
தோணிதாட்டமடு படுகொலை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மட்டுநகர் மண்ணில் கடல்வளமும், வயல்வளமும் சிறந்து விளங்கும் கிராமங்கள் பல. உழைத்து சேமித்து இலட்சாதிபதியாய், கோடீஸ்வரராய் வாழநினைப்பவர்கள் மிக இலகுவில் அந்த நிலையை அடைந்துவிடமுடியும். இலட்சத்துக்கு அதிபதிகளாகி தமிழ்மக்களின் பாரம்பரிய பண்பாடுகளை மறந்து மனிதநேயத்தை இழந்து, மொத்தத்தில் தமது சுயத்தையே மறந்துவாழும் மனிதர்களாக வாழவிரும்பாத, இனமகத்துவத்தை காக்கின்ற மக்களே இத்தகைய வளமிகு கிராமங்களில் வாழ்வதை அவதானிக்க முடிந்தது.
ஆண்டாங்குளம் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இருக்கின்ற வாகரை, கதிரவெளி, பனிச்சங்கேணி, வெருகல், தோணிதாட்டமடு என்னும் கிராமங்களும் இத்தகை வளங்களை நிறையக் கொண்டிருந்தன. நிலமிருந்தும், வளமிருந்தும் நாளாந்தம் தமது வாழ்வுக்கு போதுமானதை மட்டும் உழைத்து மற்றவர்க்கும் கொடுத்து, தாமும் உண்டு வஞ்சகம், சூது; பொறாமை, தந்திரம், ஏமாற்று என்ற கெட்ட எண்ணங்கள்கொண்ட துட்ட மனிதர்களை இங்கு காண்பது அரிது.
கடலைத்தொட்டு நின்று, அகன்று நீண்டுவிரியும் பனிச்சங்கேணி ஆறு வாகரையிலிருந்து தோணிதாட்டமடு கிராமத்தை பிரித்து நிற்கின்றது. சேனைப்பயிர்ச்செய்கைக்காகவும், வயற்செய்கைக்காகவும் தோணி தாட்டமடுவிற்கு வாகரையிலிருந்து மக்கள் சென்றுவருவார்கள். பருவகால பயிர்ச்செய்கைக்கான இடப் பெயர்வுக்கிராமமாக இக்கிராமமிருந்தது.
இக்கிராமத்தை பிரித்தும், தொட்டும் பாய்கின்ற பனிச்சங்கேணி ஆற்றில் இறாலும், நண்டும், மீனும் கொழுத்துக் கிடக்கும் வளம் நிறைந்த இக்கிராமத்துக்கு இன்று மக்கள் சென்றுவர அச்சம்கொள்கிறனர். புதிதாக பார்ப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் வினோதமாகத்தானிருக்கும். ஆனால் சிங்களப்படைகள் அக்கிராமத்தை அழித்து அசிங்கப்படுத்தியதும் வயற்குடிலிலும், சேனைப் பரணிலும் இந்த ஏதுமறியாத மக்களை சுட்டுக் கருக்கிய நாள் மனதிலிருந்து இலகுவில் அகன்றுவிடக்கூடியதல்ல. நாமுண்டு நம் வாழ்வுண்டு என வாழ விரும்பியவர்களுக்கு நடந்து முடிந்த துயரம்.
யாருக்கு புரியும், யார் புரிந்தார்கள்?, உலகத்தின் கண்களுக்கு யார் கொண்டுவந்தார்கள்?.
1987ம் ஆண்டு, வைகாசித் திங்கள், 27ம் நாள் தோணி தாட்டமடுக் கிராமத்தின் இருண்ட நாள். இந்தநாள்தான். இரவோடிரவாய் சிங்கள இராணுவ கொலைவெறிக்குள் சிக்கி உயிரோடு தீயில் மக்கள் சுருண்டு பொசிங்கிப்போன கதையை யாரிடம் கேட்பது. தெய்வாதீனமாகத் தப்பிய ஓரிரண்டு முதுமைகள் வாகரைக் கிராமத்தில் தங்களது கடைசி மூச்சுக்காய் இன்று போராடிக் கொண்டிருந்தனர். அவர்களும் போய்விட்டால் யாரிடம் கேட்பதென்ற ஆதங்கத்தோடு அவர்களை அணுகினேன்.
ஓலைக்குடிசை, ஒருவருக்குமேல் இருந்து படுத்து எழுந்து நடமாடமுடியாத சிறியகுடிசை. ‘வாருங்கோ மகன்’ என்ற வரவேற்புக்குரல். பிய்ந்து போன இரண்டு பாய்த்துண்டையும் ஒன்றாக்கி எங்களை இருத்த முனைந்து கொண்டிருந்தாள் அந்த அம்மா. கணவனை இப்படுகொலையில் பறிகொடுத்து தனிமரமாய் நின்று வாழ்க்கைப் போராட்டம் நடத்தும் இந்தத் தாயின் உள்ளக் குமுறலைப் பகிர்ந்துகொண்டேன்.
‘விடிய 5.00 மணிக்கு ஆத்துப்பக்கமா வெடிக்கேக்குது எங்க நாசம்பண்ணுறாங்களோ தெரியல்ல. கடவுள்தான் காப்பத்தணும்’ என கடவுளத்தான் வேண்டினம்.
வாகரை, கதிரவெளி, வம்மிவெட்டுவான், மாவடி ஓடை இராணுவ முகாமில இருந்தெல்லாம் றக்கில வந்த ஆமி வடிச்சல் பிள்ளையார் கோவிலடியிலிருந்து இறங்கி நடந்து போயிருக்கிறான். வயல் குடிலுக்குள்ளேயும், சேனைப்புலவுக்கேயும் காவலுக்கு கிடந்தவங்களையெல்லாம் சுத்திவளைச்சுப்பிடிச்சான். இதுக்குள்ள பலாப் பழம் பிடுங்கப் போனவங்களும் மாட்டீட்டாங்கள். படபடெண்டு வெடிச் சத்தங்கள் கேட்குது. விடிஞ்சு பொழுது நல்லா மேலவந்திட்டுது. தோணிதாட்டமடுவில ஆமி ஆக்கள் வெட்டியும் சுட்டும் எரிச்சுக்
கருக்கீட்டு போயித்தானாம் என கேள்விப்பட்டு ஓடிப்போனன். அங்க போனா என்னத்த பாக்கிறது. கொஞ்சப்பேரை வெட்டிப்போட்டு அரை குறையாய் கருக்கியிருந்தான். சிலரை சுட்டுப்போட்டு கருக்கியிருந்தான். கண்டுபிடிச்சிட்டன். எரிஞ்சு கரிக்கட்டையாய் கிடந்த அவரை எடுத்திட்டுவந்து இஞ்சதான் தாட்டம். ஈவிரக்கம் இல்லாத அவங்கள கொல்லணும் மகன்.
குணமெண்டு ஒராள சுட்ட உடன பொஞ்சாதி ரெண்டு சின்னப்பிள்ளயளை இடுப்பில தூக்கிட்டு ஓடியிருக்காள் அவளச் சுட்டிட்டு பிள்ளயள உயிரோட நெருப்பில தூக்கிப்போட்டிருக்கிறான். இவங்களயெல்லாம விட்டுவைக்கக்கூடாது மகன்’ என ஆத்திரமும் அழுகையும் பொங்க கூறினாள். வேலுப்பிள்ளை மாரி முத்து என்ற மூதாட்டி.
தாய், சகோதரிகள், சகோதரிகளின் பிள்ளைகள் என பலரைப் பறிகொடுத்த தர்மலிங்கம் பூமணி என்பவரின் துயரக் கதையை கேட்பதற்காக சென்றேன். வாகரைக்கும் பால்ச்சேனைக்குமிடையே பிரதான வீதியோரத்தினருகே இருந்த சிறிய குடிசை. குடிசைக்குள் புகுந்து இருக்கக் கூடியளவுக்கு இடவசதியில்லை. வெளியே முற்றத்து மண்ணில் அமர்ந்தேன்.
‘விடியச் சாமத்தில படுபாவியள் வந்திட்டாங்கள். ஊரைச்சுத்தி வளைச்சு சுடத் துவங்கீட்டான். நான் நம்மட பிள்ளையள இழுத்திட்டு கடவுள நேந்துகொண்டு ஓடினன். தவமணியின் குழந்தையளும், கமலாவும் கமலான்ர பிள்ளையளும் மாட்டீட்டாங்கள். கமலாவ சுட்டிட்டு பிள்ளைகளையெல்லாம் உயிரோட தூக்கி எரியிற நெருப்பில வீசிட்டான். சுத்திச் சுத்தியெல்லாரும் வயல்குடிலுக்க தான் இருந்தனாங்கள். அண்ணன் இரத்தினசீலன் அவங்கட பொஞ்சாதி பூப்பா. அவங்கட பெண்குழந்தை எல்லாரையும் சுட்டிட்டான். பால் குடிமாறாத குழந்தை இரக்கமேயில்லாமல் சுட்டு எரிச்சிட்டான். சுடச்சுட ஓடினதால நானும் பிள்ளையளும் தப்பிக்கொண்டம். என்னப்போல ஓடித்தப்பினது நாலு பேர் மட்டும்தான். மற்ற எல்லாரையும் சுட்டிட்டான். என சொல்லிக் கொண்டிருந்த பூமணியின் உடல் நடுங்கியது. பதிநான்கு ஆண்டுகள் போனாலும் அந்தக் கொலையின் கொடூரத்திலிருந்து அவர் விடுபடவில்லையென்பதை உணர்ந்து கொண்டேன். கேட்பதற்கு யாருமற்றவர்களாய் அபயக்குரலெழுப்பி
அழுதபடி எரிந்துபோன எங்கள் உறவுகளின் உணர்வுகளை உலகம் புரியவில்லை.
எங்கிருந்தோ வந்த சிங்களவன் தெருநாய்கள் போல எங்கள் மக்களை ஓடஓடச் சுட்டெரித்த நாள் கொடியது. சிங்கள இராணுவக் கொலைவெறிப்பசி நின்றுவிடவில்லை.
“தட்டிக்கேட்க ஆளில்லையென்றால் தம்பி கண்டப்பிரசண்டம் ”
என்பதுபோல மட்டு நகர் மண்ணில் படுகொலைகள் தொடந்து நடந்தன.
படுகொலையில் அகப்பட்டுக் கொண்டவர்கள் :
இ.சொக்கலிங்கம்,
க.வேலுப்பிள்ளை
செ.கணேஸ்வரன்
வீ.தங்கத்துரை
சி.பவானந்தம்
சி.இரத்தினசீலன்
இ.கமலா
சி.கண்ணாச்சி
இ.பூப்பா முருகுப்பிள்ளை
சி. நடராஜா.
-மௌனப் புதைகுழிக்குள்
-மணலாறு விஜயன்