
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் மாபெரும் விடுதலைச் சக்தியாக எமது இயக்கம் வளர்ச்சி கண்டிருக்கிறது.
ஆயுதப் போராட்ட களத்திலும் எமது விடுதலை வீரர்களே முன்னணிப்படையாக விளங்குகின்றனர். அரசியல் இலட்சியத்திலும் எமது இயக்கமே தெளிவுடனும் உறுதியுடனும் செயற்படுகிறது. வெகுசன அரங்கிலும் மிகப் பிரபல்யம் பெற்று மக்களின் நல்லாதரவு பெற்றிருப்பதும் எமது விடுதலை இயக்கமே.
எமது இயக்கத்தின் இந்த #மகத்தான வளர்ச்சிகண்டு பொறாமையும் எரிச்சலும் கொண்ட தீய சக்திகள் எமது இயக்கத்திற்கு மாசு கற்பிக்கும் வகையில் மிகவும் கீழ்த்தரமானமான, விசமத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. மக்களிடமிருந்து எம்மை அந்நியமாக்கும் நோக்குடன் எமக்கு எதிராக மிகவும் அபாண்டமான பொய்ப் பிரச்சாரத்தை இவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். மக்களின் விடுதலை என்ற இலட்சியத்திற்காக இவர்கள் இயங்கவில்லை. எமது விடுதலை இயக்கத்தை அழித்துவிடும் ஒரே நோக்கத்திற்காகவே இந்த சக்திகள் செயற்படுகின்றன. இவர்களின் சூத்திரதார நடவடிக்கைகளிலும், பொய்ப் பிரச்சாரங்களிலும் ஏமாந்து போகாது விழிப்புடன் இருக்க வேண்டுமென மக்களை நாம் கேட்டுக் கொள்கிறோம்.
ஒடுக்கப்படும் மக்கள் சமூகம் விழிப்படைந்து, புரட்சிகரப் பிரக்ஞைபெற்று, தேசியப் போராட்டத்தில் முழுமையாகப் பங்கு கொள்ளும் பொழுதே விடுதலை சாத்தியமாகிறது, மக்கள் மத்தியில் விரக்தியும் சோர்வும். குழப்பமும், நம்பிக்கையின்மையும் தோன்றும் பொழுது ஒரு தேசத்தின் போராட்ட சக்தி வலுவிழக்கின்றது. இந்த அரசியல் உண்மையை விடுதலைக்கு விரோதமான சக்திகள் நன்கறிவர். ஆகவேதான் மக்களின் நம்பிக்கையைத் தளர்த்தி, விடுதலைப் பற்றை மழுங்கடித்து, உறுதிப்பாட்டை உடைத்து, உண்மையான விடுதலை இயக்கத்திலிருந்து மக்களை அந்நியப்படுத்த இந்த சதிகார சக்திகள் செயற்படுகின்றன.
(தேசியத் தலைவரின் “எனது மக்களின் விடுதலைக்காக” கருத்துத் தொகுப்பு நூலிலிருந்து)