×

ஒரு இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு ‘கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி’ கேணல் ராயூ.

ஒரு இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு ‘கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி’ கேணல் ராயூ.

அந்தச்செய்தி புற்றநோய் போல மெல்ல மெல்லத் தமழீழத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதைக் கடல்கடந்து காவிவந்த காற்று எம்தேசத்தின் தேகத்தை வாட்டியது. “யாராம்?” இந்த வினாவிற்கு விடை காண எம்மக்கள் தவித்துக்கொண்டிருந்தனர். எல்லாம் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன.

எங்கள் போரியற் சாதனைகளையெல்லாம் நாங்கள் பேசும்போதும் எழுதும் போதும் வெளித்தெரிந்து விடாதபடி பக்குவமாய் மறைத்து வைத்திருந்த ஈடிணையற்ற போரியலாளனின் பிரிவைச் செரிக்க முடியாது நாங்கள் தவித்துக் கொண்டிருந்தோம்.

எங்கள் கேணல் ராயூ அவர்கள் பதற்றமற்ற, அமைதியான, திடகாத்திரமான இரும்பு மனிதன். புலிகள் இயக்கத்தின் புதிரான பக்கங்களின் பின்னால் வைக்கப்பட்டிருந்த இரகசிய மனிதன். நாளும் பொழுதும் உயிர்தின்னும் களங்களுக்குள்ளேயே அவர் வாழ்ந்த போதும் தமிழீழத்தேசம் விடியும் நாள் வரை அவர் வாழ்வாரென்றே நம்பியிருந்தோம். இயக்கத்தின் இரகசியத் தன்மை கருதி வெளித்தெரியாது வைக்கப்பட்டிருந்த எங்கள் தளபதியைப் போர்க்களங்களிலும் பொத்திப் பொத்திப் பாதுகாத்தோம். இப்போது அவரை அவர் நேசித்த மக்களுக்கு ஒரே இரவில் அறிமுகம் செய்ய எப்படி முடியும்? ஓய்வு ஒழிச்சலற்ற உழைப்பிற் கழிந்த பத்தொன்பது வருடங்களின் நினைவுகளும் காட்டாற்று வெள்ளம் போல் எம்முட் பாய்கின்றன.

பொறியியலாளனாவதற்குத் துடித்த இளைஞனின் கல்வி தரப்படுத்தலால் வீழ்த்தப்பட்டது. இலண்டன் பல்கலைக்கழகம் ஒன்றினூடாக அந்த இலக்கை அடைந்து விடும் அவாவுடன் 1983 ஆம் ஆண்டு தனது இருபத்து இரண்டாவது வயதிற் சிங்களத்தின் தலைநகரில் வாழ்ந்து கொண்டிருந்தான் அவன். அப்போது சிங்களம் பெரும் கொலைவெறிகொண்டு ஆடியது. குழந்தைகள், பெரியோர், பெண், ஆண் என்ற வேறுபாடின்றித் தமிழர் வெட்டிச் சாய்க்கப்பட்டனர். தமிழரின் உடைமைகள் சூறையாடப்பட்டன. தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. தனக்கும் எவ்வித பாதுகாப்புமில்லையென உணர்ந்த ராயூ எவ்வாறோ தாயகம் வந்து சேர்ந்தார். சிங்களத்தின் கொடுமைகளிலிருந்து தமிழர் மீட்சிபெற வேண்டுமென்றெண்ணிய அவர் விடுதலைப் போராட்டத்தில் இணைந்தார்.

இந்தியாவில் மூன்றாவது பயிற்சி முகாமிற் பயிற்சி பெறும் போது பொன்னம்மானால் இனங்காணப்பட்டார். ஐந்தாவது பயிற்சி முகாமின் பொறுப்பாளர் லெப். கேணல் ராதா அவர்களின் துணைவனாகச் செயற்பட்டார். ஈற்றில் அவருடனேயே தமிழீழத்திற் கால் பதித்தார். அன்றிலிருந்து இயக்கம் பெற்ற வெற்றிகள் பலவற்றிலும் அவர் ஆற்றிய பங்கு அளப்பெரியது.

தொலைத்தொடர்பு, இலத்திரனியல், வெடிமருந்து ஆகியவற்றில் ராயூ கொண்டிருந்த ஆற்றல், தளபதி விக்ரரின் வழிகாட்டலில் மன்னாரில் நாம் பெற்ற பல பெறுமதியான வெற்றிகளுக்கு வழிகோலியது. களங்களில் நேரடியாகவும் போரிட்டார். திருகோணமலைக்குத் தாக்குதலக்காகச் சென்ற அணியில் இடம்பெற்ற அவர் தன்மார்பில் விழுப்புண் அடைந்தார். பின்னர் மன்னாரில் நடந்த சண்டை ஒன்றிலும் தன்கால்களிலொன்றில் எதிரியின் குண்டுபட்டுப் பெரிய விழுப்புண்ணைத் தாங்கினார். தளபதி விக்ரர் அடம்பனில் வீரச்சாவடைந்த பின்னர் தளபதி ராதாவின் தலைமையிற் பணியாற்றினார்.

துரோகி ஒருவன் வீசிய குண்டினால் கேணல் கிட்டு அவர்கள் தன் காலை இழந்த பின்னர், ராதாவின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் ராயூவின் பணி தொடர்ந்தது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட தொலைத் தொடர்புப் பிரிவு ராயூவின் பொறுப்பில் மேலும் வளர்ந்தது. அவரின் வெடிக்குண்டு நுட்பங்களுக்குப் போர்க்களங்களில் எதிரி அதிக விலை கொடுத்தான். பலாலி காங்கேசன்துறை வீதியில் எதிரியின் விநியோக அணிகள் மீது ராயுவால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பலராலும் அறியப்பட்டவை. அப்போதெல்லாம் ஒரு தோட்பை நிறைந்த வெடிப்பொருட்களுடன் எதிரியைத் தேடிப்போகும் தாடிக்கார ராயு மக்களால் நன்கு அறியப்பட்டிருந்தார்.

பல்வேறு துறைகளிலும் ராயு வெளிப்படுத்திய ஆற்றலைத் தலைவர் அவர்களும் அறிந்திருந்தார். எமது விடுதலை இயக்கத்தை வலுவான மரபுப் படையுடன் கூடிய வலிமைமிக்க அமைப்பாகக் கட்டி எழுப்ப வேண்டுமென்ற தன்கனவை நனவாக்கக்கூடியவர்களுள் ஒருவராக ராயுவையும் அடையாளங்கண்டார். அவரை மென்மேலும் வளர்த்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தினார். தளபதி லெப்.கேணல் ராதா வீரச்சாவடைந்த பின் ராயுவைத் தன் நேரடிப்பணிகளில் ஈடுபடுத்தினார். அன்றிலிருந்து தன் இறுதி நாள் வரை தலைவரின் அருகிலிருந்தே ராயு செயற்பட்டார். தலைவரின் அருகிலிருந்து ராயு செயற்பட்ட காலத்தில் போரியலிற் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. எமது இனத்திற்குப் பெரும் கேடுகளை விளைவிக்கக்கூடிய தடைகளை உடைக்கும் போதெல்லாம் அவரின் அறிவும் ஆளுமையும் கடின உழைப்பும் பெரும்பங்கு வகித்தன. எமது படைத்துறையின் ஒவ்வொரு வளர்ச்சிப்படிநிலைக்கும் ராயு வலுச்சேர்த்தார். தலைவரின் மீக்கவனத்திற்குள்ளாகும் படைத்துறைப் பணிகள் ராயுவிடமே ஒப்படைக்கப்பட்டன. படைத்துறை வளர்ச்சிக்கு இன்றியமையாதனவான தொலைத்தொடர்பு வெடிமருந்து இலத்திரனியல் ஆகிய பகுதிகளைப் பொறுப்பெடுத்து பெரும் வளர்ச்சி நிலைக்கு இட்டுச் சென்று எமது விடுதலை அமைப்புப் பேரியக்கமாக வளர வழிவகுத்தார்.

இந்தியப் படைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட “ஜொனி” மிதிவெடியிலிருந்து சிங்களப்படைகளின் “அக்கினிக்கோலா” நடவடிக்கையை முறியடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட மிதிவெடி, பொறிவெடி வரைஇ இரண்டாம் ஈழப்போரில் எதிரிகளைக் கலங்கச் செய்த பசீலன் 2000 முதல் மூன்றாம் ஈழப்போரில் எமது மோட்டார்இ ஆட்லறிப்படைகளைச் செயற்றிறன் மிக்கவனாய் வளர்தெடுத்ததுவரைஇ எம்மால் நடத்தப்பட்ட முதலாவது கரும்புலித்தாக்குதலுக்கான வெடிக்குண்டுத் தயாரிப்பிலிருந்து கடற்புலிகளின் இன்றைய வளர்ச்சி நிலைவரை குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவற்றிலும் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல முடியாத படைத்துறைப் பணிகள் பலவற்றிலும் தலைவருக்குப் பக்கபலமாய் நின்று செயற்பட்டார்.

இந்திய அமைதிப்படைகளின் வன்கொடுமைக் காலத்தில் விசேட பணிக்காக வெளிநாடொன்றுக்கு ராயூ தலைவரினால் அனுப்பப்பட்டார். அவர் திரும்பி வந்த போது மணலாற்றுக் காட்டுக்குள் தலைவர் இருந்த பகுதியை இந்திய இராணுவத்தினர் சுற்றிவளைத்திருந்தனர். இறுதிப்போர் என மார்தட்டியபடி பெரும்போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டனர். தலைவரை அடைந்த ராயூ ஆற்றிய பணிகள் அப்போரின் முடிவைத் தீர்மானிக்கும் காரணிகளுள் முக்கியமானவையாக அமைந்தன.

இந்தியப்படைகளைப் புறமுதுகிட்டோடவைத்த “ஜொனி” மிதிவெடியைத் தலைவரின் வடிவமைப்புக்கேற்ப ராயூ உருவாக்கியமை வரலாற்றில் என்றும் அவரை நிலைநிறுத்தும். ஜொனி மிதிவெடியை உருவாக்கியபோது ராயுவின் அருகிலிருந்த போராளி அந்த நாட்களை நினைவு கூருகிறான்.

“அப்போது அவரிடம் ஒரு சுவிஸ்நைவ் மட்டும் தான் இருந்தது. அதைவிட வேறு எந்த அடிப்படை வசதியும் இருக்கவில்லை. தலைவர் அவர்கள் திட்டத்தைக் கூறி அதன் மூலம் போரில் எவ்வாறு வெற்றிகளை ஈட்டலாம் என விளக்கியபோது அதன் முக்கியத்துவத்தை ராயு அண்ணை புரிந்து கொண்டார். ஜொனியை உருவாக்குவதற்காகத் தன் நித்திரையை மறந்தார். வாளில்லை, உளியில்லை, கத்தியில்லை எனக் காரணங்களைத் தேடாமல் வெற்றியைத் தேடினார். பலமுறை தோற்ற போதும் விடாமல் முயன்று வெற்றி பெற்றார்.”

இந்தியப்படை வெளியேற்றப்பட்ட பின் இரண்டாம் ஈழப்போர்க்காலத்தில் ஆயுதத் தொழிற்சாலைக்குப் பொறுப்பாகவிருந்து பலவெற்றிகளுக்குக் காரணமான உற்பத்திகள் பலவற்றை மேற்கொண்டார். பல இராணுவ முகாம்களின் வீழ்ச்சிக்கு காத்திரமான பங்களித்த “பசிலன் 2000” அவ்வுற்பத்திகளில் ஒன்றாகும். கோட்டை, மாங்குளம், ஆனையிறவு ஆகிய படைத்தளங்களிலிருந்து தப்பிப்பிழைத்த சிப்பாய்களின் மனத்தில் “பசிலன் 2000” இன் வெடிப்பதிர்வு எப்போதும் அச்சத்தை ஏற்படுத்தும். கரும்புலித் தாக்குதல் நடவடிக்கைகளிலும் ராயுவால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் கடலிலும் தரையிலும் இப்போதும் எதிரியை அச்சுறுத்தியபடியே இருக்கின்றன. இவற்றைவிட இயக்கத்தில் அவ்வப்போது அறிமுகமாகும் புதியவகை ஆயுதங்கள் ராயூவின் கைபட்டுத்தான் வெளியே வரும்.

இயக்கத்தின் படைத்துறை வளர்ச்சியில் செலுத்திய அதே அக்கறையைத் தன்பொறுப்பின் கீழ்ச் செயற்பட்ட போராளிகளின் நலனிலும் செலுத்தினார். நாள்தோறும் வெடிமருந்துகளுடன் பணியாற்றும் போராளிகளைப் பாதுகாப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிவதற்காகப் புத்தகங்களைத் தேடிப்பிடித்து விடயங்களை நுணுகி ஆராய்ந்து சரியான நடைமுறைகளைச் செயற்படுத்துவதிற் கண்ணாயிருந்தார். எம்மால் உற்பத்தி செய்யப்படும் வெடி மருந்துக் கருவிகள் எமது போராளிகளின் சாதனைக்கானவையாக இருத்தல் வேண்டும். மாறாக எமது அழிவிற்குக் காரணமாக அமையக் கூடாது என்பதில் எப்போதும் அக்கறையாக இருந்தார். குறிப்பாகக் கரும்புலிகளுக்கான வெடிப்பொருட்களைத் தயாரிக்கும் போது, “நாங்கள் ஒவ்வொருவருமே கரும்புலிகள்; என்ற உணர்வோடு இருந்துதான் அந்த உற்பத்திகளைச் செய்ய வேண்டும். ஒரு கரும்புலியின்ர உயிர் அநியாயமாகப் போகக் கூடாது. அவர்களுக்கான உற்பத்திகள் துல்லியமானவையாக இருக்க வேண்டும்” என்று தன் போராளிகளுக்கு அடிக்கடி கூறுவார். போரில் எமது இழப்புக்களைக் குறைத்து எதிரிக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்துவதில் ராயுவின் உழைப்புப் பெரிதும் உதவியது. போருக்கான திட்டங்களை வகுக்கும் போது ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்குத் தலைவர் தெரிவிக்கும் தீர்வுகளை நிறைவேற்றம் வரை அவர் ஓய்வதில்லை. சில வேளைகளில் ராயு தெரிவிக்கும் தீர்வு எளிதானதாகவும் சிக்கனமானதாகவும் இருக்கும்.

1992 ஆம் ஆண்டு ஆயுத வெடிப்பொருட் பற்றாமையுடன் மற்றும் சில நெருக்கடிகளையும் சந்தித்த காலம். நாம் நடத்தும் ஒவ்வொரு தாக்குதலிலும் எமது ஆள், ஆயுத இழப்புக்களைக் குறைத்து எதிரிக்கு அதிக இழப்புக்களை ஏற்படுத்தி ஆயுதங்களையும் வெடிப்பொருட்களையும் பெருமளவில் கைப்பற்றவேண்டும் என்பதில் தலைவர் கண்ணும் கருத்துமாக இருந்து நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போது பலாலி முன்னரங்க நிலைகள் மீது ஒரு தாக்கதலை நடத்தத் திட்டம் தீட்டப்பட்டது. எதிரியின் முன்னரண்களை எளிதாகத் தாக்கியழிப்பதற்காகக் கடல்வழியால் முகாமிற்குள் இரகசியமாக நுழைவதற்கான திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டது. ஆனால் கடல்வழியால் ஆயுதங்களை நகர்த்துவதில் எதிர்பார்க்கப்பட்ட சிக்கல்கள் அதை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக இருந்தன. அத்தடையை நீக்குவதற்கு ராயுவால் முன்மொழியப்பட்ட தீர்வு, திட்டத்தைச் செயற்படுத்த உதவியது. தாக்குதல் இழப்புக்கள் குறைந்த வெற்றியான நடவடிக்கையாக நிறைவடைந்தது. அதற்குப்பின் நடந்த பல தாக்குதல் நடவடிக்கைகளிலும் ராயுவின் கண்டுபிடிப்புப் பயன்பட்டது.

அந்த நாட்களில் ராயூவை அவர் நேசித்த மக்களோ பெரும்பாலான போராளிகளோகூட அறிந்திருக்கவில்லை. குறிப்பிட்டுக்கூறக்கூடிய போராளிகள் சிலருக்கு மட்டுமே அவர் அறிமுகமானவராக இருந்தார். ஆனாலும் செயல்களினூடாக எல்லோருக்குள்ளும் வாழ்ந்தார். இரண்டாம் ஈழப்போர் வெடித்த சில ஆண்டுகளிற் பலநூற்றுக்கணக்கான போராளிகளை உள்ளடக்கிய புதிய படைப்பிரிவொன்றின் உருவாக்கத்திற்குப் பொறுப்பாக ராயூ நியமிக்கப்பட்டார். உயர் செயற்றிறன் மிக்க மரபுவழிப் படையாக அதை உருவாக்க வேண்டுமென்று தலைவர் எண்ணினார். ஆதற்கான தொடக்கப்பணிகளே பாரிய அளவிலானவையாக இருந்தன. பகல் இரவு என்று பாராமல் ஓய்வு ஒழிவின்றிக் கடுமையாக உழைக்கவேண்டியிருந்தது.

சிறுத்தைப் படைப் பிரிவில் முதலிற் பெண் போராளிகளே இணைக்கப்பட்டனர். பெண் போராளிகளுக்கு அவர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் உணர்த்தி தம்மால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துத் தனிச்சிறப்பு மிக்க அதிரடிப் படையை உருவாக்க வேண்டுமெனத் தலைவர் திட்டமிட்டார். அதற்கான பயிற்சித் திட்டங்களையும் நடைமுறைகளையும் வகுப்பதில் அதிக அக்கறை செலுத்தினார். தலைவரின் எண்ணத்தை முழுமையாக உணர்ந்த ராயூ தன் முழு ஆற்றலையும் அர்ப்பணித்து உழைத்தார். பின்னர் சிறுத்தைப் படையில் ஆண்களுக்கான பிரிவு உருவாக்கப்பட்ட போது ராயூவின் மீதான சுமை இரட்டிப்பானது.

பயிற்சிப் பாசறையில் போராளிகளுடன் ராயூ எப்படி வாழ்ந்தார் என்பதை போராளி ஒருவர் நினைவு கூர்ந்தார். “சிறுத்தைப் படையணியிற் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டோம். வெளித்தொடர்பு ஏதுமின்றி ஆண்டுக்கணக்காக எமது பயிற்சி தொடர்ந்தது. தொடக்கத்தில் எல்லாமே எங்களின் ஆற்றலுக்கு அப்பாற் பட்டனவாகவே இருந்தன. நாங்கள் எல்லாவற்றிலும் கடுமையாக எங்களை வருத்தினோம். அப்போதெல்லாம் எங்களுக்கு மென்மேலும் உறுதியூட்டியவை ராயூ அண்ணனின் செயல்கள் தான். அவர் எமது அடிப்படைத் தேவைகளை தந்தை ஒருவருக்குரிய அக்கறையோடு கவனித்தார். போராளிகள் அனைவரிலும் அன்பும் அக்கறையும் செலுத்தினார். ராயூ அண்ணை பயிற்சி செய்வதைப் பார்த்தாலே எங்களுக்கும் அதில் ஆர்வம் வந்துவிடும்.”

ராயூவால் வளர்தெடுக்கப்பட்ட ஆற்றல் நிறைந்த சிறுத்தைப் படையணி மூன்றாம் ஈழப்போரில் முக்கியமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது. போர்க்களங்களில் நேரடிச் சண்டை அணிகளாக பயன்படுத்தப்பட்டதுடன் சிறுத்தைப் படையணிப் போராளிகளாற் படைத்துறை உட்கட்டமைப்புக்கள் பலவும் ஏற்படுத்தப்பட்டன. இக்காலகட்டத்தில் ராயுவின் பொறுப்பிலிருந்த பொறியியற் துறை மேலும் பெரிய அளவில் விரிவுபடுத்தப்பட்டன. இயக்கத்தின் சுமைகளை மேலும் மேலும் தாங்கியபடியே ஒரு சுமைதாங்கிபோல அவர் வாழ்ந்தார். இன்னுமின்னும் சுமைகளைத் தாங்குவதற்காகத் தன் அறிவையும் ஆளுமையையும் வளர்த்த படியே இருந்தார். இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் பிரமிக்க வைக்கும் பணிகளையெல்லாம் அந்த மனிதர் எப்படிச் செய்து முடித்தாரென்பதை அவரோடு நீண்டகாலம் வாழ்ந்த போராளியொருவர் நினைவு கூறுகிறார்.

“ராயூ அண்ணையிடம் தனித்துவமான பல திறமைகளும் குணாதிசயங்களும் இருந்தன. அவர் ஞாபகப்படுத்துவதற்காகப் பெரும்பாலும் எதையும் குறித்துவைப்பதில்லை. எப்படியோ எல்லாவற்றையும் அந்த மூளையிற் பதித்துவைத்துவிடுவார். தேவைப்படும் போது எல்லாவற்றையும் உடனுக்கடன் அவரால் ஞாபகப்படுத்திக்கொள்ள முடியும். எங்காவது தூரத்திற்குப் புறப்படுவதென்றால் சாரதிக்குப் பக்கத்தில் புத்தகத்துடன் அமர்ந்து விடுவார். தான் வாகனத்தை ஓட்டும் போது பக்கத்தில் இருப்பவரை வாசிக்கவைத்து கேட்டுக் கொண்டிருப்பார். அப்படியுமில்லாவிட்டால் போராளிகளுக்கான விரிவுரைக்கூடமாக அது மாறும். கடினமான காலங்களில் ராயூ அண்ணை சிறிது நேரமாவது நித்திரை கொள்வது வாகனத்திற் செல்லும் வேளையிலாகத்தானிருக்கும். வாகனம் சென்றடைந்ததும் தன் மீதிப்பணிகளை ஆரம்பித்து விடுவார். எப்போதும் அதிகாலை வேளையில் எழுந்துவிடுவதைக் கண்டிப்பான பழக்கமாக வைத்திருந்தார். காலைக்கடன்களின் போதே தன் பொறுப்பாளர்களுக்கு வேலைகளைப் பகிர்ந்தளித்து விடுவார். இப்படியான இயல்புகளால்த்தான் அவரால் இவ்வளவு சுமைகளையும் சுமக்க முடிந்தது”

உண்மையில் அவர் அப்படி வாழ்ந்ததாற்றான் போராட்டத்தளம் யாழ். குடாநாட்டிலிருந்து வன்னிக்கு மாறிய பின்னரும் எமது இயக்கத்தின் வேகமான வளர்ச்சிக் காலத்தில் கூடுதலான பணிகளை அவராற் சுமக்க முடிந்தது.

வன்னிப் போர்க்களத்தில் எமது படைத்துறைப் பீரங்கி, மோட்டார் உள்ளிட்ட பல நவீன படைக்கலங்கள் புகுத்தப்பட்டு வலுவூட்டப்பட்டது. எமது படைக்கட்டமைப்புக்களுக்கும் தந்திரோபாயங்களுக்குமேற்ப பீரங்கிகளையும் மோட்டார்களையும் பயன்படுத்துவதற்கு ராயூ வழிவகுத்தார். எதிரிக்கும் உலகுக்கும் புலிகளின் உண்மைப்பலத்தை உணர்த்திய ஓயாத அலைகள் ஒன்றின் போது எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தும் வகையில் எமது மோட்டார்களின் தாக்குதல் அமைவதற்கு ராயூ வின் உழைப்பே காரணமாகும்.

முல்லைப் படைத் தளத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆட்லறிகள் எமது பீரங்கிப்படையை உருவாக்க வழிவகுத்தன. ஆனாலும் அவற்றைப் போர்க்களங்னளில் நுட்பமாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தையும் பட்டறிவையும் பெறுவது எளிதானதாக இருக்கவில்லை. எதிரியும் எமக்கு நீண்டகால இடைவெளியைத் தருவானெனத் தென்படவில்லை. எல்லாப் பொறுப்புக்களும் ராயூவிடமே விடப்பட்டன. “ராயூ எப்படியோ செய்து முடிப்பார்” என்று தலைவர் நம்பினார். அதனாலேயே விரைவில் நடக்கவிருந்த ஆனையிறவு – பரந்தன் ஊடறுப்புச் சமரைத் தலைவர் ஒத்திவைத்துக் காத்திருந்தார். ராயூவும் அவரது போராளிகளும் சூறாவளியாகச் சுழன்றுழைத்த அந்த நாட்களைப் பீரங்கிப் படையணியின் தளபதியொருவர் நினைவு கூறுகிறார்.

“எங்களைப் பொறுத்தவரை அப்போதும் எமது கைகளில் இரண்டு இரும்புக்குத்திகள் இருந்தன. ஏனெனில் அப்போது ஆட்லறி பற்றிய அறிவு எமக்கு இருக்கவில்லை. தெரியாத்தனமாக ஏதும் செய்துவிட்டால் அவற்றை நாங்கள் இழந்தவிடக்கூடும். அல்லது அவற்றின் செயற்றிறன் குறைந்துவிடக்கூடும். நாம் இக்கட்டான நிலையில் இருந்தோம். ராயூ அண்ணை அந்த இரும்புக்குத்திகள் மீதிருந்த ஒவ்வொரு புதிரையும் விடுவித்துக் கொண்டிருந்தார். சில கட்டங்களில் அப்பால் நகர முடியாமல் முடங்கி விடுவோம். சிலவேளைகளில் நம்பிக்கையின்மை கூட ஏற்படும். “ராயூ அண்ணை எப்படியும் கண்டுபிடித்துவிடுவார்” அந்த நம்பிக்கை தான் எல்லோரையும் தூக்கி நிறுத்தும். நம்பிக்கை வீண்போகவில்லை. இரும்புக் குத்திகள் விரைவிலேயே எமது கைகளில் ஆட்லறிகளாக மாறின. எல்லாவற்றையும் கடந்து துல்லியமான சூடுகளை வழங்கக்கூடிய நிலைக்கு ராயூ அண்ணை எங்களை முன்னேற்றினார். தலைவரின் எதிர்பார்ப்பின் படியே ஆனையிறவு – பரந்தன் ஊடறுப்புச் சமரின் போது ஆட்லறிகள் துல்லயமான சூடுகளை வழங்கின.”

ஆட்லறிப் பிரிவின் செயற்றிறன் மேலும் மேலும் வளர்க்கப்பட்டுக் கொண்டேயிருந்தது. ஒரு வழமையான மரபுவழி இராணுவக் கட்டமைப்பைப் போலல்லாது எமது படைக்கட்டமைப்புத் தனித்துவமான அம்சங்களைக் கொண்டது. எமது வியூகங்களும் தனித்துவமானவை. இவற்றுக்கு அமைவாக எமது ஆட்லறிப்பிரிவைப் பயன்படுத்துவதில் ராயூ வெற்றிகண்டார். பாதகமான காலநிலைகளின் போது ஆட்லறி, மோட்டார் போன்ற மரபுவழிப் படைகள் அக்காலநிலைமைகளில் பாரிய அளவிலான சமர்களைத் தவிர்த்தன. ஆனால் எமது ஆட்லறிப் பிரிவை அத்தகைய கால நிலைகளிலும் பயன்படுத்தக் கூடியதாக ராயு அமைத்திருந்தார். ஜயசிக்குறுவிற்கு எதிரான சமர்க்களத்தில் சில இடங்களில் துல்லியமான ஆட்லறிச் சூடுகள் மூலம் இலகுவான வெற்றிகள் பெறப்பட்டன. எல்லாவற்றக்கும் மேலாக ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் போது எமது ஆட்லறிப் பிரிவான கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணி தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி உழைத்தது. அதனை ராயூவே தலைமைதாங்கி வழிநடத்தினார்.

எல்லா முனைகளிலும் தொடர்ச்சியாக நீண்டு சென்ற அந்த மீட்புச் சமரிற் பல சோர்வான கட்டங்களிற் போராளிகளுக்கு உற்சாகமூட்டி வேகமான வெற்றிகளுக்கு வழிவகுத்தார். களத்தில் ஏற்படும் நெருக்கடியான கட்டங்களிலெல்லாம் எதிரியின் ஆட்லறிப் பிரிவால் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு விரைவான சூட்டு ஆதரவை வழங்கக்கூடிய நிலைக்கு எமது ஆடலறிப் பிரிவை வளர்த்தெடுத்தார். அதனாற் பல பாதகமான களச்சூழலிலும் நாம் வெற்றிபெற முடிந்தது. போராளிகள் பலரும் காப்பாற்றப்பட்டனர். தலைவரின் புதிய திட்டமிடலின் கீழ் பரந்தன் சமரில் கனரக ஆயுதங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு பகற் சண்டையில் நாம் குதித்த போது தலைவரின் எதிர்பார்ப்புக்கேற்ப ஆட்லறிகளை ஒருங்கிணைத்து சூடுகளை வழங்கி வெற்றிக்கு வழிசமைத்தார். இந்த நம்பிக்கையுடனேயே மேலும் தொடர்ந்த நடவடிக்கைகளில் எம்மால் வெற்றியீட்ட முடிந்தது.

வரலாற்றுப் புகழ்மிக்க இத்தாவிற் சமரின் போதும், ஈற்றிற் சிங்களம் தொடுத்த பாரிய “அக்கினிக்கோலா” நடவடிக்கையை முறியடித்த சமரின் போதும் களத்தில் நின்ற போராளிகளுக்குப் பீரங்கிகளால் உற்சாகமூட்டி அவர்களின் உயிரைக் காத்து ஓயாது பணியாற்றி வெற்றிகளுக்கு வழிசமைத்தமை ராயுவின் தலைமையில் எமது ஆட்லறிப் பிரிவு ஈட்டிய சாதனைகளில் முக்கியமானதாகும். ராயூவின் பொறுப்பிலிருந்த பொறியியற் துறையால் “அக்கினிக்கோலா” நடவடிக்கைக்கு எதிரான சமரில் அறிமுகம் செய்யப்பட்ட வெடிக்கருவிகள் எதிரி அணிகளைச் சிதறடித்து வெற்றிக்கு வழிகோலின.

போர்க்களங்களில் ஆயுத வலுவைப் பயன்படுத்தி எமது இலகுவான வெற்றிக்கு வழிகோலி, போராளிகளின் உயிர்காத்த எமது தளபதியைப் போர்க்களங்களிற் காப்பதில் எல்லோருமே அக்கறை கொண்டிருந்தோம். ராயுவுக்கு ஏதும் நடந்துவிட்டால் அது ஈடுசெய்யப்பட முடியாதென்பதை எல்லோரும் உணர்ந்திருந்தோம். ஆனால் போர் முழக்கங்கள் தணிந்துவிட்ட ஒரு நாளிற்றான் எங்களுக்கு இடி காத்திருந்தது. நோயென்று பாயிற் படுத்தறியாத எங்கள் தளபதி ராயு கொடும் நோயினால் வதையுறுவதாகச் செய்தி வந்தது. அவராற் பிள்ளைகள் போல் வளர்க்கப்பட்ட போராளிகளும் அவரை அறிந்தவர்களும் துயரத்தால் வாடினர்.

ராயூவின் நோயின் கடுமை அதிகரித்துக்கொண்டே போனது. சத்திரசிகிச்சை முடிவுகள் புற்றுநோய் என்பதை உறுதிப்படுத்தின. ஏற்கனவே அவை அவரது உடலில் வலுவாக நிலைபெற்று விட்டன. எங்கள் அன்புக்குரிய ராயூமீட்கப்பட முடியாத நிலைக்குச் சென்று கொண்டிருந்தார். படுக்கையில் நாட்கள் கழிவதைச் செரிக்க முடியாதவராக இருந்தார்.

“வருத்தமென்று சும்மா படுத்துக் கொண்டு வேலையும் செய்யாமல் நல்ல சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டு இருக்க ஒரு மாதிரிக் கிடக்கு” என்று தன் போராளிகளுக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். படுக்கையில் இருந்தபடியே தனது போராளிகளுக்கு முக்கியமான விடயமொன்றைக் கற்பிப்பதில் ஈடுபட்டார். அதனால் அவர் தேறி வருவதாக எல்லோரும் நினைக்கத் தொடங்கினர். ஆனால் ராயூவின் வயிறு கல்லாகிக்கொண்டே போனது. தாங்க முடியாத வயிற்றுவலிக்கு உள்ளாகும் அவரை மயக்க நிலைக்குட்படுத்த வேண்டியிருந்தது. ஈற்றில் மருத்துவத்திற்காக வேறிடத்துக்கு அனுப்ப முடிவுசெய்யப்பட்டது.

ஆட்கொல்லி நோயென்றாலும் இரும்பு மனிதரென்று நாங்கள் எல்லோரும் அடிக்கடி கூறிக்கொள்ளும் கேணல் ராயூ அவர்கள் சில காலத்துக்காவது வாழக்கூடிய நிலையில் திரும்பிவருவாரென்று எதிர்பார்த்தோம். அடுத்த மாவீரர் நாளில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராயூ நட்டுவைத்த பூங்கன்றுகளும் அவ்வாறுதான் எண்ணியிருக்கம். ஆனால் 25.08.2002 ஆம் நாளன்று எல்லாமே பொய்த்துப்போயின.

நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (புரட்டாதி – ஐப்பசி, 2002).

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments