×

திம்புவில் பேச்சுவார்த்தை

திம்புவில் பேச்சுவார்த்தை

புயலின் வேகத்துடன் புலிகளின் ஆயுதப் போராட்டம் உக்கிரமடைவதைக் கண்டு இந்திய அரசு கலக்கமடைந்தது. சிங்கள இராணுவ இயந்திரம் சிதைக்கப்பட்டுத் தமிழரின் ஆயுத எதிர்ப்பியக்கம் வெற்றிப் பாதையில் வீறுநடை போட்டால், தனியரசு சாத்தியமாகும் சூழ்நிலை பிறந்துவிடுமென இந்தியா அஞ்சியது. போட்ட அழுத்தம் போதும், இனிப் போர் நிறுத்தம் செய்து, பேச்சுக்களை நடாத்தி, பிரச்சினையைத் தீர்ப்போம் என இந்திய அரசு 1985இன் ஆரம்பத்திலிருந்தே புலிகள் இயக்கம் மீது அழுத்தத்தைப் போட்டது.

இந்தியாவின் வற்புறுத்தலின் பேரில் 1985 யூன் 18ஆம் திகதி விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ஆயுதப் படைகளுக்கும் மத்தியில் போர்நிறுத்தம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து யூலை முதற்பகுதியில் இந்திய அரசின் மத்தியத்துவத்தின் கீழ், பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுக்கள் ஆரம்பித்தன. கூட்டணி உட்பட சகல தமிழ் அமைப்புக்களும் பேச்சுக்களில் கலந்து கொண்டன.

தமிழரின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்திப் புலிகள் இயக்கம் திம்புப் பேச்சுக்களில் முன்வைத்த நான்கு கோட்பாடுகளை ஏனைய அமைப்புக்களும் ஏற்றுக் கொண்டு தன்னாட்சி உரிமைக் கோரிக்கையில் ஒரே நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டமை, இந்திய அரசுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்துத் தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்க வேண்டும் என்ற விடுதலைப் புலிகளதும், மற்றைய தமிழ் அமைப்புக்களதும் ஏகோபித்த கோரிக்கையைச் சிங்கள அரசு நிராகரித்தது. இப்படியாக திம்புப் பேச்சுவார்த்தைகள் சிக்கலடைந்த நேரத்தில், வவுனியாவில் சிங்கள இராணுவம் போர் நிறுத்தத்தை மீறி 200இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தது. இதனைக் கடுமையாக ஆட்சேபித்துப் புலிகளும், ஏனைய அமைப்புக்களும் திம்புப் பேச்சுக்களைப் பகிஸ்கரிக்க முடிவெடுத்தன. இந்திய அரசு பேச்சுக்களைத் தொடர வைக்கப் பகீரத முயற்சி செய்தும், திம்புப் பேச்சுக்கள் முறிவடைந்தன. பேச்சுக்கள் முறிவடைந்ததைத் தொடர்ந்து தமிழீழத்தில் விடுதலைப் போர் உக்கிரமடைந்தது; விடுதலைப் புலிகள் தொடர்ந்து வீரசாதனைகள் புரிந்தனர்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments