
தமிழீழ விடுதலைப் போராட்டமென்பது வெறுமனே ஆயுதப் போராட்டத்தோடு முடிந்துவிடக் கூடிய ஒன்றல்ல
ஈழத் தமிழினத்தின் தேசிய விடுதலைப் போராட்டமான தமிழீழ விடுதலைப் போராட்டமென்பது வெறுமனே ஆயுதப் போராட்டத்தோடு முடிந்துவிடக் கூடிய ஒன்றல்ல. அரசியல், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம் ஆகிய சகல துறைகளிலும் புரட்சி ஏற்படுத்தப் பட்டால் மட்டுமே ஈழத் தமிழருக்கு முழுமையான விடுதலை ஏற்படும் என்பதை நன்குணர்ந்த புலிகள் சிங்கள மேலாதிக்கவாதிகளிடமிருந்து அதிகாரத்தை மீட்க இராணுவ அமைப்பையும், பொருளாதார விடுதலைக்காக உணவு உற்பத்திக்குழு, கைக்தொழில் அபிவிருத்திக் குழு ஆகியவற்றையும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த பிரச்சார வெளியீட்டு வாரியம் கலாச்சாரக் குழு என்பவற்றையும் ஏற்படுத்தி தமிழ் மக்களை அணுகி வருகின்றனர்.
இவை தவிர போராட்டக் காலங்களில் தமிழ் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாய விலைக் கடைகள் போன்றவற்றை ஏற்படுத்தி மக்களோடு ஒன்றி, மக்களை அணி திரட்டி கெரில்லாப் போராட்டமாகத் தொடங்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றும் இறுதிக் கட்டப் பணியை புலிகள் இன்று வெற்றிகரமாகச் செய்து வருகிறார்கள்.
உள்ளூர் உற்பத்திக் குழு:
இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளூர் உற்பத்திக் குழு தமிழீழ மக்களுக்கு அத்தியாவசியமான பல்வேறு உள்ளூர் உற்பத்தி செயற் திட்டங்களை உருவாக்கி ஊக்குவித்தும், செயற்படுத்தியும் வருகின்றது. போராட்டம் கூர்மையடையும் காலகட்டத்தில் தமது அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் தமிழீழத்திலே உருவாக்கும் சுதேச பொருளாதார அமைப்பைக் கட்டியெழுப்புவதே இக்குழுவின் முக்கியமான பொறுப்பாகும். தமிழ் மக்கள் அன்றாடம் அத்தியாவசியமாகப் பார்க்கும் பொருட்களை விடுதலைப் புலிகளின் உள்ளூர் உற்பத்திக் குழு தானே உற்பத்தி செய்வதுடன், மக்களையும் உள்ளூர் உற்பத்தியில் ஈடுபட வைத்து அதன் பாவனையின் அத்தியாவசியத்தை மக்களுக்கு எடுத்து விளக்கி வருகிறது.
சிங்கள இராணுவ ஆதிக்கத்திலிருந்து தமிழ் மண் விடுபட்டால் மட்டும் ஈழத் தமிழ் மக்கள் விடுதலை பெற்றுவிட முடியாது. உணவு, பொருளாதாரக் காரணிகள் அந்நிய ஆதிக்கத்திலிருந்து படிப்படியாக விடுவிக்கப்பட்டு நமது (சுதேச) உள்ளூர் உற்பத்தியில் ஓரளவாவது தன்னிறைவு காணப்படின் மட்டுமே நாட்டைக் கட்டியெழுப்பித் தம்மைத் தாமே ஆளமுடியும்.
தமிழீழ விடுதலைப் போரின் கூர்மையில் சிறீலங்காவினது தொடர்புகள் துண்டிக்கப்பட்டு சிறீலங்காவின் உற்பத்திப் பொருட்கள் தமிழீழத்துக்கு வருவதே தடைப்படும். எனவே ஆயுதமேந்திப் போராடுதல் தமிழீழ விடுதலைக்கு எத்துணை முக்கியமானதோ உள்ளூர் உணவு உற்பத்தி, உள்ளூர் கைத்தொழில் வளர்ச்சி என்பவையும் அதேயளவு முக்கியமானவை என்குணர்ந்த புலிகள் அத்துறைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.
கலாச்சாரக் குழு :
புலிகளின் கலாச்சாரக் குழு இன்று மக்கள் மத்தியில் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது. கிராமங்கள் தோறும் தெருக்கூத்து, வீதி நாடகம், வில்லுப்பாட்டு, பட்டிமன்றம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்றவற்றைச் சிறப்புற நடத்தி வருகின்றது. திடீரென ஒழுங்குபடுத்தப்படும் இக்கலை நிகழ்ச்சிகளுக்கு தமிழீழ மக்கள் பெரும் ஆதரவளித்து வருகின்றனர். இந் நிகழ்ச்சிகளின் மூலம் மக்களுக்கு உண்மை நிலையை உணர்த்தி, போராட்ட உணர்வை வளர்க்கும் பணியில் புலிகள் வேகமாகச் செயற்பட்டு வருகிறார்கள்.
மக்கள் பாதுகாப்பு:
முன்பு புலிகள் சிங்கள இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால் எதிர் நிற்க முடியாத சிங்கள இராணுவம் பதிலுக்கு
பொது மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை மேற்கொள்ளும். ஆனால் இன்று போராட்டம் ஓர் புதிய பரிமாணத்தை எடுத்து வருகின்றது. தாக்குதலைத் தொடர்ந்து புலிகள் மக்களுடனேயே இருந்து பூரண பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமிழ் மக்களையும், சொத்துக்களையும் இராணுவ வெறியாட்டத்திலிருந்து பெருமளவு பாதுகாத்து வருகின்றனர்.
தமிழீழ மக்களும் புலிகளோடு ஐக்கியமாகித் தம்மைத் தாமே பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அனைவருமே இப்புரட்சிகர யுத்தத்தில் தம்மாலியன்ற முழுப் பங்களிப்பையும் செலுத்தி வருகின்றனர். தமிழீழத்தில் இன்று மக்கள் போராட்டம் எழுச்சி பெற்றுள்ளது. தமிழீழம் உதயமாகும் நாள் அண்மித்துக் கொண்டிருக்கிறது.
– புலிகளின் வீரவரலாறு
தமிழர்சேனை_50