
ஒரு கைதியின் காதலிக்கு
கண்ணில் நீரோடு
காத்திருப்பவளுக்கு,
நேற்று முன்தினம் நள்ளிரவு
நித்திரையில் வைத்துக் கைதானேன்
காரணம் மட்டும் கேட்டுவிடாதே – அது
கடவுளுக்குக் கூடத் தெரியாது
வருடக் கணக்காக
விசாரணைகள் ஏதுமின்றி
வதைபடும் தமிழர்களில் இப்போது
நானும் ஒருவன்!
முதல்நாள் விசாரணையின் போது – என்
பற்கள் பல கழன்று விட்டதையும்
விலா எலும்புகள் சில
நொருங்கி விட்டதையும் இன்னும்
பற்பல அவலங்கள் சுமப்பதையும்
நீ ஒரு பொழுதும் அறிய வேண்டாம்
காணாமற் போனோரின் சங்கத்தில் இணைந்து
உண்ணா நோன்பும் இருக்க வேண்டாம்
உனக்கான உயிரை
இக்கணம் வரை சுமந்துள்ளேன்!
என்னைவிட மோசமான நிலையில்
இன்னும் பலர் இங்குளர்!
என் வேதனைகளின் நடுவே
உன் நினைப்பு ஒன்றுதான் குளிர்விக்கிறது
என் நிலை எண்ணி நீ
மனம் உடைந்து போயிருப்பாய்
படபடவெனச் சிறகடிக்கும் உன் விழிகள்
பாலைவனமாகியிருக்கும்
சிறையின் துன்புறுத்தல்களையும் விட
உன் நிலையுணரவைக்கும் நினைவுகளே
சுட்டெரிக்கின்றன!
இன்னுமொருதரம் படுகொலை ஏதும்
நடைபெறாவிடில் நிச்சயம்
நிச்சயம் நான் மீண்டும் வருவேன்!
மீளும் பொழுதில் புதிய
மனிதனாய் வருவேன்!
இரும்புச் சப்பாத்தின் கீழே
தினமும் நசிபடுவதை
என் முதுகு மட்டுமல்ல.
எம்மினத்தின் உரிமையும் தான்?
ஒரு வேளை –
நாளையோ… மறுநாளோ
இல்லை – இன்னொரு நாளோ…
மற்று மொரு
விசாரணையின் போது
என்னுயிர் பிரியலாம்!
அப்படியாயின் –
அழுது கொண்டிராதே-
எனதும்… என்னவர்களினதும்
இலக்கை எட்டுவதற்கு
உன் சிறகுகளை விரித்தெழு!
-ஆதிலட்சுமி சிவகுமார் –