
துரையப்பா சுட்டுக் கொலை
பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகள் திட்டமிட்டபடி செயலில் குதிக்கிறார்கள். தமிழினத்தின் பெரும் துரோகியான அல்பிரட் துரையப்பா, 1975 யூலை மாதம் 27ஆம் திகதி பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு அருகாமையில் பிரபாகரனால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.
அல்பிரட் துரையப்பா கொலையுண்ட நிகழ்வு சிங்கள அரசுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழரின் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்க முயன்ற தமிழ்த் துரோகிகளுக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்தது. சிங்களப் பேரினவாதக் கட்சிகள் தமிழீழத்தில் நிலைகொள்ள முனைந்த முயற்சிகளுக்கும் இந்தச் சம்பவம் ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. சிங்கள இனவாத அடக்குமுறைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட ஆயுத எதிர்ப்பு இயக்கத்தின் முதலாவது அத்தியாயத்தை விடுதலைப் புலிகள் ஆரம்பித்து வைத்தனர். எழுபதுகளில் தமிழீழத்தை அதிர வைத்த முதலாவது ஆயுதப் போர் நடவடிக்கையை வெற்றிகரமாகச் செயற்படுத்தி, விடுதலையை நோக்கிய நீண்ட, கடினமான வரலாற்றுப் பயணத்தைத் தொடக்கி வைத்தார் பிரபாகரன்.
1976ஆம் ஆண்டு மே 5ஆம் நாள் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இராணுவ அமைப்பையும், அரசியல் அமைப்பையும் ஒன்றிணைத்த ஒரு தேசிய விடுதலை இயக்கமாக, விடுதலைப் புலிகள் தமது வளர்ச்சிப் பாதையில் வீறுநடை போட்டனர். அன்று மலர்ந்து கொண்டிருந்த எமது விடுதலை இயக்கத்திற்கும், தமிழர்களின் தேசியப் போராட்டத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கியது தமிழ்ப் பொலீஸ் உளவுப் படையாகும். இந்த உளவுப் படையுடன் சேர்ந்த சிங்கள அரசின் கைக்கூலிகளாகக் காட்டிக் கொடுப்போரும், இனத்துரோகிகளும் இயங்கினர். தமிழீழத்தில் ஒரு ஆயுதப் போராட்ட அமைப்பை வளரவிடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியோடு எதிரியின் கைப்பொம்மைகளாக இவர்கள் செயற்பட்டனர். எனவே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால கெரில்லா நடவடிக்கைகள், பொலீஸ் உளவுப் படையைச் சிதைப்பதோடு, காட்டிக் கொடுக்கும் கயவர்களையும், இனத்துரோகிகளையும் அழிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தது.