×

இரும்புகாலத்திற்கு முந்தைய தாண்டிக்குடி கற்பதுக்கைகள்!

உலகளாவிய அளவில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கிடைத்திருக்கின்றன. அவையாவும் கிமு 1500 முதல் கிமு 500 வரை கூறப்படுகிறது. இரும்புக்காலம் ( கிமு 1200 முதல் கிமு 500) என்பதும் ஏறத்தாழ இதே காலகட்டமாக கூறப்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே மேற்கு தொடர்ச்சி மலைமீது அமைந்திருக்கும் தாண்டிக்குடி எனும் ஊரில் கிடைத்துள்ள கற்பதுக்கைகள் அகழ்வாய்வு செய்யப்பட்டு அதன் காலம் இரும்புக்காலத்துக்கு முந்தையதாக இருக்கலாம் என்ற கட்டுரையொன்று Academia மற்றும் researchgate தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. குமரன், சரண்யா எனும் இருவர் இக்கட்டுரையை வெளியிட்டுள்ளனர். இருவரும் பாண்டிச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் திரு இராஜன் அவர்களின் வழிகாட்டுதலில் இவ்வறிக்கையினை வெளியிட்டுள்ளனர். எனினும் பேராசிரியர் இராஜன் அவர்களின் முழுமையான ஆய்வறிக்கையை எதிர்நோக்கி வரலாற்று ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் காத்திருக்கின்றனர். ஏற்கனவே இதுகுறித்து சில பேப்பர்களை அவர் செய்திருக்கிறார்.

தாண்டிக்குடி என்ற பெயரானது தற்போது பழநி முருகனின் legend உடன் இணைத்து இங்கிருந்து பழநி மலைக்கு முருகன் தாண்டியதாகவும் அதனால் இப்பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கிபி 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த குலசேகர பாண்டியனின் கல்வெட்டில் இவ்வூரின் பெயர் தான்றிக்குடி என்று பதிவாகியுள்ளது. அதாவது தான்றி எனும் ஒருவகை மரம் இப்பகுதியில் மட்டுமே அதிகம் பார்க்க முடிகிறது. மலைப்பகுதியில் மட்டுமே செழித்து வளரும் இந்த தான்றி மரத்தின் காய்கள் பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு தீர்வாக சொல்லப்படுகிறது. தான்றிக்குடி எனும் பெயர் காலப்போக்கில் மருவி தாண்டிக்குடி என்றாகிவிட்டது. அதோடு பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் போதே ஆங்கிலேயர் ஒருவர் இம்மலைப்பகுதியில் குடும்பத்துடன் தங்கி 2000 க்கும் அதிகமான இந்நிலத்திற்கே உரித்தான அரிய தாவர வகைகளையும் அதன் மூலிகை குணங்களையும் விரிவாக பதிவு செய்திருக்கிறார்.

மதுரை,பழநி,திண்டுக்கல், பொள்ளாச்சி போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்ல ஒரு பெருவழி பாதையும் இப்பகுதியினூடாக இருந்திருப்பதை அறிய முடிகிறது. கொடைக்கானல், பெருமாள்மலை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மணலூர் போன்றவை அப்பெருவழி கடந்து செல்லும் ஊர்கள். கிபி 1280ஐ சேர்ந்த குலசேகர பாண்டியன் கல்வெட்டில்,’மலைமண்டலத்து ஐய்யப்பொழில் பேரூரான மணலூரோமுந் தான்றிக்குடி ஊரோமும் முன்னாளுள்ள இன்னாம் பகையும் அறுத்தந்து கல்லுவெட்டி நாட்டினபடியாவது’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது மணலூருக்கும் தான்றிக்குடி ஊராருக்கும் பலநாளாக இருந்து வந்த பகையை இருவூர் மக்களும் சேர்ந்து தீர்த்துக்கொண்டமையை கல்வெட்டாக வைத்திருக்கிறார்கள் என தெரிகிறது. இக்கல்வெட்டிற்கு எதிராக இருக்கும் விநாயகர் கோவில் வாசலில் 18ஆம் நூற்றாண்டை சேர்ந்த வீரனின் நடுகல் ஒன்றும் ஒரு கையில் துப்பாக்கி மறுகையில் கத்தி சகிதமாக காட்சியளிக்கிறது.

தாண்டிக்குடி முருகன் கோவில் நூற்றாண்டுக்கு முந்தி கட்டியதாக தெரிகிறது. சமீபத்தில் புணரமைத்த சுவடுகளும் தெரிகின்றன. இக்கோவில் வளாகத்தில் ஒரு கல்வட்டம் (Cairn Circle) அகழ்வாய்வு செய்யப்பட்டிருக்கிறது. அவற்றை படத்தில் காணலாம். இந்த இடத்தில் கரி, எலும்புகள், சாம்பல் போன்றவை கிடைத்திருக்கின்றன. அதே சமயம் பல்வேறு வகையான ceramics கிடைத்திருக்கிறது. அவை Black ware, Red ware, Black slipped ware, Black and red ware, cut ware போன்றவையாகும்.

முக்கிய ஈம பொருட்களாக (Grave goods) தாமிர பொருட்களும் இரும்பும் கிடைத்திருக்கின்றன. கூடவே கார்னீலியன் மணிகள், குவார்ட்ஸ், நான்கு காலுடைய குடுவைகள், பாத்திரங்கள், வளைந்த தட்டையான ஸ்டாண்டுகள், பெரிய ரக ஜாடிகள், L வடிவ பொருட்கள், தூண்டில் போன்றவையும் கிடைத்திருக்கின்றன. அதோடு இங்கு கற்பதுக்கைகள், கல்வட்டங்கள் மட்டுமின்றி தாழிகள் போன்றவையும் கிடைத்திருக்கின்றன. மொத்தமாக இப்பகுதியில் கிடைக்கும் burial types மட்டும்,

1. Dolmens
2. Cist burials
3. Urns
4. Cairn – Circle

மணிமேகலை கூறும் பலவகையான ஈமச்சடங்குகளும் இந்த ஒரே நிலப்பரப்பில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கொடுமணல் பகுதியிலும் கிடைக்கின்றது. Cist burial-ல் மட்டும் மூன்று வகைகளை பார்க்க முடிகிறது. அதாவது Simple cist, Cist with multiple transept , cist with double chambers போன்றவை.

வழக்கமாக ஒரு கற்பதுக்கைக்கு ஒரு capstone தான் பார்த்திருப்போம். ஆனால் இந்த பகுதியில் இரண்டு பதுக்கைகளுக்கு சேர்த்து ஒரே capstone அமைத்திருக்கிறார்கள். அவற்றுடன் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட பதுக்கைகள் ஒரே வட்டம் அல்லது சதுரத்திற்குள் ஒரு சுவரெழுப்பி அதற்குள்ளாகவே அமைத்திருக்கிறார்கள். வட்ட வடிவ சுற்று சுவர் கட்டிடக்கலையின் தோற்றுவாயாக அறியமுடிகிறது.

இரும்புகாலத்திற்கு முன்பிருந்து தற்போது வரை தொடர்ச்சியாக 4000 ஆண்டுகால தொடர் குடியேற்றம் அந்த மலைப்பகுதியில் நிகழ்ந்திருக்கிறது என்பது இதன் வாயிலாக அறியமுடிகிறது.

Sources:
1. (Pre) Iron age burials of Thandikudi, Tamilnadu by Dr Kumaran and Dr Saranya
2. Excavations at Thandikudi, Tamilnadu , Man and Environment XXX (2): 49-65 by Dr Rajan et al.

மேலும் கட்டுரைகளுக்கு கீழே அழுத்தவும்.

Pre_Iron_Age_Burials_of_Thandikudi_Tamil_Nadu

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments