
மீட்புநிதிக்கு மக்கள் வழங்கிய இரண்டு பவுண்
இன்றைய போராட்ட வளர்ச்சிக்கு காரணமான பிரதான விடயங்களில் ஒன்று, முன்னர், மீட்புநிதிக்கு மக்கள் வழங்கிய இரண்டு பவுண் ஆகும். விமானங்கள் வீழும்போதும், கப்பல்கள் மூழ்கும்போதும், படைமுகாம்கள் வெற்றி கொள்ளப்படும் போதும் மீட்புநிதிக்கு மக்கள் செலுத்திய பவுண்கள்தான் நினைவுக்கு வருகின்றன. எனவே, எமது போராட்டம் பெற்றிருந்த அந்த இராணுவ வெற்றிகளை, மீட்புநிதிக்குப் பங்களித்த மக்களும் பங்கிட்டுக்கொள்ளலாம்.
மக்களிடமிருந்து மீட்புநிதிபெற்று 4 வருடங்கள் முடிவடைந்துவிட்டன. இந்த 4 வருட காலத்தில் புலிகள் இயக்கம் பெருமளவு வளர்ந்து விட்டது. அதன் ஆட்பலம் அதிகரித்துவிட்டது. பல படையணிகள் புதிதாக உருவாக்கப்பட்டு விட்டன. அதனால் அதற்கதற்கே உரித்தான ஆயுத வகைகளின் தேவையும் அதிகரித்துவிட்டது. ஆட்பலமும் – ஆயுததேவையும் அதிகரித்து விட்டதால் நிதித்தேவையின் அளவும் பெருகி விட்டது.
போர்க்களங்களில் புலிவீரர்கள் காட்டும் போர்திறனுக்கும் துணிவுக்கும் சிங்களச் சிப்பாய் களால் ஈடுகொடுக்க முடியாதுள்ளது என்ற விடயம் சிங்களத் தளபதிகளுக்கே நன்கு தெரியும். அதனால் இப்போது (மூன்றாம் ஈழப் போரில்) சிங்களத் தளபதிகள் ஒரு புதிய போர் உபாயத்தை பயன்படுத்துவதில் அக்கறை காட்டு கின்றனர். அதாவது படைக்கல சக்தியை அதிகம் பயன்படுத்தி புலிகளோடு சண்டையிடுவது என்பதுவே அதுவாகும். படைக்கல சக்தி (Fire Power) என்றால் எறிகணைகள், பீரங்கிக் குண்டுகள் விமானக் குண்டுகள் மற்றும் எல்லா வகை எறிகுண்டுகளுடன் துப்பாக்கி ரவைகளையும் குறிப்பிடலாம்.
அதாவது. துப்பாக்கி ஏந்திய சிங்களச் சிப்பாய்கள் சண்டைகளில் செய்ய முடியாததை-கருவிகள் மூலம் ஏவப்படும் – வெடிப்பொருட்களைப் பயன்படுத்தி. தூர இருந்தபடி, செய்ய முனைவதே சிங்களத் தளபதிகளின் இப்போதைய நோக்கமாகும். சண்டைகள் நடை பெறும்போது – துப்பாக்கிவீச்சு எல்லைக்குள் இரு பகுதிப் படைகளும் சந்திக்க முன்னரே பல்லாயிரக்கணக்கில் எறிகணைகளையும் – பீரங்கிக் குண்டுகளையும் புலிகளைநோக்கி ஏவிவிட்டு. புலிவீரர்களை அழிக்கச் சிங்களப்படை முயல்கின்றது. அதேவேளை, இரு பகுதியினர்க்கும் இடையே துப்பாக்கிச் சண்டைகள் ஆரம்பமானதும் புலிகள் பக்கத்தில் இழப்பை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் – ஒவ்வொரு சண்டை யிலும் – இலட்சக்கணக்கான ரவைகளை சிங்களச் சிப்பாய்கள் தண்ணீர்போலச் செலவு செய்கின்றனர்.
ஒப்பறேசன் முன்னோக்கிப் பாய்தலின் போது இந்தத் தாக்குதற் தந்திரத்தையே சிங்களப் படைகள் பயன்படுத்தியிருந்தனர். இது போலவே மணலாற்றுப் பகுதியில் அமைந்திருந்த ஐந்து இராணுவ முகாம்கள் மீது புலி வீரர்கள் தொடுத்த பாரிய தாக்குதலை முறியடிக்க சிங்களப்படைகள் பிரமாண்டமான தொகையிலான படைக்கல சக்தியை பயன் படுத்தியிருந்தது. சிலநாட்களுக்கு முன்னர், சுன்னாகம் நோக்கிப் படையினர் முன்னேற முயன்றபோதும் இவ்விதம் பிரமாண்டமான தொகையில் படைக்கல சக்தியைப் பயன்படுத்தியே வெல்ல முயன்றனர். குடாநாடு மீதான படையெடுப்பிற்கு பயன்படுத்துவதற்காக 80,000 எறிகணைகள் வடபுலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்புப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதில் பத்தாயிரம் எறிகணைகளையாவது இதுவரை எதிரி பயன் படுத்தியிருப்பான் என எண்ணலாம்.’
சண்டைகளின் போது தமது படையாட்களின் இழப்புக்களை தவிர்ப்பதுடன் – புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் சுலபமான முறையில் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தும் நோக்குடன் சிங்களத் தளபதிகள், இந்தப் படைக்கல சக்தியை பெருமளவில் பயன்படுத்துகின்றனர்.
இதே படைக்கல சக்தியை சிங்களப் படைகள் மீது, புலிகளும் திருப்பிப் பயன்படுத்தினால் படையினர் அதிக எண்ணிக்கையில் உயிர் இழப்புக்களைச் சந்திப்பர். ஆனால் புலிகளிடம் அந்தளவு தொகைப் படைக்கல சக்தி இல்லை. ஒரு சமரில் இராணுவம் ஆயிரம் எறிகணைகளை ஏவினால் அதற்குப் பதிலாக புலிகள் பத்து அல்லது இருபது எறிகணைகளையே ஏவக்கூடிய நிலையில் இருக்கின்றனர். அதேபோல புலிகளின் ஒரு காவல் அரணைத் தாக்க பல்லாயிரக்கணக்கான ரவைகளைச் செலவிடுவர் படையினர். ஆனால் படையினரின் ஒரு சில காவல் அரணைத் தகர்க்க புலிகள் சில பத்து அல்லது நூறு ரவைகளையே பயன்படுத்துகின்றனர்.
ஏனெனில் எறிகணைகள், ரவைகள் உட்பட எல்லாவகை எறிகுண்டுளும் விலை கூடியவை. இதைவிட இவற்றை ஏவும் கருவிகளின் விலை மிக அதிகம். அத்துடன் இவற்றை “டொலர்’ பணம் கொடுத்தே கொள்வனவு செய்ய முடியும். ஒரு எறிகணையின் பெறுமதி 100 டொலர். டொலர்க் கணக்குப் பார்த்தால் அது ஒரு சிறு தொகை. ஆனால் அதை எமது ரூபாவிற்கு மாற்றிப் பார்த்தால் ஐயாயிரம் ரூபாவாக இருக்கும். எனவே நாம் ஒரு எறிகணை வாங்க 5,000 ரூபா செலவளிக்க வேண்டியுள்ளது. ஆனால் அந்த எறிகணை செலவளிந்து விடும். போராட்டப் பங்களிப்பாக ஒருவர் ஐயாயிரம் ரூபா பணத்தை இயக்கத்திற்குக் கொடுகின்றார் என்று வைத்துக்கொண்டாலும் அவர் கொடுத்த பணம் ஒருஎறிகணை வாங்கத்தான் காணும்; அதுவும் ஒரு செக்கனில் செலவழிந்துவிடும். இதனால் தான் சிங்கள அரசு பெருந்தொகைப் பணத்தை போரிற்கெனச் செலவிடுகின்றது.
சிங்கள அரசு வருடாந்தம் 4,000 கோடி ரூபாவை போரிற்கெனச் செலவிடுகின்றது. ஆனால் புலிகள் இயக்கம் வருடாந்தம் 180 கோடி ரூபாவையே செலவிடக்கூடிய நிலையில் உள்ளது. இந்தப் போர்ச் செலவைப் புலிகள், இரண்டு மடங்காக அதாவது 360 கோடி ரூபா வாக உயர்த்துவார்களாக இருந்தால் எமது போராட்டம் இழப்புக்களைக் குறைத்து விரைவாக முன்னேறும்.
ஒரு இராணுவ நடவடிக்கை மூலம் சிங்களப்படைகள் எமது ஊர்களுக்குள் புகமுனையும் போது – சிங்களப்படைகள் ஏவுவதுபோல-புலிகளும் எறிகணைகளை ஆயிரக்கணக்கில் ஏவினால் சிங்களப்படைகள் சிதறி ஓடும். ஆனால். உண்மையில் அவ்வாறு நடப்பது இல்லை. ஏறி கணைகளை அதிக எண்ணிக்கையில் ஏவ முடியாது இருப்பதால்தான் எதிரிப் படைகள் விரைவாக எமது ஊர்களை ஆக்கிரமிக்கின்றன.
அன்பிற்குரிய எமது மக்களே ! நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். எதிரிப் படைகள் மீது நாமும் பாரிய தொகையில் படைக்கல சக்தியைப் பயன்படுத்தும் அதேவேளை எதிரியானவன் தனது படைக்கல சக்தியை எம்மீது பயன்படுத்தவிடாது தடுக்கும் ஆயுதங்களையும் நாங்கள் பெற்றுவிட்டால் வெற்றிக்குச் சொந்தக்காரர்களாக நாமே இருக்கலாம். விமான எதிர்ப்பு ஆயுதங்களை நாம் பெற்றுக்கொண்ட பின்னர் எதிரி விமானங்கள் தமது படைக்கல சக்தியை பயன்படுத்தமுடியாது தவிக்கின்றன. இதேபோல ஆட்லறி உபகரணத்தை நாமும் பெற்றுக்கொண்டால் பலாலியில் உள்ள எதிரிப் படைக்கு குலைப்பன் காய்ச்சலை உண்டுபண்ணலாம். ஆனால் இவற்றிற்குப் பெருந்தொகைப் பணம் வேண்டும். மக்கள் மனதுவைத்தால் இந்தப் பணத் தேவை என்பது ஒரு அற்ப விடையமாகிவிடும்.
ஒரு சிறிய நாடான இஸ்ரேல் தன்னைவிட 15 மடங்கு அதிக சனத்தொகை கொண்ட அரபு நாடுகளை போரில் வென்றிருக்கின்றது. இதற்கான பிரதான காரணங்களில் ஒன்று இஸ்ரேலிடம் உள்ள பிரமாண்டமான படைக்கல சக்தி ஆகும். பல அரபுநாடுகள் கூட்டாக இஸ்ரேலைத் தாக்கினாலும் கூட அந்தத் தாக்குதல்களின் வீரியத்தைச் சிதைக்கும் சக்தியை இஸ்ரேலியப் படைகளுக்குக் கொடுப்பது அதன் பிரமாண்டமான படைக்கல சக்தியாகும். பல ஆயிரம் அரபுப் படையணிகள் இஸ்ரேலை நோக்கி முன்னேறி வரும்போதே இஸ்ரேலியப் படைகள் தமது ஆட்லறிகளையும் – டாங்கிகளையும் விமானங்களையும் பயன்படுத்தி, அதாவது வெடிப்பொருட்களை மட்டும் பயன்படுத்தி அரபுப் படையணிகளைச் சிதறடிக்கின்றன. பின்னர் சிதைந்த அரபுப் படையணிகள் மீது பாயும் இஸ்ரேலியப் படைகள் அவற்றைத் துவம்சம்செய்து வெற்றியைப் பெறுகின்றன.
ஆனால் இதற்கு மாறான ஒரு உலக உதாரணமும் உண்டு பொஸ்னிய சண்டை பற்றி எமது மக்களும் அறிந்திருப்பர். பொஸ்னியா என்ற ஒரு அரசை அங்கு வாழும் முஸ்லிம்கள் பிரகடனப்படுத்தியிருந்தனர். ஆனால் அதை அருகில் இருந்த சேர்பியர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. இருபகுதியினருக்கும் இடையே போர் வெடித்தது. பொஸ்னிய முஸ்லிம்கள் மீது சேர்பியப் படைகள் தாராளமாக படைக்கல சக்தியைப் பயன்படுத்தி அவர்களைக் கொன்று தள்ளுகின்றனர். இதேவேளை பொஸ்னிய இராணுவத்திடம் ஏராளமான ஆட்பலம் உண்டு. ஆனால் அவர்களிடம் ஆயுத பலமும் – படைக் கல சக்திப் பலமும் இல்லாதிருப்பதால் அகதிகளாக இடம் பெயர்ந்தோடி அல்லல்படுகின் றார்கள். அத்துடன் போரில் தோல்வி கண்டபடி அழிந்து கொண்டிருக்கின்றனர்.
எனவே போரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் விடயங்களில்’ படைக்கல சக்தியும் ஆயுத பலமும் மிகமுக்கிய இடத்தை வகிக்கின்றன. ஆனால் இவற்றை இலவசமாக எங்கும் பெற்றுவிட முடியாது. பெருந்தொகைப் பணத்தைச் செலவளித்தே இவற்றைக் கொள்வனவு செய்ய முடியும்.
இப்படித்தான் யூத மக்களின் விடுதலைப் போரின் போதும் ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தது. அதாவது மேலதிக ஆயுதங்களும் – படைக்கல சக்தியும் யூதப் போராளிகளுக்கு அவசரமாகத் தேவைப்பட்டது. ஆனால் அந்த விடுதலை இயக்கத்திடம் அவற்றை கொள்வனவு செய்வதற்கேற்ற பணம் இருக்கவில்லை. பணத்தை எங்காவது பெற்று படைக்கலங்களையும் படைக்கல சக்தியையும் வாங்குவதா அல்லது ஒட்டுமொத்தமாக யூத மக்களே அழிந்துபடுவதா என்ற நிலை எழுந்தது. அப்போது யூத மக்கள் தங்களது சேமிப்புக்களில் பெரும் பகுதியை போராட்டத்திற்கென வழங்கி யூதப் போராளிகள் சந்தித்த நிதி நெருக்கடியை நீக்கி இஸ்ரேல் என்ற நாடு உருவாக உதவினர்.
இவ்விதம், ஒரு விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கு பணபலம் அவசியமாகின்றது. ஒரு மனிதனின் உடலுக்கு எலும்புகள் பலத்தைக் கொடுக்கின்றன. அந்தப் பலத்தை வைத்துத்தான் மனிதன் சவால்களுக்கு முகங்கொடுக் கின்றான். அதேவேளை அந்த எலும்புகளுக்கு உணவளித்து -அதை உறுதியாக வைத்திருக்க மனிதனின் குருதி உதவுகின்றது.
எமது இயக்கத்தின் ஆட்பலத்தை எலும்புகளுக்கும், நிதியை குருதிக்கும் ஒப்பிடலாம்.
எலும்புகளை செயற்படவைக்கும் சக்தி குருதிக்குண்டு
ஆட்பலத்தை செயற்பட வைக்கும் சக்தி பண பலத்திற்குண்டு.
மனிதனுக்கு எலும்புகள் இல்லாதுவிடின் அவன் பலம் இழந்து போய்க்கிடப்பான்.
அப்போது அவனை காகங்கள் கொத்தித் தின்றுவிடும்.
மனிதனுக்கு குருதி இல்லாதுவிட்டால் அவன் இறந்துவிடுவான்
மனிதனுக்கு எலும்பும் தேவை, குருதியும் தேவை
அதேபோல, எமது தேசத்திற்கு ஆட்பலமும்தேவை, நிதிப்பலமும் தேவை.
தமிழீழ தேசிய பாதுகாப்பு நிதி என்ற பெயரில் போராட்டத்திற்கான நிதிதிரட்டலை ஆரம்பித்துள்ளோம். இந்த நிதிக்கு வாரிவழங்கி தேசத்தின் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்வோம்.
இந்த வகையில் குருதிக்கொடை உயிர்களைக் காப்பாற்றும்; பணக்கொடை ஒரு தேசத்தைப் பாதுகாக்கும்!
– விடுதலைப்புலிகள் இதழ்
– புரட்டாதி 1995