
காயும் நிலத் தழல்
~~~~~~~~~~~~~~~~
அவனது முகத்தை ரீச்சர் அண்ணார்ந்து பார்த்தா. அவவின் எண்ணங்கள் பத்து வருடங்கள் பின் நோக்கிப் பாய்ந்தன. இங்கே ஒரு மானசீக அமைதி விரிந்தது. சூழலின் சலசலப்புகள் அந்த மானசீக அமைதியைக் குலைக்கவில்லை.
பத்து வருஷங்கள் கொஞ்ச நாளா !” அவ வியந்தா.
“அண்டைக்கு இருந்த ஆக்கள் எத்தினையோ பேர் இண்டைக்கு இல்லை”
“காடுகள் களனிகளாக களனிகள் காடாகின” அவவின மனம் வெதும்பியது.
“முகவரிகள் மறந்தன முகங்கள் மறைந்தன” அவவின் மனம் நிலை குலைந்தது அவனை தலைதொட்டு கால் வரை ஒரு கண்ணோட்டம் விட்டா ரீச்சர். கால நீட்சி அவவுக்கு பெரும் ஆச்சரியத்தை தந்தது,
“இவன் வளர்ந்திட்டான்”
அவ நினைத்தா.
“ரீச்சர் எங்க இருக்கிறியள்” அவன் கேட்டான். ஆவல் மிகுந்திருந்தது.
திடீரென ரீச்சரின் நெற்றியைப் பார்த்தான் அவன்.அவ அதைப்புரிந்து கொண்டா,
“தம்பி என்ர மனுசன் செத்து ஒருவருஷமாகிட்டுது அவ குரல் கறகறக்க விம்மலோடு கூறினா.
“நாங்கள் இப்ப ஸ்கந்தபுரத்தில் ஒரு கொட்டில போட்டுக் கொண்டு இருக்கிறம். அவவில் வேதனை வெளிப்பட்டது.
“கிளிநொச்சிப் பக்கம் போகேலையே ரீச்சர் ?
“போகத்தான் வேணும்” அவவின் பதிலில் எந்த உணர்ச்சியையும் அவ வெளிப்படுத்தவில்லை.
“இடப்பெயர்வு எல்லாரையும் அலங்கோலப்படுத்திப் போட்டுது, என்ன ரீச்சர்?
“ம்…சரியா சீரழிஞ்சு போட்டம். இந்த யானைக்காட்ட எப்பவாவது நினைச்சிமே? மிகமோசமா பாதிக்கப்பட்டினம் மூச்சுவிடாமல் அவ கூறி முடிச்சா.
அந்த வைத்தியசாலை சன நெரிசலில் வழிந்து கொண்டிருந்ததை அவர்களது கண்கள் நோக்கின.
அவவின் வேதனைகளை அவன் தொடர்ந்தும் கிளறிவிட விரும்பவில்லை. அயலிலுள்ள சனத்தை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அவர்களை கொடும் வெயில் மட்டும் சுட்டெரித்து கொண்டிருந்தது.
“தம்பி, “இங்க கன குழந்தைகள் தகப்பனை இழந்திட்டுதுகள். அங்க அதில நிக்கிற பொம்பிளையன்ர மனுசன், தன்ர காணீல தேங்கா பிடுங்க ஏழாம வாய்க்காலுக்கு போனவர். ஆமி சுட்டுப்போட்டான்.
“இது போல கன குழந்தைகள் தகப்பனை இழந்திட்டுதுகள் தம்பி” தாங்கமுடியாத வேதனை வெளிப்பட்டது.
காலம் காலமாச் செய்து வந்த தொழிலை விட்டு இங்க ஓடிவந்து சனம் துன்பப்பட்டுப் போனதை ரீச்சர் நிரூபித்தா.
ஒரு கணம் மெளனம். அவவின் மோனப் பெருவெளியில் நடந்துவிட்ட துன்பியல் காட்சிகள் நிழல் பரப்பின. அவை அவவின் பெருமூச்சாய் வெளிவந்தது.
“ரீச்சர் கனசனம் ஊரை விட்டே போட்டுதுகள், வவுனியாப்பக்கம்” அவன் வேதனையோடு கூறினான்.
“கிளிநொச்சி நகரத்துக்கு போகப் போறம், எத்தின சனம் மீளவந்திருக்கப் போகுதோ”
”ஓம் கனசனம் இல்லையே. வீடுகள் இல்லை” வீடுகள் என்று நினைத்தபோது ரீச்சரின் தேகம் நடுங்கியது.
“என்ர பென்னாம் பெரிய வீடு.. பொரிக்கிறதுக்கு உடைச்ச முட்டைமாதிரி நொருங்கிக் கிடக்குது” பெரு மூச்சும் கண்ணீரும் ஒன்றாக கூறினா.
