
தினேஸ் மாஸ்டர் பலருக்குத் தெரியாத ஒரு மூத்த போராளி இவர்.
‘வெடி’ தினேஸ் என்று மொசாட் , சிஐஏ, றோ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் தினேஸ் மாஸ்டர் இந்தியப் பயிற்சியின் போது வெடி மருந்து தயாரித்தலுக்கான சிறப்புப் பயிற்சி பெற்றவர்.
குருவை மிஞ்சிய சிஸ்யர்களாக புலிகள் இந்தியாவை விஞ்சிய பல முக்கிய விடயங்களில் ஒன்றாக தினேஸ் மாஸ்டரின் வெடிமருந்துப் பாவனையால் அதிர்ச்சியுற்றே உலக உளவு அமைப்புக்கள் அவரை ‘வெடி’ தினேஸ் என்று பதிவு செய்து வைத்துள்ளன.
அந்தப் பயிற்சிதான் பின் நாளில் ராதா அண்ணை உலக வரலாற்றில் முதல் தடவை கண்ணிவெடி மூலம் பவள் கவச வாகனத்தை தகர்க்கும் தொழில் நுட்பமாக மாறி உலகத்தைத் திகைக்க வைத்தது.
தலைவருடன் சேர்ந்து தாக்குதல் திட்டங்களை வடிவமைக்கும் இரகசிய குழுவில் முக்கிய அங்கத்துவம் வகித்த தினேஸ் மாஸ்டர் அதைத் தளபதிகளுக்குப், போராளிகளுக்கு விளக்கும் முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருந்தார்.
இடையில் ஓரிரு வாரங்களே செயலில் இருந்து காரணம் எதுவென்று தெரியாமல் கலைக்கப்பட்ட ‘தமிழீழ கூட்டுப்படைத் தலைமையகப்’ பொறுப்பாளராக தினேஸ் மாஸ்டர் இருந்தார்.
இந்தியப் பயிற்சியின் போது போராளிகளை ரோ அமைப்பு கணக்கெடுத்துக் கொண்டிருந்தது. இதைக் கவனித்த தலைவர் தூர நோக்கில் கப்டன் பண்டிதர் தலைமையில் ஊரிலேயே ஒரு தொகுதி போராளிகளுக்கு இரகசியமாகப் பயிற்சி கொடுக்கப்பட்டது. இதன் பின்னணியில் தினேஸ் மாஸ்டர் இருந்தார்.
பண்டிதர் வீரச்சவடைந்த போது அப்போது அவருடன் வீரச்சாவடைந்தவர்கள் உடல்கள் ரூபவாகினியில் காட்டப்பட்டபோதுதான் தங்கள் பட்டியலில் இல்லாதவர்களின் உடல்களைப் பார்த்து ரோ அமைப்பு அதிர்ச்சியுற்று தலைவரின் மதி நுட்பத்தைப் பார்த்துப் பயந்தது. பின் நடந்தது வரலாறு.
தினேஸ் மாஸ்டர் தந்தை உதவி அரச அதிபர். குடும்பத்தில் எல்லோரும் மருத்துவ/ பொறியல் பின்னணிகளைக் கொண்டவர்கள்.
நான் முன்பே பல தடவைகள் பேசிய விடயம் இது. ஏனைய மாற்று இயக்க உறுப்பினர்கள் பெரும்பாலும் இலக்கியம், உலக அரசியல் குறித்த வாசிப்பில் நிறைந்து விளங்கினார்கள். அதை வைத்தே புலிகளை விட ஏனைய இயக்கங்களில் கல்வியறிவு உள்ளவர்கள் இணைந்தார்கள் என்று சொல்வதுண்டு. ஆனால் உண்மையில் புலிகள் அமைப்பில் தினேஸ் மாஸ்டர், சங்கர் அண்ணா, ராதா, வாசு, குமரப்பா என்று ஒரு தொகை தொழில்நுட்ப கல்வியாளர்கள் நிரம்பி வழிந்தார்கள்.
அதுதான் ஏனைய இயக்கங்கள் ‘கதைகளாகப்’ பேசிக் கொண்டிருக்க புலிகள் படைத்துறை விஞ்ஞான ரீதியில் தம்மை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அதன் ஒரு குறியீடாக தினேஸ் மாஸ்டர் இருந்தார்.

எப்போதும் தலைவருடன் நெருங்கியிருந்த தினேஸ் மாஸ்டர் நந்திக்கடல் வரை சென்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
இயக்கம் செயலில் இருக்கும் போது ஒரு வேளை இவர் வீரச்சாவு அடைந்திருந்தால் இயக்கத்தின் உச்ச படைத்துறைப் பதவி வழங்கி தினேஸ் மாஸ்டர் கவுரவிக்கப்பட்டிருப்பார் என்று நம்புகிறோம்
போராளிகளுக்கே பெரும்பாலும் தெரியாத – சில தளபதிகளுக்கே தெரியாத தலைவருக்கு மட்டுமே தெரிந்த பல இரகசியங்கள் நிறைந்ததுதான் புலிகள் இயக்கம்.
வாழும் காலத்தில் தினேஸ் மாஸ்டர் போன்று இரகசியமாக இயங்கிய ஒவ்வொரு போராளிகளினதும் வரலாற்றைத் தேடித் தேடி ஆவணப்படுத்துவோம்.