×

19 யூலை 2025 ல் பயங்கரவாத தடை சட்டத்திற்கு 46 வயது. 

19 யூலை 2025 ல் பயங்கரவாத தடை சட்டத்திற்கு 46 வயது. 

தமிழனைக்கொண்டு தமிழனைக்கொல்ல ஐக்கிய தேசிய கட்சி அரசால் நிறைவேறிய சட்டம் இது..!

1979, யூலை,19, ம் திகதி இரவு 10.45, மணிக்கு பயங்கரவாத தடைச்சட்டம் ஶ்ரீலங்கா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது!

1978, ல் இந்த சட்டமானது தற்காலிக சட்டமாக தயாரிக்கப்பட்டு 1979, யூலை,19, ல் நிறைவேற்றிய பின்னர் சரியாக நான்கு வருடங்களில் 1982, ல் நிரந்தர சட்டமாக்கப்பட்டது.

1979, யூலை,19, அன்று பி.ப.1, மணிக்கு மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும், நீதி அமைச்சராகவும் பதவியில் இருந்த கே.டவிலியூ.தேவநாயகம் அவர்கள் இந்த சட்டத்தை சமர்பித்தார். அது அன்றே நிறைவேறியது.

1976, மே,14, ல் வட்டுக்கோட்டை திர்மானம் சுதந்திர தமிழீழ பிரகடனம் தந்தை செல்வா அவர்களால் நிறைவேற்றப்பட்டு அதற்கான தமிழ்மக்கள் ஆணைபெறும் தேர்தலாக தந்தை செல்வா 1977, ஏப்ரல்,26,ல், இறந்த பின்னர் வடகிழக்கில் தமிழர்விடுதலை கூட்டணி 1977,யூலை,21,ல் நடைபெற்ற பொதுத்தேர்தலை பயன்படுத்தியது. அதில் 23, தொகுதிகளில் 18, தொகுதியில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது. மட்டக்களப்பு மாவட்டம் கல்குடாதொகுதியில் அதற்கான ஆணை கிடைக்கவில்லை ஐக்கியதேசிய கட்சியில் கே.டவிலீயூ தேவநாயகம் தமிழர் விடுதலை கூட்டணியில் வேட்பாளராக போட்டியிட்ட சம்மந்தமூர்தியை எதிர்த்துப்போட்டியிட்டு கே டவிலியூ தேவநாயகம் வெற்றிபெற்றார்.

தமிழர் விடுதலை கூட்டணியை முக்கியமாக வட்டுக்கோட்டை தீர்மானத்தை தோற்கடித்தமைக்காக அவரை பாராட்டிய ஐக்கியதேசிய கட்சி ஆட்சியில் பிரதமராக இருந்த ஜே ஆர் ஜெயவர்தன அவருக்கு கைலாகு கொடுத்து வரவேற்று நீதி அமைச்சர் பதவி வழங்கி இருந்தார். தமிழனைக்கொண்டு தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்டத்தை அதே தேவநாயகத்தை கொண்டே பாராளுமன்றத்தில் இந்த கொடிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.

1977,ல் வடகிழக்கில் உள்ள 18, தமிழ்தொகுதிகளில் தமிழர் விடுதலை கூட்டணி வெற்றியீட்டி வட்டுக்கோட்டை தீரமானத்திற்கு அங்கீகாரம் வழங்கிய இந்த தேர்தலில் முதன் முதலாக இலங்கை சரித்திரத்தில் தமிழர் ஒருவர் எதிர்கட்சி தலைவரானார் அவர்தான் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்.

இந்த சட்டம் நிறை வேற்றும்போது எதிர்கட்சியாக தமிழர் விடுதலை கூட்டணி 18, பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சி தலைவராக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இந்த சட்டத்திற்கு எதிராக உரையாற்றியபோதும் 18, தமிழர் விடுதலை கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகி இருக்குமாறு கூறிஇருந்தார் அதனால் எவருமே எதிர்த்து வாக்களிக்கவில்லை.
ஒரு தமிழன் பயங்கரவாத தடைச்சட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்து நிறைவேற்றுகிறான் ஏனைய தமிழன் எவரும் எதிர்த்து வாக்களிக்காமல் நழுவிச்செல்கின்றனர். இதுவும் தமிழர் சரித்திரத்தில் ஒரு வரலாற்றுத்துரோகமே..!

1977 ல் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்டத்தை நசுக்குவதற்கு இந்த கொடிய சட்டத்தை 1979 ஆம் ஆண்டு யூலை,மாதம் 19,ஆம் திகதி கொண்டுவந்தபோது பெரும்பான்மை இனத்தை சேர்ந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தனர்.