ரீச்சர் துயரத்தில் தலையைத் தாழ்த்தி தன் காலால் நிலத்தைக் கீறினா .
மிளகாய் வெங்காயம் எங்கட மாவட்டத்தில இருந்து கொழும்புக்கும். சிங்கள நாட்டுக்கும் அனுப்பினதால் நல்ல விலை கிடைச்சது அதில கட்டின வீடு’ ” என்றா ரீச்சர்.
“ஏலாத நாளில் மேசன்மாருக்கு கிடாரம் கிடாரமாய் சமைச்சுப் போட்டு வீடு கட்டிவிச்சனாங்கள். அவவின் முகம் வேர்த்தது. இருபத்தைந்து வருஷத்துக்குமுன்
அவ கட்டின வீடுபற்றி நினைத்துக் குமுறினா ரீச்சர்.
ஏற்று நீர்ப்பாசனம் கிராமங்களை வளமாக்கிய காலம். பல கிராமங்கள் பொன் விளைவித்தன.
சிங்கள வியாபாரிகள் வந்து கிளிநொச்சி சந்தையில் மிளகாய், வெங்காயம், பொயிலையை வாங்கி. வெத்திலை பிலாக்கொட்டை, தேங்காய், கயிறு போன்ற பண்டங்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்:
ஊசி வலியால் குழந்தை யொன்று வீரிட்டழுதது. எல்லோரும் அந்தக் குழந்தையைப் பார்த்தார்கள்.
“தம்பி என்ர வீட்டு அழிபாடுகளை பார்த்துக் கொண்டு அந்தக்காணீக்க இருக்க ஏலுமே, அங்க நான் போமாட்டன்” அவ உறுதியாக கூறினா.
‘ஆமிக்காறன் எங்கட வீட்டுப்பக்கம் வர இல்லையாம். ஒரு இயக்கத்தம்பி தான் எனக்குச் சொன்னவர். சனமும் அப்புடித்தான் கதைக்குது. ஆமி ரவுனுக்கு கிட்டதானே நிண்டவனாம்!”
ரீச்சர் வியப்போடு வெளிப்படுத்தினா.
சற்றுமுன் திடீரென ஒரு இளைஞன் ஓடிவந்து தன்னை அழைத்ததையும் தன்னால் அவனை அடையாளம் காண முடியாது போனதையும் அவ நினைத்தா
ரீச்சர் என்னைத்தெரியுமா ?
“முகம் ஞாபகமிருக்கு ஆனா… பேரென்ன தம்பி ?
வசீகரன்”
ரீச்சர் அதிர்ந்து போனவளாய் அவனை கட்டியணைத்துக் கொண்டா… தன் வேதனையையும் அன்பையும்.. பகிர்ந்து கொண்டா.
“வசீகரன் தன்னை அறிமுகப்படுத்தாட்டி என்னால அவனை அடையாளம் கண்டிருக்க முடியுமே” அவ தனக்குள் நாணினா.
“என்னை அடையாளம் காணேலாம கிடக்கே” என்று அவன் கேட்டது காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.
பத்மா ரீச்சர் கண்வெட்டாது அவனைப் பார்த்தா. பண்னிரண்டு வருஷத்துக்கு முன் பதின்நான்கு வயது மாணவனாக அவவின் வகுப்பில் படித்தவன். அவனோடு அவவுக்கு ஏற்பட்ட அந்த மறக்கமுடியாத சம்பவம் கண்ணுக்குள் மின்னியது.
“டேய் ஓடுங்கடா. என்னை ஏன் இழுக்கிறியள் ஓடு. ஓடு…” அவ கத்திய சத்தம் வானைப் பிளந்தது, ஆனால் அந்த மாணவர்கள் நால்வரும் அவவின கைகளை விடாமல் பற்றி இழுத்தார்கள்.
“வாங்கோ ரீச்சர் குத்தப் போறான்…” பாடசாலை அல்லோலகல்லோலப்பட ரீச்சர் வெளியே ஓடிவருகிறா…
”ரீச்சர், ரீச்சர் பதியிறான் படுங்கோ, படுங்கோ!” அந்த விமானம் தாழப்பறந்தது;
பேரிரைச்சல் காதுகளைக் கிழித்தது. மைதானம் எங்கும் வெண் கொக்குகளாய் சிதறிய மாணாக்கர்.
மரத்தில் பதுங்குபவரும், கட்டிடத்துள் பதுங்குபவர்களும் ஓடிக்கொண்டே இருப்பவர்களும் இரண்டாயிரம் உயிர்கள் தமது கதை முடிந்ததாக ஓடினார்கள். மாணவர்களை கலைத்துவிட்ட பத்மா ரீச்சர் தட்டத்தனியே ஒரிடத்தில் போய்ப்பதுங்கினா …
விமானம் பாடசாலைக் கட்டடத்துக்குமேல் பதிந்தது. தென்னைகளையும் நாவல் மரங்களையும் உரசியதுபோல குண்டுகளைத்தள்ளின…
“டும்… டும்… டும்…’
மைதானத்தில் விழுந்த குண்டுகள் நான்கு மாணவர்களை உடல் சிதறப்பண்ணின.
‘ஐயோ.. ஐயோ’ அபயக்குரல் வானைத்தொட நிமிடங்கள் சில கழிந்தபின் சிலர் அவர்களைத் தூக்கினர். அந்த இடத்திலேயே இறந்தவர்கள், காயத்தோடு பின் இறந்தவர்களுமாக மூன்றுபேரை அது உயிர்ப் பலி எடுத்தது.
பாடசாலையும் அந்த அயலும் பாடசாலை சமுதாயமும் சோகத்தில் மூழ்கியது. ஒரு வாரத்தின் பின் பாடசாலை சோகத்தோடே திறக்கப்பட்டது. பத்மா ரீச்சரின் வகுப்பில் அவ தன் மாணவர்களைச் சந்தித்தா.
“அண்டைக்கு என்னைப் பிடிச்சு இழுத்தவங்கள் ஆரடா” அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ரமேஷ் எழும்பி மேசையை அழுத்தியபடி நின்றான். வரதன் சேட் பட்டினை
முறுக்கிக் கொண்டு’ எழுந்தான். தவம் பென்சிலைக் கடித்தபடி எழுந்து முழுசினான். வசீகரன் நகங்களைச் சப்பித்துப்பியபடி எழுந்தான்.
அவ எழும்பி அவர்களைப் பாராட்டி,
“மற்றவர்களையும் தம்மைப்போல நேசிக்கும் நீங்கள் மற்றவைக்காகவே வாழப் போறியள்” என்று கூறி அவர்களைப் பாராட்டினா.
க.பொ.த பரீட்சை வரை அவர்கள் அந்தப் பாடசாலையில் படித்ததாக பத்மா ரீச்சருக்கு ஞாபகமாக இருந்தது. அதன் பின் அவ வேறு வகுப்புகளில் பொறுப்பாசிரியராக இருந்தா. இவர்கள் மாறி மாறி வேறு வேறாகப் போக குறைந்தன. தொடர்புகள்.
இன்று இத்தனையாண்டு களுக்குப் பிறகு இவன் ‘”அவனா எத்தனை பெரிய ஆளாக…”
ரீச்சரின் வியப்புக்கு காட்சியாக அவன் பொலிவு கண்ணைப் பறித்தது.
“தம்பி ஏன் ஆஸ்பத்திரிக்கு வந்தநீர் எங்க இருக்கிறீர் ஏதும் தொழில் செய்யிறீரே…”
”ஓம் கிட்டத்தான் இருக்கிறன். இண்டைக்கு கண் கிளினிக்கு வந்தனான்.
என்ன நடந்தது ?
ஒரு எக்சிடன்ட்டில கண்ணில பாதிப்பாய் போச்சு, இரவு பட கண் தெரியாது.
அவ அவனின் கண்களைக் கூர்ந்து பார்த்தா பரிவோடு.
“கண்… கவனம் தம்பி’
அவ கூறி முடிக்கவும் அவனுக்குச் சற்றுத்தள்ளி அந்த கறுப்புக்கண்ணாடி பூட்டிய வாகனம் இரைந்து கொண்டு வந்து நின்றது.
“ரீச்சர் வரப்போறன்”
அப்போது தான் அவனது கை தன் கைக்குள் இறுகியிருந்ததை ரீச்சர் உணர்ந்தா …
“இதென்ன… வாகனம் ! அவவின் கண்கள் வியப்பில் அலை விரிந்தன.
“போயிட்டுவாறன் ரீச்சர்”
அவனது குரலில் ஒருவகைத் துயரம் இழையோடியது. துயரம் தொண்டையை அடைக்க கைகளை அசைத்து விடை பெற்றான். அந்த வாகனத்தின் கதவுகள் பூட்டப்பட ரீச்சர் உணர்விழந்தது போல் வெறித்தபடி நின்றா.
“அட புனைபேரைக் கேட்காமல் விட்டுட்டேன்” என நினைத்து கவலைப்பட்டா.
வாகனம் வைத்தியசாலை வாசலில் இடதுபக்கம் திரும்பியதும் உறுமியவாறு விரைந்தது.
ரீச்சரின் முகத்தில் ஒரு தென்றல் வந்து வருட வியர்வை சில்லிட்டது.
வாகனம் பார்வையை விட்டகன்றது………
-பெருமாள் கணேசன்
-வெளிச்சம் பவள இதழ் 2001
தொகுப்பு: தமிழரசன்அப்துல்காதர்