
வட்டக்கச்சி அரசநெற்பண்ணை குண்டுவீச்சு – 28 பெப்பிரவரி 1991
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் வட்டக்கச்சி என்னும் கிராமம் காணப்படுகிறது. இங்கு வாழ்கின்ற மக்களின் பிரதான தொழில் விவசாயமாகும். அத்தோடு சிலர் பகுதிநேர நன்னீர் மீன்பிடி மற்றும் கூலித்தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்கள். இப்பிரதேசத்தில் ‘அரச நெற்பண்ணை’ என்னும் பெயரில் நெல்வயல்கள் காணப்பட்டன.
இங்கு வேலை செய்பவர்கள் தங்கி வேலை செய்வதற்காக வட்டக்கச்சி மூன்றாம் வாய்க்காற் பகுதியில் அரச நெற்பண்ணை விடுதிகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு ஐந்து குடும்பத்தை சேர்ந்தவா்கள் தங்கியிருந்தனர். 28.02.1991 அன்று காலை 7.00 மணியளவில் வேலைக்குச் செல்வதற்காக விவசாயிகள் விடுதிகளில் காலை உணவு அருந்திக்கொண்டிருந்த வேளையில் விமானப்படையினரின் இரண்டு ‘பொம்பர்’ விமானங்கள் வட்டக்கச்சிப் பிரதேசத்தைச் சுற்றிவந்து மூன்று குண்டுகளை வீசியது. இதில் ஒரு குண்டு விடுதிக்குள் வெடிக்க மற்றைய இரண்டும் வயற்பிரதேசங்களிலும் வீழ்ந்து வெடித்தன. இதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
மூன்று பேர் காயமடைந்தனர். உருக்குலைந்துபோக ஏனைய மூன்று பேரின் உடல்களையும் காயப்பட்ட மூவரையும் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றார்கள். உயிரிழந்த ஒன்பது பேரில் ஆறு பேரின் உடல்கள் சிதறுண்டு இந்தச் சம்பவத்தை அடுத்து தம் உறவுகளை இழந்த நிலையில் அக்குடும்பங்கள் விடுதிகளை விட்டு வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றன. இந்தச் சம்ப்பவத்தின் போது சம்பவ இடத்திலிருந்த்த இராமையா பரமசுந்த்தரம் அவர்கள் தெரிவித்ததாவது, ‘நான் நெற்பண்ணையில் இருந்தவேளை 28.02.1991அன்ற பொம்மர் விமானம் வந்து குண்டு போட்டது. இந்தச் சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே ஒன்பது பேர் கொல்லப்பட்டார்கள். மூன்று பேர் காயமடைந்தார்கள். காயமடைந்தவாக்ளை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு போய் காப்பாற்றிவிட்டார்கள்.
இறந்தவர்கள் அனைவரையும் ஒரே குழியிற் போட்டு புதைத்தோம். இச்சம்பவத்தில் பண்ணையிலிருந்த கிட்டத்தட்ட நாற்பது ஆடுகள், இருபது கோழிகள் இறந்தன. அவற்றையும் மனித உடல்களுடன் ஒரே குழியிற் போட்டுப்புதைக்க வேண்டிய சூழல் இருந்தது. ஏனென்றால் திரும்பவும் புக்காரா வந்து குண்டு போடுமோ என்ற பயம் இருந்துகொண்டே இருந்தது. சம்பவம் நடந்த இடத்திற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வந்து பார்வையிட்டுச் சென்றது. மக்களை அழிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இந்த இடத்தில் குண்டு போட்டதாக நான் கருதுகிறேன்.
ஏனென்றால் காலையில் தொழிலுக்குப் போகமுன் 7.30 மணியளவில் வந்து குண்டு போட்டால் எல்லோரும் இறப்பார்கள் என்ற திட்டம்தான். இன்று நேற்றல்ல, 1990ம் ஆண்டிலிருந்தே சிறீலங்கா இராணுவம் தமிழ் மக்களை கொலை செய்து கொண்டுதான் இருக்கிறது.’
இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம்
01 இராசேந்திரம் சித்திரம்மா
02 நாகமுத்து ஆறுமுகம்
03 முனியாண்டி செல்வம்
04 முருகையா சுமதி
05 முருகையா சித்திரா
06 ஆறுமுகம் இராசேந்திரன்
07 ஆறுமுகம் கமலாதேவி
08 ஆறுமுகம் விஜயலட்சுமி
09 சின்னத்தம்பி உமாதேவி
![]()