×

கொக்குவில், பிரம்படி, பொற்பதி வீதிப் படுகொலை – 12 அக்டோபர் 1987

கொக்குவில், பிரம்படி, பொற்பதி வீதிப் படுகொலை – 12 அக்டோபர் 1987

கொக்குவிற் கிராமம் யாழ் மாவட்டத்தில் நல்லூர்ப் பிரதேச எல்லைக்குள் அமைந்துள்ளது. பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் அமைந்துள்ள இடத்திலிருந்து மேற்குப் புறமாக ஏறக்குறைய ஐநூறு யார் தூரத்தில் கொக்குவில் பிரம்படி வீதி உள்ளது.

இந்திய இராணுவத்தினர் 1987ஆம் ஆண்டு பத்தாம் மாதம் பன்னிரண்டாம் திகதி பலாலியிலிருந்து யாழ் நகரை நோக்கிய தொடருந்து நிலைய வீதியூடாகக் கனரக வாகனங்கள் மூலம் முன்னேறி கொக்குவில் பிரம்படிப் பகுதியினைச் சுற்றிவளைதத்து. பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று அங்கிருந்த பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள், இளைஞர்கள் என யாவரையும் வீதிகளுக்கு அழைத்து வந்து சுட்டதில் நாற்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தார்கள். அன்றையதினம் வேறு ஒரு பகுதியூடாக வந்த இந்திய இராணுவத்தின் மற்றுமொரு அணியினர், கொக்குவில் பொற்பதிப் பகுதியைச் சுற்றிவளைத்து மக்களைக் கைதுசெய்து கொக்குவில் பிள்ளையார் ஆலயத்துக்கு வடக்காக நானூறு யார் தூரத்தில் அமைந்துள்ள சனசமூக நிலையத்தின் அருகே வீதியோரத்தில் அனைவரையும் உயிருடன் நிலத்தில் படுக்க வைத்து இராணுவத்தின் கவச வாகனங்கள், டாங்கிகளை அவர்கள் மீது ஏற்றிப் படுகொலை செய்தனர். இதில் அறுபத்துநான்கு பொதுமக்கள் உயிரிழந்தார்கள். 1987 ஒக்டோபர் பன்னிரண்டாம் திகதி பிரம்படிப் பகுதி, கொக்குவில் பொற்பதிப் பகுதி ஆகிய இடங்களில் நடந்த சம்பவத்தில் நூறிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தார்கள்.

பொற்பதி வீதியைச் சேர்ந்த 87 வயதான தட்சணாமூர்த்தி சிவராஜலிங்கம் தன்னுடைய வாக்குமூலத்தில் பின்வருமாறு கூறுகின்றார், ‘சுகாதாரப் பரிசோதகரான என்னுடைய சகோதரன் தட்சனாமூர்த்தி தவராஜலிங்கம், வயது 44, அவருடைய மனைவி தவராஜலிங்கம் கனகமலர், வயது 38, பிள்ளைகளான தவராஜலிங்கம் கரன், வயது 10, தவராஜலிங்கம் கஜேந்திரன், வயது 6, 18 மாதங்களே நிரம்பிய தவராஜலிங்கம் தர்மிகா ஆகியோர் கொக்குவில் பிரம்படி வீதியிலுள்ள இல 24 வீட்டில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். என்னுடைய இன்னெரு மருமகனான 11 வயதான ஹர்சனும் அவர்களுடன்தான் இருந்தார்.

அன்றைய தினம் என்னுடைய சகோதரனின் வீட்டுப்பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சத்தம் கேட்டது. அடுத்தநாள் காலை 7 மணிக்குத்தான் அவ்வீட்டுக்கு என்னால் போக முடிந்தது. அங்கே, என்னுடைய சகோதரன், அவரின் மனைவி, பஞ்சிளம் பெண்குழந்தை ஆகியோரின் சடலங்கள் வீட்டிற்குள் இருந்தன. வேறு இரு சடலங்களும் அவ்வளாகத்தில் காணப்பட்டன.

கரன், கஜேந்திரன், ஹர்சன் ஆகிய மூன்று பையன்பளும் இன்னொரு அறையிலிருந்த கட்டிலின் கீழ் ஒளிந்திருந்ததைக் கண்டேன். கஜேந்திரனும்  ஹர்சனும்  காயமடைந்திருந்ததுடன்  குருதி வடிந்துகொண்டும் இருந்தது.’

7 ஆம் வட்டாரம் நைநாதீவைச் சேர்ந்த 47 வயதான நாகலிங்கம் நாகேஸ்வரி தன் வாக்குமூலத்தில், ‘நான் என்னுடைய அண்ணா நாகலிங்கம் ஜீவரட்ணத்தின் குடும்பத்துடன் இல 24, பிரம்படி வீதி, கொக்குவிலில் வாழ்ந்துகொண்டிருந்தேன். சில வருடங்களுக்கு முன்னர்தான் என் பெற்றோர் மரணமடைந்திருந்தார்கள். அவ்வீட்டில், அண்ணாவும், பிள்ளைகளான கோகிலாவும் மனோகரனும், என்னுடைய சகோதரிகளான ஆனந்தகௌரி, சாரதாதேவியும் ஒன்றாக வசித்தோம்.

அன்றைய தினம் காலை ஒரு மணியிலிருந்து, துப்பாக்கிச்சூட்டுச் சத்தத்தால் எமது உறக்கம் கலைந்துபோயிருந்தது. காலை 5.30 அளவில், இந்தியப் படையினர் எமது வீட்டு வளவுக்குள் நுழைந்து எம்மை வெளியில் வருமாறு சொன்னார்கள். படைவீரர்கள் எமது வீட்டு வளாகத்தில் நின்றுகொண்டிருந்த நேரத்தில் எறிகணைகள் அருகில் விழுந்து வெடித்தது. பின்னர், குண்டுப் பயத்தினால் பயமடைந்தோ என்னமோ, அவர்கள் தங்கள் சுடுகலன்களை எம்மை நோக்கித் திருப்பினார்கள். என்னுடைய அண்ணாவும் ஆறே வயது நிரம்பிய அவரது மகன் மனோகரனும் அவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். என்னுடைய இரு சகோதரிகளும், ஏழு வயதான மருமகள் கௌசலாவும் அவர்களின் துப்பாக்சிச் சன்னங்களுக்கு இலக்காகிக் காயமடைந்தார்கள். பின்னர் அவர்கள் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள்.’

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments