×

கணப்பொழுது – மேஜர் டினேஸ்

கணப்பொழுது மேஜர் டினேஸ்

இருப்பக்கங்களாலும் நீரினால் சூழப்பட்டு இயற்கை அழகுடன் செல்வங்கள் கொளித்து நிற்கும் மீன் பாடும் தேன்நாடாம் மட்டுநகரின் அங்கங்களாக கிளைபரப்பிக்கிடக்கும் கிராமங்களில் ஒன்றுதான் புதுக்குடியிருப்பு. இங்கேதான் 1969 ஆம் ஆண்டு மாசி மாதம் 15ஆம் திகதி சின்னதம்பி அழகம்மா தம்பதியினருக்கு 6வது பிள்ளையாக ஜெயகரன் உதயமானான். இவன் சிறுபிள்ளையாக இருக்கும் போதே தாயார் நோய்வாய்ப்பட்டிருந்தால் இவனது உடன்பிறந்த தமக்கையர் தான் இவனை வளர்த்தெடுத்தாள். இவனுக்கு 5வயது நிரம்பியதும் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலயத்தில் கல்வி கற்பதற்காக சேர்க்கப்பட்ட இவன் ஆரம்பத்தில் இருந்தே ஆர்வத்துடன் கல்வி பயின்றான். கல்விக்கூடத்தில் சொல்லிக்கொடுக்கும் பாடங்களை வீட்டில் படிப்பதற்கு தோட்டம் செய்வதற்கு விளையாட்டிற்கென நேரங்கள் பிரித்து சின்ன வயதில் இருந்தே திட்டம் வகுத்து தனது காலங்களை கழித்துவந்தான்.

இவன் கல்விக்கூடத்தில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் தொடக்கம் படிக்கும் மாணவர் வரை எல்லோரையும் பகிடிவிட்டு சிரிப்பில் ஆழ்த்திவிடுவான். இவனது படிப்பறை எப்போதுமே கலகலப்பாகத்தான் இருக்கும் கல்விப்பொதுத்தர சாதாரணதரம் வரை பயின்ற இவன் பாடசாலையில் வருடம் தோறும் நடைபெறும் இல்ல விளையாட்டுப் போட்டியில் இல்லத்தலைவனாக நின்று எல்லோருக்கும் விளையாட்டுப் பயிற்சி கொடுப்பதோடு தானும் தனக்கு விருப்பமான மூன்று விளையாட்டை தேர்ந்தெடுத்து பயிற்சிகள் பெறுவான். தனது இல்லம்வெற்றி பெற பயிற்சிக்கான நேரத்தை வீணாக்காது முழுமூச்சாக நின்று முழுவதையுமே கவனித்துக் கொள்வான்.

இவனது பாடசாலையில் இயங்கிய சாரணர் இயக்கத்தில் இணைந்திருந்த இவன் ஒரு அணிக்குத் தலைவனாகவும் இருந்தான். ஓய்வு நேரங்களில் நெசவுத் தொழிலையும் செய்து பணத்தைப் பெற்று பாடசாலைச் செலவுக்காக பயன்படுத்தினான். 1986ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தர சாதாரணதர பரீட்சையில் தோற்றி எல்லாப்பாடங்களிலும் கணிசமான பெறுபேறுகளைப் பெற்ற இவன் உயர்தரப் படிப்பிற்காக மட்டுநகர் மத்திய கல்லூரியில் இணைந்து படிப்பைத் தொடர்ந்தான்.

1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கில் எமது இயக்கம் அமைப்புக்களை உருவாக்கத் தொடங்கிய காலமது அந்நேரம் இயக்கத்திற்காகவும் சேவை செய்யத் துணிந்தான். போராளிகளுக்கு வீடு வீடாகச் சென்று உணவு பணம் சேகரிப்பது துண்டுப்பிரசுரங்களை ஒட்டுவது போன்ற வேலைகளையும் செய்தான். அத்தோடு இவனுக்கு ஒரு சில ஆயுதப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இவ்வளவோடு படிப்பதையும் நிறுத்திவிடவில்லை எல்லாமே அவனுக்கு முக்கியமானதாக தென்பட்டால் ஒன்றையும் நிறுத்திவிடவில்லை. இந்திய இராணுவத்தின் நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் கூட மறைமுகமாகத் தன்னாலான உதவிகளை செய்து கொண்டே இருந்தான்.

1983ஆம் ஆண்டு யூலைக்குப் பின் தமிழீழத்தில் எல்லாப் பகுதிகளிலும் சிங்கள அரசும் படைகளும் தமிழ் மக்களுக்கு இழைத்து வந்த கொடுமைகள் அனைத்தையும் இவன் கண்ணால் பார்த்தபோதும் காதால் கேட்டபோதும் துடி துடித்துப்போவான். இதுபோன்ற சம்பவங்கள்தான் இவனை போராடத்தூண்டிக் கொண்டிருந்தது.

1990ஆம் ஆண்டில் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியபோது சிங்கள இராணுவத்தால் எம் மக்கள் மேலும் மோசமான பல வழிகளிலும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இச்சம்பவம் மேலும் அவனுக்கு படையினர் மீது வெறுப்பை ஊட்டியது. சிந்திக்கச்செய்தது. எல்லா வழிகளிலும் சிந்தித்து இவன் ஆயுத மேந்திப் போராடினால் தான் எமது மக்களை அடிமையில் இருந்து விடுவிக்க முடியும் என்ற முடிவிற்கு வந்தான். அவனோடு படித்த பலரை ஒன்று சேர்த்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக் கொண்டான். தமிழீழத்தின் இதயமாக விளங்கிய மணலாற்றுப் பகுதிக்கு நூற்றுக்கணக்காக அனுப்பப்பட்ட போராளிகளில் இவனும் ஒருவனாக வந்தான். மணலாற்றில் 11வது பயிற்சிப்பாசறையில் பயிற்சி பெற்ற இவன் டினேஸ் என்ற பெயருடன் புலிவீரனானான்.

இவனை தளபதி லெப்.கேணல். அன்பு அண்ணா 81எம்.எம் என்னும் மோட்டார் பயிற்சிக்கு தெரிவு செய்தார். இவன் திறமைமிக்கவன் என்பதால் மோட்டாரைப் பற்றி இலகுவாக குறுகிய காலத்தில் கற்றுக்கொண்டு இவனுக்கு கற்றுக் கொடுத்தவரையும் மிஞ்சிவிட்டான். இதனால் மணலாற்றில் இருந்த எல்லாவகை மோட்டார்களுக்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான். இவன் மணலாற்றில் நடைபெற்ற எல்லா இராணுவ நடவடிக்கையிலும் எம்மால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட பெரிய நடவடிக்கையிலும் மோட்டரை பயன்படுத்தி இராணுவத்தினருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதோடு வெற்றியையம் பெற்றுத் தந்துள்ளான்.

கஜபால இராணுவ நடவடிக்கையில் முன்னெறி வந்த பவள் கவசவாகனங்கள் மீதும் குறி தவறாது செல்களை வீழ்த்தி எதிரியை நிலைகுலையச் செய்து பெரும் பாராட்டுக்களையும் பெற்றான். இவன் தளபதியாய் மேலதிக படிப்பிற்காக அனுப்பப்பட்டு அங்கேயும் இரண்டு ஆண்டுகள் படித்து வந்தான். அது இவனுக்கு மேலும் அறிவை ஊட்டியது.

இவன் காட்டில் இருந்த எமது முகாம்களை எங்கெங்கு உள்ளது என்று அதன் அமைவிடங்களை அளந்து வரைபடமாக வரைந்தான். காட்டைச் சுற்றியிருந்த இராணுவ முகாம்களையும் திசைகாட்டியின் உதவியுடன் அளந்து வரைபடமாக்கினான். மோட்டார் அணிகளுக்கு பயிற்சி கொடுப்பதிலிருந்து எல்லாமே இவன்தான் கவனித்தான்.

பூநகரிச்சமர் தான் இவனுக்கு மோட்டாருடன் சென்ற கடைசிச்சமராகும் பின்பு மணலாற்றில் சிறப்பு மிக்க சமரென வர்ணிக்கப்படும் ஐந்து பாரிய இராணுவமுகாம் தாக்குதலுக்கு முன்னர் டினேஸ் தான் ஒன்றரை ஆண்டுகள் நூற்றுக்கு மேற்பட்ட வேவுப் போராளிகளுக்கு பொறுப்பாக இருந்து அந்த ஐந்து இராணுவ முகாம்களில் தரவுகளை தாக்குதல் திட்டத்திற்கு அமைய ஒரு சிறுகுறையுமில்லாது பெற்றுக் கொடுத்தான்.

அந்த ஒன்றரை ஆண்டுக் காலத்திற்குள் அவன் பட்ட கஸ்ரங்கள் வேதனைகள் எழுத்தில் பார்க்கமுடியாது. இதன் பின் மணலாறு மாவட்ட சிறப்பு கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட இவன் வெலிஓயாப்பகுதியில் அமைந்திருந்த கென்பாம் இராணுவமுகாமுக்கான வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வேவு பூர்த்தியாகிக் கொண்டிருந்த வேளையில் எதிரி தாக்கியதில் காயமடைந்தான்.

இதன் பின் 1995-05-28 அன்று முல்லை மாவட்ட துணைத்தளபதியாக நியமிக்கப்பட்டான். இவன் தனது வேலைகளை பொறுப்பெடுத்து தனது கடமைகளில் இருந்து தவறாது முழுமூச்சாக உழைத்தான். இவன் போராளிகளுடன் அன்பாகப் பழகினான். ஒரு போராளியைக்கூட கடினமான வார்த்தைகளால் பேசவும் மாட்டான் போராளிகள் எவ்வளவு பெரிய தவறை இழைத்தால்க்கூட அடிக்கவோ பேசவோ எண்ணமாட்டான் அவர்களைக் கூப்பிட்டு சொல்லாலே திருத்தி விடுவான் இதனால் இவன்மேல் போராளிகள் நம்பிக்கையும் பாசத்தையும் அளவு கடந்து வைத்திருந்தார்கள்.

பின்பு காட்டில் இராணுவக் கொமாண்டோக்களின் நடவடிக்கை கூடுதலாக இருந்தது இதை முறியடிக்க வேண்டும் என்று அரும்பாடுபட்டான் தினேஸ் அவனது படையணியைக் கொண்டு காட்டில் தேடுதல் நடவடிக்கைகளை நடாத்தினான். ஒரு நாள் அவனது முயற்சி பயனளித்தது கொமாண்டோ படையை இவனது அணி சந்தித்து பெரும் சண்டை காட்டில் நடந்தது. இதில் எதிரிக்கு பேரிழப்பை கொடுத்ததோடு இவனும் காயமடைந்து தனது கை ஒன்றின் சுய இயக்கத்தை இழந்தான்.

இதைத்தொடர்ந்து யாழ் குடாநாட்டின் மீது பெரியதொரு படையெடுப்பை நடாத்தினான் எதிரி. யாழ்ப்பாணத்தை தக்க வைக்க எமது போராளிகள் பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்த இறுதி நேரத்தில் இவனது படையணியும் அங்கு சென்று அப்பெரும் சமரில் பங்குகொண்டு சாதனையை நிலைநாட்டியது.

யாழ்ப்பாணத்திலிருந்து மணலாற்றுக்குத் திரும்பிய இவன் நெடுங்கேணியில் எதிரியின் நடவடிக்கை கூடுதலாக இருந்ததால் எதிரியின் நடவடிக்கையை குறைக்க எதிரியின் பிரதேசத்தில் எமது தாக்குதல்களை கூட்டவேண்டும் என நினைத்தான். வேவுக்கு புறப்பட்டான் அவன். இயலாத கையோடும் ஓய்வாக இருக்கவில்லை தானும் ஒருவனாகவே சென்றான். குறிப்பிட்ட காலத்திற்குள் மிக வேகமாக பதவியாவிலும்பராக்கிரமபுரத்திலும்அரியகுண்டானிலும் மூன்று இலக்குகளை தேடிஎடுத்து விட்டு திரும்பி வந்தான்.

சண்டைக்கான பயிற்சியையும் தானே முன் நின்று வழங்கி இரண்டு சண்டையை வெற்றியோடு நடாத்தியபின் இரண்டாவது சண்டை நடந்து முடிந்த மூன்றாம் நாளான 27-02-96 அன்று அதிகாலை 05.50இற்கு அரியகுண்டான் பகுதியில் அமைந்திருந்த மினிமுகாம் மீது தாக்குதலை மேற்கொண்டு பதினெட்டுப் படையினரைக் கொன்று ஆயுத தளபாடங்களையும் எடுத்துக் கொண்டு வெற்றியோடு திரும்பிய அதே சமயம் எங்கோ இருந்து வந்த எதிரியின் குண்டொன்று நெற்றியில் பட்டது. அவன் நேசித்த அந்த நெடுங்கேணி மண்ணில் ஆறாக பெருக்கெடுத்த குருதியால் அவனது உள்ளத்துக்கனவுகள் எழுதப்பட்டன. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த இவன் ஆறாம் நாளான 03-03-96 அன்று இராப்பொழுதில் அவனது இலட்சிய சுமைகளை தந்திட்ட அக்கணப்பொழுதினில் மாவீரர் எனும் பெரும் வரிசையில் சேர்ந்துவிட்டான்.

தியாக உள்ளம் கொண்ட இலட்சியத்தளபதியே நீ நடந்த இலட்சியப்பாதையின் விளிம்பில் நாம் நிற்கின்றோம். உனது இலட்சியம் காணும் வரை எங்களது பயணம் உனது இலட்சியம் வெற்றிப் பாதையில் தொடரும் இது உறுதி!

  • எழுதியவர் போராளி ஜெனா
 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments