×

பொத்துவில் இரத்தன்குளம் படுகொலை – 17 செப்ரெம்பர் 2006

பொத்துவில் இரத்தன்குளம் படுகொலை – 17 செப்ரெம்பர் 2006

அம்பாறை பொத்துவில் பிரதேசத்திலிருந்து 11கிலோ மீற்றர் தொலைவில் இரத்தன்குளம் உள்ளது. இந்த அணைக்கட்டு அமைந்துள்ள பிரதேசம் பொத்துவில் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்டது. எனினும் தற்போது அந்தக் கிராமம் சிங்களப் பகுதியிலுள்ள லபுகல கிராமசேவகர் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது. பொத்துவிலின் இரத்தன்குளம் பகுதியில் புத்தர்சிலை  ஒன்றினை  நிறுவும்  முயற்சிகளை  சிங்களவர்கள் மேற்கொண்டிருந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. அத்தோடு சிங்களவர்கள் பொத்துவிலிருந்து முஸ்லிம்களை முழுமையாக வெளியேற்றும் நோக்கில் அப்பகுதியில் வெனகல் என்னும் பெயரில் புதிதாக ஓர் பிரதேசசெயலகர் பிரிவை தனியாக உருவாக்கினர்.

இதனைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையே எல்லைச் சண்டைகளும், காணிப் பிரச்சனைகளும்  தொடர்ந்தவண்ணமே  இருந்தன.  இதனால்  இரு  இனத்தலைவர்களுக்கும் இடையே முறுகல் நிலை மேலும் வலுப்பெற்றது. இந்த நிலையில் மேற்படி குள அணைக்கட்டை புனரமைப்பதற்காக 2006 செப்ரெம்பர் 17ஆம் நாள் முஸ்லிம் இளைஞர்கள் சென்றிருந்தனர். சிறீலங்கா அதிரடிப்படையினர் அங்கு அவர்களைக் குத்தியும், வெட்டியும், கழுத்தறுத்ததுமாக பத்து முஸ்லிம்களை படுகொலை செய்தனர். ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முஸ்லிம் மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டார்.

இந்த  நிலையில்  மேற்படி  சம்பவ  தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் சின்னப்பிள்ளை என்னுமிடத்தில் அமைந்துள்ள முஸ்லிம்களின் மையவாடிப் பகுதியில் சிங்களவர்கள் அத்துமீறி நுழைந்து ஓருவரின் உடலைப் புதைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள், சிங்களவர்களுக் கிடையில் பெரும் இன முரண்பாடுகள் ஏற்பட்டன. இவ்வாறு முஸ்லிம்கள் குடியிருக்கும் நிலங்களை தமது ஆதிக்கத்திற்குக் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவந்த சிங்களப் பேரினவாதிகள் தொடர்ந்தும் முஸ்லிம்களை ஒடுக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக அவர்களுக்கு எச்சரிக்கை ஒன்றினை விடுக்கும் நோக்கிலேயே சிறீலங்கா விசேட அதிரடிப்படையினரால் இப்படுகொலைகள் மேற்கொள்ளப் பட்டதாக கருதப்படுகின்றது.

இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)

  1. எம். அமீர், 19
  2. எல்.அனீஸ், 19
  3. அத்துக்குஞ்சு, 18
  4. எம். பைரூஸ், 19
  5. எ.எம். பைசல், 19
  6. எம்.ஹம்சுமுதீன், 18
  7. எம்.ஜவார், 20
  8. எம்.நவாஸ், 18
  9. எஸ்.எல்.றிசாட், 21
  10. எம்.ஐ.சியம், 20

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments