
1990 ஜூன் 10 – சம்மாந்துறையின் கறைபடிந்த வரலாற்றுப் பக்கம்
வரலாறு சில நாட்களை மறக்க முற்பட்டாலும் அந்த நாட்களில் சிந்தப்பட்ட ரத்தமும் கண்ணீரும் என்றும் நீங்காத வடுக்களாக எம்முன் நின்று கொண்டிருக்கும். அத்தகைய துயரமான நாட்களில் ஒன்றுதான் 1990 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் திகதி.
அன்று சம்மாந்துறைப் பகுதியில் முஸ்லிம் ஆயுதக் குழுக்களினால் பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்புடன் தமிழ் பொதுமக்கள் மீது மிகக் கொடூரமான தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. எவ்விதப் பாதுகாப்பும் இல்லாத அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் திட்டமிட்ட வன்முறையின் உச்சமாகும்.
இத்தாக்குதலில் முஸ்லிம் ஆயுதக் குழுக்களால் 37 தமிழ் பொதுமக்கள் சுட்டும் வெட்டியும் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் வெறும் உயிர்களை மட்டும் பறிக்கவில்லை.
அப்பாவி மக்கள் படுகாயமடைந்து வாழ்நாள் வடுக்களைச் சுமக்க நேர்ந்தது. அதே வேளையில் தங்களின் வாழ்வாதாரமாகக் கருதிய சொத்துக்களையும், உடைமைகளையும் முற்றாக அழிக்கப்பட்டு நிர்க்கதியாக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வு எமக்கு உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான். இன முரண்பாடுகளால் அப்பாவி மக்கள் பலிகடா ஆக்கப்படும்போது அது ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் காயப்படுத்துகிறது. இத்தகைய படுகொலைச் சம்பவங்கள் வரலாற்று ஆவணங்களில் இருந்து மறைக்கப்படக் கூடாது.
இன்று அந்த ஆன்மாக்களையும் அன்று அந்த மண்ணில் தங்கள் வாழ்வை இழந்த அனைத்து உறவுகளையும் நினைவு கூர்வது எமது கடமை. உண்மைகள் மழுங்கடிக்கப்படாமல் வரலாறாகப் பேசப்பட வேண்டும்.