமே! முதலில் அழுவதை நிறுத்து உனக்கானது ஒப்பாரியல்ல.
பாலைவனத்தில் பாலூறாவிடினும் பாதையிடையில் சோலைவருமென நம்பு.

இழவு காத்தலை உன் அகராதியிலிருந்து எடுத்தெறி,
கண்ணீரை விரல்நுனியிலெடுத்துச் சுண்டிவிடு!

வாழ்விடிந்து போனதென வாசலிற் கட்டிய சோக தோரணங்களை அறுத்து விழுத்து.
முகிலுரச நிமிர்ந்திருந்த தலை கவிழ்ந்து நிலம் பார்த்து உளவுவதை நிறுத்திவிடு.

என்ன நடந்ததெனத் துன்பப்பூ சூடியுள்ளாய் ?
விண்ணிடிந்தபோதும் தாங்கும் வீரியனே!
சின்னப் புண்ணின் வலிக்காகவா சிரிப்பிழந்து போனாய்?

ஒரு சிறகுதிர்ந்து போனதுக்காக ராஜபறவைகள் சோககீதம் பாடுமா?
கோட்டை மதில்களைத் குண்டுசியா துளையிடும்?

எத்தனை துயர்வரினும் எதிர் கொள்ளப்பழகும் உள்ளெரியும் கோபத்தீ கிளறி ஒரு பொறி யெடுத்து வாசலை ஒளி செய்வாய்.
புயலின் வலியனே! உன்னையெவனடா பூட்டியடைக்க முடியும்?

பாவியரால் ஜீவிதம் கொஞ்சம் பழுதானதென்னவோ உண்மைதான்.
அதற்காகக் கேவியழுவதால் ஒன்றும் கிடைக்கப்போவதில்லை.

கோடையில் இலையுதிர்த்து குற்றுயிராகும் மரங்கள் வைகாசி வந்ததும் பூப்படைந்து புன்னனகைக்கவில்லையா?
மரங்களிலிருந்து உன் மனதுக்கு வைரம் பாயட்டும்.

இந்த மண்ணின் முந்தை வழித்தோன்றல்கள் நாம்.
சிங்களத்தின் வருகைக்கு முன்னரே சிரசில் முடிதரித்த வம்சமெமது.

தாமிரபரணிக் கரையில் தனைத்திருந்த வேரே !
கதம்ப நதி தீரத்தில் காற்றளைந்த தேரே!

எல்லாமும் இன்றிழந்து போனாயெனினும் மீண்டும் தொடங்கும் மிடுக்குளாய் நீ-
பூண்டும்; புல்லுமல்ல நீ பொசுங்கிப் போவதற்கு.

-புதுவை இரத்தினதுரை அண்ணை.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments