×

வாக்குமூலங்கள்

வாக்குமூலங்கள்

இந்தியப்    படையினரின்     காலத்தில்  அவர்களால் அநியாகமாகக்    கொல்லப்பட்ட    ஏனையவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 500 பேரின் வாக்கு மூலங்களிலிருந்து எடுக்கப்பட்ட தொகுப்பே இங்கே தரப்படுகின்றது.

அடுத்து வரும் இரு வாக்கு மூலங்களில் விபரிக்கப்பட்டுள்ளது போன்று, எறிகணைத் தாக்குதல்களிலிருந்து தப்ப மக்கள் அடைக்கலம் புகுந்த பாடசாலைகளும் தாக்குதலுக்குள்ளாகியிருந்தன.

  1. திருச்செல்வம் ஒழுங்கை, பலாலி வீதி. கோண்டாவிலைச் சேர்ந்த செல்லையா துரைராஜா தன்னுடைய வாக்குமூலத்தில் 1987 ஒக்ரோபர் 20 ஆம் திகதி தன்னுடைய குடும்பம் சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் புகலிடம் கோரியிருந்ததாகச் சொல்லியுள்ளார். அங்கே அவருடன் கைக்குழந்தையுடன் கூடிய அவருடைய மகளும் இருந்தார். மாலை 7.00 மணியளவில் நாவற்குழி முகாமில் நிலைகொண்டிருந்த இந்தியப் படையினர் ஏவிய எறிகணைகள் வகுப்பறையொன்றின்மீது விழுந்து வெடித்தன. அதில் அவருடைய மகள் கொல்லப்பட்டார். அன்றைய தினம் எறிகணைத் தாக்குதலில் அகப்பட்டு 10 மக்கள் கொல்லப்பட்டதாகத் துரைராஜா தன்னுடைய வாக்குமூலத்தில் கூறினார்.
  2. 70, கன்னாதிட்டி வீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கமலாம்பிகை கறுப்பையா என்பவர் தன்னுடைய வாக்குமூலத்தில் ஒக்ரோபர் 20 ஆம் திகதி தன்னுடைய குடும்பம் நாவலர் பாடசாலையில் தஞ்சம் புகுந்ததாகத் தன்னுடைய வாக்கு மூலத்தில் கூறினார். ஒக்ரோபர் 24 ஆம் திகதி அங்கு வந்த இந்தியப் படையினர் பாடசாலையில் தஞ்சம் கோரியிருந்த மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர் இதில் அவருடைய 28 வயது கணவரான சிவலிங்கம் கறுப்பையா உட்பட 17 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அவர் கூறினார். கொல்லப்பட்டவர்களின் சடலங்களை   பாடசாலை   மைதானத்திலேயே   அடுத்தநாள்

இந்தியப்படையினர்  எரித்தாகவும்  அவர்  கூறினார்.

இந்தியப் படையினர் எவ்வாறு ஆண்கள், பெண்கள், இளவயதினர், வயது முதிர்ந்தவர்கள் எனப் பலரையும் சுட்டுக்கொன்றொழித்தார்கள் என்பதை அடுத்தடுத்த வாக்குமூலங்கள் கூறுகின்றன. அவ்வாறான ஒன்பது வாக்குமூலங்களில் சொல்லப்பட்டவை கிழே தரப்படுகின்றது.

  1. சுன்னாகம் மின்சார நிலையத்தைச் சேர்ந்த இராசையா சேகரம் தன்னுடைய வாக்குமூலத்தில் பின்வருமாறு கூறுகின்றார். அதாவது 1987 ஒக்ரோபர் 12 ஆம் திகதி, மாலை ஐந்து மணியளவில் பல்வேறு துருப்புக்காவிகளில் இந்தியப் படையினர் அவ்விடத்தை நோக்கி வருகின்றார்கள் என்பதைக் கேள்விப்பட்டு கிட்டத்தட்ட 28 மக்கள் ஒரே இடத்தில் கூடினர். சற்று நேரம் கழித்து அங்கே வந்த இந்தியப் படையினர் அவர்கள் 28 பேரையும் வெளி இடமொன்றுக்கு வருமாறு கட்டளையிட்டு பின்னர் அவர்களை நோக்கிச் சுட்டனர். அச்சம்பவத்தில் எட்டுப்பேர் கொல்லப்பட்டார்கள். இந்தியப்படையினர் மாலை 6.30 மணியளவில் அங்கிருந்து சென்றனர். காயமடைந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட, ஏனையோர் அங்கிருந்து தப்பினர். ஒக்ரோபர் 16 ஆம் திகதியே அவ்விடத்திற்குத் திரும்பியதாக சேகரம் கூறினார். அன்றும்கூட இறந்தவர்களின் சடலங்கள் உடற்கூறுகளாக அங்கேயே  கிடந்ததாகக்  கூறினார்.  சேகரம்  தன்னுடைய  அம்மாவையும்  அப்பாவையும் இழந்தார்.  அச்சம்வபத்தில்  கொல்லப்பட்டவர்கள்  என  அவர்  தன்னுடைய  வாக்குமூலத்தில் கூறியுள்ள பெயர்கள் வருமாறு: கணபதி இராசையா வயது 45, இராசையா மனோன்மணி, வயது 37, நன்னித்தம்பி ராஜினிதேவி, வயது 14, முத்தன் கதிரி வயது 33, முதுசிங்கம் பூரணன் வயது 33, கனகன் செல்லி வயது 60, கதிர்காமநாதன் சரோஜினிதேவி வயது 20, கதிர்காமநாதன் விமலநாதன் வயது 89.
  1. பொக்கணை, ஊரெழுவைச் சேர்ந்த புவனேந்திரம் யோகம்மா தன்னுடைய வாக்குமூலத்தில்

கூறுகையில் 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 12 ஆம் திகதி வந்த இந்தியப் படையினர் கைகளை உயர்த்தியவாறு வெளியில் வருமாறு கட்டளையிட்டார்கள். அவர்கள் வெளியில் சென்றநேரத்தில் அவர்களை நோக்கி இந்தியப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். அவருடைய மகள் சுடப்பட்டு கீழே விழுந்தார். ஆனால் அம்மகளை அப்படியே விட்டுவிட்டு, இராணுவத்தின் கட்டளைக்கமைய அவர் தொடர்ந்தும் நடக்கவேண்டியிருந்தது. அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டு, அங்கு சென்று பார்த்தபோது, மகள் மரணமடைந்தும், வீடு தீக்கிரையாகியும் இருந்ததைக் கண்டனர்.

  1. ஊரேழு, உரும்பிராயைச்   சேர்ந்த     ராஜலிங்கம் விஜயாவின்      வாக்குமூலத்தில் பின்வருமாறு கூறுகின்றார். 1987 ஒக்ரோபர் 12 காலை 10 மணியளவில் இந்தியப் படையினர் வந்து கதவில் தட்டித் திறந்து, வீட்டுக்குள் நுழைந்து, தேடுதல் நடாத்தினார்கள். அவர்கள் திரும்புகையில், தமக்கு  எந்தத்  தீங்கும்  செய்ய  மாட்டோம்  என்றும்,  அவர்கள்  வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும் என்றும் சொன்னதாக விஜயா கூறுகின்றார். அப்பிரதேசத்திலிருந்து ஏனைய வீடுகளிலும் இந்தியப் படையினர் அவ்வாறு செய்ததாக அயலவர்கள் வாயிலாக பின்னர் விஜயா அறிந்துகொண்டார். மாலை மூன்று மணியளவில், வேறு ஒரு தொகுதி இந்தியப் படையினர் மீண்டும் வந்து கதவைத் தட்டினார்கள். குழந்தையைக் கையில் வைத்திருந்த அவருடைய கணவர் கதவைத் திறந்தபொது, இந்தியப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். குழந்தையுடனேயே அவர் நிலத்தில் விழுந்தார். பின்னர் இந்தியப் படையினர் அங்கிருந்து வெளியேறியதும், அயலவர்களின் உதவியுடன் விஜயா தன் கணவரையும் குழந்தையையும் வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றார். செல்லும்வழியிலேயே கணவர் மரணமடைந்தார். பிள்ளையின் வலது கை முழுங்கையுடன் கழற்றப்பட்டது.
  1. சர்வதா, சுன்னாகத்தைச் சேர்ந்த சீனியர் சந்திரகுமரனின் வாக்குமூலத்தில், 1987 ஒக்ரோபர் 13 ஆம் திகதி தன்னடைய மனைவியான 32 வயதுடைய சந்திரகுமரன் ஈஸ்வரியும் 12, 8, 3 வயதுகளையுடைய மூன்று பிள்ளைகளும் சுன்னாகம் மின்சார நிலையத்தில் வைத்து இந்தியப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக விபரித்தார்.
  2. பலாலி வீதி, வசாவிளானைச் சேர்ந்த சிவஞானசுந்தரம்பிள்ளை சிவனேசனின் வாக்குமூலத்தில் 1987 ஒக்ரோபர் 16 ஆம் திகதி தன்னுடைய வீட்டுக்கு வந்த இந்தியப் படையினர் அப்பா இலகுப்பிள்ளை சிவஞானசுந்தரம்பிள்ளை, வயது 63, அம்மா சிவஞானசுந்தரம்பிள்ளை சிவபாக்கியம், வயது 59, சகோதரன் சிவஞானசுந்தரம்பிள்ளை சிவதரன், வயது 32 ஆகியோரை சுட்டுக்கொன்றதாக கூறுகின்றார். சிவனேசன் இச்சம்பவம் நடப்பதற்குச் சற்று முன்னர்தான் கடைக்குச் சென்றுவிட்டு திரும்பி வருகையில் இந்தியப் படையினர் அவருடைய வீட்டுக்குள் சென்றதாக சில அவருக்குச் சொல்லியிருக்கின்றார்கள். ஒக்ரோபர் 25 ஆம் திகதி தான் சிவனேசனால் வீட்டுக்குத் திரும்பக் கூடியதாய் இருந்தது. அவ்வாறு வந்து பார்த்தபோது அவருடைய குடும்ப அங்கத்தவர்களின் சடலங்கள் மிகவும் சிதைவடைந்த நிலையிலிருந்ததையும் கண்டார்.
  1. கரந்தன் வீதி, ஊரெழு, சுன்னாகத்தைச் சேர்ந்த சின்னம்மா பூபதிப்பிள்ளையின் வாக்குமூலத்தில், 1987 ஒக்ரோபர் 20 ஆம் திகதி, இந்தியப் படையினர் முன்னேறி வந்ததைத் தொடர்ந்து, 65 வயதுடைய அவருடைய தந்தை இளையவன் ராமு தம்முடைய குடும்பத்துடன் வீட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தார் என்று கூறினார். வீட்டிலிருந்து ஏறத்தாழ 200 மீற்றர் தூரத்தில் இந்தியப் படையினர் அவர்களை நோக்கி சுட்டனர் அதில் அவருடைய தந்தை காயமடைந்து அவ்விடத்திலேயே மரணமடைந்தார். ஏனையோர் அவருடைய சடலத்தை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். ஒரு மாதத்தின் பின்னரே அவர்களால் திரும்பவும் வீடு செல்ல முடிந்ததாகவும் அவ்வாறு சென்றபோது, தந்தையின் எலும்புக்கூடு அந்த இடத்திலேயே இருந்தாகவும் கூறினார்.
  2. கலைவாணி வீதி, அனுங்கை, கோண்டாவில் என்னும் முகவரியைச் சேர்ந்த நாகேஸ்வரி ராஜலிங்கத்தின் வாக்குமூலத்தில், 1987 ஒக்ரோபர் 16 ஆம் திகதி வீட்டுக்குள் நுழைந்த இந்தியப் படையினர் தன்னுடைய கணவரையம், 78 வயது நிரம்பிய மாமியான செல்லையா, ஆச்சிப்பிள்ளையையும் சுட்டுக்கொன்றதாகச் சொல்கின்றார். அதிலிருந்து தப்பி வெளியேறிய நாகேஸ்வரிக்கு, நவம்பர் 21 ஆம் திகதியே வீடு திரும்பக்கூடியதாக இருந்தது. அவ்வாறு திரும்பிச் சென்று பார்த்தபோது கணவருடையதும் மாமியினதும் எலும்புக்கூடுகள் வீட்டிலேயே இருந்ததைக்  கண்டார்.
  3. வண்ணார் கோவிலடி, வசாவிளானைச் சேர்ந்த ஆறுமுகம் நாகலிங்கத்தின் வாக்குமூலத்தில், ஒக்ரோபர் 19 ஆம் திகதி, அவருயை மனைவி அயலவர்களின் வீட்டுக்குச் சென்றதாகவும், அந்நேரத்தில் அவ்வீட்டுக்குள் நுழைந்த இந்தியப படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்து ஒருவரைக் காயப்படுத்தியதாக கூறினார். அவ்வீட்டிலிருந்த ஏனையவர்கள் சமையலறைக்குள் ஓடிச்சென்று, ஒளிந்துகொண்டார்கள். கதவை உடைத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்த இந்தியப் படையினர், துப்பாக்கிப் பிரயோகம் செய்து ஒருவரை அந்த இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். அவருடைய மனைவி உட்பட வேறும் மூன்றுபேர் அச்சம்பவத்தில் காயமடைந்தனர். அவருடைய மனைவி பின்னர் காயம் காரணமாக இறந்துபோனார்.
  4. யாழ்ப்பாண வீதி, உடுப்பிட்டியைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய அருட்தந்தை வீரவாது நத்தானியல் தர்மகுலசிங்கத்தின் வாக்குமூலத்தில், 1989 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி இந்தியப் படையினர் தன்னுடைய வீட்டின் பின்புறமாகவும் முன்புறமாகவும் உள்ளே நுழைந்ததாகக் கூறுகின்றார். அவ்வாறு நுழைந்த இந்தியப் படையினர் கையில் குழந்தையைத்தூக்கி வைத்துக்கொண்டிருந்த அவருடைய சகோதரனைச் சுட்டார்கள். சகோதரனுக்கும் சிறு குழந்தைக்கும் சிறு காயம் ஏற்பட்டது. பின்னர், கர்ப்பிணியாக இருந்த ஒரு சகோதரி உட்பட இரு சகோதரிகளையும் சுட்டுக்கொன்றார்கள். கர்ப்பவதியாக இருந்த சகோதரியின் கைகளில் இருந்த குழந்தைக்கும் தொடையில் காயம் ஏற்பட்டது.

இந்தியப் படையினர் முன்னேறி வந்த நேரத்தில் வீடுகளிலிருந்து வெளியேறுவதில் சிறிது தாமதித்தவர்கள் எறிகணைத்தாக்குதலில் குடும்பம் குடும்பமாகக் கொல்லப்பட்டார்கள். பொதுஇடங்களுக்கு நடந்துசெல்ல முடியாத வயது போனவர்களும் அவரவர் குடும்பத்தினர் வந்து பார்த்தபோது என்புக்கூடுகளாகவே கண்டுபிடிக்கப்பட்டார்கள்.

  1. கோண்டாவில் வடக்கு கோண்டாவிலைச் சேர்ந்த சின்னையா கனகசபாபதியின் வாக்குமூலத்தில் கூறுகையில், 1987 ஒக்ரோபர் 10 ஆம் திகதி, நடக்கமுடியாத 88 வயதான அவருடைய அப்பாவை வீட்டில் விட்டுவிட்டு ஏனையோர் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் தஞ்சம் அடைந்திருந்தாக சொன்னார். அவருடைய இடத்திற்கு நுழைந்த இந்திப்படையினர் அவருடைய தந்தை உட்படப் பலரை சுட்டுக்கொன்றுவிட்டதாக அயலவர் ஒருவர் வந்து ஒக்ரோபர் 16 ஆம் திகதி அவருக்குச் சொன்னார். அவருடைய தந்தையின் நிலைமை பற்றித் தெரிந்துகொள்ள அவருடைய வீட்டுக்கு அவரால் உடனடியாகச் சொல்ல முடியாதளவுக்கு நிலைமை காணப்பட்டது. நவம்பர் 21 ஆம் திகதிதான் அவர்களால் திரும்பவும் வரக்கூடியதாக இருந்தது, அவ்வாறு திரும்பி வந்தபோது ஒரு எலும்புக்கூடுதான் வீட்டில் காணப்பட்டது. அதில் இருந்த உடைகளை வைத்துத்தான், அது அவருடைய தந்தையுடையது என்பதை அவர்கள் உறுதிசெய்தார்கள்.
  1. பலாலி வீதி,   கோண்டாவிலைச் சேர்ந்த     வைத்தியர் நாகலிங்கம் திருஞானசம்பந்தன் அவருடைய  சகோதரையும்,  சகோதரனின்  மனைவியையும்  அவர்களின்  குழந்தையும் இழந்திருந்தார். அவர் தன்னுடைய வாக்குமூலத்தில் பின்வருமாறு கூறினார்:

‘ஒக்ரோபர் 14 ஆம் திகதிக்கு முன்னதாக நாம் அனைவரும் எங்களுடைய சொந்த வீட்டிலேயே வாழ்ந்துகொண்டிருந்தோம். எங்களது வீட்டைச் சுற்றி எறிகணைகள் வந்து விழத்தொடங்கியதும், நாம் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் சென்று தஞ்சமடைந்தோம். நவம்பர் 1 ஆம் திகதி மட்டில், இல. 268, நல்லூர் வீதிக்குச் சென்று அங்கே தஞ்சமடைந்தோம்.

ஓய்வுபெற்ற பிராந்திய விவசாய மேம்பாட்டு அதிகாரியான, 68 வயது நிரம்பிய என்னுடைய சகோதரன் நாகலிங்கம் ஜெயசீலன் இருபாலை கோண்டாவிலிலுள்ள ‘ஈஸ்வரன் இல்லம்’ எனப்படும் அவருடைய சொந்த வீட்டிலேயே வாழ்ந்துகொண்டிருந்தார். அவருடைய வீட்டில் சகோதரனுடன் அவருடைய மனைவி றுக்குமணி, மகன் ஞானாஈஸ்வரன் மற்றும் இரு உள்ளுர் உதவியாளர்கள் கனகா கலாராணி, கனகா விஜயலக்மி ஆகியோரும் இருந்தார்கள்.

நவம்பர் 1 ஆம் திகதி என் தம்பியின் வீட்டுக்கு அருகில் வசித்த ஒருவர் என்னிடம் வந்து, தம்பி, மனைவி, மகன், மற்றும் இரு உதவியாளர்களின் சடலங்கள் அவர்களது வீட்டுக்குப் பின்புறம் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் காணப்படுவதாகச் சொன்னார். அங்கு நிலவிய அசாதாரண நிலைமை காரணமாக எம்மால் உடனடியாக அங்கு செல்ல முடியவில்லை. சில நாட்களின் பின்னர், ஐந்து சடலங்களையும் அவ்வளவிலேயே போட்டு எரித்ததாக ஏனைய உறவினர்கள் வந்து சொன்னார்கள். நவம்பர் 16 ஆம் திகதி ஒருவாறு அவருடைய வீட்டுக்குச் சென்றோம். அங்கே அவர்களது தனிப்பட்ட உடமைகள் காணாமற்போயிருந்ததுடன் வீடும் சூறையாடப்பட்டிருந்தது. அத்துடன் வளவில் உடல்கள் எரிக்கட்பட்டதற்கான அடையாளங்களையும், சில என்புகள் அங்கே இருந்ததையும் கண்டோம்.’

  1. 392, நாவலர் வீதி, கைலாசப்பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை தில்லையம்பலத்தின் வாக்குமூலத்தில், 1987 ஒக்ரோபர் 11 ஆம் திகதி, தன்னடைய வீட்டில் தன்னுடைய உறவினர்களில் பலர் தஞ்சமடைந்திருந்தாகக் கூறினார். யாழ்ப்பாணக் கோட்டையில் நிலைகொண்டிருந்த இந்தியப் படையினர் எறிகணைகளை ஏவத்தொடங்கினர்.

மூன்று எறிகணைகள் அவருடைய வீட்டின் மேல் விழுந்து வெடித்தன. அதில் 32 வயதான அவருடைய மருமகன் யோகநாதன், 90 வயது மாமா பசுபதி, ஒன்றுவிட்ட சகோதரி சின்னம்மா, அவருடைய மருமகள் நிர்மலாதேவி ஆகியோர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்கள். அவருடைய மகன் கதிர்காமநாதன், வயது 32, மகள் பவானி யோகநாதன் வயது 28, மருமகன் மகேஸ்வரகுமார் ஆகியோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் மரணமடைந்தார்கள். தில்லையம்பலத்தின் 2 மற்றும் 3 வயது நிரம்பிய இரு பேரக் குழந்தைகளும் இதில் படுகாமயடைந்தார்கள்.

  1. 66-3 பாலலிவீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முகாரசாமி தருமலிங்கம் தன்னுடைய வாக்குமூலத்தில் 1987 நவம்பர் 5 ஆம் திகதி இந்தியக் குண்டுவிமானங்களும் உலங்கு வானூர்திகளும் தமது இடத்தில் தாக்குதலை நடாத்தியதாக கூறினார். ஒரு குண்டு அவருடைய வீட்டின் மேல் விழுந்து அவருடைய 18 வயது மகள் தருமலிங்கம் நவராஜினி உட்பட குடும்ப அங்கத்தவர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டார்கள். இச்சம்பவத்தில் அவருடைய மச்சானின் பெற்றோர். மற்றும் மூன்று பிள்ளைகள் என ஐந்துபேரும் இச்சம்வத்தில் கொல்லப்பட்டார்கள்.

சில சம்பவங்களில் பயணம் செய்துகொண்டிருந்த மக்களும், சில சம்பவங்களில் இந்தியப் படைகளிடமிருந்து அனுமதி பெற்று தொண்டுப்பணியில் ஈடுபட்டிருந்தவர்களும்கூட கொல்லப்பட்டார்கள்.

  1. சண்டிலிப்பாய் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் புவனேஸ்வரியின் வாக்குமூலத்தில் 1987 நவம்பர் 9 ஆம் திகதி கல்வளைப் பிள்ளையார் கோவிலடியில் எறிகணைத் தாக்குதலில் காயமடைந்த நான்குபேரை  ஒரு  காரில்  ஏற்றிக்கொண்டு  தன்னுடைய  கணவர்  சென்றதாக கூறினார். அன்றைய தினமே திரும்பி வந்த அவர், தெல்லிப்பளை வைத்தியசாலையிலிருந்து யாழ்ப்பாண பொது வைத்தியசாலைக்கு சில நோயாளர்களை கொண்டுசெல்ல வேண்டியிருப்பதாக தன்னடைய மனைவிக்கு கூறியிருக்கின்றார். பின்னர் அவர் வைத்தியசாலைக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கின்றார். அவருடைய கணவரும் மேலும் நான்குபேரும் காரில் வைத்தே இந்தியப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக புவனேஸ்வரிக்குச் சொல்லப்பட்டது.
  2. அன்புவெளிபுரம், திருகோணமலையைச் சேர்ந்த முத்து பொன்னுத்துரையின் வாக்குமூலத்தில், 1986லிருந்து தன்னுடைய குடும்பம் யாழ்ப்பாணத்திலுள்ள நீர்வேலி ப.நோ.கூ.ச. கட்டடத்தில் அகதிகளாக வாழ்ந்து வந்தாகச் சொல்கின்றார். ஒக்ரோபர் 27 ஆம் திகதி அவருடைய மனைவியும் இரு பிள்ளைகளும் திருகோணமலைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். நவம்பர் மாதம், திருகோணமலைக்குச் சென்றுகொண்டிருந்த வான் ஒன்றின்மீது இந்தியப் படையினர் துப்பாக்கிச்சூடு நடாத்தியதாகவும் அதில் பிராமணக் குரு உட்பட 16 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் அறிந்துகொண்டார். அவ்வாகனத்தில் கொல்லப்பட்டவர்களில் அவருடைய மனைவியான மகேஸ்வரி பொன்னுத்துரை வயது 49, பிள்ளைகளான பொன்னுத்துரை மஞ்சுளாதேவி, வயத 28, பொன்னுத்துரை மகலேஸ்வரி வயது 10 ஆகியோரும் அடங்கியிருந்தாக 1987 டிசம்பரில்தான் அவருக்குத் தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட பலரது வாக்குமூலங்களிpல் சித்திரவதை செய்யப்பட்டதும் பதிவாகியுள்ளது.

தேனியம்பை, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பொன்னம்பல லோகேந்திரன் தனக்கும், தன்னுடைய இரு நண்பர்களுக்கும், இதர நான்கு இளைஞர்களுக்கும் 1987 நவம்பர் 16 ஆம் திகதி இந்தியப் படையினரால் இழைக்கப்பட்ட அடி, மின்சார பாய்ச்சல் சித்திரவதை ஆகியவற்றை தன்னுடைய வாக்குமூலத்தில் விபரிக்கின்றார். லோகேந்திரனும் ஏனைய இரண்டுபேரும் ஒரு இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்க ஏனையோர் வேறொரு இடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள். இரண்டு நாட்களின் பின்னர், அவர்கள் அனைவரையும் ஒரு வானில் ஏற்றி வெல்லாவெளி வெட்டைக்குக் கொண்டுசென்றார்கள். அவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவரான பரமசாமி பரமநாதன் சடலமாகவே எடுத்துச்செல்லப்பட்டார். அவரது சடலத்தை இந்தியப் படையினர் வெல்லாவெளியில் புதைத்தார்கள்.  தாம்  கடுமையாகச்  சித்திரவதை  செய்யப்பட்டதாகவும்,  அதில்தான்  பரமநாதன் இறந்தாகவும்  அவருடன் கூட அழைத்துச்செல்லப்பட்ட  இளைஞர்களில்  ஒருவர்  லோகேந்திரனுக்குக் கூறினார்.

அனில்குமார் என்ற இந்தியப் படைவீரரே பரமநாதனைச் சித்திரவதை செய்தவர்களின் முக்கியமானவர் என்று லோகேந்திரன் தன்னுடைய வாக்குமூலத்தில் சொல்லியிருக்கின்றார். பரமநாதனின்  சடலத்தைப்  புதைத்த  பின்னர்,  மேலும்  புதைகுழிகளைத்  தோண்டுமாறு  அவர்களுக்கு இந்தியப் படையினர் கட்டளையிட்டார்கள். பின்னர், முனுசாமி பாபுராஜ் என்ற இளைஞரைப் பார்த்து, தான் வெட்டிய குழிக்குள்ளேயே நிற்குமாறு இந்தியப் படையினர் ஆணையிட்டார்கள். பின்னர் அவர் இந்தியப் படையினரால் சுட்டுபட்டு அதற்குள்ளேயே போடப்பட்டார். ஏனையோருக்கும் அதே விதியே நடக்கும் என்று எச்சரிக்கப்பட்டார்கள். ஆயினும் பின்னர் லோகேந்திரன் உட்பட ஏனையோர் விடுவிக்கப்பட்டார்கள்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments