×

இருபதாம் நூற்றாண்டின் செயல் வீரன் பிரபாகரன்

கடந்த சில நூற்றாண்டுகளில் தமிழினம் கண்டும் கேட்டுமிராத ஒரு செயல்வீரனை இந்த நூற்றாண்டில் தமிழீழம் பெற்றிருக்கிறது, பெருமை கொண்டிருக்கிறது. பட்டம் பெற்றவர்களும் சட்டம் படித்தவர்களும் தங்கள் நாவன்மையாலும் சட்டநுணுக்கத் திறனாலும் தமிழ் மக்களுக்கு அவர்களது உரிமைகளை நிலை நாட்டவும் பாதுகாப்புப் பெற்றுத்தரவும் செய்த முயற்சிகள் எவையும் வெற்றி ஈட்டிக் கொடுத்ததில்லை.

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும், சுயநிர்ணய உரிமைகளை நிலை நாட்டவும் காந்திய வழியில், தமிழ்த் தலைவர்கள் சாத்வீக வழிமுறையில் நடத்திய போராட்டங்களும் தோல்வியடைந்தன. ஜனநாயக வழியும் சாத்வீகப் போராட்டங்களும் சிங்களப் பேரினவாதத்தின் தமிழ் இன ஒழிப்புக்கே பயன்பட்டன. தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கில் விவசாயவிருத்தி என்ற பெயரில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் தாயகமண் ஆக்கிரமிப்புக்குள்ளானது. நாட்டின் பாதுகாப்பு என்று சொல்லி தமிழ் இன ஒழிப்பு முடுக்கிவிடப்பட்டது.

தமிழர் தாயக மண்ணைக் காக்கவும் தமிழ் இன ஒழிப்பைத்தடுத்து தமிழ் மக்களைக் காப்பாற்றவும் இனி வேறு வழியில்லை என்ற நிலையில் ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி, வல்லரசுகள் உதவியுடன் அழித்தொழிக்க முனைந்தது சிங்களப் பேரினவாதம்.இந்தச் சதித்திட்டங்கள் யாவற்றையும் தவிடுபொடியாக்கி போர் நிறுத்தத்தைப் பிரகடனம் செய்து சமாதானப் பாதைக்கு வழிகாட்டி பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர சமாதானத்துக்கு சிங்களத் தலைமைக்கு அழைப்பு விடுத்துக் காத்திருக்கிறார், தலைவர் பிரபாகரன்.

மாவீரன் அலெக்சாந்தர், மாவீரன் நெப்போலியன் போன்றவர்கள் பற்றிப் பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களிலும் வரலாற்றுப் பாடங்களாக இடம் பெற்றிருக்கின்றன. அந்த மாவீரர்கள் பற்றிப் படித்துத்தான் அறிந்து கொள்கின்றார்கள். நவீன போர்ச்சாதனங்களும் போர்க்கருவிகளும் மலிந்துள்ள இந்த விஞ்ஞான யுகத்தில் இந்த நூற்றாண்டில் பல்வேறு நாடுகளின் உதவியுடன் போர் புரிந்த சிறிலங்காவின் முப்படைகளையும் எதிர்த்து தமிழர் தாயகத்தின் பெரும் பகுதியை மீட்டு தமிழீழ விடுதலைக்கு வித்திட்டிருக்கும் மாவீரன் பிரபாகரன் அவர்களை மக்கள் நேரடியாகவே பார்த்து அறிந்துபோற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வடதுருவம் தென்துருவம் என இன்று விரிந்து கிடக்கும் தமிழ் கூறும் நல்லுலகில் மட்டுமல்லாது அகில உலகிலுமே இன்று வரலாற்று நாயகனாக தமிழீழத் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் விளங்குகின்றார்கள்.

தலைவர் பிரபாகரன் அவர்கள் மீது தமிழ் மக்கள் எத்தகைய பாசத்தையும் பக்தியையும் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம் எடுத்துக் காட்டாக விளங்குகிறது.

இவ்வருடம் ஜுன் மாதம் நான்காம் திகதி நான் கிளிநொச்சிக்கு அழைக்கப்பட்டேன். எனது ஐம்பதாண்டு காலப் பத்திரிகைப் பணியையும் அதன் மூலம் தமிழ்த்தேசியத்துக்கு நான் அளித்துள்ள பங்களிப்பையும் பாராட்டித் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் எனக்குச் சிறப்பு விருது வழங்கி விருந்தும் அளித்துக் கௌரவித்தார்.

தேசியத் தலைவரிடம் கௌரவம் பெற்று மறு நாள் யாழ் நகர் சென்றிருந்தேன். நகரில் இதுவரை நான் பலதடவைகளிலும் சந்திப்பவர்கள் கூட அன்று என்னைப் பார்த்து மரியாதை செலுத்தியது என்னை வியப்படையச் செய்தது. மறுநாள் 6ஆம் திகதி காலை பெருமாள் கோயிலுக்கு வழமைபோல் சுவாமி தரிசனம்செய்யச் சென்றேன். தரிசனம் முடிந்து வெளியே வந்ததும் ஆஞ்சநேயர் கோயில் வாசலுக்கு நேரே கோபுரவாசலுக்கு வெளியே ஒரு நண்பர் நின்று ‘உங்களைப் பார்க்கத்தான் காத்து நிற்கின்றேன்.’என்றார்.

நான் நின்றதும் என்னை நோக்கி வந்த அந்த அன்பர் ‘எனது கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக் கொண்டார். நான் அதிர்ச்சியடைந்து நீங்கள் யார்? ஏன் எனது கைகளைப் பிடிக்கின்றீர்கள்?’ என்று கேட்டேன். அந்தக் காலத்தில் காசிக்கு யாத்திரை போய் வருபவர்களைச் சென்று பலரும் தரிசிப்பார்கள். அப்படிச் செய்வது காசிக்குப் போய்த் தரிசித்த பயனைத்தரும் என்று சொல்வார்கள்.

‘நீங்கள் எங்கள் தலைவரைத் தரிசித்து அவர் கைகளால் விருது பெற்று வந்திருக்கிறீர்கள். தலைவர் கரங்களால் விருதுபெற்ற பாக்கியம் உங்களுக்கு இருக்கிறது. அந்தப்புண்ணியம் எனக்கும் கொஞ்சம் கிடைக்க வேண்டும் என்பதற்காக உங்கள் கைபற்றிக் கண்ணில் ஒற்றிக்கொண்டேன்.’ என்று அந்த அன்பர் கூறியதும் நான் மெய்சிலிர்த்து சிறிது நேரம் அசையாமல் நின்றேன்.

ஒழுக்கமும், கட்டுப்பாடும், வீரமும், விவேகமும், நேர்மையும், அஞ்சா நெஞ்சமும் கொண்ட தன்னலமற்ற ஒரு தலைவன்தான் ஓர் இனத்தின் விடுதலைக்குத் தலைமைதாங்கி வெற்றி நடைபோட முடியுமென்பதை நிரூபித்திருக்கிறார் மாவீரன் பிரபாகரன்.

இன்று தமிழ் மக்கள் தரணியில் தலை நிமிர்ந்து நடப்பதற்குத் தலைவர் பிரபாகரனே காரணம் என்பதை உணர்ந்துள்ள தமிழ் மக்கள், வாராது வந்துள்ள மாமணியாம் தலைவர் பிரபாகரன் மீது அளவுகடந்த பாசமும், நேசமும், பக்தியும், விசுவாசமும் செலுத்தி நிற்கின்றனர். அவர் நீடுவாழப் பிரார்த்திக்கின்றனர்; வாழ்த்துகின்றனர்.

ஆக்கம் :- எஸ்.எம்.கோபாலரத்தினம்

மூத்த பத்திரிகையாளர், முன்னாள் ஆசிரியர், ஈழநாடு.

நன்றி. விடுதலைப் பேருரொளி ( தேசியத் தலைவரின் அகவை 50 நூல் இருந்து)

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments