×

இந்திய ஆக்கிரமிப்புப் படைக்கெதிராகப் புலிகள் போர்

இந்திய ஆக்கிரமிப்புப் படைக்கெதிராகப் புலிகள் போர்

இந்திய-இலங்கை அரசுகளின் கூட்டுச்சதியின் விளைவாக, இந்தியப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையே யுத்தம் வெடித்தது. ஆயுதக் களைவு என்ற போர்வையில் இந்திய அமைதிப் படை புலிகளுக்கு எதிராக யுத்தத்தில் இறங்கியது. இந்த யுத்தம் தமிழீழ மக்களுக்கு எதிரான போராக விஸ்வரூபம் பெற்றது.

1987 ஒக்ரோபர் 10ஆம் திகதி ஆரம்பமான இந்திய-புலிகள் யுத்தம், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்தது. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய இராணுவ வீரர்களைக் களத்தில் இறக்கிப் புலிகளை அழித்துவிட இந்திய அரசு பகீரத முயற்சிகளை எடுத்தது. புலிகளை ஆதரித்து நின்ற அப்பாவித் தமிழ் மக்களையும் இந்திய அரசு பழிவாங்கியது. இந்திய இராணுவத்தின் அசுரத்தனத்திற்கு ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் பலியானார்கள்.

தமிழீழம் முழுவதையும் முற்றுகையிட்டு நின்ற ஆக்கிரமிப்பு இராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் ஆக்ரோசத்துடன் சமர்புரிந்தனர். அலை அலையாக எழுந்த படையெடுப்புக்களை எல்லாம், மலை போன்ற உறுதியுடன் எதிர்த்துப் போராடினர். விடுதலைப் புலிகளின் அலாதியான துணிவும், அசைக்க முடியாத தன்னம்பிக்கையும் இந்திய இராணுவத்தைத் திகைக்க வைத்தது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை உயிர்ப்பலி கொடுத்தும் புலிகளை வெற்றி கொள்ள முடியாது போகவே, இந்திய இராணுவத்தின் மனவுறுதி தளர்ந்தது. இந்திய வரலாற்றிலேயே என்றுமே சந்தித்திராத நீண்ட, கடினமான ஒரு யுத்தத்தில் குதித்தும், பெரிய உயிர்ச்சேதத்தைச் சந்தித்தும் தனது இராணுவ கேந்திர இலக்குகளை அடைய முடியாமல் இந்திய அரசு திணறியது.

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் வெற்றிகொள்ள முடியாத போது, அரசியல் ரீதியில் அந்நியப்படுத்திவிடலாம் என்ற நோக்கத்தில் போலியான ஒரு மாகாண சபைத் தேர்தலை அரங்கேற்றித் தனது கூலிகளை இந்திய அரசு பதவியில் ஏற்றியது. அப்படியிருந்தும் மக்களின் ஆதரவு இல்லாததால் மாகாண சபை நிர்வாகம் செயற்படவில்லை.

ஒட்டுமொத்தத்தில், இந்தியத் தலையீடு தமிழீழத்தில் தோல்வியைச் சந்தித்தது. ராஜீவ்-ஜே.ஆர். ஒப்பந்தம் செயலிழந்து, செத்துப் போனது. எனினும் இந்திய இராணுவம் தொடர்ந்தும் தமிழீழத்தில் நிலை கொண்டிருந்தது.

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments