
லண்டன் மியூசியத்தில் உள்ள மட்டக்களப்பில் இருந்து கொண்டு செல்லப்பட்ட #கண்ணகிசிலை ??? (மட்டக்களப்பு தமிழகம் நூலில் இருந்து
இலங்கை மட்டக்களப்பில் கிடைத்த கண்ணகி சிலையொன்று கடல் கடந்து லண்டன் சென்று உலகப் புகழீட்டியுள்ளதாய் அறிகிறோம் இந்திய, இந்தோனேசியக் கலை வரலாறு (History of Indian and Indonesian Art-by Dr. K. Ananda Kumaraswamy Page 167) (யோகி ஆனந்தக் குமாரசுவாமியவர்கள் பிரிட்டிஷாரின் மியூசியத்தில் இருக்கும் இந்த அற்புதமான கண்ணகி சிலையின்சிறப்பினை வியந்து எழுதியுள்ளார்.
இது திருக்கோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் உள்ள ஓரிடத்தில் அகப்பட்டிருக்க வேண்டுமென்பது அவர் கருத்து. பஞ்சலோகத்தினுற் செய்யப்பட்ட இச்சிலைதான் கலையறிஞர் இன்று கண்டு மகிழ்தற்குரிய கண்ணகியின் ஒரு முழுச் சிலையாக விளங்குகிறது.
இடது கால் ஒடிந்துபோன நிலையில் இன்னோரு அழகிய கண்ணகி சிலையும் அங்குள்ளது. இலங்கையிற் பிரிட்டிஷாரின் ஆட்சிக்கால முதற்பகுதியில் (சுமார் 1730இல்) ஒரு கண்ணகி சிலை மட்டக்களப்புக் குளக்கட்டு ஒன்றில் நின்ற புளியமரத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
ஒல்லாந்தர் தம் ஆட்சிக் காலத்திலே மட்டக்களப்பிற் செல்வம் நிறைந்து விளங்கிய சைவக் கோயில்கள் சிலவற்றைக் கொள்ளையடித்து வந்தனரென்றும், அன்னருடைய துன்பப் பிடிப்பினின்று தமது உயிருக்குயிரான கண்ணகி தேவியைக் காப்பாற்றுதற்காக அவளுடைய இச்சிலையினை முதியோர் சிலர் கோயிலிலிருந்து வேறிடம் பெயர்த்து மறைத்து வைத்தார்களென்றும் தெளிவாகத் தெரிகிறது.
இம் முழுச் சிலையின் அமைப்பினை நன்கு ஆராய்ந்து கண்ட கலைப்புலவர் நவரத்தினம் அவர்கள், வடஇந்தியக் கலை அமைப்பினையுடையதாய் மகாயான புத்தமதச் சாயலும், தீபேத்திய முத்திரையும்கொண்டு விளங்கும் இச் சிலை புத்தமதப் பெண் தேவதை ஒன்றினதாக இருத்தல்கூடும் என்று கருதுகிறார்கள். கொழும்பு, மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கும் கண்ணகி சிலையும் மேற்கண்டவாறான அமைப்பினையுடையதாய், லண்டன் மியூசியத்துச் சிலையினையே ஒத்திருத்தலும், இச்சிலைகள் ஒரு முலையிழந்த திருமா பத்தினியான கண்ணகிக்குரியனவல்ல என்ற அவர் கருத்தையே காட்டுகின்றது. சேரன் செங்குட்டுவன் வடித்த கண்ணகியின் தமிழ்ச்சிலையினைப் படியொற்றியே கயவாகு மன்னன் இலங்கைக்குச் சிலை கொணர்ந்திருத்தல் வேண்டுமாயினும், காலஞ் செல்லச் செல்ல அத்தமிழ்ச் சிலையினேப் படியொற்றி யெழுந்த வேறு படிமங்கள் இலங்கைப் புத்தர்களதும், பிற்காலச் சோழர்களதும் சிற்பக்கலைத் தொடர்பினால் மெல்ல மெல்ல இவ்வுருவத்தினை அடைந்திருத்தல் கூடும் என்று கொள்ளுதலும், கலாயோகி ஆனந்தக் குமாரசுவாமியவர்களது கருத்துப்படி நாம் இவற்றைக் கண்ணகி சிலையாகவே கொள்ளுதலுமே பொருத்தமென்று எண்ணுகின்றேன்.
– பண்டிதர் வி.சி.கந்தையா
மட்டக்களப்பு தமிழகம் (பக் – 105)