வரலாற்றில் இன்று: 2021-08-28
Remembering Sengkodi today


*”செங்கொடி..!!”* கொடிகாக்கத் – தன்னைக் கொளுத்திக் கொண்ட உயிருண்டு உயிர்காக்கத் தன்னைக் – கொளுத்திக் கொண்ட கொடியுண்டா? உண்டு: அதன்பேர் செங்கொடி:
இனிமேல் – அதுதான் என் கொடி!
தொன்மைத் தமிழரெலாம் – ஒரு தொப்புள் எழுந்த கொடி: இவள் தொப்புள் எழுந்த கொடிகளைக் காக்க -வெப்புள் விழுந்த கொடி!
இதுதான் – எனது – வணக்கத்திற்குரிய கொடி! இதை வணங்காது வேறெதற்கு முடி?
மூவுயிர் விடு! ஈடாக என் – பூ வுயிர் எடு! என்று எமனிடம் தந்தாள் தன்னை;
செங்கொடி கன்னியாயினும் – மூன்று சேய்களைக் காத்த அன்னை! ஆம்; அந்தக் – கன்னி தீயானாள்; தீயாகி – கன்னித் தாயானாள்!
பெருவாரியான நாடுகள் பெரும்பிழை புரிந்தோரையும் – சிறையில் வைக்க முயலுமேயன்றி – சிதையில் வைக்க முயாலாது;
ஏன் எனில் –
சிதையில் வைத்தது தவறென்றால் சீவனை வழங்க இயலாது!
மரண தண்டனைக்குதான் மரண தண்டனை தர வேண்டும்;
மானுடற்கு மரணம் – கயிறு வழி யல்ல; காலன் வழிதான் வர வேண்டும்!
விழிநிறையக் கனாக்களுமாய்; விடை தெரியா வினாக்களுமாய்;
இருபது ஆண்டுகள் இறந்து போனபின்…
இம் மூவர்க்கு இன்னமும் மீதமாய் –
இருக்கும் வாழ்வையும் – கயிறு சுருக்கும் என்றால் ….
அது – அரக்கம் இருக்க வேண்டாமா – இரக்கம்?
‘கண்ணுக்குக் கண்! எனும் கருத்தை ஏற்காதவர் காந்தி;
தபால் தலையில் மட்டுமல்ல நாம் நடக்க வேண்டாமா – நம் எண்ணத்திலும் தேசப்பிதாவை ஏந்தி?
செங்கொடியே என் செல்ல மகளே! சேவிக்கத் தகுந்ததுன் சேவடி துகளே!
ஒன்றுரைப்பேன்; உன் தியாகத்திற்கில்லை
ஒப்பு;
என்றாலும் – அதை ஏற்பதற்கில்லை; அது தப்பு!
– *கவிஞர் வாலி.*