1. கொழும்பு தெற்கு உறுப்பினர் ஏ.பி.டீ.சொஸ்சா, ” அப்பாவிகளை விசாரணையின்றி தடுத்து வைப்பது ஆபத்து ” என எச்சரித்தார்.
2. மதவாச்சி எம்.பி.மைத்திரிபால சேனநாயக்க, ” புலிகளையும்,இயக்கங்களையும் தடைசெய்து,அவசரகாலச் சட்டம்,பொதுசன பாதுகாப்பு சட்டம் ஏற்கனவே இலங்கையில் உள்ள நிலையில் இது ஒரு சர்வாதிகாரம்” என பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

ஜே.ஆர்.ஜெயவர்தனவின் மருமகனான பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்கவை வடக்கே தமிழ்ப்போராளிகளை அழிக்க கட்டளை தளபதியாக நியமித்து,1979 ஆம் ஆண்டு யூலை மாதம்  31 ஆம் திகதி  முதல் டிசம்பர் மாதம்  31 ஆம் திகதி வரையான ஆறு மாதங்களில் படை நடவடிக்கையை முன்னெடுத்தார்.இதனால் பல தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவங்கள் இடம்பெற்றன.

தற்காலிகசட்டமாகவே இது சமர்பிக்கப்பட்டாலும் பின்னர் இது தொடர்ந்து 1982.ல் நிரந்தர சட்டமாக நிறைவேற்றப்பட்டது!
ஏறக்குறைய பத்து மணித்தியாலம் மட்டுமே விவாதம் இடம்பெற்று அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது!
46, வருடங்களாக இந்த பயங்கர வாத தடைச்சட்டத்தால் மிகவும் வதைபட்டு பாதிப்படைந்தவர்கள் இலங்கையில் தமிழர்களே..!
தற்போதும் இச்சட்டத்தால் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், இன்னும் கைதுசெய்யப்படுகின்றனர்.!
இந்த சட்டத்தை முற்றாக நீக்குமாறு சர்வதேச நாடுகள் தொடராக அழுத்தங்களை தெரிவித்தவண்ணம் உள்ளன!

தமிழரை கொண்டு பாராளுமன்றத்தில் சமர்பித்த தமிழரகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்டமாக இதை அப்போது பலராலும் பேசப்பட்டது.

கல்குடா கே டவிலியூ தேவநாயகத்திற்கு நீதி அமைச்சர் பதவியை கொடுத்து 1979, யூலை.19,ல் பயங்கரவாத சட்டத்தை அவரைக்கொண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய ஜே.ஆர்.ஜெயவர்தனா சரியாக ஏழு மாதத்தால் கே.டவிலியூ.தேவநாயகம் அவர்களிடம் இருந்த நீதி அமைச்சர் பதவியை பறித்தெடுத்து உள்ளூராட்சி அமைச்சராக 1980, பெப்ரவரி, 14, ம் திகதி வழங்கினார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மட்டுமே தமிழன்ஒருனை நீதி அமைச்சராக ஐக்கிய தேசிய கட்சி அரசு நியமித்தது என்ற வரலாற்றையும் தற்போதுள்ள இளைஞர்கள் அறிவது நல்லது.!

இந்த பயங்கரவாத்தடைசட்டத்தால் 1979, தொடக்கம் 2025, இன்று வரை 46, வருடங்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிறையில் அடைக்கப்பட்டும், ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டும் இன்றும் அவர்களில் சிலர் சிறைவாசம் அனுபவித்தும் வருகின்றனர். இலங்கையில் 1979 ஆம் ஆண்டுகாலப்பகுதி முதல் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்வரும் 2025, செப்டம்பர் மாதமளவில் முழுமையாக நீக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசின் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார  தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு 2025, யூலை, 04,ம் திகதி வழங்கிய நேர்காணல் தெரிவித்துள்ளார்.
“1979 ஆம் ஆண்டில் தற்காலிக ஏற்பாட்டு சட்டமாகவே பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும், அது இன்றளவிலும் நீடிக்கின்றது.

இந்நிலையில் குறித்த சட்டத்தை நீக்குவது தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டது. அக்குழு தற்போது அனைத்து கருத்துகள் – யோசனைகள் தொடர்பில் ஆராய்ந்துவருகின்றது. பொதுமக்களின் கருத்துகளும் கோரப்பட்டன.
அந்தவகையில் செப்டம்பர் மாதமளவில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக இரத்து செய்யப்படும்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

46, வருடங்களாக ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்களும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக அதனை நீக்குவதாக கூறி இவ்வாறே காலத்தை கடத்தியது என்பதே உண்மை.

பா. அரியநேத்திரன்
19 யூலை2025

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments